இலங்கைத் தமிழ்

தெனாலி, நந்தா, கன்னத்தில் முத்தமிட்டால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – இவற்றில் கேட்கும் தமிழ் தான் இலங்கைத் தமிழ் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், “அப்துல் அமீது கமல்ஹாசனுக்குத் தவறான பலுக்கலைச் சொல்லித் தந்து விட்டார்” என்று என்னிடம் சொல்லி மாளாத இலங்கைத் தமிழரே இல்லை. ஐரோப்பா, நெதர்லாந்து மற்றும் இணையத்திலும் பல இலங்கைத் தமிழர்களுடன் பேசிப் பழகினாலும், என்னுடன் பேசும் போது எனக்கு சிரமமும் குழுப்பமும் வரக்கூடாது என்று இந்தியத் தமிழுக்கு மாறிப் பேச முயல்வார்கள். சில சமயம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பொதுவாக இருக்கும் சொற்களைக் கூட புரியுமோ புரியாதோ என்று தவிர்க்கவும் வேறு முறையில் சொல்லவும் எத்தனிப்பார்கள். இதனால், இந்தியத் தமிழருடன் இலங்கைத் தமிழர் பேசும்போது முழு இலங்கைத் தமிழையும் உள்வாங்கிக் கொள்ள இயல்வதில்லை. ஆனால், இரண்டு இலங்கைத் தமிழர்கள் பேசும்போது கூட இருந்து கேட்டால் உண்மையான இலங்கைத் தமிழ் எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.

கீழ் வரும் நாடகம் ஒரு சொல் விடாமல் புரிந்தால் Test of இலங்கைத் தமிழ் as a mother language தேர்வில் தேறலாம் 🙂

படலைக்குப் படலை என்னும் இந்த நாடகத்தை நேற்று எதேச்சையாகக் கண்டு பிடித்துப் போனது. மிகவும் எளிமையாக தொடக்ககால தூர்தர்சன் தமிழ் அரங்க நாடகங்கள் போல் இருந்தாலும், புலம் பெயர் இலங்கைத் தமிழரின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளை எடுத்துக் காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இன்னொன்று, மேல் உள்ள நாடகத்தில் வருவது யாழ்ப்பாணத் தமிழ் என்று நினைக்கிறேன். இலங்கைத் தமிழிலேயே வேறு பல வகைகள் உண்டு. என் இரு நண்பர்கள் மட்டக்களப்புத் தமிழ் பேசினார்கள். 50% கூடப் புரியவில்லை !!!


Comments

6 responses to “இலங்கைத் தமிழ்”

 1. கதை சுவாரசியத்தில் பேச்சு மொழியை அவ்வளவாக கவனிக்கவில்லை. நல்ல நாடகம் 🙂

 2. இந்த நாடகத்தின் சில அங்கங்கள் முன்பு பார்த்திருக்கிறேன். இங்கே பிடித்திருந்தது, சிரிக்க வைப்பதுடன் கூடவே சிந்திக்கவும் வைக்கிறது. நாடகத்துக்கென்று நடிப்பது போலல்லாமல் இருக்கும் இயல்பான நடிப்பும் கூடவே பிடித்திருந்தது.

  ல்ண்டன் வாழ் மாமாவின் மகனாக வருபவர் கதைப்பது (பேசுவது 🙂 ) இயல்பாகவே இருந்தாலும், இலங்கைத் தமிழில் இருந்து வேறு பட்டிருக்கின்றது. ஒரு வேளை அவரை தமிழர்களுடன் சேர விடாமல் அப்பா தடுத்ததனால் இருக்குமோ? 🙂

 3. ஆமா VoW, கலை – நாடகத்தின் கருத்துக்காகத் தான் இதைத் தேர்ந்தெடுத்துப் போட்டேன். புலம் பெயர் நாடுகள், மாநிலங்களில் இப்படி தங்கள் சொந்த இனத்துடன் சேர விடாமல் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

 4. பூர்ணா Avatar
  பூர்ணா

  புரியுதே! நல்ல நாடகம்..

 5. செயபால் Avatar
  செயபால்

  மட்டக்களப்புத் தமிழ் 50% புரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. மிகைப் படுத்திக் கூறுகிறீர்கள் போல இருக்கு.

 6. ravidreams Avatar
  ravidreams

  செயபால் » மட்டக்களப்புத் தமிழில் நண்பர்கள் சில நிமிடம் உரையாடியதைக் கேட்டேன். யாழ்ப்பாணத் தமிழில் இருந்து மாறுபட்டதாகவும் புரிந்து கொள்ள சிரமமாகவும் இருந்தது. ஒரு வேளை 50% என்பது அதிகமாக இருக்கலாம். தொடர்ந்து கேட்டால் புரியுமாக இருக்கலாம். முதல் முறை கேட்கையில் புரியவில்லை என்பதையே முக்கியமாகச் சொல்ல நினைத்தேன். ஏன் என்றால் யாழ் தமிழ் தான் இலங்கைத் தமிழ் என்றும் யாழ் தமிழ் புரிந்தால் இலங்கைத் தமிழ் புரியும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன்.