இயற்கை செயற்கை மாயை

நவீன அறிவியல் மருத்துவத்துக்கு எதிரான மிகப் பெரிய பயம், பரப்புரை என்னவென்றால் அவர்கள் கொடுக்கும்

* மாத்திரைகள், மருந்து, தடுப்பூசி ஆகியன செயற்கையான வேதிப் பொருட்கள். இதில் பக்க விளைவுகள் உண்டு.
* மாறாக, சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவம் தருவது இயற்கையான உணவு, மூலிகைகள் மட்டுமே. இதனால் பக்க விளைவுகள் இல்லை.

இந்த உலகில் உள்ள அனைத்துமே வேதிப் பொருட்களால் ஆனது. இதில் இயற்கை, செயற்கை ஏதும் இல்லை. உங்கள் உடலும் சரி, நீங்கள் உண்ணும் உணவும் சரி, உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளும் சரி இறுதியில் அடிப்படை வேதிப் பொருட்களாகத் தான் மாறுகின்றன.

அரளிக் கொட்டை இயற்கை தான். அதை அரைத்துப் பொடியாக்கி புட்டியில் அடைத்தால் செயற்கையாகி விடுமா? இயற்கையோ செயற்கையோ அரளிக் கொட்டையை உண்பீர்களா? இயற்கையிலும் நஞ்சு உண்டு.

சூரிய ஒளியில் நின்றால் வைட்டமின் டி கிடைக்கும். ஒரு சிறு மாத்திரையில் உள்ள வைட்டமின் டியைப் பெற நீங்கள் நாளும் 6 மணி நேரம் வெயிலில் நிற்க வேண்டும் என்றால் உங்கள் தேர்வு என்னவாக இருக்கும்? வெயிலில் நின்றாலும் வைட்டமின் டி உற்பத்தி செய்ய முடியாத குறைபாடு உடையவர்கள் இருக்கிறார்கள். 6 முதல் 9 மாதங்களுக்கு சூரியனையே காண முடியாத நாட்டு மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாத்திரை மட்டும் தான் தீர்வு.

நம்மைச் சுற்றி எங்கும் ஆக்சிசன் இருக்கிறது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சு திணறும் ஒருவருக்கு ஆக்சிசன் உருளையில் இருந்து தான் ஆக்சிசன் தர முடியும். தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டதனால் இது தீமையான செயற்கை ஆக்சிசன் ஆகி விடுமா?

மண்ணுக்கு இடும் உரம் ஆனாலும் சரி, நம் உடலுக்குத் தேவையான சத்து மருந்துகள், மாத்திரைகள் என்றாலும் சரி இதே அடிப்படை தான். அது இயற்கையாக விளைந்ததா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதை விட அதில் என்ன இருக்கிறது, சரியான அளவில் அளிக்கப்படுகிறதா, தீமை விளைவிக்கும் வேறு பொருட்கள் கலப்பின்றி தரக்கட்டுப்பாட்டுடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதா, வேறு ஏற்றுக் கொள்ளத்தக்க சிறு பக்க விளைவுகள் உள்ளனவா என்று தான் பார்க்க வேண்டும்.

இயற்கையில் பக்க விளைவே இல்லை என்பது தவறு. இயற்கையான பொருட்களும் அளவு மீறினாலோ அவற்றின் இயல்பின் காரணமாகவோ நஞ்சு ஆகலாம். வேண்டுமானால் பத்து குடம் தண்ணீரைக் குடித்துப் பாருங்கள்.

இந்த இயற்கை, செயற்கை மாயையில் இருந்து விடுபட்டால் ஏமாற்று மருத்துவ மோசடிக் கும்பலின் பசப்புரையில் இருந்து தப்பலாம்.

காண்க – முகநூல் உரையாடல்

நிலவேம்பின் டெங்கு எதிர்ப்புத்திறன்

கேள்வி: தமிழக அரசின் கீழ் இயங்கும் கிங் மருந்தாய்வு நிறுவனமே நிலவேம்பின் வைரசு எதிர்ப்பு திறன் குறித்து ஆய்வு வெளியிட்டுள்ளதாமே?

