இடைமுகப்புத் தமிழாக்கம்

தளங்கள், மென்பொருள்களைத் தமிழாக்குகையில் அவற்றின் தொனி எப்படி இருக்க வேண்டும் என்ற உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்திலும் கணிமை வலைப்பதிவிலும் நடக்கிறது.

இந்த உரையாடல்களில் இருந்து இது ஒரு நோக்குப் பிரச்சினை என்று புரிகிறது. இவை நாம் கணினிக்குத் தரும் கட்டளைகள் என்று சிலரும், கணினி தம்மை நோக்கி அறிவுறுத்துவனவாக சிலரும் உணர்கிறார்கள். 

* இவை உயிரற்ற கணினிக்கு இடும் கட்டளைகள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், கணினி தம்மைப் பார்த்துச் சொல்வதாக நினைக்கும் ஒவ்வொருவரிடமும் போய் “இது கணினிக்கு இடும் கட்டளை, எனவே நீங்கள் பிழையாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று விளக்க முடியாது. அவர்கள் கடைசி வரை தாம் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதாக உணர்ந்து கொண்டே இருப்பார்கள். 

* ஒட்டுக, மூடுக என்று மரியாதை கொடுத்துத் தமிழாக்கினால், “ஏன் இப்படி பிழையாகத் தமிழாக்குகிறாய், எனக்கு மரியாதை தேவை இல்லை” என்று கணினி உயிர்த்து வந்து சொல்லப் போவதில்லை. ஆனால், இலக்கணப்படி சரியாகவே தமிழாக்கினாலும், மனிதர்கள் தான் நம்மை வந்து கேள்வி கேட்கப் போகிறார்கள். நாம் கட்டளை நிரலை “மூடு” என்று எழுதி விட்டு இடைமுகப்பில் உள்ள கட்டளைச் சொல்லை “கடற்கரைக்குப் போலாம் வர்றியா” என்று எழுதினாலும் அது மூடத் தான் போகிறது. இடைமுகப்பில் என்ன எழுதியிருக்கிறது என்பது கணினிக்கு ஒரு பொருட்டே அல்ல. 

* இன்ன பொத்தானை அழுத்தினால் இன்ன வேலையை நான் செய்வேன் என்று கணினி மனிதர்களுக்குச் சொல்வதாக கருதலாம். நிரலை எழுதிய ஒரு மனிதர் அச்செயலியைப் பயன்படுத்தப் போகும் இன்னொரு மனிதருக்கு விட்டுச் செல்லும் குறிப்புகளாக ஏன் இவற்றைப் பார்க்கக்கூடாது? வீட்டில் கதவுகள் பொருத்தியவர் நம் புரிதல் வசதிக்காக Pull, Push என்று எழுதி வைக்கிறார்கள் தானே?

* லினக்ஸ் கட்டளை முனையத்தில் நாம் நேரடியாக கட்டளைகளைத் தரும் போது open file, close file என்று எழுதுவது தான் கணினிக்கு நாமே தரும் நேரடிக் கட்டளைகள். கட்டளைகளை இடத்தெரியாத மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது தானே graphical user interface எல்லாம்? graphical user interface என்ற பெயரே தெள்ளத்தெளிவாக இவை மனிதர்களுக்கானவை என்பதை விளக்குகிறதே?

* மூடுக, தேடுக என்று மரியாதை கொடுத்து எழுதினால் சொற்கள் நீண்டு பொத்தான்கள் பெரிதாக பக்கங்களின் அழகு கெடுகிறது என்றும் சிலர் கருதுகிறார்கள். மூடு என்று சொல்லில் இரண்டு எழுத்துகள் என்றால் உருவாக்கு என்ற சொல்லில் 5 எழுத்துகள். மரியாதை குறைவான பெரிய சொற்களையே ஏற்றுக் கொள்ளும்போது, மரியாதை கூடுதலாகத் தரும் பொருட்டு ஏன் அதே அளவு சொற்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது? பொத்தான்கள் பெரிதானால் அதற்கு ஏற்ப css வார்ப்புரு, எழுத்துரு அளவில் மாற்றம் செய்ய வேண்டுமே ஒழிய குறுக்கு வழியில் போய் மொழியைச் சிதைக்கக்கூடாது. 

இங்கு “இலக்கணப்படி சரியான தமிழாக்கம்” என்பதை விட “மனிதர்களுக்கு உகந்த தமிழாக்கம்”  என்ற அணுகுமுறையை மேற்கொள்ளலாம்.


Comments

2 responses to “இடைமுகப்புத் தமிழாக்கம்”

  1. guided user interface?

    Graphical User Interface= GUI

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    மாஹிர் – GUI விரிவாக்கத்தை மாத்தீட்டாங்களா 🙂 சுட்டிக் காட்டியதற்கு நன்றி.