Test of Tamil as a foreign language

இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக கன்னடத்தை அறிவித்தால் கன்னடர்களுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா? கன்னடர்களுக்குத் தான் நல்லது.

இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக வங்க மொழியை அறிவித்தால் வங்காளிகளுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா? வங்காளிகளுக்குத் தான் நல்லது.

இதே போல் இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக இந்தியை அறிவித்தால் இந்திக்காரர்களுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா?

இந்திக்காரர்களுக்குத் தான் நல்லது.

எனவே, இந்தி தொடர்பு மொழி ஆனால் மட்டும் இந்தியா ஒன்றுபடும், வளரும், தமிழனுக்கு நல்லது, வேலை வாய்ப்பு கூடும் என்பது எல்லாம் இந்தித் திணிப்பை நியாயப்படுத்துவதற்கான திட்டமிட்ட கட்டுக் கதை.

என்னதான் பள்ளிக்கூடத்தில் இந்தி சொல்லித் தந்தாலும் இந்தி பிரச்சார சபைகளில் போய் படித்தாலும் தாய்மொழியாக இந்தியைக் கொண்டுள்ளவர்களோடு மற்ற மொழிக்காரர்களால் போட்டி போட முடியாது.

LKG முதற்கொண்டு ஆங்கில வழியத்தில் எல்லா பாடங்களையும் படித்த பின்னும், தமிழ்நாடு முழுக்க எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஆங்கிலம் நிறைந்திருந்தாலும், இன்னும் சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாததால் வேலை கிடைக்கவில்லை என்று விழிபிதுங்கும் இன்றைய தலைமுறையே இதற்கு சாட்சி.

ஆகவே, இந்தி படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற வாதத்தை விட்டு விடுவோம். இது 1960களில் வங்கிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் ஏதாவது குமாசுத்தா வேலையை இலட்சியமாக கொண்டு வளர்க்கப்பட்ட தலைமுறையின் மனநிலை. இன்று பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அடிமட்ட வேலை முதல் உயர்நுட்ப வேலைகள் வரை செய்வதற்காக குவியும் காலத்துக்குப் பொருந்தாது.

அனைவரும் இந்தியைப் படிக்க வைப்பது எதற்கு உதவும் என்றால் காலப்போக்கில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டி இன்னும் வெகு தீவிரமாக இந்தித் திணிப்பை நியாயப்படுத்துவதற்கே உதவும்.

இந்தியைத் தாய்மொழியாக கொண்ட இந்தியர்கள் 26% மட்டும் இருக்கும் போது அதனை 45% ஆக எப்படித் திருக்கிறார்கள் என்று இங்கு பாருங்கள்:

http://scroll.in/article/667570/read-the-fine-print-hindi-is-the-mother-tongue-of-only-26-of-indians.

நாடு முழுக்க இந்தி படிக்க வைத்து விட்டால், இரண்டாம் மொழியாக இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 100% என்று கணக்கு காட்டி மொத்தமாக “இந்தி”யாவாக மாற்றி விடலாம்.

சரி, இதே போல் இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்வதால் ஆங்கிலம் பேசும் மேலை நாட்டவர்களுக்கு நல்லதா என்று கேட்டால்…

ஆம், நாம் ஆங்கிலம் பேசுவதால் மேலை நாட்டவர்களுக்கு நல்லது தான். அவர்கள் பொருட்களை இங்கு விற்கவும், குறைவான செலவில் நம்முடைய மனித வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும். நாம் இதனை ஏற்றுமதி / இறக்குமதி, வணிகம், சேவைத் துறை, அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு / வேலை என்று நமக்கு வசதியான பெயர்களில் சொல்லிக் கொண்டாலும், இது தான் உண்மை.

சரி, அப்ப வெளிநாட்டுக்காரனுக்குப் பயன்படக்கூடிய ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் இந்தியை ஏற்றுக் கொள்ளக்கூடாது?

ஏன் என்றால்,

1. இன்று வெளிநாட்டுக்காரர்கள் சட்டம் போட்டா நம்மை அடிமை ஆட்சி செய்தோ நம் மீது ஆங்கிலத்தைத் திணிக்கவில்லை. எது உலகப் பொது மொழியாக இருக்கிறது என்பது காலத்துக்கு காலம் மாறி வருகிறது. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு கோலோச்சியது. இப்பொழுது ஆங்கிலம். அடுத்து சீனம் வரலாம் என்றும், இல்லை, ஆங்கிலமும் செல்வாக்கை இழந்து, நுட்பத்தின் வசதியால் பல மொழிகள் ஊடாடுவது இலகுவாகும் என்றும் கூறுகிறார்கள். Nicholas Ostler எழுதிய The Last Lingua Franca: English Until the Return of Babel படியுங்கள்.

