திரட்டி செய்வது எப்படி?

Yahoo! Pipes, Google Reader இரண்டுமே தன் விருப்பத் திரட்டிகள் செய்ய உதவுகின்றன.

முதலில், திறம் வாய்ந்த Yahoo! Pipes கொண்டு நான் உருவாக்கிய திரட்டிகள் சில:

1. தமிழ்மணத்தில் எனக்குப் பிடித்த நான்கு துணை ஓடைகளை ஒன்றிணைக்கும் திரட்டி. இதே முறையில் தமிழ்மண ஓடைகளுக்குப் பதில் நம் விருப்பப் பதிவுகளின் ஓடைகள் அல்லது நம் பல்வேறு பதிவுகளின் ஓடைகளை ஓன்றிணைத்துக் கொள்ள முடியும்.

2. துறை வகைகள் போக, நாம் விரும்பாத பதிவுகள், விரும்பாத பதிவர்கள் ஆகியோரையும் ஓர் ஓடையில் இருந்து நீக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, மகளிர் சக்தி திரட்டியில் இருந்து கலை என்ற பதிவரை மட்டும் விலக்கி நான் உருவாக்கி உள்ள ஒரு திரட்டியை இங்கு பார்க்கலாம். (இங்கு, கலை அவர்களை விலக்கி நான் உருவாக்கியது ஓர் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே. மற்றபடி, அவர் பதிவுகளை விரும்பிப் படிக்கவே செய்கிறேன்!).

இப்படி, வடிகட்டித் திரட்டிகள் உருவாக்க இயல்வதால், நமக்கு விருப்பமில்லா பதிவர்களை, பதிவுகளை நீக்கச் சொல்லி எந்த ஒரு திரட்டி நிர்வாகத்திடமும் முறையிட்டுக் காத்திருக்கத் தேவை இல்லை. அவர்கள் விலக்கும் வரை வேறு வழியின்றி அப்பதிவுகளைப் பார்க்க நேரிடவும் வேண்டாம். திரட்டித் தளங்கள் தாமே தன் விருப்பமாக்கல் வசதிகளைத் தரும் வரை இது போன்ற திரட்டிகளை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.

3. தமிழில் செய்திகள்.

4. தமிழ் இணைய இதழ்கள்.

5. தமிழ்நாடு குறித்த ஆங்கிலச் செய்திகள்.

6. தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் சங்கமம் – சில தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் வலை சீர்தரங்களுக்குட்படாத ஓடை வடிவங்களின் காரணமாக, இத்திரட்டி அவ்வளவு திறம் வாய்ந்ததாக இல்லை. இது தொடர்பில் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள் தளங்களுக்கு மின்மடல் இட்டிருக்கிறேன். அவர்கள் ஓடை வடிவம் மாற்றப்படும்போது, இத்திரட்டியின் திறமும் கூடும்.

இத்திரட்டிகளின் முகப்பில் இடப்பக்கத்தில் உள்ள view/edit pipe இணைப்பைப் பின்பற்றி இத்திரட்டியை படியெடுத்து நாம் விரும்பும் வண்ணம் ஓடை முகவரிகளை மாற்றி சேமித்துக் கொள்ள முடியும்.

tamilblogs-yahoopipes.JPG

Yahoo! Pipes தளத்தில் சற்று நேரம் விளையாடிப் பார்த்தால் அதன் சாத்தியங்கள் புலப்படும். ஏதேனும் உதவி தேவையென்றால் மறுமொழியில் கேளுங்கள்.

வலை 1.0, வலை 2. 0 என்றால் என்ன என்று இங்கு விளக்கி இருப்பதைப் பார்க்கலாம். Yahoo! Pipes போன்றவைகளை வலை 3.0 என்று கருத இயலும். இந்த வலை 3.0 என்னவென்றால், இணையத்தளங்களை வெறும் காட்சிப்படுத்தலுக்கான தளங்களாகக் கருதாமல் அவற்றில் இருந்து வேண்டிய தரவுகளைப் பெற்று நிரலாக்கத்தின் மூலம் நம் விருப்பப்படி பார்க்க இயல்வதாகும். இதை வலை நிரலாக்கம் (web programing) என்கிறார்கள்.

