நிலவேம்பு என்னும் ஆறுதல் மருந்து

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயம், பப்பாளி சாறு முதலியன மருந்தாகுமா? நவீன அறிவியல் மருத்துவத்தில் (அதாவது பொது மக்கள் ஆங்கில மருத்துவம் என்று சொல்கிற அலோபதி மருத்துவம்) இதற்கு மருந்து இல்லை என்கிறார்களே? அரசு ஏன் இவற்றைப் பரிந்துரைக்கிறது?

…டெங்கு காய்ச்சலுக்கு இது வரை எந்த மருத்துவ முறையிலும் மருந்து இல்லை. டெங்கு தாக்கிய அனைவரும் இறப்பதில்லை. நோயின் தீவிரத்தைப் பொருத்து 1-5% பேர் இறக்கிறார்கள். ஆனால், ஊர் முழுக்க இது போல் கொள்ளை நோய் வரும் போது இறப்பதற்கு வாய்ப்பில்லாத எஞ்சிய பெரும்பகுதி மக்களும் பீதி அடைவார்கள். இந்தப் பெரும் பீதியைக் கட்டுக்குள் வைக்க அரசும் மருத்துவத் துறையும் placebo என்னும் ஆறுதல் மருந்தைக் கொடுக்கும். அதாவது, இதனால் ஒரு மருத்துவ விளைவும் இருக்காது. ஆனால், தான் மருந்து உண்கிறோம் என்ற நிம்மதியில் பீதியடையாமல் இருப்பார்கள். பிறகு, இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியின் காரணமாக நோய் குணமாகும். நிலவேம்பும் பப்பாளியும் இது போன்ற ஒரு ஆறுதல் மருந்து தான். அவற்றைக் குடிப்பதற்குப் பதில் மருந்து என்று நினைத்து பச்சைத் தண்ணீரைக் குடித்தாலும் அதே விளைவைப் பெறலாம். ஓமியோபதி, அக்குபங்சர் உள்ளிட்ட பல்வேறு ஏமாற்று மோசடி மருத்துவர்கள் தரும் மருந்துகளால் சில நோய்கள் சில வேளைகளில் குணமாவதற்கும் இதே ஆறுதல் மருந்து அணுகுமுறை தான் காரணம்.

ஆனால், ஆறுதல் மருந்தே நோய் தீர்க்கும் மருந்து ஆகாது. டெங்குக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் எழுந்தால் தாமதிக்காமல் நவீன அறிவியல் மருத்துவர்களை நாடுங்கள். “டெங்குக்கு மருந்தில்லை என்கிறீர்கள், பிறகு ஏன் மருத்துவ மனைக்குச் செல்லச் சொல்கிறீர்கள்” என்கிறீர்களா? மருந்து என்பது வேறு. நோயின் விளைவுகளைப் பகுத்துணர்ந்து அதனை எதிர்த்துப் போராடும் வகையில் உடலுக்குச் சிகிச்சை அளிப்பது வேறு. தீவிர டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்குத் தொடர்ந்து போதிய அளவு நீர்ச்சத்து தர வேண்டும். இரத்த அழுத்தத்தையும் platelet எண்ணிக்கையும் சீராகப் பேண வேண்டும். இதற்காகத் தேவைப்பட்டால், இரத்தம் மாற்றுவார்கள். இவை எல்லாம் டெங்குச் சாவுகளைக் குறைக்கும்.

கடவுள் இல்லை என்பவனை நம்பலாம். இருக்கிறார் என்பவனைக் கூட நம்பலாம். ஆனால், தான் தான் கடவுள் என்பவனை நம்ப முடியாது. அது போலத் தான், மருந்தே இல்லை என்று உலக சுகாதார நிறுவனமே சொல்லிய டெங்கு நோய்க்கு தங்களிடம் மருந்து இருப்பதாக போலி, ஏமாற்று மருத்துவக் கும்பல் வலை விரிக்கிறது. அரசே கசாயம் குடிக்கச் சொல்வது இவர்களுக்குத் தோதாக இருக்கிறது. உலகெங்கும் டெங்குத் தாக்குதலால் ஏற்படும் பொருளாதாரச் சுமை 9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் என்று அளவிடப்படுகிறது. அப்படிப் பட்ட அதிசய மருந்தை வைத்திருக்கும் இந்த ஏமாற்று மருத்துவக் கும்பல் வாளி வாளியாக உலகெங்கும் நிலவேம்புக் கசாயத்தை ஏற்றுமதி செய்து சம்பாதிக்கலாமே?