Englishland

குறிப்பு: amma not equal to அம்மா என்ற படிமத்தைச் சொடுக்கி இங்கு வருபவர்கள், சிறந்த தமிழ் விசைப்பலகை எது? என்ற தமிழ்99 விசைப்பலகை விளக்கக் கட்டுரைக்குச் செல்லவும். தவிர்க்க இயலாத காரணங்களால் பக்கம் வழ மாறியதற்கு வருந்துகிறேன்.

தமிழ்நாட்டில் தமிழர் தத்தம் பெயர்ச்சுருக்கங்களை ஆங்கிலத்திலேயே எழுதுகிறோம்.

தமிழ்நாட்டில் தமிழர் ஆங்கிலத்தில் தான் கையெழுத்து இடுகிறோம்.

பிற மொழி, ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசத் தெரியாது. ஆனால், பலரும் ஒரு தமிழ்ச் சொல்லும் கலக்காமல் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறோம். அதற்கு காசு கொடுத்துப் பயிற்சியும் பெறுகிறோம்.

ஆங்கிலத்தில் பேசுபவன் அறிவாளி. தமிழில் மட்டும் பேசத் தெரிந்தவன் முட்டாள். தமிழில் மட்டுமே பேசுவேன் என்பவன் தமிழ் வெறியன்.

பாலத்தீனப் பிரச்சினைக்குப் பரிந்து பேசுபவனை அறிவுசீவி என்கிறோம். ஈழத்துக்கு ஆதரவாகப் பேசினால் விடுதலைப் புலி.

eppadi irukkada. paaththu romba naal aachchuதமிழை ஆங்கிலத்தில் எழுதிக் கொல். ரோட்ல டிராபிக் ஜாம் – ஆங்கிலத்தைத் தமிழில் எழுதித் தமிழாக்கு.

ஒரு ஆங்கில உரையின் நடுவிலோ நேர்முகத் தேர்விலோ ஆங்கிலச் சொல் அறியாவிட்டால் வெட்கம் பிடுங்கித் திங்கத் தலை குனி. ஆனால், வெட்கமோ வருத்தமோ இன்றித் தமிங்கிலம் பேசு.

தமிழ்நாட்டில் தமிழ்க் குழந்தை 10ஆம் வகுப்பு வரையாவது தமிழ் படிக்க வேண்டும் என்பதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழன் உயர்படிப்பில் பொறியியலும் நுட்பமும் மருத்துவமும் படிக்க வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் படிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழரின் கோயிலில் தமிழில் வழிபாடு நடத்த அரசு ஆணை வர வேண்டும்.

அப்பா, அம்மா என்ற சொற்கள் மட்டுமே தெரிந்த சில தமிழ்க் குழந்தைகள்.

பணத்தில் புரளும் பல ஆங்கில வழியப் பள்ளிகள். கூரை கூட இல்லாத தாய்த் தமிழ்ப் பள்ளிகள்.

தமிழ் மட்டுமே தெரிந்திருந்தால் செல்பேசி முதல் கணினி வரை இயக்க முடியா நிலை.

தமிழ்நாட்டு உயர்நீதி மன்றங்களில் தமிழில் வழக்கை நடத்த முடியா நிலை.

தமிழன் மட்டுமே பொருள் வாங்க வரும், தமிழன் நடத்தும் கடையில் பெயர்ப்பலகைகள் மட்டும் ஆங்கிலத்தில். விற்பனைச் சீட்டும் ஆங்கிலத்தில்.

தமிழ்நாட்டில் இருக்கும் வங்கியின் தொலைபேசிச் சேவையை அணுகுகையில் “தமிழில் பேசலாமா” என்று அனுமதி கேட்க வேண்டும். “ஆங்கிலத்தில் தான் பதில் அளிப்போம்” என்று வரும் மறுமொழியைச் சொரணையற்றுக் கேட்டுக் கொள்.

