தமிழ் செல்பேசி

நோக்கியா 5130 செல்பேசி வாங்கி இருக்கேன்.  தமிழ் விசைப்பலகை, இடைமுகப்பு, பயனர் வழிகாட்டி, தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருக்கிறது. உங்கள் செல்பேசியிலும் தமிழ் ஆதரவு பெற, அருகில் உள்ள Nokia Care கடைக்குச் சென்று கேளுங்கள். உங்கள் தொலைப்பேசி வகையில் தமிழ் ஆதரவு தர இயலும் என்றால், இலவசமாகவே செய்து தருவார்கள்.

Tamil Nokia Mobile Cell Phone
Tamil Nokia Mobile Cell Phone

தமிழ் எழுதும் முறை தமிழ்99 முறையை ஒத்திருப்பது மகிழ்ச்சி. க+ஆ=கா என்று எழுத வேண்டும். செல்பேசியில் இப்படி தமிழ் எழுதிப் பழகும் மக்கள் கணினிக்கு வருகையில் தமிழ்99ப் புரிந்து கொள்வதும் இலகு.

பார்க்க: நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

ஆனால், கணினி தமிழ்99 விசையின் தளக்கோலம்,  பயனெளிமை விதிகள் அனைத்தும் இல்லை. T9 predictive text போல தமிழுக்கு முயலும் போது திறமூல செல்பேசி இயக்குதளங்களை வைத்து திறமான தமிழ் செல்பேசி விசைப்பலகை வடிவமைக்க முயலலாம்.

கணினியில் இயல்பிருப்பு தமிழ் ஆதரவு வேண்டும் என்று பலர் எழுதிக் கொண்டே இருக்கிறோம் 🙂 ஆனால், பெரிய கூக்குரல் எழுப்பாமலேயே செல்பேசியில் ஓரளவாவது தமிழ் வசதிகள் கிடைத்திருக்கின்றன. செல்பேசிப் பயன்பாடு பரவலானதால் தமிழ் விரும்பும், தமிழ் மட்டுமே அறிந்த மக்களையும் செல்பேசிச் சந்தை கவர வேண்டி இருக்கிறது. செல்பேசியைப் போல கணினியும் அடித்தட்டு மக்களைச் சென்றடையும் போது கணினியிலும் தமிழ் தானாகவே வரும். அப்படி செயற்படுத்தப்படும் தமிழ் முறைமைகள் திறமானவையாக இருக்கவே முயற்சிகள் தேவைப்படுகின்றன.

தொடர்புடைய இடுகைகள்:

* செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்கள்

* செல்பேசியில் தமிழ் – சோனி எரிக்சன் C510 அனுபவம்

* செல்பேசிகளில் யூனிக்கோடு தமிழ்

* தமிழ் + செல்பேசிகள் + சிம்பயான் + நோக்கியா

பட உதவிக்கு நன்றி: Fonearea.com

23 thoughts on “தமிழ் செல்பேசி”

  1. ரவி,

    நொக்கியாவின் இந்தியக்கிளையே இப்பணியினை செய்திருக்க வேண்டும்.
    அதில் அதிகாரிகளைத்தொடர்புகொண்டு, தமிழ் செல்பேசி ஒன்றை உருவாக்க காரணம் என்ன என்றும், உண்மையிலேயே தமிழ் செல்பேசிகளுக்கான சந்தை உள்ளதா என்றும் (இந்திக்கு செய்திருப்பதால் தமிழும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வந்ததா என்பதை அறிய) இந்த சந்தை பற்றிய தயாரிப்புக்கு முன்னான கற்கைகளை எங்காவது படிக்க முடியுமா என்றும், வெளியிட்டபின் தமிழ் செல்பேசிகளுக்கான சந்தை எப்படி இருக்கிறதென்றும் அறிந்து பகிர முடியுமா?

    இங்கே இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழ் சிங்கள செல்பேசிகள் விற்பனைக்கு வந்து பிரபலமாகியிருந்தன. இப்போது சத்தைத்தைக்காணோம் (smart phone களின் வரவு காராமாயிருக்கலாம்)

    1. இந்த விவரங்களை அறிய முயல்கிறேன், மயூரன். தமிழ்நாட்டில் குறைந்த விலை தமிழ் செல்பேசிகளுக்குச் சந்தை இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. முதியவர்கள், ஆங்கிலப் படிப்பற்றவர்கள் எண்ணவற்றவர்கள் நிறைய பேர் தமிழ் இடைமுகப்பு பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். தற்போது நோக்கியா மட்டுமே தமிழ் ஆதரவு வழங்குகிறது. Idea mobile தமிழ் சேவையை ஒரு முக்கிய சிறப்பாக விளம்பரப்படுத்துகிறது.

      உயர் விலை செல்பேசிகளில் தான் தமிழைக் காணோம் 🙁 அவற்றில் தமிழ் வசதியை யாருமே வேண்டுவதில்லை என்கிறார் கடைக்காரர்.

  2. கூடவே இதற்கு அரசாங்க மானியம் ஏதாவது அல்லது ஏதாவது நிறுவனங்களின் சிறப்பு அனுசரணை ஏதாவது கிடைத்ததா என்பதையும் அறிய வேண்டும்

  3. மயூரன் சொன்னது போல NOkia 1100 போன்ற விலை குறைந்த தொலைபேசிகளில் தமிழ் இடைமுகம், குறுஞ்செய்திகள் அனுப்பும் முறைமை இருப்பதை அவதானித்து இருக்கின்றேன். இலங்கையில் இவ்வாறு வெளிவரும் தொலைபேசிகளில் தமிழ், சிங்கள இடைமுகம் இருந்தாலும் விசைப் பலகை சிங்களம் + ஆங்லத்திலேயே இருக்கும். எனது அப்பாவின் செல்பேசியும் அவ்வாறான ஒரு செல்பேசியே.