அதே போல் இந்தியும் தன் இயல்பான வலுவால் இந்தியாவின் தொடர்பு மொழியாக மாறினால் அது வேறு விசயம். ஆனால், மக்கள் தேர்ந்தெடுத்த கூட்டாட்சி முறையில் இயங்குகிற இந்திய அரசு மற்ற பல மொழிகளை இரண்டாந்தரமாக வைத்து இந்தியை மட்டும் வளர்ப்பதும் திணிப்பதும் தவறு.

2. இந்தியா என்ற நாடு 60+ ஆண்டுகளாகத் தான் இருக்கிறது. அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரும் தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுக்கவும் கடல் கடந்து உலகம் முழுக்கவும் வணிகத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அப்போது எல்லாம் வணிகம் செய்ய நம் நாடு முழுக்க அயல் மொழியை கற்பதற்கான தேவை எழவில்லை. ஏன் எனில், அப்போது நாம் மரபறிவு மூலம் விளைந்த பொருட்களை விற்றோம். இப்போது நம் உழைப்பை விற்று கூலிகளாக இருக்கிறோம். இது தான் வேறுபாடு.

எனவே,

ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி இல்லை. அந்தந்த மக்களின் தாய்மொழி தான் மாற்று.
இது தான் நிலையான தீர்வாக இருக்கும்.

இன்று பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் சீனர்கள், ஐரோப்பியர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் என்று யாராக இருந்தாலும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் தாய்மொழியில் தான். வணிகத்துக்காக ஒரு சிலர் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கல்லூரிப் படிப்புக்குப் பிறகு கூட கற்கிறார்களே தவிர, ஆங்கிலத்தை வாழ்க்கை முழுக்க பிடித்துத் தொங்குவதில்லை. அவர்களுடன் வணிகம் செய்ய வரும் வெளிநாட்டவர் அவர்கள் மொழியில் பேசக்கூடிய மொழிபெயர்ப்பாளர்களையும் மொழிபெயர்ப்பு நுட்பங்களையும் வைத்து உரையாடுகிறார்களே தவிர, ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் அவர்களைப் புறக்கணித்துச் செல்வதில்லை. புறக்கணிக்கவும் முடியாது. சுருக்கமாக, உங்கள் திறமையும் உங்கள் பொருளாதார பலமும் பேச வேண்டும். மாறாக, நீங்கள் அவர்கள் மொழியைப் பேசினால் தான் வேலைவாய்ப்பு என்று இறங்கும் போது, நீங்கள் விற்பது உங்களைத் தான். அதாவது மனித வளம் என்ற பெயரில் உங்கள் உழைப்பைத் தான் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள். இப்படி காலத்துக்கும் இந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் அந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று திரிந்தால் பஞ்சம் பிழைக்க போன பரதேசிகள் மாதிரி அலைய வேண்டியது தான்.

உள்ளூர் மொழிகளை வளர்ப்போம். உள்ளூர் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்ப்போம். தொழில் முனைப்பையும் மொழி நுட்பத்தையும் வளர்ப்போம். மனித வளத்தை ஏற்றுமதி செய்யாமல் நாம் விளைவித்த பொருட்களை ஏற்றுமதி செய்வோம்.

அப்போது தமிழ்நாட்டில் தமிழ் அழியுமோ என்று எண்ணி அஞ்சி தமிழை வளர்க்க போராடத் தேவையில்லை.

ஏனெனில், அப்போது Test of Tamil as a foreign language தேர்வு எழுத பிற மொழிக்காரர்கள் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்.


Comments

4 responses to “Test of Tamil as a foreign language”

 1. Naam kalloriyil paditha kalathil toefl padikka somberipattu . Ini varum kalathil totfl varum. Athil naam 1 vathaga varuvom endru maar thatti kondu irunthom. Ipothu athu nadanthal magilchi

 2. அருமையான பதிவு..
  ஆங்கிலத்தையும் இந்தியையும் விட நமது மரபு அறிவியலை கற்றுக்கொள்ள எவரும் இங்கே முன்வருவதில்லை….

 3. Ramanathan Marimuthu Avatar
  Ramanathan Marimuthu

  Please define comma ,full stop marks in Tamil we are using now a days it’s our own or borrowed from foreign languages
  Note: I don’t have Tamil App in my mobile.

 4. Arumaiyana pathivu. vazhthukkal nanbare…..