ஒ௫ என்கிற ஒ5

ஒரு கண் சோதனை 🙂

ரு

ரு – இது ர + உ = ரு (குறில்)

ரூ

ரூ – இது ர + ஊ = ரூ (நெடில்)

அப்படி என்றால் கீழே காண்பவை என்ன?

௫ – இது எண் 5 -ஐக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு (பார்க்க – தமிழ் எண்கள் ). இதனைக் குறில் ரு என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. ஒ௫ என்று எழுதினால் ஒ5 என்று தான் பொருள். அப்படித் தான் கணினியும் புரிந்து கொள்ளும். நீங்கள் ஒ௫ என்று எழுதிவிட்டு ஒரு என்று தேடினால் கணினிக்குத் தெரியாது.

௹ – உரூபாயைக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு. இதனை நெடில் ரூ என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. உயிரூட்டம் என்று எழுதுவதும் உயி௹ட்டம் என்று எழுதுவதும் வேறு வேறு. பார்க்க ஒரே மாதிரி தோற்றம் தானே, விரைவாக எழுதலாம் என்று எண்ணி இவ்வாறு எழுதாதீர்கள்.

ஏன் இவ்வளவும் சொல்கிறேன் என்றால்,

ஒ௫ என்று கூகுளில் தேடினால் 6800+ முடிவுகள் வருகின்றன. இது ஒரு சொல்லில் மட்டும் காணும் பிழை. இது போல் தமிழில் ரு வருகிற எத்தனை இடங்களை பிழையாக எழுதித் தள்ளி இருக்கிறோம் என்று தெரியவில்லை 🙁

பின்வரும் விசைப்பலகையைப் பாருங்கள்.

tamil-mobile-keyboard-1

ஃ தவிர்த்த மற்ற அனைத்து தமிழ் எழுத்துகளையும் இந்தப் பலகையில் இருந்தே எழுதலாம். எழுத வேண்டும்.

ஃ என்னும் ஆய்த எழுத்து, தமிழ் எண்கள், கிரந்த எழுத்துகள், பஞ்சாங்கம் / வணிகம் முதலியவற்றுக்கான சிறப்புக் குறியீடுகள் தேவைப்படும் போது மட்டும் SHIFT விசை அழுத்தி கீழே காணும் பலகையைப் பயன்படுத்துங்கள்.

tamil-mobile-keyboard-2

இதே போல், தமிழ் எண்கள் வரிசையில் வருகிற

௧ ௨ ௭ ௮ ௰

போன்ற தமிழ் எழுத்துகளை ஒத்த குறியீடுகளை எழுத்துகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தாதீர்கள். எழுத்து வேறு. குறியீடு வேறு. கணினிக்குப் புரியாது. தேடினால் கிடைக்காது.

குறிப்பாக, செல்லினம், அதனை ஒத்த மென்பொருள் தளக்கோலங்கள், ஆப்பிளின் iOS இயக்குதள கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் இதனைக் கவனிக்கவும். இது போல் வேறு சிறப்புக் குறியீடுகளைத் தவறுதலாக யாரேனும் பயன்படுத்தினால் இங்கு சுட்டிக் காட்டுங்கள். நன்றி.

தனித்தமிழ் விசைப்பலகைகள்

ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன்.

ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற கிரந்தம் உள்ளிட்ட தமிழ் அல்லாத பிற எழுத்துகள் நீங்கிய எழுத்து முறையைத் தனித்தமிழ் எனலாம்.

ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன். (இதைச் செய்ய NHM Writer Developer Kit உதவியது. இதன் மூலம் இந்த xml கோப்புகளைத் தொகுப்பது, புதிதாக உருவாக்குவது இலகுவாக இருக்கிறது. விரைவில் இதைப் பொதுப் பயன்பாடுக்கு வெளியிடுவார்கள்)

இவற்றை http://ravidreams.net/files/thani-tamil-keyboards.rar என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?

தமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படை நிறைகளை அறியும் முன் தமிங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா?

