முதல் எழுத்து

ஆறு மாதங்களுக்கு முன், நானும் கணிணியில் தமிழில் எழுத முடியும் என்று கண்டுபிடித்து மகிழ்ந்ததில் இருந்து, வலைப்பதிவு செய்யும் ஆர்வம் இருந்து வந்தது. இப்பொழுது நேரம் வந்திருக்கிறது.

தமிழ், தமிழ் நாட்டு நிகழ்வுகள், எனக்குப் பிடித்தவை, என்னை பாதித்தவை மற்றும் தற்பொழுது வாழும் நாடான ஜெர்மனியில் என் அனுபவங்கள் குறித்து எழுத ஆவல்.

இவை குறித்து தனித்தனியாக என் நண்பர்களுடன் மின் மடலில் விவாதிப்பதை விட இப்படி வலைப்பதிவது எளிமையாக இருப்பதும் ஒரு காரணம்.

கவிதைகள் எழுதும் பழக்கம் உண்டு என்றாலும், அவற்றை இங்கே அச்சிடும் உத்தேசமில்லை. யாராவது அச்சுரிமையைத் திருடிக் கொண்டு போய் விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது !

தமிழ் மொழி, கணிணித் தமிழ், தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்கள், தமிழர் வாழ்க்கை முறை, இந்தியா குறித்த ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளும் இடமாக தமிழ்த்தென்றல் அமைய வேன்டும் என்று விரும்புகிறேன். உங்கள் ஆலோசனைகளை, ஊக்க மொழிகளையும் எதிர்பார்க்கிறேன்.

அப்புறம், என்னை எழுதத் தூண்டிய சந்தோஷ் குருவுக்கு நன்றி 🙂

அன்புடன்,
ரவி


Comments

13 responses to “முதல் எழுத்து”

  1. என்னது 6 மதங்களுக்கு முன்னாலா???
    எனக்கு தெரிந்த அளவிள 93 இருந்து இருக்கு…! தமிழ் கணனி வரலாறு யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் எழுதுங்கள்!!!

  2. லாஸ் ஏஞ்செல்ஸ் ராம், தம்முடைய இணைய அனுபவங்களை ‘யாம் பெற்ற இன்பம்’ என்ற தலைப்பில் எழுதிவருகிறார். அதில் இணைய வரலாற்றையும் கொஞ்சம் எழுதக்கூடும்.

    வலையில் இருக்கக்கூடிய வலைப்பூக்கள் மட்டுமல்லாது, வலையகங்கள், அகப்பக்கங்கள், மின்னிதழிகள், மடற்குழுக்களின் ஆவணங்கள், கருத்தரங்கங்கள் முதலியவற்றையெல்லாம் பார்வையிடுங்கள்.

    Soc. Culture. Tamil என்ற பெயரில் ஒரு கருத்துப் பரிமாறல் அரங்கம். அங்குதான் போடு போடென்று ஆங்கில மொழியில் அல்லது ரோமன் தமிழில் முதலில் எழுதிக்கொண்டிருந்தார்கள்.

    தமிழ் இணையம் என்னும் மடற்குழுதான் முதலில் தொடங்கப்பட்ட மடற்குழு. அதில்தான் முதன் முதலில் தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி முழுதும் தமிழிலேயே மின்னஞ்சல்களை எழுத ஆரம்பித்தோம். அப்போதெல்லாம் இணைமதி எழுத்துரு. பின்னர் திஸ்க்கி.

    இணையத்தமிழ் ஆழமும் அகலமும் பெற்றதுதான்.