இனி, கூகுள் மூலம் திரட்டி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தற்போது பலரும் அறிந்திருக்கும் மகளிர் சக்தி திரட்டி, கூகுள் மூலம் உருவாக்கப்பட்டது தான்.

1. Google Readerல் உங்கள் ஜிமெயில் கணக்கு விவரம் கொண்டு புகுபதியவும்.

2. உங்கள் விருப்பப் பதிவுகளின் முகவரியை Add Subscription என்ற பெட்டியில் ஒவ்வொன்றாக இட்டுச் சேர்த்துக் கொள்ளுங்கள். (திரைக்குறிப்பு a)

add-subscription.JPG

3. எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் குழந்தைகள் மட்டும் எழுதும் வலைப்பதிவுகளுக்கான திரட்டி உருவாக்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, Manage Subscriptions (திரைக்குறிப்பு b) சென்று குழந்தைப் பதிவர்களின் பதிவுப் பெயர்களுக்கு அடுத்து இருக்கும் Add to folderஐத் தெரிவு செய்து New Folder->kids என்று பெயரிட்டுக் கொள்ளுங்கள். (திரைக்குறிப்பு c)

add-folder.JPG

4. அதே பக்கத்தின் மேலே Tags என்று இருக்கும் இணைப்பைச் சொடுக்கிச் சென்று kids என்ற குறிச்சொல்லை privateல் இருந்து publicஆக மாற்றுங்கள் (திரைக்குறிப்பு d).

make-public.JPG

5. இப்போது, Add a clip to your site என்ற இணைப்பு வரும். அதைப் பின்பற்றி குழந்தைகளின் பதிவுகளை மட்டும் திரட்டும் திரட்டியை உங்கள் பதிவின் பக்கப்பட்டையில் இட முடியும் (திரைக்குறிப்பு e).

add-clip.JPG

6. அதே பக்கத்தில் kidsகு அடுத்து View Public Page (திரைக்குறிப்பு f) என்று இருக்கும். அதைப் பார்வையிட்டால் உங்கள் kids திரட்டிக்கான ஓடை முகவரி (திரைக்குறிப்பு g) இருக்கும். அதைப் பெற்று உங்கள் நண்பர்களுக்குத் தரலாம்.

public-page-feed.JPG

இதே போல் உங்கள் பதிவுகள் அனைத்தையும் குறிச்சொல்லிட்டு ஒன்றிணைத்துப் பொது ஓடை உருவாக்கி நண்பர்களுக்குத் தரலாம்.

அவ்வளவு தான் திரட்டி நுட்பம் !

அருஞ்சொற்பொருள்

தன் விருப்பத் திரட்டி – Personalised aggregator

ஓடை – Feed

வலை சீர்தரம் – Web Standard

தரவு – Data

நிரலாக்கம் – Programing

புகுபதி – Login

4 thoughts on “திரட்டி செய்வது எப்படி?”

  1. ரவி,

    கலக்கறீங்க .. ஒரு நாளைக்கு நாலு போஸ்ட் 🙂

    ஒரு சின்ன உதவி .,

    கூகுள் திரட்டி குறித்த நான்கு stepக்கும் ஒரு screenshot எடுத்து தரமுடியுமா??. வலைப்பதிவர் உதவிப்பக்கத்தில் தனிப்பதிவாக இடலாம். ஏற்கனவே wordpress (vs) blogger பதிவுக்கான repost உரிமை என்னிடம் பத்திரமாக இருக்கிறது. 😉

  2. இணைப்புக்கு நன்றி, டுபுக்கு.

    விக்கி – ஏப்ரல் 16 ஒரே நாள்ல 8,9 இடுகை போட்டேன்..அது தான் தற்போதைய சாதனைன்னு நினைக்கிறேன் 🙂

    நீங்க கேட்ட மாதிரி திரைப்பிடிப்பு எடுத்துச் சேர்த்து இருக்கிறேன். இத எடுக்கிற நேரத்தை விட எழுதுற நேரம் குறைவு 🙂 ஆனா, படிக்கிறவங்களுக்கு படிக்கிறதவிட இதப் பார்த்துப் புரிஞ்சிக்கிறது எளிது 🙂

  3. பயனுல்ல தகவல்கள்தான்.
    உங்கள் தமிழ் எனக்கு பிடித்திருக்கிறது.
    வாழ்த்துகள் தொடருங்கள்

Comments are closed.