உபுண்டு

உபுண்டு என்பது லினக்சை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு கட்டற்ற இயக்குதளம். விண்டோஸ் மென்பொருளை காசு கொடுத்தோ திருட்டுத் தனமாகவோ விரும்பியோ வேறு வழியில்லாமலோ பயன்படுத்துபவர்கள் உபுண்டுவுக்கு மாறலாம்

உபுண்டு முற்றிலும் இலவசம். இணையத்தில் பதிவிறக்கலாம். பைசா செலவின்றி நம் வீடு தேடியும் உபுண்டு இறுவட்டு வரும்.

ஆறு மாதத்துக்கு ஒரு முறை, உபுண்டு புதிய பதிப்புகளை வெளியிடுகிறது. இதனால், புதிய நுட்பங்களின் பலன்கள் நமக்கு உடனுக்குடன் கிடைக்கும்.

விண்டோசை வைத்திருப்பவர்களும் கூடுதலாக தனி வகிர்வில் உபுண்டு நிறுவிக் கொள்ளலாம். வெறும் 2 GB அளவு உள்ள வகிர்வு கூட போதுமானது. விண்டோசை அழிக்கத் தேவை இல்லை.  இரட்டை இயக்குதளங்களாக வைத்துக்கொண்டு தேவைப்படும்போது உபுண்டுவையும் விண்டோசையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். விண்டோசில் உள்ள கோப்புகளை லினக்சில் இருந்தும் அணுகிப் பயன்படுத்த முடியும்.

ஒரே இறுவட்டைக் கொண்டு 25 நிமிடங்களுக்குள் மிக எளிதாக உபுண்டுவை நிறுவி விட முடியும். கணினியில் நிறுவாமலேயே, உபுண்டு எப்படி இருக்கும் என்று நிகழ்வட்டைக் கொண்டு சோதனை முறையில் இயக்கிப் பார்த்து நமக்கு நிறைவு இருக்கும்பட்சத்தில் அதைக் கணினியில் நிறுவ முற்படலாம்.

பாட்டு கேட்க, படம் பார்க்க, குரல் அல்லது நிகழ்பட அரட்டை அடிக்க, கம்பியில்லாமல் இணையத்தை அணுக என்று விண்டோசில் செய்ய இயலும் அனைத்தையும் உபுண்டுவிலும் செய்யலாம். நச்சுநிரல் தாக்குதலால் விண்டோஸ் நிலைகுலைவது போல் உபுண்டுவில் நிகழாது. உபுண்டுவின் செயல்பாடு விண்டோசைக் காட்டிலும் வேகம் கூடியது.

லினக்ஸ் கற்றுக் கொள்ள, பயன்படுத்தக் கடினமானது என்ற நான் கூட முன்னர் பிழையாக விளங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், எளிய, கணினிக்குப் புதியோருக்கும் புரியும் புத்திசாலித்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது உபுண்டு. எங்கள் ஊரில் என் விண்டோஸ் கணினியை இயக்கத் தயங்கிய 10 வயதுப் பிள்ளைகள், உபுண்டுவில் புகுந்து விளையாடினார்கள். உபுண்டுவில் தமிழ் இடைமுகப்பும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான மொழிபெயர்ப்புப் பணிகளும் கூட்டு முயற்சியாகவே நடைபெறுகிறுகின்றன. நாமும் பங்கு கொள்ளலாம். உபுண்டுவில் நமக்கு வேண்டிய தமிழ் விசைப்பலகைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். எல்லா செயலிகளிலும் தமிழ் தட்டச்ச முடியும். எல்லா செயலிகளிலும் தமிழ் எழுத்துக்கள் நன்றாகத் தெரியும்.

மிகப் பழைய கணினிகளிலும் உபுண்டு இயங்கும். பள்ளிகள், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்களில் செலவே இல்லாமல் நிறுவுவதற்கும் கணினிக்குப் புதியவர்கள் எளிதில் கற்றுக் கொள்வதற்கும், உபுண்டு மிகத் தகுந்தது.

தமிழ் உபுண்டு உதவிக்குழு, இந்திய உபுண்டுப் பயனர்கள் உதவிக் குழு என்று தன்னார்வலர்கள் குழுக்கள் ஆர்வத்துடன் இயங்கி வருகின்றன. உபுண்டு மன்றங்களில் கேட்டால் ஆர்வலர்கள் வேண்டிய உதவிகளை உடனே தருவார்கள். உபுண்டுவை நிறுவுவதில், இயக்குவதில் உங்களுக்கு உதவி தேவையெனில் என்னைத் தாராளமாகக் கேளுங்கள். இயன்ற அளவு உதவுகிறேன்.

