சாலையில் போகிற வண்டியில் புகை வந்தால், சாலையோர மரத்தில் புளியம்பழம் பறிப்பதை விட்டு விட்டு வண்டியை நிறுத்தி எட்டிப் பாருங்கள். வண்டியில் குண்டு இருந்து வெடித்து நீங்கள் செத்தால் 1 இலட்சம் கிடைக்கும்.
ஆளில்லா ரயில் சந்திப்பில் உங்கள் வாகனம் ரயிலோடு மோதி செத்தால், நீங்கள் அரசு ஊழியராயிருக்கும் பட்சத்தில், 2 இலட்சம் கிடைக்கும். இல்லாவிட்டால், 1 இலட்சம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
CNN, BBC, நம்ம ஊர் தொலைக்காட்சிகள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து காட்டுவதற்குத் தகுந்தவாறு யாராவது கொலைகாரனை ஏற்பாடு செய்து அவன் கையால் சாகுங்கள். உங்கள் இறுதிச் சடங்குக்கு வர உறவினர்களுக்கு அரசு காசு கொடுக்கும். இது பல இலட்சம் பெறும்.
ஆழ்குழாய் கிணற்றில் மாட்டி உங்கள் பிள்ளை சாவதை விட பிழைத்துக் கொள்வது நல்லது. எப்படியாவது காப்பாற்றி விடுங்கள். பிழைத்துக் கொண்ட குழந்தை அதிசயக் குழந்தையாகக் கருதப்பட்டு கூடுதல் உதவித் தொகை கிடைக்கும்.
அண்மையில் அரசியல் கட்சித் தொண்டர்கள் தீக்குளித்ததாகத் தெரியவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் 1 லட்சமாவது கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். அப்போது எனக்கு அவ்வளவு விவரம் தெரியாது.
நன்றாக விற்பனையாகும் நாளிதழ் ஊழியராக இருந்து அலுவலகத்துக்குள் வைத்துக் கொழுத்தப்பட்டால் 15 இலட்சம் கிடைக்கும்.
சுனாமி, நிலநடுக்கம் வந்து செத்தால் அரசு போக நடிகர்களும் காசு தருவதாக சொல்லுவார்கள். சொன்ன மாதிரி தந்தும் விட்டால், கிடைத்த வரை இலாபம்.
உயிருக்கான இழப்பீட்டுத் தொகை தவிர, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்குப் பூ வைத்து அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று விரும்பினால் அமெரிக்காவிலோ இலண்டனிலோ பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாகுங்கள்.
பொதுவாக, உங்கள் உயிருக்கு அதிக விலை கிடைக்க வேண்டுமானால் கொஞ்சமாவது பரபரப்பாக, ஊடகங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வகையில் சாக வேண்டும். ரொம்ப கும்பல் சேர்க்காமல் கொஞ்சம் பேர் மட்டும் செத்தால் கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒன்றுமே குடும்பத்துக்கு செய்யாமல் குற்ற உணர்வுடன் இறப்பவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்கள் இது போன்ற தருணங்களுக்குக் காத்திருந்து சாவது நலம்.
இதை எல்லாம் விட்டு விட்டு முட்டாள்த்தனமாக பாக்தாத்தின் அன்றாடக் குண்டு வெடிப்புகளால், உலக நாட்டுப் போர்த் தாக்குதல்களால், தீரா நோய்களால், ஊட்டக்குறைவால், பஞ்சம் பிழைக்கப் போன நாட்டில் முதலாளியால் அடித்தே கொல்லப்பட்டால், இன்று இங்கு 135 பேர் பலி என்று வானிலை அறிக்கை போல் தான் ஊடகங்கள் சொல்லும். பைசா தேறாது.
ஆண்டு முடிவில் ஒரு நாளைக்கு எத்தனை பேர் இப்படி இறந்தார்கள் என்று புள்ளிவிவரங்கள் வெளியாகும்.
வேறொன்றுக்கும் உதவாது.
Comments
6 responses to “உயிரின் விலை – இன்றைய சந்தை நிலவரம்”
இரவி,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. இருப்பினும் மொழியும் நடையும் நான் உங்களிடம் எதிர்பாராதது. இறப்பு விலைகுடுத்தாலும் வேண்டுவோர் யாருளர் ?
மணியன் – யாராவது செத்தால், வருத்தம், அனுதாபம் தெரிவிப்பதற்கு முன் தலைக்கு இவ்வளவு கொடுக்கிறோம் என்ற போட்டி போடுவது, அது போன்ற நிகழ்வுகளைத் தடுப்பது குறித்து பேசாமல் பரபரப்பு முடிந்த கையோடு மறந்து விடுவது, அன்றாடம் ஆயிரக்கணக்கில் உலகில் நிகழும் தவிர்க்கப்பட வேண்டிய இறப்புகள் குறித்த சொரணையே இல்லாதது குறித்த ஆதங்கம் தான். நான் எழுதிய தொனி தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு தான். ஆனால், வேறு மாதிரி எழுதினால் கூக்குரலாக, புலம்பலாகப் போய்விடும் என்று இப்படி எழுதினேன்.
putting the sufferings in perspective.
Recent event. For those killed brutally by some goondas at Madurai Dinakaran’s Office, one tv news channel offered a fair amount to the victims. It is ok but there seems to be no uniform policy adopted either by private organisations or Govt. So many factors are involoved. Is it a good trend?
garudan
செய்யப்பட வேண்டியவை – நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசே பொறுப்பேற்கும் உயிர்க்காப்பீடு. மக்களின் வரிப்பணத்தில் இருந்து இதற்கு ஒரு பகுதி ஒதுக்கலாம். கருணைத்தொகை என்றாலும் அள்ளித் தெளிக்காமல் இவ்வளவு தான் எவருக்கும் என்று ஒரே இழப்பீட்டுத் தொகை நிர்ணயிப்பது. தனியார் எப்படி வேண்டுமானால் செயல்படலாம். ஆனால், ஏழைக்கு ஒரு நீதி இருப்பவனுக்கு ஒரு நீதி என்று அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. அண்மையில், அமெரிக்காவுக்கு விமானச்சீட்டு எடுத்து உறவினரை அனுப்பி வைத்தது எல்லாம் தேவையில்லாத வேலை.
என்ன செய்வது ரவி!!! நம்ம நாட்டு நிலமை இப்படி ஆகிவிட்டதே 🙁