கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !

 கூகுள் தமிழ் எழுதி போன்ற எந்த ஒரு இந்திய மொழி கூகுள் எழுதியையும் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில்,

1.  கூகுள் தமிழ் எழுதியில் பழகி விட்டால்,   கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள். கூகுள் எழுதி வசதி இல்லாத தளங்களில் எழுத வேறு மென்பொருள்கள், வேறு தட்டச்சு முறைகளைப் பயில வேண்டும். இதனால் மூளை குழம்பும். ஒரு மொழியை எழுதுவதற்கான தட்டச்சு மென்பொருள் என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. இந்த மென்பொருள்களை நிறுவனச் சார்பின்றி மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் இருப்பது முக்கியம்.

2. எ-கலப்பை, NHM Writer போன்று அல்லாது கூகுள் எழுதி ஒரு dynamic writer. அதாவது, இன்ன விசையை அழுத்தினால் இன்ன எழுத்து வரும் என்று உங்களால் ஊகிக்க இயலாது. நீங்கள் எழுத எழுத உங்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளும்.

ஒரு தட்டச்சும் பழக்கத்தை மிகையாகத் தன்விருப்பமாக்குவது தவறு. கூகுள் தன் ஊகிக்கும் நிரலாக்கத்தை மாற்றினால் நாமும் பழக்கத்தை மாற்ற வேண்டி இருக்கும். அவசரத்துக்கு வேறு மென்பொருள்களை நாட வேண்டி வந்தால் வேகமாக எழுத இயலாது. துவக்க நிலையில், இது இணையத்தில் உள்ள பெரும்பாலானோர் எந்த ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழை எழுதுகிறார்கள் என்பதன் அடிப்படையில் செயல்படுகிறது. நாம் வேறு மாதிரி எழுதும் முறையைக் கொண்டிருந்தால் துவக்கத்தில் சிரமப்பட வேண்டி இருக்கும்.

ஒவ்வொரு விசையை அழுத்தும் போதும் என்ன எழுத்து வெளிவரும் என்று அறிய இயல்வது முக்கியம். ஆனால், கூகுள் எழுதியில் முழுச் சொல்லையும் எழுதிய பிறகே தமிழுக்கு மாறுகிறது. இப்படி வெளிவரும் சொல் பிழையாக இருந்தால் backspace அழுத்திச் சென்று பிழை நீக்குவது பெரிய தலைவலியாகப் போகும். ஒரு பத்து வரி கட்டுரை எழுதிப் பார்த்தால் கூகுள் எழுதி எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்று புரியும்.

3. நாளை யாகூ, எம்எஸ்என் எல்லாரும் இது போன்ற ஊகித்தறியும் மென்பொருள்களை ஆளுக்கு ஒருவராக அறிமுகப்படுத்தினால், ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் இந்த ஊகித்தறியும் மென்பொருள்கள் எந்த அளவு ஒரு போல் இயங்கும் என்று சொல்ல இயலாது. ஒரே தமிழ்ச் சொல்லை வெவ்வேறு முறையில் வெவ்வேறு தளங்களில் எழுத வேண்டி வருவது குழப்பமாக இருக்கும்.

3. இணைய வசதி இன்றி வெறுமனே கணினியில் எழுத இது உதவாது

4. நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்கள் என்பதை ஊகித்துக் கற்றுக் கொள்வது போல் இது அமைக்கப்பட்டிருப்பது இந்த மென்பொருளின் சிறப்பாகப் பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில், இது தான் இதன் பெரிய குறை. ஆங்கிலத் தட்டச்சுக்கு இது போல் ஊகித்தறியும் மென்பொருள் வந்தால் உங்களுக்கு எவ்வளவு அயர்ச்சியாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

செல்பேசியில் அதிக விசைகள் இல்லாத நிலையில் குறுஞ்செய்தி போன்று சிறிய அளவிலான செய்திகள் எழுத இந்த ஊகிக்கும் முறை உதவும். கணினியில் பெரிய கட்டுரைகள் எழுத இது உதவாது. ல, ழ, ள, ற, ர, ண, ன, ந எழுத்துக்கள் அடங்கிய சொற்களை எழுதிப் பாருங்கள். இந்த முறையின் அயர்ச்சி புரியும்.