Deutschlandல் (செருமனியில்) Deutsch (செருமன் மொழி) தெரியாமலும் Nederlandல் (நெதர்லாந்தில்) Nederlands (நெதர்லாந்து மொழி) தெரியாமலும் சிரமப்படும் போது தோன்றி மறையும் எண்ணங்கள் இவை.

இவற்றை எல்லாம் மாற்ற முடியாமல் போனாலும் நாட்டின் பெயரிலாவது தமிழ் இருந்து தொலைக்கட்டும் என்று நினைத்துப் பெயர் வைத்தார்களோ என்னவோ தமிழ்நாடு என்று?

Englishland என்று யாராவது பெயரை மாற்றித் தந்தால் குற்றவுணர்வையாவது கழுவிக் கொள்ளலாம் 🙁

16 thoughts on “Englishland”

  1. //தமிழ்நாட்டில் இருக்கும் வங்கியின் தொலைபேசிச் சேவையை அணுகுகையில் “தமிழில் பேசலாமா” என்று அனுமதி கேட்க வேண்டி இருக்கிறது. “ஆங்கிலத்தில் தான் பதில் அளிப்போம்” என்று வரும் மறுமொழியைச் சொரணையற்றுக் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.//

    ஆச்சரியமாக இருக்கிறது. என்ன காரணம்? தமிழக வங்கிகளில் வேலை செய்பவர்கள் தமிழர்கள் இல்லையா?

  2. கலை –

    //தமிழக வங்கிகளில் வேலை செய்பவர்கள் தமிழர்கள் இல்லையா?//

    அப்படி இல்லை. நேரடியாக வங்கி இருக்கும் இடத்துக்குப் போனால் தமிழில் பதில் கிடைக்கும் தான். நான் அழைத்தது தொலைபேசிச் சேவையை. சென்னையில் இருந்து அவர்கள் பேசினாலும் அந்தச் சேவையகத்தில் வேலைக்கு இருக்கும் எல்லாரும் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் இல்லை போலும்.. 🙁

  3. அதை விடுங்கள். சில ஆண்டுகள் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்துவிட்டு தமிழ்நாட்டில் மூன்று மாதம் தங்க வாய்ப்பு கிடச்சது. அந்த மகிழ்ச்சியில் புகழ்பெற்ற செல்பேசி நிறுவனத்தோட வாடிக்கையாளர் சேவையில் தமிழில் தொடர்பு கொள்ளும் வசதிய தேர்வு செஞ்சு பேசத் துவங்கினா “Kavitha here, how can I assist you?” என்கிறது மறுமுனையில்? இதைச் சற்றும் எதிர்பாராத நான் ஒரு விநாடி தடுமாறி விட்டேன்.

  4. //இவற்றை எல்லாம் மாற்ற முடியாமல் போனாலும் நாட்டின் பெயரிலாவது தமிழ் இருந்து தொலைக்கட்டும் என்று நினைத்துப் பெயர் வைத்தார்களோ என்னவோ தமிழ்நாடு என்று?//

    மட்ராஸ சென்னைன்னு மாத்தினாங்க, ஆனா ஏன் தமிழ்நாட மட்டும் டமில்நாடு(tamilnadu)ன்னு விட்டுட்டாங்க.

    “இனிமே நாங்கதான்” முப்பரிமான படத்தை பற்றிய நேர்முகக்காணலில் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் ஆங்கிலம் கலக்காம தமிழ் பேசவே முடியல.

  5. சாரு, மாநிலப் பெயர் தமிழ்நாடு தான். அதை ஆங்கில வழக்கத்துக்கு ஏற்ப tamilnadu என்று எழுதுவது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. thamizhnaduன்னு எழுதினா மட்டும் சரியான பலுக்கலுக்கு நெருங்கிடுமா என்ன? ஒரு மொழியின் எல்லா ஒலிப்புகளையும் இன்னொரு மொழியால் எழுதிக்காட்ட முடியாது. அது பிரச்சினையில்லை. விட்டு விடலாம்.