  3. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நானும் தமிழ் கணிணி வரலாறு எல்லாம் படித்த பிறகு தான், “ஆஹா, இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே” என ஆயாசப்பட்டேன்..இன்னும் தமிழ் நாட்டில் கணிணி உபயோகிக்கத் தெரிந்த 99% பேருக்கு, தமிழில் தட்டச்சு செய்யலாம் என்பதே தெரியாத நிலையில் தான் இருக்கிறார்கள்..என்னால் முடிந்த அளவு நண்பர்களுக்கு சொல்லித்தருகிறேன்

  4. வணக்கம் A-A! எனக்கு முதல் முதலில் இனையத்தில் அறிமுகமாண எழுத்து மயிலை எழுத்துருதான்… அதைத்தான் முதலில் நான் பாவித்தேன்.. கணனியில் உள்ளிடுவதற்கு அது இலகுவக இருந்தபடியால், பின் சிறு சிரமத்தின் பின் பாமினி வகை எழுத்துக்கு மாறிவிட்டேன்…(97 ம் ஆண்டு 20 மெற்பட்ட விதங்களில் தமிழ் எழுத்துரு என் கைக்கு வந்தபடியால், என் முதல் சொந்தக்கணணியில் நிறுவினேன்) அதே ஆண்டுதான் இணைமதி எழுத்துருவும் எனக்கு அறிமுகம் ஆனது, ஆனால் அதை பெருசாக பாவிக்கவில்லை (வெறும் 2-3 எழுத்துரு விதங்கள் என நினைவு) அப்பப்ப தமிழ் இணையத்தை எட்டிப்பாக மட்டும்….

    ரவிசங்கர்:
    “தமிழில் தட்டச்சு செய்யலாம் என்பதே தெரியாத நிலையில் தான் இருக்கிறார்கள்! வெக்கப்படவேண்டிய விடையம், முடிந்த அளவில் எல்லோருக்கும் சொல்லிக்குடுங்கள்!!!

  5. 🙂
    கணினியா, கணனியா?

  6. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    கணிணி, கணினி, கணனி என பலவாறாக இணையத்தில் குறிப்பிடப்பனுகிறது. எது சரி என இன்னும் எனக்கு பிடிபட வில்லை

  7. அன்பர்களே,

    சில ஆண்டுகளுக்கு முன்னர், ‘கணினியா கணனியா’
    என்ற கேள்வி எழுந்தது. எழுந்த இடம் தமிழ் டாட் நெட். அப்போது
    நான் எழுதிய மடல்.
    இம்மடல் சென்ற ஆண்டு கோலலும்பூரில் வெளியிடப்பட்ட
    ‘இணையத்தில் ஜேய்பி’ என்னும் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.
    பின்னர், அம்மடல் மலேசியாவிலிருந்து வெளியாகும் ‘மக்கள் ஓசை’ த்திரிக்கையிலும் இடம் பெற்றது.

    இம்மடலின் மூலத்தை தமிழ் டாட் நெட் ஆவணத்தில் காணலாம்.
    தேதி 25, ஜூலை, 1997.

    அம்மடலை ‘இணையத்தில்
    ய்பி’யில் கண்டவண்ணம்
    பெயர்த்து முன்வைக்கிறேன்.
    தமிழ் டாட் நெட்டுக்கும் நன்றி.

    அன்புடன்

    ஜெயபாரதி

    ————–

    கணினியா, கணனியா?

    To:Tamil.net
    >From:Jayabarathi
    Date: Fri 25 July 1997 23:04:39 +0800

    அன்புள்ள இணையத்தோரே!

    கணினியா, கணனியா?

    இன்னும் இந்த சந்தேகம் ஓய்ந்தபாடில்லை.
    ஏனென்று தெரியவில்லை.
    புதிய சொல்லைத் தோற்றுவிக்கும்போதும் சரி; இதுகாறும்
    அம்மொழியில் இல்லாத ஒரு பொருளுக்கும் சரி; பிறமொழிச் சொல்லை மொழி பெயர்க்கும்போதும் சரி சில அணுகுமுறைகளை அனுசரிக்க
    வேண்டியது முக்கியம்.

    தமிழில் “கணி” என்ற ல்லுக்கும் “கணக்கு” என்ற சொல்லுக்கும் சற்று வேறுபாடு உண்டு.

    “கணி” என்றால் “Computation” என்றுதான் பொருள்படும்.

    அது எப்படி என்பதை சற்றுப் பார்ப்போமே?