தவிர, இந்த கற்றல் நிகழ்வு உங்கள் உலாவியின் நினைவகத்தில் நடக்கிறது. நீங்கள் வேறு கணினி, இயக்குதளங்கள், உலாவிகளைப் பயன்படுத்தினால் திரும்ப முதலில் இருந்து கூகுளுக்குத் தமிழ் சொல்லித் தர வேண்டி இருக்கும். இது உங்கள் தட்டச்சும் வேகத்தைப் பெரிதும் மட்டுப்படுத்தும்.

5. ஒரே கணினி, உலாவியை உங்கள் நண்பர்கள், உறவினர்களோடு பகிர்ந்து கொண்டால் நீங்கள் செய்து வைத்திருக்கும் தன்விருப்பமாக்கல்கள் குளறுபடி ஆகலாம்.

6. சில சொற்களைத் தலைகீழாக நின்றாலும் எழுத முடியாத அளவுக்கு வழுக்கள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, guha priya, guhapriya என்று எழுதிப் பாருங்களேன் 😉 (நன்றி – கோபி)

7. ஆர்க்குட் போன்ற தளங்களின் பிரபலம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான இளைய தலைமுறையினர் இந்திய மொழி எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதித்துக் கொள்ளத் தொடங்குவார்கள். தொன்மையான வரலாற்றைக் கொண்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளுக்கு இதை விட வேறு அவமானம் உண்டோ?

இந்தத் தீமைகளை ஓரளவேனும் தவிர்க்க வேண்டும் என்று கூகுள் நினைத்தால், பின்வருவனவற்றைச் செய்யலாம்:

1. இணைப்பறு நிலையிலும் செயல்படுமாறு தரவிறக்கிக் கொள்ளத்தக்க மென்பொருள் பொதியாக இதை மாற்ற முனைய வேண்டும்.

2. கணினி, உலாவி, இயக்குதள சார்பு இன்றி குறைந்தபட்சம் கூகுள் பயனர் கணக்கோடு இணைந்ததாக இந்த மென்பொருளை மாற்ற வேண்டும்.

ஆனால், இவ்வளவையும் செய்தாலும்,

தமிழ்99 போன்று அந்தந்த மொழிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தட்டச்சு முறைகள், அவற்றை ஊக்குவிக்கும் எ-கலப்பை, NHM Writer போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள். அஞ்சல் / தமிங்கில முறை தான் வேண்டுமென்றாலும் குறைந்தபட்சம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தட்டச்சு செய்ய உதவும் நிலையான மென்பொருள்களை நாடுங்கள்.


Comments

49 responses to “கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !”

 1. மிக முக்கியமான கட்டுரை. நன்றி.

  1. நானும் இதனால்தான் கடந்த 15 ஆண்டுகளாக யாராலும் கற்றுக் கொள்ள விரும்பாத scrip tamil முறையிலயே டைப் செய்து கொண்டிருக்கிறேன்.

 2. இப்போதைய நிலையில் வலையுலகத்தினருக்கு மிகத் தேவையான விஷயம் இதுவே..

  நானும் இதனால்தான் கடந்த 8 ஆண்டுகளாக யாராலும் கற்றுக் கொள்ள விரும்பாத inscript முறையிலயே டைப் செய்து கொண்டிருக்கிறேன்.

  இதனை மாற்றி வேறு முறைக்கு போக வேண்டுமானால் நான் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது வேலையில்லாமல் இருக்க வேண்டும்..

  மீண்டும் குழப்பம் வரும். அனிச்சை செயலாக எனது கை தற்போதைய முறைக்கு ஆட்கொண்டுவிட்டதால் என்னால் மாற முடியவில்லை. விருப்பமும் இல்லை. அப்படியே விட்டுவிட்டேன்..

  நன்றி ரவி..

 3. //guha priya, guhapriya//
  இந்த நூற்றாண்டின் பெரிய பகிடிகளில் இதனைச் சேர்த்து விடலாம்.