தமிங்கில விசைப்பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் சொல்ல முடியுமா? தட்டச்சுப் பொறிகள் முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அவற்றில் வேகமாகத் தட்டச்சினால் அவை பழுதடைந்து விடுகின்றன என்ற காரணத்துக்காக, எழுத்துக்களைக் கலைத்துப் போட்டுத் தட்டச்சும் வேகத்தைக் குறைக்க உருவாக்கபட்டத்தே இப்போது உள்ள ஆங்கில விசைப்பலகை. ஆங்கில எழுத்து வரிசைக்கே அடிப்படை இல்லாத போது அதை அடிப்படையாகக் கொண்டு தமிங்கில விசைப்பலகை உருவாக்குவது எப்படி பொருந்தும்? தவிர w = ந போன்ற முட்டாள்த்தனமான விசை அமைப்புகள் மனதில் பதிவதால் weenga wallaa irukkengkaLaa என்று தமிங்கில மடல் எழுதுவோரைப் பார்த்திருக்கிறேன். இருக்கிற தமிழ் எழுத்துகளுக்கே விசைப்பலகையில் இடம் இல்லை என்று இருக்கிற போது p, b = ப்; t, d = ட்; s, c = ச்; k, g = க என்று ஒரே எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளைத் தந்து இடத்தை வீணாக்குகிறோம். q, x, f விசைகளுக்கு வேலையே இல்லை! அதிகம் பயன்படாத ஜ போன்ற எழுத்துக்களுக்குத் தனி விசையாக j. அந்த இடத்தை ள, ழ, ண, ற போன்ற எழுத்துக்களுக்குத் தந்திருந்தால் ஒவ்வொரு முறை அவற்றை எழுதும்போதும் shift அடிக்கத் தேவை இல்லையே?

இந்தத் திறம் குறைந்த qwerty விசைப்பலகைக்கு மாற்றாகத் திறம் கூடிய dvorak விசைப்பலகை 1936லேயே பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், வணிகக் காரணங்களுக்காக அதைப் பரவலாக்காமல் செய்து விட்டார்கள்.

தமிழுக்கும் அப்படி நேராமல் இருக்கவும் உலகெங்கும் சீர்தரமாக ஒரு விசைப்பலகை இருக்கவும் தமிழ்99 முறை அறிஞர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக அரசால் 1999ல் பரிந்துரைக்கப்பட்டது. இதில் என்ன இலக்கணச் சிறப்பு என்றால்,

tamil99.JPG

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

உயிர் குறில்கள் – இட நடு வரிசை
உயிர் நெடில்கள் – இட மேல் வரிசை.
அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.

அதிகம் பயன்படும் க ச த ப – வல நடு வரிசை.

அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.

ஞ ச வரிசையாக அடித்தால் அதுவே ஞவுக்குப் புள்ளி வைத்து ஞ்ச என்று எழுதி விடும். ஏனென்றால் தமிழ் இலக்கணப் படி ஞவும் சவும் அடுத்தடுத்து வரும்போது கண்டிப்பாக ஞ்ச என்று தான் வரும். எனவே, பயனர் தனியாக ஞவுக்குப் புள்ளி வைக்கத் தேவை இல்லை. ன்ற, ங்க, ஞ்ச, ந்த, ம்ப, ண்ட எல்லாமே இப்படித் தானாகப் புள்ளி வரும். ட ட என்று இரு முறை அடித்தால் ட்ட ஆகி விடும். ன்ன, க்க, ப்ப, த்த, ண்ண, ட்ட எல்லாமே தானாகவே புள்ளி வைத்துக் கொள்ளும். தமிழ்ச் சொற்களைக் கூர்ந்து கவனித்தால் இது போன்ற விசை வரிசைகள் எவ்வளவு அடிக்கடி வருகின்றன என்று உங்களுக்குத் தெரியும். இப்படி புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் தட்டச்சுவதில் 40% மிச்சப்படும். ஓரிரு சொற்களில் பின்னூட்டம் போடும் போது இதன் அருமை தெரியாது. ஆனால், பக்கம் பக்கமாகப் புத்தகம் எழுதுகிறவர்கள், மணிக்கணக்கில் விக்கி தளங்களில் கட்டுரை எழுதுகிறவர்களுக்கு இது தட்டச்சு வேகத்தை அதிகரிக்கும் வரப்பிரசாதம்.