ஒரு வாரம் முன்பு வெளிவந்த உபுண்டு 7.04 பதிப்பின் திரைப்பிடிப்பு கீழே:

screenshot.png

சில கேள்விகள்

வண்டி, வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் என்று எது வாங்கினாலும் நம் விருப்பத்துக்கேற்ற மாதிரி வெவ்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தேடித் தேடிப் பார்த்து தான் வாங்குகிறோம். ஆனால், கணினி இயக்குதளத்தில் மட்டும் ஏன் கேள்வியே கேட்காமல் விண்டோசை மட்டும் கட்டி அழுது கொண்டிருக்க வேண்டும்?

நகை செய்யக் காசு கொடுத்தால், நம் விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைத்துத் தரக் கேட்கிறோம். ஆனால், கணினி இயக்குதளத்தில் மட்டும் ஏன் தெரிவுகள், விருப்பங்களே இல்லாமல் விண்டோஸ் எதைத் தலையில் வைத்துக் கட்டினாலும் வாங்கிக் கொள்ள வேண்டும்?

எவ்வளவு காசு கொடுத்தாலும் நம் விருப்பம், தேவை, அவசரத்துக்கு ஏற்ப விண்டோஸ் புதிய பதிப்புகளை வெளியிடப்போவதில்லை என்கிற போது ஏன் தொடர்ந்து விண்டோசைப் பயன்படுத்த வேண்டும்?

நம் உடைகளை நாமே தைத்துக் கொள்ள இயல்கிறது. நம் உணவை நாமே சமைத்து உண்ண இயல்கிறது. ஊர் ஒன்று சேர்ந்து குளம் வெட்டி, தங்கள் நீர்ப் பாசனத் தேவைக்குப் பயன்படுத்துகின்றனர். ஊர் மக்கள் எல்லாம் காசு போட்டு, உழைத்து ஒன்று கூடி கோயில் கட்டி ஒன்றாக வழிபடுகிறார்கள். நமக்கான தேவைகளை நாம் தனித்தோ ஒன்று கூடியோ நிறைவேற்றிக் கொள்ள இயலும் சிறப்புடன் தான் நம் சமூக அமைப்பு இருக்கிறது.

இது போல், கணினி அறிவுடைய ஒரு சிலர் கூட்டு முயற்சியில் இறங்கி நமக்குத் தேவையான சிறப்பான ஒரு கணினி இயக்குதளத்தை உருவாக்கிக் கொள்ள இயலும் போது, எதற்கு விற்பனைக்கு வரும் இயக்குதளங்களைச் சார்ந்து இருக்க வாங்க வேண்டும்?

Linux is not difficult but different, simple, easy and best !

அருஞ்சொற்பொருள்

1. கட்டற்ற இயக்குதளம் – free operating system

2. காப்புரிமை – copyright

3. பதிவிறக்கம் – download

4. இறுவட்டு – compact disc
5. வகிர்வு – partition
6. நிகழ்வட்டு – live CD
7. நிகழ்படம் – video
8. நச்சுநிரல் – virus

9. நிலைகுலைதல் – crash
10. இடைமுகப்பு – interface

11. விசைப்பலகை – keyboard
12. செயலி – application


Comments

11 responses to “உபுண்டு”

 1. கணினி என்றாலே விண்டோஸ் என இன்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் (ஒரு காலத்தில் நானும் அப்படித்தான் இருந்தேன் :D). அதற்கு முக்கிய காரணம் வன்பொருள் (hardware) செய்பவர்கள் அதற்கான driverகள் (இயக்கி?) எழுதும்போது விண்டோஸையே பிரதானமாக நினைத்து எழுதுவதாலும், கணினி விற்பனையாளர்கள் வியாபார நோக்கில் விண்டோஸை defaultஆக கணினியில் வைத்து விற்பனை செய்வதாலும் தான் என்று நினைக்கிறேன்.

  உபுண்டு பற்றியும் மற்ற கட்டற்ற மென்பொருட்கள் பற்றியும் எழுதி வரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். 🙂

 2. Shankar Ganesh Avatar
  Shankar Ganesh

  Happy to see Ubuntu gaining popularity. நாம் எல்லோரும் சேர்ந்து, விண்டோசை தூக்கியெறியும் நேரம் கூடிய சீக்கிரத்தில் வரும்.

  I hope you’ve read this: http://opensourcelearning.info/blog/?p=338

 3. //கணினி என்றாலே விண்டோஸ் என இன்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் (ஒரு காலத்தில் நானும் அப்படித்தான் இருந்தேன் :D).//

  நானும் தான் srini 🙂 நீங்க சுட்டியிருக்கிற காரணங்கள் உண்மை தான். தமிழ் உபுண்டு ஆர்வலர்கள் சில கணினி விற்பனையாளர்களை அணுகி உபுண்டுவை நிறுவிக் கொள்ள வேண்டி வருகிறார்கள் என்று அறிகிறேன். தமிழக அரசு தான் வாங்கும் கணினிகளில் லினக்சை நிறுவ இருக்கிறது. இது போன்ற அரசு மற்றும் ஆர்வலர்கள் சார் முயற்சிகள் தான் லினக்சைப் பரப்ப உதவும்.