  //API வெளியிடலாம்//
  இங்க பாருங்க!!
  http://gmodules.com/ig/creator?synd=open&url=http%3A//www.google.com/ig/modules/indic_transliteration.xml

  அனைத்தையும் ஏற்றுக் கெள்கின்றேன். ஆனாலும் எமது மக்கள் இலகுகருதி எதையும் அடைமானம் வைக்கத் தயங்கார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.!!!

  வாழ்க தமிழ் 99 😉

  PS:எனது தளத்துக்கான இணைப்பில் ஒரு பிழை உள்ளது. அதை ஒருக்கா கவனியுங்க தலை!!!

 4. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  ஜ்யோவ்ராம் சுந்தர், உண்மைத் தமிழன் – நன்றி.

  மயூ – உங்கள் தளத்துக்கான தொடுப்பை சரி செஞ்சுட்டேன்.

  உண்மையில் கூகுள் எழுதி இலகுவா இருந்தா பரவாயில்லையே..அது ஒரு சில சொற்கள் கொண்ட குறுஞ்செய்தி எழுதத் தான் உதவும். பத்து வரி கொண்ட கட்டுரை எழுத முயன்று பாருங்க. மூச்சு முட்டிப் போகும். அப்ப எது இலகு? அது இலகு இல்ல..ஆனா, இலகு மாதிரி தோணுது 🙂

  அந்த gadget குறித்து தெரியும். ஆனால், அதை வைத்து வெட்டி ஒட்டத் தானே முடியும்? நேரடியா தளங்கள்ல எழுத இயலாதே?

 5. guhapriya என்ற பெயரைக் ‘குதப்பிய’ கூகிள் மொழிமாற்றியை நான் என்றுமே பயன்படுத்தப் போவதில்லை. 🙂

  தமிழ் 99 தான் ‘தமிழை தமிழால் தமிழாக தட்டச்சிட சிறந்தது’ என்பது மட்டுமல்ல. அது தான் தமிழ் விசைப்பலகைகளிலேயே புத்திசாலித்தனமானது.

 6. தகவல்களுக்கு நன்றி ரவி சங்கர்!

 7. ஆர்கூட்டில் ஸ்கிராப் எழுத் சில வேளைகளில் பயன் படுத்தியிருக்கின்றேன். பெரிய பந்திகளாக எழுதியதில்லை!!!

 8. வினோத் Avatar
  வினோத்

  என்ன வந்தாலும் நமக்கு இப்போ XP ல் தமிழ் புகுத்தி எழுதிவருவதலால் இகலப்பை கூட கடினமாக இருக்கிறது. இம்முறையில் வேகமாக எழுதவும் இயல்கிறது. அதே போல மற்ற மொழியில் எழுதுவதென்றாலும் மொழிதெரியாவிட்டால் கூட அதிக கஷ்டமாக தெரியவில்லை.

 9. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  வினோத், அது என்ன xpல் தமிழ் புகுத்தி எழுதும் முறை?? கொஞ்சம் விளக்க இயலுமா? இன்னொன்று, எ-கலப்பை என்பது ஒரு மென்பொருள் தான். அதிலும், அஞ்சல், தமிழ்99, பாமினி என்று வெவ்வேறு விசைப்பலகைகள் கிடைக்கின்றன. அனேகமாக நீங்கள் அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பிற மொழி எழுத்துக்கள் தெரியாதவர்களுக்கு அஞ்சல் போன்று அந்தந்த மொழிகளுக்கு உள்ள விசைப்பலகைகள் உதவும் என்பது உண்மை தான். இதே தேற்றத்தைத் திருப்பிப் போட்டு, தமிழ் எழுதத் தெரியாத பிற மொழிக் காரர்களுக்கு அஞ்சல் பயன்படும் என்றும் சொல்லலாம் 😉 கூகுள் எழுதியைக் காட்டிலும் அஞ்சலில் எழுதுவது இலகு என்று தான் தோன்றுகிறது.

 10. என்று அவர் சொல்வது, இன்ஸ்கிரிப்டை…!!!
  ஒரு இந்திய மொழி பயின்றுவிட்டால் எல்லா இந்திய மொழிகளையும் அதே தளக்கோலத்தில் தட்டச்சிட முடிவது இதன் சிறப்பியல்பு!