தமிங்கில விசைப் பலகையில் கவனக்குறைவால் ர வர வேண்டிய இடத்தில் ற வும் ன-ண-ந, ல,ழ,ள குழப்பங்களும் தட்டச்சுப் பிழைகளும் மலிய வாய்ப்பு உண்டு. தமிழ்99ல் எல்லாமே தனித்தனி விசைகள் என்பதால் தவறுதலாக ஒன்றுக்குப் பதில் இன்னொன்றை அழுத்தி விட வாய்ப்பில்லை.

தமிங்கிலத்தில் த என்று எழுது tha என்று மூன்று விசைகளை அழுத்த வேண்டும். தமிழ்99 த என்று ஒரு விசை அழுத்தினால் போதும். த்+உ =து போன்ற இலக்கண அடிப்படையில் தான் எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் தமிழ்99ல் வருகின்றன.

தமிழில் அ, க, ச, ப, வ என்று அகரங்கள் அடிக்கடிப் பயன்படுவது வாடிக்கை. தமிழ்99ல் இவற்றை ஒரே விசையில் அழுத்தி விடலாம். அடுத்து அதிகம் பயன்படும் நெடில் ஒலிகளையும் ஒரே விசையில் அழுத்தலாம். தமிங்கிலத்தில் தோ என்று எழுத thoo அல்லது th shift o என்று நான்கு விசைகள் தேவை. தமிழ்99ல் த ஓ இரண்டு விசைகளில் எழுதி விட முடியும். எல்லா நெடில்களுக்கும் இப்படியே.

தமிங்கிலம், தமிழ்99 இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களின் key strokes per minute rate ஒன்றாக இருந்தாலும் கூட letters written per minute rate நிச்சயம் தமிழ்99ல் 40% கூடுதலாக இருக்கும்.

நம் விரலகள் இலகுவாகச் சென்று வரக்கூடிய விசைகளில் நாம் அடிக்கடி பயன்படும் எழுத்துக்கள் இருப்பதாலும், அவை இடம், வலம், மேல், கீழ் என்று முறையாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் கை வலிக்காது.

தவிர, தமிங்கிலப் பலகையால் ஆங்கிலமும் குழம்பலாம். ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்கும் நம் மனதில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறோம். ஆங்கிலத்தில் e (ஈ, இ) அதுவே தமிழில் எ. அங்கே i (ஐ) நமக்கு இ, ஈ என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழ்99ல் இந்த ஆங்கில எழுத்துக்கு இந்தத் தமிழ் எழுத்து என்று கொள்ளாமல் அனைத்து விசைகளையும் தமிழ் எழுத்துக்களாத் தான் மனதில் பதிகிறோம். அதனால் எந்த குழப்பமும் வராது.

முக்கியமாகத் தமிங்கிலத்துக்குப் பழகியவர்கள் மனதில் தமிழ் ஒலிகள் ஆங்கில எழுத்துக்களாகவே பதிந்திருக்கும். நன்றி என்ற சொல் w a n shift r i என்று மனதில் பதிவது நல்லது ந ன் றி என்று மனதில் பதிவது நல்லதா? தமிழ்99ஐப் பரிந்துரைப்பது வேகம், திறம், போன்ற காரணங்களைத் தாண்டி இந்தத் தமிழ்ச் சிந்தனையை முன்மொழியும் கொள்கையும் முக்கிய காரணம். இதே காரணத்துக்காகவே பாமினி போன்ற பிற விசைப்பலகை அமைப்புகளை நான் எதிர்ப்பதுமில்லை.

சிந்திக்கத் தெரியாத தட்டச்சுப் பலகைக்குத் தான் ஒவ்வொன்றையும் சொல்லித் தர வேண்டும். கணினி என்றாலே வேலைகளை இலகுவாகச் செய்யத் தானே? நம் மொழியின் எழுத்து இலக்கணத்தை அதற்குச் சொல்லித் தந்து விட்டால், அது நம் வேலையை மிச்சப்படுத்தி விடும். எளிதான உவமை சொல்வது என்றால், செல்பேசியில் dictionary modeலும் no dictionary modeலும் சொற்களை எழுதுவதற்கு உள்ள வேறுபாடு போல் தான் இது.