  சங்கர் கணேஷ் – இணைப்புக்கு நன்றி. இப்ப தான் படிச்சேன்

 4. சயந்தன் Avatar
  சயந்தன்

  //உபுண்டுவை நிறுவுவதில், இயக்குவதில் உங்களுக்கு உதவி தேவையெனில் என்னைத் தாராளமாகக் கேளுங்கள். இயன்ற அளவு உதவுகிறேன்.//

  ஓகே அடுத்த போனைப் போட்டுட வேண்டியதுதான். ஆனா இம்முறையும் வீட்டுக்கு வந்தவங்களுக்கு சமைச்சு போடுறன் என சொல்லி எஸ்கேப் ஆகக்கூடாது ஆமா

 5. உபுண்டுவை நிறுவலாம் என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது. ஏதேனும் தவறின் இரட்சித்தருள வேண்டுகின்றேன். 🙂

 6. சயந்தன் Avatar
  சயந்தன்

  யப்பா என்னா வேகமய்யா..? முன்பெல்லாம் கணணியை ஆன் செய்து வின்டோஸ் தனது படை பரிவாரங்களுடன் முழுவதுமாய் வந்து நேரும் காலத்திற்கு ஒரு டீ குடித்து வரலாம் போல இருக்கும். உபுண்டு தட்டியவுடன் திறக்கிறது – பயர்பொக்சில் தமிழ் எனக்கு சிக்கல் இல்லை.
  ஆனால் USB மூலம் இணையத்தில் இணைந்திருப்பவர் ஒருவருக்கு இன்று நிறுவில போது இணையம் வேலை செய்யவில்லை 🙁

 7. நன்றி மலைநாடான். ஒரு பிரச்சினையும் வராது 🙂 பயப்படாமல் நிறுவலாம் 🙂 எந்த உதவியானாலும் என்னால் இயன்ற வரை செய்கிறேன். ஏற்கனவே சயந்தன் நிறுவி விட்டார் 🙂

 8. ஆமா சயந்தன். உபுண்டுவத் துவக்கி firefox உலாவிய பயன்படுத்த 1 நிமிடம் 40 நொடிகள் ஆச்சு. இதுவே விண்டோசுல 3 நிமிடம் 52 நொடிகள் ! நீங்க சொன்னதுக்குப்புறம் தான் விண்டோஸ் எவ்வளவு நேரம் எடுக்குதுன்னு இடிச்சிச்சு. அதே மாதிரி கணினிய நிறுத்தும்போதும் உபுண்டு செம வேகம் தான். இந்த usb-இணைய இணைப்புப் பிரச்சினை குறித்து உபுண்டு பயனர் மன்றத்தில் ஏதாவது உதவிக் குறிப்பு கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

 9. சயந்தன்,
  நீங்கள் USB மோடெம் வழியாக இணையத்தொடர்பு பெறும் ஒருவர் பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  க்னூ/லினக்ஸ் பயன்படுத்த ஆரம்பிக்கும் எவருக்கும் அநேகமாக ஏற்படும் பிரச்சினை வன்பொருள் ஆதரவுதான். வன்பொருள் தயாரிக்கும் நிறுவங்கள் பல்வேறு காரணங்களுக்காக க்னூ/லினக்ஸ் இனை கணக்கெடுப்பதில்லை. வின்டோசுக்கு மட்டும் இயக்கிகளை கொடுத்துவிட்டு பேசாமலிருந்துவிடுகிறார்கள். உலகெங்கும் உள்ள தன்னார்வலர்கள் தான் வரும் வன்பொருட்களுக்கெல்லாம் க்னூ/லினக்சுக்கு இயக்கி எழுதி தருகிறார்கள். இந்த நிலை மாறும் வரைக்கும் வன்பொருள் ஆதரவு பிரச்சினை தான்.

  இதனை நாங்கள் மறுதலையாக கையாண்டு திருப்பியடிக்கலாம். அதாவது க்னூ/லினக்சை ஆதரிக்காத வன்பொருட்களை வாங்காமல் விடுவது. மோடத்தை எடுத்துக்கொண்டால், எந்தெந்த மோடம்கள் க்னூ/லினக்சுக்கு ஆதரவளிக்கிறது என்ற பட்டியலை இணையத்தில் இலகுவாகப்பெறலாம். அந்த மோடெம்களை மட்டும் வாங்குவது. அதுதான் சரியான தீர்வாக இருக்கும்.

  உங்கள் நண்பரை ஒருமுறை தனது மோடெத்தின் பெயர், தொடரிலக்கம் போன்றவற்றை கூகிளிட்டு ஆதரவு இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளச்சொல்லுங்கள்.

  scanner, TV card, webcam. modem போன்றவற்றை வாங்கும்போது மிக அவதானமகா இருக்கவேண்டும். மற்ற வன்பொருட்கள் பெரிதாக பிரச்சினை இல்லை.

 10. G.R. Murugan Avatar
  G.R. Murugan

  very nice i am seeing a new horizon

 11. Nice linux operating system. Because additional software can not be install..