 11. என்னால் எ-கலப்பையை சில கணணிகளில் நிறுவ முடியவில்லை. (உதாரணம் Windows 2003 Server)

  ஆனால் NHMWriter மிகவும் பயனுள்ளதாக உள்ளது….. இதில் உள்ள பெரிய பயன் என்னவென்றால் உடையும் எழுத்துக்களை தானாகவே சீர் செய்து விடுகிறது…

  தமிழக அரசு நிறுவனமான ELCOT வழங்கும் கணணிகள் பெறும்பாலும் Linux ல் இயங்குபவை….

  இப்பொழுதைய தேவை… NHM Writer Linux Version….

  நான் கூகிள் தமிழ் எழுதி பயன்படுத்துவதில்லை. மொழிக்கென்று ஒரு அங்கிகரிக்கப்பட்ட TamilNet 99 இருக்கும் போது இப்படி ஆளுக்கு ஆள் வித விதமான போனடிக் முறைகளை அறிமுகப்படுத்துவது கொடுமை !!!

 12. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  புருனோ, NHM மென்பொருள்களின் லின்க்ஸ் பதிப்பு உருவாக்கத்தில் இருக்கிறது என்று நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன்.

  மயூரேசன் – தகவலுக்கு நன்றி.

  திவ்யா – இத்தகவல் உங்களுக்குப் பயன்பட்டதில் மகிழ்ச்சி. நன்றி.

 13. […] பயன் படுத்துவதால் என்ன தீமை என்று விளக்குகின்றார் […]

 14. தமிழ் வலைப்பதிவு » Blog Archive » பிளாக்கரில் நேரடியாகத் தமிழில் எழுதும் வசதி

  […] கூகிள் தமிழ் எழுதியைப் பயன்படுத்தாத

 15. மாதரசன் Avatar
  மாதரசன்

  நல்ல ஆய்வு…

 16. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  நன்றி மாதரசன்.

 17. செல்வமுரளி Avatar
  செல்வமுரளி

  நல்ல தகவல்கள். நன்றி!! நண்பரே!!

 18. கலை Avatar
  கலை

  புதிதாக தமிழில் எழுத ஆரம்பித்திருக்கும் எனது நண்பர்கள் சிலர் இந்த கூகிள் எழுதியை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். (நான் தமிழில் எழுதும் மென்பொருட்கள் பற்றி ஏற்கனவே அவர்களுக்கு சொல்லியிருந்தும்கூட). இது அவர்களுக்கு இலகுவானதாய் இருந்திருக்கலாம். அவர்களுக்கு இந்த பதிவின் இணைப்பை அனுப்பி வைக்கிறேன். நன்றி.

 19. nanbare nan puthithai intha google indic payan paduthi eluthi nerya pilaigal eppothu than ekalappai parkka thuvngi irukkiraen

  ungal pathivu kandippa nerya puthivargalaukku useful a irukkum nandri nanba ungalukku
  koda kodi nandrigal

  மிக முக்கியமான கட்டுரை. நன்றி.

 20. Sudharsan Avatar
  Sudharsan

  As I am practicing in Tamil writing, it is very difficult to type in Tamil (NH writer etc), for us google is a good one. Since we are good in english typing, it is easy.

  I understand the problems ur talking about, but believe it take so much time to type one line using NH.

  suggest easy way of learning.

  Looking for suggestions

 21. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  Thanks Suresh.

  Sudharsan, even if you want to type like ammaa = அம்மா, you can type it using NHM writer / Ekalappai. It is much better than using the unpredictable Google tamil Typing tool.

 22. என்னுடைய முதல் இரண்டு பதிவுகளை பார்த்தால் நான் கூகிளால் பட்ட கஷ்டம் புரியும்… வீட்டில் டைப் பண்ணும் போது ஒருமாரியும்.. காலேஜில் டைப் பண்ணும்போது இன்னொருமாதிரியும்… எப்பப்பா…. நான் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா?? இது ஏன்னு புரியாம இருந்தேன்… இப்போதான் புரியுது….

  கொசுரு:-

  எனக்கு nhm writer ஐ அறிமுகபடுத்திய பரிசலாருக்கு நன்றி..