    பழங்காலத்தில் “கணியன்” aல்லது “கணி” என்னும் ஒரு
    குறிப்பிட்ட வகைத் தொழில் புரிவோர் இருந்தனர்.

    தொல்காப்பியத்தில், பொருளதிகாரத்தில், புறத்திணையியலில்
    ஓரிடத்தில்

    “மறுவில் செய்தி மூவகைக்காலமும்
    நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்….” 77௭8

    என்று வருகிறது.

    இந்நூலுக்கு உரை எழுதியவர்களில் ஒருவரான இளம்பூரணர்
    இவ்வாறு கூறுகிறார்….

    “அறிவன்’ என்பது கணியனை.

    மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும்
    இடைவிடாது ஆகாயத்தைப்பார்த்து, ஆண்டுநிகழும் வில்லும், மின்னும்,
    ஊர்கோளும்,தூமமும், மின்வீழ்வும், கோள்நிலையும்,மழைநிலையும்
    பார்த்துப்பயன் கூறல்;
    ஆதலால் “மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்” என்றார்”.

    இது இளம்பூரணர் கூற்று.

    சுருக்கமாகக் கூறினால், “அறிவன்” அல்லது “கணியன்” என்பவர்கள்
    வானநூலை நன்கு அறிந்து இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
    முதலியவற்றைக் கணித்துக்கூறுபவர்கள்.மேற்கூறிய விஷயங்களையெல்லாம்
    (வில்,மின்,etc.) நோக்கி observation, சேகரித்தல் ,
    தொகுத்து ஆய்ந்து analysis, கணித்தல் computation.

    இதுதான் கணியனின் வேலை.
    அதாவது கணித்தல் வேலை.

    “புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
    பரிவின்றிப் பட்டாங் கறியத் – திரிவின்றி
    விண்ணில் உலகம் விளைவிக்கும் விளைவெல்லாம்
    கண்ணி உரைப்பான் கணி”

    என்று வேறொரு பாடலையும் இளம்பூரணர் மேற்கோள் காட்டுகிறார்.

    கணியர்கள் பலவகையான கருவிகள்கொண்டு வானவீதியில்
    கிரகங்களைக் கண்டும், அவற்றின் போக்கைக் கணக்கிட்டும்
    கூறியதோடல்லாமல், அன்றாடம் நடக்கும்ஆண்டு, மாதம், கிழமை,
    திதி, சாமம், நாழிகை முதலியவற்றையும் கணித்துக் கூறினர்.
    பஞ்சாங்கத்தையும் அவர்களே கணித்தனர்.
    இதற்காகப் பல வகையான கணிதமுறைகளையும் அவர்கள்
    கற்றிருந்தனர்.

    சங்க காலத்தில் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” –
    புகழ் கணியன் பூங்குன்றனார், கணி மேதாவியார் என்றெல்லாம்
    புலவர்கள் இருந்திருக்கின்றனர். பின்னவர் சற்றுப் பிற்பட்டவர் –
    காலத்தால். “ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது” ஆகியவற்றை
    எழுதியவர். ஆகவே சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தவர்.

    கணித நூலைக் கணியர்கள் கணிப்புக்குப் பயன்படுத்தினர்.

    இது எட்டு அங்கங்களைக் கொண்டது.
    சங்கலிதம்(கூட்டல்), விபகலிதம்(கழித்தல்), குணனம்(பெருக்கல்),
    பாகாரம்(வகுத்தல்), வர்க்கம், வர்க்கமூலம், கனம்,கனமூலம் ஆகியவை அவை.

    ‘கணக்கு’ என்பது சற்று வித்தியாசமானது.இதில் நான்கு
    Simple functions of Arithmatic கிய கூட்டல், கழித்தல், பெருக்கல்,
    வகுத்தல் ஆகியவற்றுடன் எண்ணுதலும் இடம் பெறும்.

    “Accounts” என்ற ருளிலும் “கணக்கு” என்ற சொல் பயன்படும்.