தமிழ்99ல் விசையின் இடங்களை நினைவில் கொள்வது எளிது. தமிழ் மட்டும் தெரிந்து கணினிக்கு வரும் ஒருவர் முதலில் ஆங்கில விசைப்பலகை எழுத்துக்கள் எங்கிருக்கு என்று பார்த்து , அப்புறம் அதில் எந்த எழுத்து தமிழுக்கு என்று புரிந்து மனதுக்குள்ளேயே map செய்து அடிப்பதற்குள், நேரடியாகத் தமிழைத் தட்டச்சும் முறையைப் புரிந்து கொள்ளவும் நினைவில் கொள்ளவும் பழகவும் அவருக்கு எளிது. ஆங்கில விசைப்பலகை அறிந்த ஒருவருக்கு தமிழ் விசைப்பலகைக்கு மாற எவ்வளவு தயக்கம் இருக்குமோ அவ்வளவு தயக்கம், சுணக்கமும் தமிழ் மட்டுமே அறிந்தவருக்கு ஆங்கிலப் பலகையைக் கற்று பிறகு தமிழில் தட்டச்ச வேண்டி இருப்பதால் வரலாம். தமிழ் மட்டும் அறிந்த பெரும்பாலான தமிழர்களை கணினியிடம் இருந்து அன்னியப்படுத்தவே இது வழிவகுக்கும். ஆங்கிலம் அறிந்த தலைமுறையை மட்டும் கணக்கில் கொள்ளலாகாது. கணித்தமிழைப் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல தமிழ் மட்டும் போதுமானதாக இருக்கும்போது, இன்னொரு விசைப்பலகை எதற்கு? தமிழில் தட்டச்ச வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் பழகு என்று சொல்வது எப்படி நியாயம்? நம்முடைய மொழியின் தேவை, சிறப்புக்கு ஏற்ப ஒரு இலகுவான விசைப்பலகையைக் கூட வடிவமைத்துக் கொள்ள இயலாத ஆங்கிலச் சார்பை, அடிமை மனப்பான்மையைத் தான் தமிங்கில விசைப்பலகை வெளிப்படுத்துகிறது. புதிதாக நமக்காக ஒன்றாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள,முயல விரும்பாத சோம்பலை என்னவென்று சொல்வது?

ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தும் ஜெர்மன், பிரெஞ்சு விசைப்பலகைகளில் கூட எழுத்துகள் இடம் மாறி இருக்கும். ஜெர்மனில் zம் yம் இடம் மாறி இருக்கும். ஏனெனில் அதில் zன் பயன்பாடு அதிகம். பிரெஞ்சு மொழியில் இன்னும் ஏகப்பட்ட எழுத்துக்களை இடம் மாற்றிப் போட்டு வைத்திருப்பார்கள். அருகருகே உள்ள மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரே எழுத்துக்களைப் பயன்படுத்தும் மொழிகள் கூட தங்கள் மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப விசைப்பலகையை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். தொடர்பே இல்லாத தமிழ் ஏன் ஆங்கிலத்துக்கே திறமற்ற ஒரு விசைப்பலகை அமைப்பைப் பின்பிற்றித் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்?

விசைப்பலகை தொடங்கி பல அறிவியல் கண்டுபிடிப்புகள், நடைமுறைகளிலும் உலக அல்லது இன்னொரு குழுவின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம் தேவைகள், சிறப்புகளுக்கு ஏற்ப localized ஆக சிந்திப்பது தான் சிறந்தது. எல்லார் காலுக்கும் ஒரே செருப்பு பொருந்துமா? இருக்கிற செருப்பை வைத்து ஒப்பேற்றுவோம் என்று நினைப்பதுண்டா?