  டிஸ்கி:

  ரிக்சாகாரேய்ங்க.. இந்த வார்த்தையை சத்தியமா கூகிள்ல டைப் பண்ண முடியாது.. என்க்கு அனுபவம்.. ஏன்னா.. அது என் முதல் பதிவு 🙂

 23. சிறப்பான தகவல்..நீங்கள் கூறிய பிறகே இது பற்றி யோசித்தேன் 🙁

 24. அஞ்சல் மற்றும் தமிழ்99, மேக் operating system இல் எனக்கு default ஆக install செய்யப்பட்டுள்ளது.
  எனினும் கூகிள் தான் பயன் படுத்துகிறேன்.

  “நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்கள் என்பதை ஊகித்துக் கற்றுக் கொள்வது போல் இது அமைக்கப்பட்டிருப்பது இந்த மென்பொருளின் சிறப்பாகப் பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில், இது தான் இதன் பெரிய குறை. ஆங்கிலத் தட்டச்சுக்கு இது போல் ஊகித்தறியும் மென்பொருள் வந்தால் உங்களுக்கு எவ்வளவு அயர்ச்சியாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.”

  Even Japanese typing is like that… (Microsoft IME Keyboard for Japanese) it has changed the life of Japanese to an extent that they no longer use the traditional kana keyboard (http://en.wikipedia.org/wiki/File:MacBookProJISKeyboard-2.jpg)

  இதெல்லாம் QWERTY கீ போர்டு தான் காரணம். ஆங்கிலம் டைப் செய்வதற்கு கூட QWERTY ஒரு நல்ல முறை அல்ல. இதை பாருங்கள் (http://en.wikipedia.org/wiki/Dvorak_Simplified_Keyboard)

  100 வருட பழக்கத்தை விடுவது சற்றே கடினம். எனக்கு கூகிள் பயன்படுத்துவது தவறாக தெரிய வில்லை. அஞ்சல் கூட ஒத்துகொள்ளலாம், சத்தியமாக தமிழ்99 எல்லாம் பயன்படுத்துவது மிகவும் கடினம்…
  அதில் கூட நாம் தமிழ் கீ போர்டு பயன் படுத்துவதில்லையே… US English கீ போர்டில் இந்த தமிழ் எழுத்துக்கு இந்த ஆங்கில எழுத்தை டைப் செய்ய வேண்டும் என்று தானே மனதில் வைத்துக்கொள்கிறோம்? அதற்கு பதில் இந்த தமிழ் வார்த்தைக்கு இந்த ஆங்கில வார்த்தை டைப் செய்ய வேண்டும் என்று மனதில் வைத்துக்கொள்வதில் தவறேதும் இல்லையே?

  I agree.. internet connectivity is a must… But that could change (Google gears support *may* come later on)

 25. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  //Even Japanese typing is like that… //

  சப்பானிய, சீன மொழிகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எழுத்துகள் இருப்பதால் இது ஒரு மேம்பட்ட தீர்வாக இருக்கலாம். தமிழ்99 முறையில், தமிழை எழுத 31 விசைகள் மட்டுமே போதுமானதாக இருக்கிறதே? மற்ற தமிழ்த் தட்டச்சு முறைகளிலும் 31க்கு சற்று கூடுதலான விசைகள் தாம். போதிய விசைகள் இருக்கையில் எதற்கு ஊகம் செய்ய வேண்டும்? இன்னொரு மொழியினர் செய்வதால் மட்டுமே எதுவும் சரியான அணுகுமுறை ஆகி விட முடியாது. நம் மொழியின் இயல்பு, தேவைக்கு ஏற்பவே செயல்பட வேண்டும்.

  //(Microsoft IME Keyboard for Japanese) it has changed the life of Japanese to an extent that they no longer use the traditional kana keyboard (http://en.wikipedia.org/wiki/File:MacBookProJISKeyboard-2.jpg)//
  //

  ஒரு மொழிக்குத் தொடர்பில்லாத குறிப்பிட்ட நிறுவனம் அறிமுகப்படுத்திய ஒன்று கால ஓட்டத்தில் அம்மொழியின் ஆயிரக்கணக்கான ஆண்டு இயல்பையே மாற்றுவது சரி என்று நினைக்கிறீர்களா? சரியோ தவறோ நுட்பம் மொழியின் மீது தாக்கம் கொண்டுள்ளது என்பது உண்மை. எனவே தான் எந்த நுட்பத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று முன்கூட்டியே யோசிக்க வேண்டி உள்ளது.