    “கணக்கன்” என்ற சொல் கணக்கப் பிள்ளையாகிய Accountantஐக்
    குறிக்கும்.
    கணக்கிட்டு அறிவோரையும் கணக்கர் என்பர்.

    Logic என்னும் தர்க்க சாஸ்திரத்தில் வல்லவரான சமயவாதிகள் –
    “சமயக் கணக்கர்”.

    ஆகவே, “கணித்தல்” என்பதுதான் “Computation” என்பதனை நேரடியாகக் குறிப்பிடும் சொல்.

    தற்சமயம்,”ஜாதகம் கணித்தல்” என்பதனை “Computation of Horoscope” என்றுதான் கூறுகிறோம். “பஞ்சாங்கம் கணித்தல்” என்பதை
    “Computation of Ephemeris or Almanac” என்றும் கூறுகிறோம்.

    ஆகவே,
    Computer என்னும் கருவியைக்
    “கணினி” என்பதே நேர்.

    அன்புடன்

    ஜெயபாரதி

    >ஆட் 11:04 PM 7/25/97 +0800, JayBee wrote:

    “ண”கர உயிர்மெய்யின் பின்னால் இன்னொரு “ண”கர உயிர்மெய்
    வருவதேயில்லை.”ன”கரம் தான் பெரும்பாலும் வருகிறது.

    உதாரணம்:

    கணனம்
    கணனை
    குணனம்
    குணனீயம்
    வாணினி
    பணினம்
    பாணினி
    பேணுநர்

    ஆகவே,

    “கணினி” என்பதே சீர்.

    அன்புடன்

    ஜெயபாரதி

    ====================

  8. எனக்கு தெரிந்த அளவில் இலங்கையில் கணனி (ஊடகங்களில்) என்ற சொல்தான் பாவணையில் உள்ளது!!!!ஆனால் தமிழ்நாட்டில் கணினி என்ற சொல்தான் அதிகமாக கனமுடிகின்றது!
    எனக்கு பிடித்தது கணனிதான் ஏனில் உச்சரிப்புக்கு இலவுவாக உள்ளபடியால்………..!!!!

  9. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    @a-a உங்கள் விரிவான, தெளிவான விளக்கத்திற்கு நன்றி. இனி கணினி என்றே அழைக்கிறேன். எனினும், பெரும்பாலான தமிழ் நாட்டு ஊடகங்களில் கணிணி என்றே குறிப்பிடப்படுகிறது. தமிழில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் போல இவற்றையும் (இலக்கணப்பிழை இருப்பினும்) கருதிக்கொள்ள வேண்டியது தான். தமிழில் உயர் தொழில் நுட்பக் கல்வி புகட்டல் சாத்தியமாகும் வரை இவ்வாறான குழப்பங்கள் நீடிக்கவே செய்யும். அல்லது பல நாட்டிலும் வழங்கும் தமிழ் கலைச்சொற்களை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் வாய்ந்த அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்

  10. எட்டு ஆண்டுகளுக்கு முன்பே கணினி சம்பந்தப்பட்ட கலைச்சொற்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டார்கள். அவ்வகையில் நூற்றுக்கணக்கான சொற்கள் உருவாக்கப்பட்டுவிட்டன.

    தமிழா டாட் காமைச் சேர்ந்தவர்கள் முழுக்க முழுக்கத் தமிழிலேயே செயல்படக்கூடிய ப்ரௌஸர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

    ஒன்றுபட்ட ஏகோபித்த ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாமல் இருக்கிறது.

    ஆகையால்தான் எழுத்துருவில்கூட இத்தனை குழப்பம்

  11. Anonymous Avatar
    Anonymous

    welcome to bloggers family A-A

  12. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த இடுகையின் மறுமொழியை வாசிக்கும்போது, அண்மைய அருமையான விக்கிபீடியா கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. கணினியில் தமிழ் குறித்த வரலாறு அறிய பார்க்க – http://ta.wikipedia.org/wiki/கணினியில்_தமிழ்

  13. விக்கியில் நீங்கள் தரும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி இரவி!