மொழி – திரை விமர்சனம்

மொழி – இப்படி மனச வருடுற மாதிரி இதமா ஒரு தமிழ்ப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு !!!

வழக்கமா, ரொம்ப hype செய்யப்படுற படங்கள் சொதப்பலா போயிடும். இல்ல, படம் நல்லா இருந்தாலும் மிகை எதிர்ப்பார்ப்பே படத்தைப் பத்தி குறைவா எடை போட வைச்சிடும். அக்கு வேறு ஆணி வேறா மொழி படத்தோட கதை, விமர்சனங்களைப் படிச்ச பின்னாலும், படம் பார்க்கும்போது எந்த விதத்திலும் bore அடிக்கல. ஓடையில் மிதந்து போற பரிசல் மாதிரி அழகா நகருது படம்.

வழக்கமா திருட்டு vcd படம் வெளியாகுற தளத்துல நேற்று தான் ஒரு மாசம் தாமதமா release ஆனது இந்தப்படம் ! (நெதர்லாந்தில் இந்தப் படம் வெளியிடப்படலை. இந்தியாவுக்கு வரும்போது original CD வாங்கிடுறேன். பிரகாஷ்ராஜ், மன்னிக்கவும் 🙂 )

நம்ம நண்பர்களை எல்லாம் அழைச்சு நல்லா சாப்பிட்டு home theatreல் படத்த போட்டு weekend movieக்கு உட்கார்ந்தோம்.

முதல் பாதி சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுத்துப் போய் ஒரு கட்டத்துல படத்த pause பண்ற அளவுக்குப் போயிடுச்சு. குறிப்பா, பிரம்மானந்தம் பிரகாஷ்ராஜ அரைகுறையா பார்க்கிற காட்சிகள், பிரம்மானந்தம் வீட்டு வாசல்ல வாந்தி எடுக்கிற காட்சிகள். பிற்பாதிப் படத்தில் மனசைத் தொடற காட்சி அமைப்புகள்.

எப்படியும் இன்னும் பல முறை இந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கப் போறது உறுதி.

படத்தில் பிடித்த விசயங்கள்:

1. இயல்பான கதை, பாத்திரங்கள், வசனங்கள் (மனசுக்குள்ள கூட எப்படி ஊமையா நடிக்கிற? சில விஷயங்களை கேள்வி கேட்காம நம்பித் தான் ஆகணும்! வாழ்க்கை கொடுக்க இல்ல, வாழ்க்கைய பகிர்ந்துக்க!). ஒரு குடியிருப்புக்குள் கதை நடந்தாலும் bore அடிக்காத இதமானத் திரைக்கதை. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு. style என்ற பெயரில் கடித்துக் குதறாத படத்தொகுப்பு.

2. அருமையான இசை. பொருள் பொதிந்த சூழலுக்கேற்ற பாடல் வரிகள். (எடுத்துக்காட்டு- மூன்றாம் பிறைக்குள் நிலவைத் தேட மாட்டேன்!)

3. குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த வசனம் இல்லை. நகைச்சுவை நடிகர் தன் மனைவியைப் பொத்தி வைக்கிற கதைகளில் இரட்டை அர்த்த வசனங்கள் விளையாடும். ரஜினியின் சந்திரமுகியில் கூட இந்த மட்டமான போக்கு இருந்தது.

4. நாயகியின் முகம், உணர்வுகளைத் தவிர உடலைக் காட்டி ஒரு காட்சியிலும் கூட முகம் சுழிக்க, விழி விரிய 😉 வைக்கவில்லை. இந்த விதத்தில் பாலா பட நாயகிகளையும் குறிப்பிடவேண்டும்.சிம்ரனை இடுப்பை மறைத்து ஆட வைத்த ஒரே இயக்குனர் அவர் தான்.

5. சினிமாத்தனங்கள் குறைவு. வில்லன் இல்லை. punch dialogue இல்லை. அடிதடி சண்டை இல்லை. heroism இல்லை. அடி வாங்கும் வடிவேலு comedy இல்லை. நாயகனோடு சுற்றும் கேணை நண்பர்கள் கூட்டம் இல்லை. இதில் நாயகனை விட நண்பர் smart ! மிளகாய் பஜ்ஜி போல் வரும் நாயகியின் தோழி இல்லை. சொர்ணமால்யாவுக்கு அலைபாயுதேக்கு அடுத்து நினைவில் நிற்கும் பாத்திரம். அவர் இல்லாவிட்டால் கதையே நகராது. நாயகன் நாயகிக்கு அறிமுகப்பாட்டு இல்லை. நாயகி அறிமுகத்தில் முகத்தைக் காட்டாமல் இன்ன பிற பாகங்களைக் காட்டுவது, பூச்சொரிவது, காற்றடிப்பது, மழை பெய்வது போன்ற ஜிகினாத்தனங்கள் இல்லை.