  //ஆங்கிலம் டைப் செய்வதற்கு கூட QWERTY ஒரு நல்ல முறை அல்ல. //

  ஆம். அதனால் தான் அஞ்சல், தமிங்கில விசைப்பலகைகள் இன்னும் திறம் குறைந்து உள்ளன.

  //சத்தியமாக தமிழ்99 எல்லாம் பயன்படுத்துவது மிகவும் கடினம்…
  அதில் கூட நாம் தமிழ் கீ போர்டு பயன் படுத்துவதில்லையே… US English கீ போர்டில் இந்த தமிழ் எழுத்துக்கு இந்த ஆங்கில எழுத்தை டைப் செய்ய வேண்டும் என்று தானே மனதில் வைத்துக்கொள்கிறோம்? //

  இல்லை, தமிழ்99 பழகாதவர்கள் தமிழ்99 முறை குறித்து பொதுவாக வைத்துள்ள பிழையான புரிதல் இது. தமிழ்99 பழகத் தொடங்குபவர், பழகியவர்கள் எவரும் ஒருக்காலும் இந்த தமிழ் எழுத்துக்கு இன்ன ஆங்கில எழுத்து விசை என்று நினைவு வைத்துப் பழகுவதில்லை. பழகவும் இயலாது. இதை என்னால் 100% உறுதி படக் கூற முடியும். தமிழ் எழுத்து விசைகளின் இருப்பிடத்தை நேரடியாகவே மனதில் பதிக்கிறோம்.

  //(Google gears support *may* come later on)//

  ஒப்புக் கொள்கிறேன். இந்தக் கருவியின் தொடக்கம் முதல் API போன்றவை மூலம் மேம்படுத்தியே வருகிறார்கள். நுட்ப வசதிகள் கூடினாலும், இம்மென்பொருள் இயங்கும் அடிப்படை தவறே.

 26. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  கடைக்குட்டி, பிற தட்டச்சு முறைகள் அறியாததால் கூகுள் முறை தான் சிறந்தது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களைப் போல் பலரும் உணர்ந்தால் நன்றாக இருக்கும்.

  மகிழ்ச்சி, கிரி.

 27. Avatar
  Anonymous

  “உண்மைதான்… ”

  இதையும் கூகுல் தமிழ் எழுதியில் தட்டச்சு செய்தே அனுப்பிஉள்ளேன்

 28. கதிரவன் Avatar
  கதிரவன்

  நான் ஒரு தமிழ் விரிவுரையாளர். நான் அறிந்தவரையில் தமிழ்99 விசைப்பலகையே எளிமையானது.

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   மகிழ்ச்சி கதிரவன். தமிழின் தன்மையை உணர்ந்தவர்கள் தமிழ்99ஐ ஆதரிப்பதைத் தொடர்ந்து கண்டு வருகிறேன்.

 29. Avatar
  Anonymous

  மதிப்பிற்குரிய கோபி அவர்களே,
  gugapriyaa என்று தட்டியிருந்தால் அது தமிழில் அழகாக சொல்லியிருக்குமே !!! மாறாக நீங்கள் ஒரு வடமொழிப் பெயரைத் தமிழுக்கென்றிருக்கும் கருவியில் புகுத்தியது நும் குற்றமேயன்றி கூகிள்-இன் குற்றமன்று !

  நம்மொழி பிற நாட்டவர் படைப்பில் (பணத்தில்) வளர்வதில் மகிழ்ச்சி கொள்க ! நிறைவு கொள்க !!
  ஒன்றை உயர்த்த மற்றொன்றை தயைகூர்ந்து குறைத்து மதிப்பிட வேண்டாம் !!!!

  வாய்ப்பிற்கு நன்றிகள் பற்பல !!!!

