Puncture ஒட்டும் கடைக்குத் தமிழில் என்ன பேர்?

இது சயந்தன் எனக்கு சொன்ன கதை !

1990களில் தமிழீழத்தில் உள்ள கடைகளுக்கு எல்லாம் தமிழ்ப் பெயர் வைக்குமாறு விடுதலைப் புலிகள் வலியுறுத்திய காலமாம். bakery – வெதுப்பகம் ஆனது. bank – வைப்பகம் ஆனது. இந்த வரிசையில், tyreல் உள்ள துளை (puncture) ஒட்டும் கடைக்கு ஒருவர் தமிழ்ப் பெயர் எழுதி வைத்தாராம். அது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சயந்தன் அந்தப் பெயரை சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தேன் 🙂

அந்தப் பேர்..

..

..

.

.

….

….

ஒட்டகம் ! 😉

camel_in_sichuan_china.jpg

ஹா..ஹா..அந்தக் கடைக்காரர் இப்படி நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை. ஒட்டுப் போடும் இடம் ஒட்டகம் தானே 🙂 பாலகம், நூலகம் மாதிரி 🙂

கடைகளுக்கு, ஆட்களுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் தமிழ் பரவலாகும் என்பது உண்மை தான். சில சமயங்களில் இப்படி எதிர்ப்பார்க்காத வேடிக்கைகளும் வந்து விடுகின்றன. ஆனால், தமிழ் வளர்ச்சியில் விருப்பம் உள்ளோர் இப்படிப் பெயர் சூட்டுவதையும் தாண்டி சிந்திப்பதே நலம் பயக்கும். ஏதோ ஒரு இணைய உரையாடலில் குறிப்பிட்டார்கள் – “நாம் cycle partsக்குத் தமிழ்ப் பெயர் வைப்பதற்குள் வெள்ளைக்காரன் அந்த partsஐயே மாத்தி விடுகிறான்” என்று. அது தான் உண்மையாக இருக்கிறது. ஆங்கிலக் கண்டுபிடிப்புகளை தமிழாக்கிப் புரிந்து கொண்டு பெயர் வைத்துக் கொண்டிருப்பதால் தமிழ் ஒரு போதும் பெரிதும் வளர்ந்து விடாது. மாறாக தமிழ்நாட்டில் இருந்தே, தமிழ்த் தேவைகளுக்கேற்ற கண்டுபிடிப்புகள் தமிழ்ச் சிந்தனையூடாக வருவது அவசியம். அப்படி வந்தால் தமிழும் வளரும். தமிழரும் வளர்வர். நாம் கண்டுபிடித்ததற்கு என்ன பேர் வைக்கலாம் என்று வேறு நாட்டவர்கள் கலைச்சொல்லாக்கக் குழு வைக்கலாம் 😉 ஆனால், இந்த தமிழ் வழிச்சிந்தனை வளர்வதற்கு அடிப்படைத் தேவை பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்துப் பாடங்களையும் தமிழில் கற்கும் வாய்ப்பு. இதை இன்னொரு கட்டுரையில் தான் விரிவாக எழுத முடியும்.

இப்போதைக்கு, அண்மையில் இது தொடர்பாக நான் கவனித்து மகிழ்ந்த இரு விசயங்கள்.

தமிழ்மணம் வலைப்பதிவுத் திரட்டி உருவாக்கிய காசி ஆறுமுகம், கோவையில் ஒரு சிறு உணவுப் பொறி ஒன்றை உருவாக்கி இருக்கிறார். தமிழ்மணத்தில் நல்ல தமிழ்ச் சொற்களை ஆண்டதின் விளைவாக இன்று தமிழ் வலைப்பதிவரிடையே நல்ல தமிழ்ச் சொற்கள் வலம் வருவதைக் கண்ட காசி, தான் உருவாக்கிய கருவியின் நுட்பப் பெயரையும் தமிழில் வைக்க விரும்பி நண்பர்கள் ஒரு சிலரிடம் ஆலோசனை கேட்டிருந்தார். இது போல் தமிழ்நாட்டில் உருவாகும் கருவிகளுக்குத் தமிழ்ப் பெயர் வைத்து அறிமுகப்படுத்துவது பெரிதும் வரவேற்கத்தக்கது.

இதுபோல் அமெரிக்காவில் இருக்கும் சதீஷ் அழகழகான wordpress தோற்றக்கருக்களை உருவாக்கி அதற்கு தமிழ்ப் பெயர்கள் வைத்து வருகிறார். இவரது தோற்றக்கருக்களின் பெயர்களான பால் நிலா, நிகரிலா ஆகியவை உலகெங்கும் உள்ள wordpress பயனர்களால் உச்சரிக்கப்படும். ஒசாகா மொழியில் புசாகா என்றால் நிலா என்று தம் பிள்ளைக்கு புசாகா என்று பெயர் வைக்கும் தமிழ்ப் பெற்றோர் சிலர் மாதிரி நிலா என்றால் தமிழில் moonஆம் என்று சில மேல்நாட்டுக்காரர்கள் தமிழ்ப் பெயர் வைத்தால் எப்படி இருக்கும் 😉 ? நம் சொற்களைப் பரப்ப, தமிழை உலக அறியச்செய்ய இது ஒரு வழி.


Comments

5 responses to “Puncture ஒட்டும் கடைக்குத் தமிழில் என்ன பேர்?”

  1. சயந்தன் Avatar
    சயந்தன்

    //ஏதோ ஒரு இணைய உரையாடலில் குறிப்பிட்டார்கள் – “நாம் cycle partsக்குத் தமிழ்ப் பெயர் வைப்பதற்குள் வெள்ளைக்காரன் அந்த partsஐயே மாத்தி விடுகிறான்”//

    He He.. இணையத்தில் உரையாடல் செய்பவர்கள் வேறு யாராக இருக்க முடியும்..? வரலாறுகளை மறைக்கக் கூடாது.

  2. சயந்தன்- வலைப்பதிவில் முதலில் கேட்ட நினைவில் நின்ற உரையாடல் அது தான். ஈழத்து ஆட்கள் தான் பேசினாங்க..ஆனா யாரு, எங்கங்கிறது மறந்து போச்சு..உங்க கூட்டாளிங்க தானா..தொடுப்பு இருந்தா தெரியப்படுத்துங்க

  3. Wow!! Great… ha.. ha..

  4. // (puncture) ஒட்டும் கடைக்கு ஒருவர் தமிழ்ப் பெயர் எழுதி வைத்தாராம்//
    🙂
    எனக்கும் சிரிப்பாகத் தான் இருக்கின்றது.
    ஆனாலும் இது ஒரு நபரின் செயல். “ஈருருளி திருத்தகம்” எனும் விளம்பரப் பலகைகளை நான் பார்த்துள்ளேன்.

  5. LOGANANDHAN Avatar
    LOGANANDHAN

    “ஈருருளி திருத்தகம் பெயர் நல்ல தமிழ்ச் சொற்கள்