தமிழ்99க்கு மாறவே முடியாத அளவுக்கு பழக்கம்,மனத்தடை இருக்குமானால், குறைந்தபட்சம் புதிதாகத் தமிழ்த் தட்டச்சை அறிமுகப்படுத்தி வைப்பவர்களுக்காவது தமிழ்99 சொல்லிக் கொடுக்கலாமே? இப்பொழுது விழித்துக் கொண்டால் தான் ஆயிற்று. இல்லாவிட்டால், காலம் கடந்து விடும்.

தமிழ்99 முறையில் தட்டச்சு செய்வதற்கான எ-கலப்பை மென்பொருளை இங்கு பதிவிறக்கலாம்.


தமிழ்99 பயிற்சி நிகழ்படம்

பி.கு – இந்த இடுகை முதலில் ஒரு நீண்ட மறுமொழியாக இங்கு இடப்பட்டது. தொடர்புடைய முந்தைய உரையாடல்களை அதே பக்கத்தில் பார்க்கலாம்.

தமிழ் செல்பேசி விசைப்பலகை வடிவமைப்புக்கான தேவை

செல்பேசியில் உள்ள ஆங்கில விசைப்பலகையைக் கொண்டு தமிழ் குறுஞ்செய்தித் தகவலை எழுதுவது நேரத்தை வீணாக்கும், அயர்வூட்டும் வேலையாகும்.

எடுத்துக்காட்டுக்கு, உண்ணி என்று எழுத ஆங்கில எழுத்துக்களான uNNi – யை அழுத்த எத்தனை விசை அழுத்தங்கள் வருகிறது என்று பார்ப்போம்.

u – 2 விசையழுத்தங்கள் (8ஆம் எண் விசையில் tக்கு அடுத்து u அழுத்த வேண்டும்).

N – குறைந்தது 2 விசையழுத்தங்கள் (6ஆம் எண் விசையில் mக்கு அடுத்து n அழுத்த வேண்டும். ந, ன, ண என்று மூன்றுக்கும் n என்ற விசையை மட்டும் வைத்தோமானால் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு விசையழுத்தங்களும் தேவைப்படும்).

N – குறைந்தது 2 விசையழுத்தங்கள்.

i – 3 விசையழுத்தங்கள் (4ஆம் எண் விசைப்பலகையில் g, hக்கு அடுத்து i வருகிறது).

ஆக, உண்ணி என்ற மூன்றெழுத்துத் தமிழ்ச் சொல்லை எழுத குறைந்தது 9 விசைகளை அழுத்த வேண்டும் !!

ஆங்கில ஒலிப்பியலைக் கொண்டு தமிழை உள்ளிட முனைவதாலேயே இந்தப் பிரச்சினை வருகிறது. தவிர, ஆங்கிலத்தில் நம் விசையழுத்த வரிசைகளைக் கொண்டு பொருத்தமான சொற்களைப் பரிந்துரைக்கும் அகராதிகள் இருப்பது போல் தமிழுக்குத் தற்போது இல்லை.

தமிழுக்கே இவ்வளவு சிக்கல் என்றால் ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் உடைய சீனம் போன்ற மொழிகளில் இதை எவ்வாறு கையாளுகிறார்கள்?

இதையொட்டி வலையில் தேடுகையில், சீன செல்பேசி விசைப்பலகை வடிவமைப்புகான ஆய்வறிக்கை ஒன்று கண்ணில் பட்டது. இவ்வறிக்கையில் முக்கியமாக, 10 முதல்15 வரையான பக்கங்களைப் படித்துப் பாருங்கள்.

தமிழுக்கான செல்பேசி விசைப்பலகை ஒன்றை மனக்கணக்காகவே உருவாக்கலாம் என்று முன்னர் நினைத்திருந்தேன். ஆனால், இந்த ஆய்வறிக்கையைப் பார்த்த பின் கொஞ்சம் நிரல் எழுதி மெனக்கெட்டால், சிறந்தது என அறிவியல்பூர்வமாகவே நிறுவத்தக்க தமிழ் செல்பேசி விசைப்பலகையை உருவாக்கி விடலாம் என்று தோன்றுகிறது.

முயன்று பார்க்கிறேன் !!