  இவ்வாறு,
  செம்பியன்

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   வணக்கம் செம்பியன்,

   கோபி, மயூரேசன், நான் உட்பட பலரும் கூகுள் ரசிகர்களே. கூகுளைக் குறைத்துச் சொல்லும் தனிப்பட்ட நோக்கம் இல்லை. அதே வேளை, ஒரு மென்பொருள் குறித்து இது போன்ற அறிவடிப்படை விமர்சனங்கள் வரவேற்க வேண்டியதே. கூகுள் குழுவினரே கூட தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவலாம். இடுகை எழுதிய போது குறிப்பிட்ட பல குறைகளைத் தற்போது திருத்தியுள்ளனர். புதிய வசதிகளைத் தந்துள்ளனர்.

   தனிப்பட்ட முறையில் நான் கிரந்த ஆதரவாளன் கிடையாது. ஆனால், ஒரு மென்பொருளை உருவாக்குபவர்கள் சமூகத்தின் பல்வேறு தேவைகளையும் கருத்தில் கொண்டே வடிவமைக்க வேண்டும். தமிழர்கள் சிலர் கிரந்த எழுத்துகளைக் கலந்து எழுதுகிறார்கள் என்கிற போது அந்த வசதியை ஒரு எழுதி தர வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறில்லை.

   //“கூகிள் தமிழ் எழுதி” முழுக்க முழுக்க தமிழ் அறிஞர்கள் மற்றும் சான்றோர்களின் சால்போடும் தமிழ் நூல்களின் உதவியோடும் இந்திய மண்ணில் (ஹைதராபாத்தில்) இந்திய படைப்பாளிகளைக் கொண்டு உருவான ஒரு அருமையான படைப்பு.
   //

   ஒரு வேளை அது உருவான முறையை நீங்கள் நேரடியாக அறிந்தவர் என்றால் அது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.

 30. Avatar
  Anonymous

  குதப்பியது கூகுளா ?? கோபியா ??!!! என்பதல்ல என் கேள்வி …

  “தமிழ் எழுதி” கொண்டு சமஸ்கிருதம் பயில அல்லது எழுத முற்படுதல் மூடித்தனம் அல்லவா ?
  எதையும் சரிவர பயன்படுத்தினாலே போதுமே !

  இலகுகருதி எதையும் அடைமானம் வைக்கத் தேவையில்லை மயூரேசன் அன்பரே …

  “கூகிள் தமிழ் எழுதி” முழுக்க முழுக்க தமிழ் அறிஞர்கள் மற்றும் சான்றோர்களின் சால்போடும் தமிழ் நூல்களின் உதவியோடும் இந்திய மண்ணில் (ஹைதராபாத்தில்) இந்திய படைப்பாளிகளைக் கொண்டு உருவான ஒரு அருமையான படைப்பு.

  சொன்னதை மட்டும் செய்யும் கருவிகளுக்கு மத்தியில் புதுமையை புகுத்த்தும் கருவி சற்று உருத்துவதாகத்தான் தோன்றும். சுருங்கச் சொன்னால், கூகிள் நமக்கு தந்திருப்பது ஒரு அற்புத “தமிழ்ப் பழகெழுதி” (வினைதொகையை நினைவில் கொள்க!).

  வாங்க பழகலாம் !

  இவ்வாறு,
  செம்பியன்

 31. Murugesan Avatar
  Murugesan

  100% real..

 32. வணக்கம்.

  அருமையான தகவல். ஆனால் இளையோருக்கும் புதியவர்களுக்கும் ஏனைய தமிழ்த் தட்டச்சு முறைகளை இலகுவாகக் கற்கக்கூடிய வழிவகைகளை நாங்கள் செய்தால் இது போன்ற பிரச்சினைகள் அதிகம் வராது.

  மேலும் கூகுள் நல்லெண்ணத்தோடு அத்திட்டத்தைக் கொண்டுவந்திருக்கவேண்டும். எது எப்படியோ தமிழ் மொழி தன் வளர்ச்சியின் அடுத்தபடியைக் கணணி, இணையம் மூலம் அடைந்திருக்கிறது.