பதில்: ஆம். நிலவேம்பின் வைரசு எதிர்ப்பு மற்றும் பிற மருத்துவ குணங்கள் குறித்து கிங் மருந்தாய்வு நிறுவனம் மட்டுமன்றி உலகின் பல நிறுவனங்களும் ஆய்வு செய்து முதல் நிலை ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. இத்தகைய ஆய்வுகள் பெரும்பாலும் சோதனைத் தட்டில் மட்டுமே நிகழ்ந்த முதல் நிலை ஆய்வுகள்.

நிலவேம்பு டெங்குவைக் குணப்படுத்தும் என்று இன்னும் இறுதியான முடிவுகள் இல்லை. நில வேம்பு அனைத்து வைரசு நோய்களின் முதல் இரு நாட்களில் காய்ச்சலைக் குறைக்கலாம் என்று பொத்தாம் பொதுவாக கூறுகிறார்கள். எந்த ஒரு மருந்தும் பரிந்துரைக்கப்படுவதற்கு முன் எலிகள், மனிதர்கள் மீதான சோதனைகள் என்று பல கட்டங்களைத் தாண்டி வர வேண்டும். யாரோ ஒருவருக்கும் மட்டும் குணமாவது மருந்து அன்று. அனைவருக்கும் அனைத்து வேளையிலும் எத்தகைய தீவிரத் தன்மையிலும் செயற்பட வேண்டும். இதில் குழந்தைகள், கர்ப்பிணிகள், வேறு நோய் உள்ளவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதிப்படுத்த வேண்டும்.

டெங்குவின் நோய் செயற்படு தன்மை காரணமாக, இது நோயைக் குணப்படுத்தாமல் போவதோடு இன்னும் தீவிரமாக்கவும் முடியும். எப்படி என்கிறீர்களா?

டெங்கு வைரசுகள் ஐந்து வகைப்படும். ஏதேனும் ஒரு வைரசு முதலில் உங்களைத் தாக்கும் போது வரும் டெங்குக்கு முதல் நிலை டெங்கு என்று பெயர். இது மற்ற வைரசு காய்ச்சல்கள் போலவே, நீங்கள் எதைக் குடித்தாலும் குடிக்காவிட்டாலும், பெரும்பாலும் தானாகவே குணமாகி விடும். இவ்வாறு குணமாகும் போது, நமது உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தி இந்த வைரசுக்கு எதிரான எதிர்மங்களை (antibody) உற்பத்தி செய்து போராடும்.

ஆனால், முதல் நிலை டெங்கு தாக்கிய ஒருவரை இன்னொரு வகை டெங்கு வைரசு தாக்கினால், முதலில் நமது உடல் உருவாக்கிய எதிர்மமே, இரண்டாம் வகை வைரசின் தாக்குதலுக்கும் பெருக்கத்துக்கும் கூடுதல் வசதி செய்து தருகிறது. இந்த இரண்டாம் நிலை டெங்கு தாக்குதல் தான் மிகத் தீவிரமான டெங்கு அதிர்ச்சி நிலைக்கும் உயிர் ஆபத்துக்கும் இட்டுச் செல்லக்கூடியது. ஒரு வேளை நில வேம்பு பொத்தாம் பொதுவாகவோ குறிப்பிட்ட ஒரு வைரசு வகைக்கு எதிராக மட்டுமோ எதிர்க்கும் திறனுடையது என்பது நிறுவபட்டாலும் கூட, அதன் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் செயற்பாடானது, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாக முடியலாம்.

பிறகு ஏன் அரசு நிலவேம்பு குடிக்கச் சொல்கிறது?