6. விதவைகள், மனம் நலம் பாதிக்கப்படவர்கள், மாற்றுத் திறன் படைத்தோர் (இப்ப ஊனமுற்றோர இப்படி positiveஆ சொல்றாங்களாம். singaporeல physically handicapped என்பதற்குப் பதில் physically challenged என்பார்கள்) அனைவரையும் இவ்வளவு positiveஆக எந்தப் படமும் காட்டியதில்லை. காட்டினாலும் ஒரே பாட்டில் வீறு கொண்டு முன்னேறுவது போல் அபத்தமாகத் தான் காண்பிப்பார்கள்.

7. வாய் பேசாத காது கேளாத நாயகிக்கு ஒரு பாட்டி. ஆனால் அவர் “ஓ..” என்று ஒப்பாரி வைக்கவில்லை. நாயகன் கட்டிக் கொள்கிறேன் என்று சொன்னவுடன் “வாழ்வு கொடுத்த மகராசா” என்று அடி தழுவவும் இல்லை! நாகியை யாரும் பரிதாபமாகப் பார்க்கவில்லை. அவரை வைத்து மட்டமான comedy பண்ணவில்லை. கிரேசி மோகனின் புளித்துப் போன வசன நகைச்சுவைக்கு இடையில் situation comedyயாக இந்தப் படத்தில் இருப்பவை அருமை.

8. இந்த மாதிரி படங்களில் “பெ ..பெப்பே.” என்று சொல்லவும் அதை மொழிபெயர்க்கவும் என்று ஒரு torture இருக்கும். இதில் சைகை மொழியை அருமையாகக் கற்றுக் கொடுக்கிறார்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நமக்கே எல்லா சைகையும் புரிய ஆரம்பிப்பது இயக்குனரின் திறமை. வார்த்தை இல்லாத climax அருமை. இனி ஞாயிற்றுக் கிழமை மதியம் வரும் சைகை மொழிச் செய்திகளைப் பார்க்க வேண்டும் !

9. முக்கியமானது, படம் பேசும் விசயம் – அன்புக்கு மொழி முக்கியம் இல்லை; அன்பு தான் முக்கியம். இந்த ஒரு விசயத்துக்காகத் தான் படம் ரொம்பப் புடிச்சுப் போச்சு. அடிப்படை உணர்வுகளை தமிழ்ப் படங்கள் பேசுறது ரொம்ப அரிது.

கலை நோக்கில் பார்த்தால் படத்தில் விமர்சிக்க நிறைய இருக்கலாம். ஆனால், இது விமர்சித்து மதிப்பெண் போடுவதற்கான படம் இல்லை. பார்க்க, அனுபவிக்க, உணர , புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் வில்லனாக, குணச்சித்திர நடிகராக பிரகாஷ்ராஜ் வந்துகொண்டே இருப்பது சில சமயம் அலுப்பாக இருக்கும். பரவாயில்லை. இது போல் படம் எடுப்பார் என்றால் எல்லாரும் அவரை வைத்தே படம் எடுத்து அவருக்கு நிறைய பணம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். பொய் தவிர்த்து, நாம், அழகிய தீயே, கண்ட நாள் முதல் என்று அவர் படங்கள் எல்லாம் ரசிக்க வைப்பதாகவே இருக்கின்றன. கமல், பார்த்திபனும் சொந்தக் காசைப் போட்டுப் படம் எடுத்தாலும், அவர்களின் அதிபுத்திசாலித்தன ஆராய்ச்சிக்கு நாம் ஆய்வுக்கூட எலிகளாக அவதிப்பட வாய்ப்பு இருக்கிறது. அதி மேதாவித்தனமாய் படம் எடுக்காமல், எளிமையாக ராதா மோகன் போல் படம் எடுத்தால் நன்று. உண்மையில், எளிமையாய் எடுப்பது தான் சிரமம்.