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   //இளையோருக்கும் புதியவர்களுக்கும் ஏனைய தமிழ்த் தட்டச்சு முறைகளை இலகுவாகக் கற்கக்கூடிய வழிவகைகளை நாங்கள் செய்தால் இது போன்ற பிரச்சினைகள் அதிகம் வராது.
   //

   உண்மை. பள்ளியிலேயே கணினியில் தமிழில் எழுதுவது எப்படி என்று கற்றுத் தர வேண்டும். சில முயற்சிகளைச் செய்து வருகிறோம்.

   //கூகுள் நல்லெண்ணத்தோடு அத்திட்டத்தைக் கொண்டுவந்திருக்கவேண்டும். //

   கண்டிப்பாக்க நன்னோக்கம் தான். என்ன வழிமுறை என்பதில் தான் மாற்றுக் கருத்து. தங்கள் கருவிகள் மூலம் இன்னும் பலரைத் தமிழில் எழுத வைத்திருக்கிறது என்பது உண்மை.

 33. […] Warning 1: Never use Google Indic transliterator for Tamil […]

 34. மிக நல்ல பதிவு. நீண்ட நற்கருத்துக்களும் அருமை.

 35. ஒருவன் தன தாய்மொழியை பயன்படுத்த முடியவில்லை என்பதற்காக மாற்று மொழியை தேடிப்போவது தவறு. மாறாக அந்த துறையில் தன மொழியை உபயோகப்படுத்த முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற வேண்டும்.என் தாய்மொழியை மட்டும் அறிந்துள்ள நாற்பத்தைந்து வயதான என்னால்இன்று எனது தமிழ் மொழியில்தங்களுடன்எனது கருத்துக்களை பகிந்துகொள்ள முடிகிறது என்றால் இன்றைய இளைஞர்களால்
  கூகுளில் மட்டுமல்ல மொழிப்பற்று இருந்தால்
  எந்த இடத்திலும் தன மொழிக்கு அங்கீகாரம்
  பெற முடியும். நன்றி.

 36. கூகிள் எழுதி வேண்டாம் என்பது இது உங்கள் விருப்பமாக இருக்கலாம் அதற்காக பயன்படுத்தாதீர்கள் என்பது சரியா என தெரியவில்லை. எழுத்துப் பிழைகள் கூகுளில் அதிகம் தவிர்க்கமுடியும் என்பது எனது கருத்து. நீங்கள் குறிப்பிடுமாறு சில சொற்களை சாதாரணமாக தட்டச்சிட முடியமலிருந்தாலும் முடியவே முடியாதென்றில்லையே

 37. Google IME என்று ஒரு offline input software இருக்கிறது. அதைத்தான் நான் வெகுவாக வின்டோஸில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதில் பெரிய பிரச்சணை எதுவும் இதுவரை வரவில்லை 🙂

 38. DEAR SIR,
  I AM WRITING BLOGS ON SEVERAL TOPICS AND PUBLISHING THE SAME, IN MY ABOVE WEBSITE WITH SOME PHOTOS ETC. PL.SUGGEST SOME FONT SO THAT I CAN PUBLISH IN WEBSITE, WHICH CAN BE VIEWED BY ALL MY FRIENDS, IN THEIR COMPUTERS WITHOUT ANY DIFFICULTIES.

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   குமாரசாமி, தாங்கள் ஏற்கனவே சரியான எழுத்துருவில் தான் எழுதியுள்ளீர்கள்.

 39. வெங்கட்ராமன் Avatar
  வெங்கட்ராமன்

  மிகவும் பொருத்தமான கட்டுரை. எனக்கு உபயோகமாக இருந்தது. மேலும் வானவில் ஸாப்ட்வேரை பயன்படுத்வது பற்றியும் கூறியிருந்திருக்கலாம்.

 40. azhagi+ பயன்படுத்துகிறேன்! கொஞ்சம் நிறைகுறைகளைச் சொல்லுங்களேன்!

 41. RANJITH KUMAR Avatar
  RANJITH KUMAR

  thakavaluku nanri

 42. […] Warning 1: Never use Google Indic transliterator […]

 43. வேல்முருகன் Avatar
  வேல்முருகன்

  நன்று. நன்றி.

 44. […] Tamil Google transliterator – Beware! I don’t recommend using Google Tamil Transliterator. Check out recommended Tamil typing […]