ஒருங்குறி, எ-கலப்பை, விசைப்பலகை – ஒரு குட்டிக் கதை

பலரிடமும் நீங்கள் எந்த விசைப்பலகையில் கணினியில் தமிழில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், “எ-கலப்பை” அல்லது “ஒருங்குறித் தமிழ்” என்று பதில் வருகிறது. குறியேற்றம் வேறு, மென்பொருள் வேறு, விசைப்பலகை வேறு என்ற புரிதல் வியக்கத்தக்க அளவில் மிகக் குறைவாகவே இருக்கிறது.

இது குறித்து தெளிவாக, விரிவாகப் புரிந்து கொள்ள மயூரனின் கட்டுரையைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

தற்போதைக்கு, இது குறித்து எளிமையாக விளக்க ஒரு குட்டிக் கதை / உவமை இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துப் பார்த்தேன் 🙂

குறிப்பு ஒன்றை எழுதி, அதை ஒரு பெட்டிக்குள் வைத்துப் பூட்டி, அதை ஊர்ப் பொதுவில் வைத்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் பெட்டியைத் தனித்தனியாகத் தான் படிக்க முடியும்; அதுவும் ஒவ்வொருவரிடமும் சாவி இருக்க வேண்டும். உங்கள் பூட்டுக்கான சாவியை ஒவ்வொருவருக்கும் தர வேண்டிய பொறுப்பு உங்களைச் சேர்கிறது. சாவி இல்லாதவர்கள், நீங்கள் சாவி செய்து தரும் வரை பொறுமை இல்லாதவர்கள் பெட்டியைத் திறக்காமலேயே போய் விடுவார்கள்.

நீங்கள் எழுதும் குறிப்பை மூன்று முறைகளில் எழுதலாம்:

– கரித்துண்டு – தாள் முறை.

– marker பேனா – தாள் முறை.

– fountain பேனா – தாள் முறை.
——————————–
உவமைகள் போதும். இனி உவமேயங்களைப் பார்ப்போம்.
——————————–

தமிங்கில விசைப்பலகை – கரித்துண்டு.

பழைய-புதிய தட்டச்சு விசைப்பலகை, பாமினி விசைப்பலகை – marker பேனா.

தமிழ் 99 விசைப்பலகை – fountain பேனா.

குறியேற்றம் (encoding), decoding – பூட்டும் சாவியும்.

பல்வகைப் பேனா தயாரிப்பாளர் – எ-கலப்பை, சுரதா, தமிழ்விசை நீட்சி.

இப்பொழுது பின் வரும் கேள்விக்கு பதில்களைப் பாருங்கள்:

1. எப்படி தமிழ் எழுதுகிறீர்கள்?

விடை: fountain பேனா / கரித்துண்டு கொண்டு எழுதுகிறேன் என்று சொல்வது போல் தமிழ்99 விசைப்பலகை / தமிங்கிலத் தட்டச்சு விசைப்பலகை கொண்டு எழுதுகிறேன் என்று எளிதாக சொல்லலாம் அல்லவா?

எ-கலப்பை என்பது கடைக்காரர் பெயர். ஒருங்குறி என்பது பூட்டு சாவி பெயர். பூட்டு, சாவி, கடைக்காரரைக் கொண்டு எழுத முடியாது அல்லவா? அது போலவே எ-கலப்பையில் தமிழ் எழுதுகிறேன், ஒருங்குறி முறையில் தமிழ் எழுதுகிறேன் என்று சொல்வதும் தவறு.

2. எந்த விசைப்பலகை சிறந்தது?