இது போன்று கொள்ளை நோய்கள் வரும் போது மக்கள் பெரும் பீதி நிலைக்கு ஆளாவார்கள். இப்போதே ஒரு நாளைக்கு 200க்கு மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருந்தே இல்லை என்ற பீதியில் அனைத்து மக்களும் மருத்துவமனைகளில் குவிந்தால் நிலை கட்டுக்கு அடங்காமல் போகும். அவர்களின் பீதியைக் குறைக்க ஏதேனும் ஆறுதல் மருந்து அளிக்க வேண்டிய தேவை உள்ளது. அந்த ஆறுதல் மருந்து தான் நிலவேம்பு. ஆறுதல் மருந்து தரும் அரசு காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்கு வாருங்கள் என்றும் மறக்காமல் சொல்கிறது. ஆனால், ஏமாற்று மருத்துவ மோசடிக் கும்பல் அதனை மறைத்து தங்களிடம் மருந்து இருப்பதாக அழைக்கிறது. மக்கள் நோய் முற்றினாலும் வீட்டிலேயே கசாயம் குடித்துச் சாகிறார்கள். எனவே தான் நிலவேம்பு குறித்த உண்மையை எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

காண்க:
* நில வேம்பு ஆய்வுக் கட்டுரை குறித்த திறனாய்வு
* முகநூல் உரையாடல்

அரசு மருத்துவர்கள் தனியார் பணியாற்றலாமா?

இலட்சக்கணக்கான +2 மாணவர்களுடன் போட்டியிட்டு மாநிலத்திலேயே சிறந்த மதிப்பெண்கள் பெற்று,

5.5 ஆண்டுகள் MBBS
3 ஆண்டுகள் ஊரகப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவர் பொறுப்பு
3 ஆண்டுகள் MS அல்லது MD.
2 ஆண்டுகள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு முடித்து

மீண்டும் அரசு பணியாற்றும் மருத்துவர் மாதம் வீட்டுக்கு எடுத்துச் சென்ற சம்பளம் மாதம் 42,949 உரூபாய் மட்டுமே. (2014 நிலவரம்)

இது அரசு பணியில் இதே ஆண்டுகள் பணியனுபவத்துடன் பணியாற்றும் மற்ற பல துறை ஊழியர்கள் பெறுவதை விடக் குறைவான சம்பளம்.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15,000 அரசு மருத்துவர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகிறார்கள். இவர்களில் குறைந்தது 50% பேராவது அரசு பணி மட்டுமே ஆற்றுகின்றனர். தனியார் மருத்துவமனைகள் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக முன்பு போல் அருகமை சிறிய தனியார் மருத்துவமனைகளைத் திறப்பது வழக்கொழிந்து வருகிறது.

அரசில் 8 மணி நேரம் வேலை செய்து ~40,000 ஈட்டும் ஒரு மருத்துவர், தனியாரில் கூடுதலாக 4 மணி நேரம் வேலை செய்து ~40000 வரை சம்பாதிக்கலாம். இதே மருத்துவர் தனியாரில் வேலை செய்தால் 8 மணி நேரத்தில் ~1,00,000 வரை கிடைக்கலாம். ஆனால், அந்த மருத்துவர் சமூகத்தில் மேல் உள்ள அக்கறையால் 8 மணி நேரம் அரசிற்கு கொடுத்து குறைந்த ஊதியம் பெறுகிறார். இதில் எந்த ஆற்றாமையும் இல்லை. இதை விரும்பியே செய்கிறார்கள்.

கருநாடக அரசு சிறப்பு மருத்துவர்கள் தங்களுக்கு வேண்டிய சம்பளத்தைக் குறிப்பிடுங்கள் என்று ஏலம் விட்டு கூட கெஞ்சிப் பார்த்து விட்டது. அங்கு ஒரு ஆண்டு அனுபவம் உள்ள மருத்துவர்கள் கேட்கும் சம்பளம் கூட மாதம் 1 இலட்சம் முதல் 6 இலட்சம் வரை நீள்கிறது. இவர்கள் கேட்கும் சம்பளம் அரசுக்குக் கட்டுபடியாகாததால், 1000க்கு மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன (இணைப்பு மறுமொழியில்).

ஆனால் தமிழ்நாட்டிலோ, அரசு மருத்துவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தனியாரிலும் சேவையாற்றலாம் என்ற வாய்ப்பு இருப்பதால் தான், அரசுப் பணியிலும் தொடர்கிறார்கள். தமிழ்நாட்டில் மருத்துவருக்கான ஒரு பணியிடமும் காலி இல்லை. இத்தகைய சமயோசிதமான திட்டம் தமிழ்நாட்டில் இருப்பதால் தான், தமிழ்நாட்டில் உள்ள 25 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கும் ஏறத்தாழ 300 அரசு மருத்துவமனைகளுக்கும் 2000 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தேர்ந்த மருத்துவர்கள் கிடைக்கிறார்கள்.

