வலை 2.0

வலை 2. 0 (Web 2.0) என்பதை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம்.

வலை 2.0 என்னவென்று எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு வலை 1.0 என்னவென்பதை புரிந்து கொள்வது நல்லது. தினமலர் போன்ற தளங்களில் நீங்கள் பார்வையிட மட்டுமே முடியும். அத்தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை மாற்றவோ, பக்கம் காட்சிப்படுத்தப்படும் வரிசையையோ நீங்கள் மாற்ற முடியாது. இப்படி, நாம் பார்க்கும் இணையத்தளங்களின் மீது நமக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் passive readerஆக இருப்பது போன தலைமுறையான வலை 1.0 இணையத்தளங்களின் குணமாகும்.

ஆனால், வலை 2. 0 இணையத்தளங்கள் என்பவை கட்டற்றவை; மக்களை இணைப்பவை; கூட்டு முயற்சியை ஊக்குவிப்பவை; விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ள உதவுபவை; உள்ளடக்கத்தை மாற்றவும் காட்சிப்படுத்தலை தன்விருப்பமாக்கவும் அனுமதிப்பவை; வாசகர்களுக்கு தளத்தின் மீது கூடிய கட்டுப்பாட்டைத் தருபவை; பொதுமக்களின் அறிவைக் கொண்டு கட்டெழுப்பப் படுவதால், அதிகாரப் பரவல், அறிவுப் பரவல் ஆகியவற்றுக்கு வழி வகுக்கிறது. இணையத்தில் ஒரு மெய்நிகர் ஜனநாயக அமைப்பைக் கொண்டு வரவும் உதவுகிறது.

இதை எளிமையாக விளக்கும் அருமையான ஒரு நிகழ்படம் கண்ணில் பட்டது.

Flickr, Delicious, Wikipedia போன்றவை பிரபலமான உலக வலை 2.0 தளங்களாகும்.

தமிழ் வலைச்சூழலில் உள்ள வலை 2.0 இணையத்தளங்கள் எனப் பின்வருவனற்றைக் கருதலாம்:

1. தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்சனரி முதலிய தமிழ் விக்கிமீடியா திட்டங்கள். – இவற்றில் மீடியாவிக்கி நிரலாக்கம் முதல் உள்ளடக்க உருவாக்கம் வரை கட்டற்ற கூட்டு முயற்சியே.
2. பெட்டகம் – விருப்ப இணைப்புகளின் வகைப்படுத்தப்பட்டத் தொகுப்பு.
3. மாற்று! – நிரலாக்கத்தில் கூட்டு முயற்சி, விருப்பப் பகிர்வுகளின் தொகுப்பான உள்ளடக்கம்.