<<இது ஒரு தமிழ்99 விழிப்புணர்வு விளம்பரம். ஏற்கனவே தமிழ்99 பயன்படுத்துபவர்கள், இந்த விடையைப் படிக்க அவசியமில்லை 😉 >>

உங்களுக்கு முதன் முதல் எழுதக் கற்றுக் கொடுத்தவர் கரித்துண்டு கொண்டே எழுதக் கற்றுக் கொடுத்தார் அல்லது அவசரத்துக்கு கரித்துண்டு தான் முதலில் கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். அதே வேளை தினமும் நீங்கள் பல பக்கங்கள் இப்படி குறிப்புகள் எழுத வேண்டுமானால், இப்படி எத்தனை காலத்துக்கு கரித்துண்டு வைத்து வசதிக்குறைவாக எழுதுவீர்கள் சொல்லுங்கள்? நீங்கள் கற்றுக் கொண்ட முறை பிழை, திறன் குறைந்தது என்று அறியும்போது அதை மாற்றிக் கொள்ள வேண்டும் தானே? கரித்துண்டு மட்டுமே பார்த்தவருக்கு fountain பேனா கொண்டு தாளில் எழுதுவதின் எளிமை புரியாது. பயன்படுத்திப் பாருங்கள். புரியும். தமிழுக்கென சிறப்பாக விசைப்பலகை இல்லாத / தெரியாத காலத்தில், அவசரத்துக்குப் பயின்ற முறை தமிங்கிலத் தட்டச்சு முறை. தமிழுக்கு என்று தனி சிறப்பான விசைப்பலகை இருப்பது அறிந்த பிறகும் கற்கால முறையிலேயே இருப்பது தகுமா?

Marker பேனா கொண்டு தாளில் எழுதுவது கரித்துண்டு கொண்டு எழுதுவதைக் காட்டிலும் எளிது தான். ஆனால், marker பேனா தாளில் எழுதுவதற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது போலவே பழைய-புதிய தட்டச்சு முறை தட்டச்சுப் பொறிக்காக வடிவமைக்கப்பட்டது. கணினிக்காக அல்ல. எனவே, தட்டச்சுப் பொறி விசைப்பலகையின் தேவையற்ற வசதிக் குறைவுகளை அப்படியே கணினிக்கும் கொண்டு வர வேண்டும் என்று இல்லை. பாமினி போன்ற பிற விசைப்பலகை முறைகள் கணினியில் உள்ள விசைகள் அமைப்பைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை. அவற்றின் உருவாக்கமும் அடிப்படையும் குறியேற்றங்களைப் பின்பற்றி வந்தது. எனவே, marker பேனா வகையறாக்கள் யாவும் கணினி / தமிழுக்கென தனிச்சிறப்பாக வடிவமைக்கப்படவில்லை என்பதால் திறம் குறைந்தவை என்பதை உணர வேண்டும்.

தமிழ்99 விசைப்பலகை மட்டுமே கணினி விசை அமைப்புகள் / தமிழின் சொல் இலக்கணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட புத்திசாலித்தனமான விசைப்பலகையாகும். அதைக் கற்றுக் கொள்ள முன்வாருங்கள்.

3. ஏன் ஒருங்குறி சிறந்தது?

பூட்டின் சாவி தனித்துவமாக இருந்தால், அச்சாவிகள் இல்லாதவர்கள் பெட்டியைத் திறந்து படிக்காமலேயே போய் விடுவார்கள் அல்லவா? ஆனால், ஒருங்குறி என்ற சாவி எல்லார் வீட்டிலும் ஏற்கனவே இருக்கக் கூடியது என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சாவிக்கேற்ற ஒருங்குறிப் பூட்டை போட்டால், எல்லாராலும் பூட்டைத் திறந்து படிக்க முடியும் தானே? தினம் ஒரு பூட்டு போட்டு மக்களை சாவி வாங்கச் சொல்வதற்குப் பதில், மக்களிடம் உள்ள சாவிக்கு ஏற்ற மாதிரி பூட்டு போடுவது தான் ஒருங்குறி முறை. இதுவே ஒருங்குறி முறையின் நன்மை.


பேனா, பூட்டு-சாவி என்ற உவமைகளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் ஒருங்குறி, எ-கலப்பை, விசைப்பலகை ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளாமல் இருக்கலாம்.

குட்டிக் கதை சொல்லப் புகுந்து பெரிய கதையாகிப் போச்சு 😉 பரவாயில்லை. நாலு பேருக்கு நல்லது நடந்தா எவ்வளவு பெரிய கதையும் குட்டிக் கதை தான் 😉