    நீங்கள் குறிப்பிட்ட indiaglitz நேர்காணல் போலத்தான் இன்றைய தொலைக்காட்சி நேர்காணல்கள், அரட்டை அரங்கங்கள் எல்லாமே இருக்கு. பல ஆங்கிலச் சொற்களுக்கு இடையே ஊறுகாய் மாதிரி தான் தமிழே வருது. இதை வேணும்னு செய்யுறவங்க சிலர். ஆனா, சிலருக்கு சிந்தனையே முழுக்க ஆங்கிலமயமானதின் விளைவு இது 🙁

    இன்னொரு தனித்தமிழ் இயக்கம் வர வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை 🙁

  6. ammaa=அம்மா என்பதைப் பின்னனியாகக் கொண்டு, ஒரு கடிகாரம் [எண்கள் இன்றி] தயாரித்து இலவசமாக யாரும் தங்கள் வலைப்பக்கத்தில் இணைத்துக்கொள்ளும்படி வழங்கினால், தமிழ்99 விசைப்பலகயைப் பிரபலப்படுத்த உதவும் என்று தோன்றுகிறது. கடிகார முட்கள் ‘ammaa=அம்மா’ என்பதைக் கோடிட்டு அடித்தவாறு செல்லும்! முடிந்தால் செயல் படுத்துங்கள்!

    சரவணன்

  7. நல்ல யோசனை சரவணன். இனி இதைச் செய்து தர ஆள் பிடிக்கணும் 🙂 ஆனால், எனக்கென்ன கவலை என்றால் கடிகார முட்களாக மட்டும் அவற்றைப் பார்த்து விட்டு தவறுதலாக ammaa = அம்மா என்று யாரும் புரிந்து கொள்வார்களோ என்று தோன்றுகிறது.

  8. உங்களுக்கு மறுமொழி அனுப்பிய உடனேயே எனக்கும் அப்படித்தான் தோன்றியது!

  9. நன்றி வீரத்தமிழன். உங்கள் தளத்தைப் பற்றி அறியத்தந்ததற்கும் மிகவும் நன்றி.

  10. ///
    ///தமிழ்நாட்டு உயர்நீதி மன்றங்களில் தமிழில் வழக்கை நடத்த முடியாமல் இருக்கிறோம்.

    தமிழன் மட்டுமே பொருள் வாங்க வரும், தமிழன் நடத்தும் கடையில் பெயர்ப்பலகைகள் மட்டும் ஆங்கிலத்தில். விற்பனைச் சீட்டும் ஆங்கிலத்தில்.

    தமிழ்நாட்டில் இருக்கும் வங்கியின் தொலைபேசிச் சேவையை அணுகுகையில் “தமிழில் பேசலாமா” என்று அனுமதி கேட்க வேண்டி இருக்கிறது. “ஆங்கிலத்தில் தான் பதில் அளிப்போம்” என்று வரும் மறுமொழியைச் சொரணையற்றுக் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

    Deutschlandல் (ஜெர்மனியில்) Deutsch (ஜெர்மன் மொழி) தெரியாமலும் Nederlandல் (நெதர்லாந்தில்) Nederlands (நெதர்லாந்து மொழி) தெரியாமலும் சிரமப்படும் போது தோன்றி மறையும் எண்ணங்கள் இவை.

    இவற்றை எல்லாம் மாற்ற முடியாமல் போனாலும் நாட்டின் பெயரிலாவது தமிழ் இருந்து தொலைக்கட்டும் என்று நினைத்துப் பெயர் வைத்தார்களோ என்னவோ தமிழ்நாடு என்று?

    Englishland என்று யாராவது பெயரை மாற்றித் தந்தால் குற்றவுணர்வையாவது கழுவிக் கொள்ளலாம் ////

    சிந்தனையே முழுக்க ஆங்கிலமயமானதின் விளைவு இது

Comments are closed.