இது மாதிரி அப்பப்ப படங்கள் வர்றது ஆசுவாசமா இருக்கு. அடுத்து “கொஞ்சமாச்சும் நல்லா இருக்கும், ஒரு தடவையாச்சும் பார்க்கலாம்” என்று எதிர்ப்பார்த்திருக்கும் படங்கள் – சிவாஜி, உன்னாலே உன்னாலே, மாயக்கண்ணாடி, ஓரம்போ, நான் கடவுள், வாரணம் ஆயிரம், பீமா, தசாவதாரம்.


Comments

10 responses to “மொழி – திரை விமர்சனம்”

 1. // கமல், பார்த்திபனும் சொந்தக் காசைப் போட்டுப் படம் எடுத்தாலும், அவர்களின் அதிபுத்திசாலித்தன ஆராய்ச்சிக்கு நாம் ஆய்வுக்கூட எலிகளாக அவதிப்பட வாய்ப்பு இருக்கிறது.

  இன்னும் மொழி பார்க்கவில்லை. ஆனால் இந்த comment ஒடு முழுவதும் ஒத்துபோகிறேன் 🙂

 2. சயந்தன் Avatar
  சயந்தன்

  //சினிமாத்தனங்கள் குறைவு. வில்லன் இல்லை. punch dialogue இல்லை. அடிதடி சண்டை இல்லை. heroism இல்லை. அடி வாங்கும் வடிவேலு comedy இல்லை. நாயகனோடு சுற்றும் கேணை நண்பர்கள் கூட்டம் இல்லை. இதில் நாயகனை விட நண்பர் smart ! மிளகாய் பஜ்ஜி போல் வரும் நாயகியின் தோழி இல்லை.//
  உண்மையைச் சொல்லுங்க.. மொழி தமிழ்ப் படம் தானா..?

 3. ரவி!
  உங்கள் பார்வை, மொழியைக் கட்டாயம் பார்க்க வேண்டும் எனும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
  நீங்கள், சேதுமாதவனின் “மறுபக்கம்” பார்த்திருக்கிறீர்களா? இல்லையெனில் முயற்சி செய்து பார்க்கவும்.
  நன்றி

 4. vicky, சயந்தன் – 🙂

  மலைநாடான் – மறுபக்கம் இன்னும் பார்க்கலீங்க..இது மாதிரி பார்க்க வேண்டிய படங்கள் பட்டியல் நிறைய இருக்கு. இணையத்தில் கிடைச்சா சொல்லுங்க.

 5. ரவி!
  அழியாத கோலங்கள் – பார்க்க வேண்டிய படம்

 6. visitor – அழியாத கோலங்கள் பார்த்திருக்கேங்க.

  (கதம்ப மாலை) பிரேமலதா – நன்றி.

 7. ரவி,

  நீங்கள் வியந்து பாராட்டியதனால் ‘மொழி’ படம் பார்த்தேன். நல்ல படம். முதல் பாதியோடு படத்தை முடித்திருக்கலாம் 🙂 இரண்டாவது பாதியில் கோட்டை விட்டுவிட்டார்கள். ‘காற்றின் மொழி’ பாடல் மிகவும் கவர்ந்தது. தேவையிருக்கும் போது மிகச்சிறந்த இசை அமைக்க முடியுமென்று வித்தியாசாகர் நிரூபித்திருக்கிறார். எல்லா இயக்குநர்களும் இசையமைப்பாளர்களை இவ்வாறு பயன்படுத்திக் கொண்டால் நல்லது.

  -பாலாஜி.

 8. பாலாஜி, படத்தில் சில இழுவைக்காட்சிகள் இருக்கு தான். ஆனா, பொதுவா ஒரு நல்ல feel-good படம். இல்லை, overஆ பாடாவதி படங்கள் பார்த்து நொந்து போன காலத்தில் இந்தப் படம் வந்ததும் ஒரு காரணம். ஆமா, ரஹ்மான், இளையராஜா, யுவன் யாராயிருந்தாலும் இயக்குநரைப் பொருத்து தான் நல்ல இசை வருகிறது.

 9. நல்ல படம். ஆனா லாஜிக் உதைக்குதே!

  காதலுக்கு கண் இல்லன்னு சொல்வாங்க! ஆனா

  காது கேளாதவங்க, வாய் பேசாதவங்கங்கள

  கல்யாணம்
  செய்தவங்கள பார்த்ததில்லை!

 10. […] வாசிக்க, மொழி – திரை விமர்சனம் […]