தனியாரில் பணியாற்றும் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டால், எவ்வளவு தெரசாத்தனமான மருத்துவர் என்றாலும், அரசு தரும் இந்தக் குறைவான சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு சென்னை போன்ற மாநகரத்தில் தனியொரு ஆளாக குடும்பம் நடத்த முடியுமா?

இலஞ்சம் வாங்காமல், ஊழல் செய்யாமல், தான் படித்த படிப்பைக் கொண்டு, நேர்மையாக, தன்னுடைய அரசுப் பணி நேரம் போக எஞ்சிய நேரத்தில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பது தவறு ஆகுமா?

உங்கள் சம்பளம் எவ்வளவு? உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மாதம் 10 மணி நேரமாவது அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தன்னார்வலராகச் சென்று உதவ இயலுமா?

காண்க – முகநூல் உரையாடல்

உளவியல் மருத்துவ பயங்கரவாதம்

டெங்குக்கும் ஏமாற்று மருத்துவக் கும்பலுக்கு என்ன தொடர்பு? ஏன் இவர்களைப் போட்டு இந்த அடி அடிக்கிறீர்கள்?

…போன நூற்றாண்டில் நம் மக்கள் மருத்துவர்கள் இல்லாமல் செத்தார்கள். இந்த நூற்றாண்டில் நவீன மருத்துவம் இருந்தாலும், அதனை நம்பாதே, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, எல்லா நோய்க்கும் செடியில் மருந்து இருக்கிறது என்று மூளைச்சலவை செய்யும் இந்த மோசடி ஏமாற்று மருத்துவக் கும்பலால் சாகிறார்கள்.

ஒரு தீவிரவாதி குண்டு வைத்தால் 100 பேர் தான் சாவார்கள்.

ஒரு ஊர் குளத்தில் விசம் கலந்தால் 1000 பேர் தான் சாவார்கள்.

ஆனால், இந்த ஏமாற்று மருத்துவ மோசடிக் கும்பலோ தடுப்பூசி போடாதே என்கிறது. காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்குப் போகாதே என்கிறது. தானே எல்லாம் சரியாகும் வீட்டில் பிரசவம் பார் என்கிறது. கொசு வளர்த்தால் பூ பூத்து காய் காய்க்கும் என்கிறது.

இது கோடிக்கணக்கான மக்களைத் தலைமுறை கடந்தும் கொல்லும் பயங்கரவாதம். உளவியல் மருத்துவ பயங்கரவாதம்.

இந்தக் கும்பல், இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அனைவரையும் ஒரு தீவிரவாதிக்கு என்ன மரியாதை தருவோமோ அதே மரியாதை தான் தர வேண்டும். அடி அடி அடி. சாவடி.

காண்க – முகநூல் உரையாடல்

டெங்குக்கு நவீன மருத்துவம் மட்டுமே தீர்வு

பொது நல அறிவிப்பு
அரசு சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா, இயற்கை மற்றும் அனைத்து வகை இந்திய முறை மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக வரும் யாரையும் உள்நோயாளியாக அனுமதிக்காமல் நவீனமுறை மருத்துவமனைகளுக்கு (அலோபதி என்னும் ஆங்கில மருத்துவம்) அனுப்பி வைக்குமாறு அரசு அறிவித்துள்ளது. எனவே, இனிமேலும் டெங்கு காய்ச்சலுக்கு வீட்டிலேயே பப்பாளி, நிலவேம்பு முதலிய பாட்டி வைத்தியங்களை முயலாமல் தனியாரில் இதே இதர மருத்துவ முறைகளைப் பின்பற்றுவோரை நாடாமல் மாவட்ட அரசு மருத்துவமனைகளை நாடுங்கள். இந்த அறிவிப்பைப் பகிர்ந்து விழிப்புணர்வு கூட்ட உதவுங்கள். கவனிக்க: இந்த சுற்றறிக்கையை வழங்கியதே, “இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்” தான்!

காண்க – முகநூல் உரையாடல்