    அண்மையில் எனது சகோதரன் ஒருவனுக்கு 5320 வாங்க கொழும்பில் உள்ள கடைக்குப் போனபோது இந்த மாதிரி தொலைபேசிகள் புதிதாக வந்திருப்பதாக எடுத்துக் காட்டினர். தமிழ் இடைமுகத்தையும் போட்டுக் காட்டினார்கள். ஆனால் விசைப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் இருக்கவில்லை, மாறாக ஹிந்தி அல்லது வேறு ஒரு வடநாட்டு மொழி (அதுதான் கொடியில உடுப்பு காயிறமாதிரி எழுத்து) பொறிக்கப்பட்டிருந்தமையினால் என் கவனத்தை அது அவ்வளவாக ஈர்க்கவில்லை.

    Nokia 6120, 5320, 5800 போன்ற தொலைபேசிகளில் தமிழ் என்பது சுட்டுப்போட்டாலும் கிடையாது.

    எனது அப்பா பாவிக்கும் தொலைபேசியில் தமிழில் செய்திஅனுப்பும் வசதி உள்ளது. அதில் இருந்து அனுப்பினால் எனது Nokia 6070க்கு ஒரு வெற்று செய்தியே கிடைக்கின்றது. தமிழ் ஆதரவுள்ள வேறு ஒரு செல்பேசிக்கு அனுப்பிப் பார்க்கவேண்டும்.

    T9 Prediction வசதி ஹிந்தியில் இருப்பதை அப்பாவின் செல்பேசியில் பார்த்த ஞாபகம் இருக்கின்றது. தமிழுக்கு உருவாக்க இன்னும் காலங்கள் பல செல்லும் என்று நினைக்கின்றேன்.

  4. தமிழ் செல்பேசிதான் வாங்கினீர்களா? சொல்லவே இல்லையே. இங்கே அதெல்லாம் பாவிக்க வசதியில்லை :(.

    1. இங்க இருந்து ஒரு தமிழ் நோக்கியா செல்பேசி வாங்கி உங்களுக்கு அனுப்பி வைத்து தமிழ் குறுஞ்செய்தி கிடைக்குதான்னு பார்க்கலாம் 🙂 ஆனால், நோக்கியா செல்பேசி மட்டுமல்ல உங்கள் தொலைப்பேசிச் சேவை வழங்குனரும் தமிழ் எழுத்துகளுக்கு ஆதரவு தந்தால் தான் தகவல் தமிழில் வந்து சேரும்.

  5. இந்த தட்டச்சு வரிசை சரியா என்று தெரியவில்லை. அ-ஊ, எ-ஔ, க-ஞ … என்று தமிழில் வைத்துக்கொண்டால், எழுதும்போது தாவு தீர்ந்துவிடுமென்று நினைக்கிறேன்.

    உத்தமத்தினரோ, தமிழக அரசோ செல்பேசி விசைப்பலகைக்கு தர நிர்ணயம் செய்திருக்கிறார்களா? இல்லை இணைத்தமிழ் போல அங்கும் குழாயடிச் சண்டையா?!

    ஆங்கிலத்தில் சும்மா வரிசையாக வைத்திருப்பதாகத் தோன்றினாலும், உயிர் எழுத்துகள் தனித்தனி விசையில் இருப்பது கவனிக்கத்தக்கது.

    என்னிடமுள்ள ஒரு அலுவலக செல்பேசியில் இந்தி எழுத்துகள் உள்ளன. அதிலும் உயிர் எழுத்துகள் அ-ஊ, எ-ஔ என்று இருந்தாலும், மெய் எழுத்துகள் அவர்கள் படிக்கும் வரிசைப்படி உள்ளன. அதாவது இங்கு உள்ளது போல ka-na, cha-na, ta-na, tha-na, pa-ma, ya, ha என்று வைத்திருக்கிறார்கள்.

    இவ்விசயங்களில் ஜப்பானியரும், கொரியர்களும் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது நல்லது.

    1. //இந்த தட்டச்சு வரிசை சரியா என்று தெரியவில்லை. அ-ஊ, எ-ஔ, க-ஞ … என்று தமிழில் வைத்துக்கொண்டால், எழுதும்போது தாவு தீர்ந்துவிடுமென்று நினைக்கிறேன்.//

      இந்த வரிசை கண்டிப்பாகத் திறமானது இல்லை தான். ஆனால், பாமரர்கள் நினைவு வைக்க இலகுவாக இருக்குமோ என்னவோ? மயூரன் வினவியது போல் இதற்குப் பின்னர் ஏதும் ஆய்வுகள் உள்ளனவா என அறிய வேண்டும்.

      அதிகம் பயன்படும் உயிரெழுத்துகள் ஒவ்வொரு விசையின் முதலிலும் வருவது இன்னும் திறமாக இருக்கும்.

      //உத்தமத்தினரோ, தமிழக அரசோ செல்பேசி விசைப்பலகைக்கு தர நிர்ணயம் செய்திருக்கிறார்களா?//

      தமிழக அரசு இது குறித்து ஒரு சீர்தரம் உருவாக்கி வருவதாக உத்தமம் மூலம் அறிய முடிகிறது. இன்னும் பொது மக்கள் கருத்து கோரப்படவில்லை.

  6. ஒரு செல்பேசியிலிருந்து தமிழில் குறுஞ்செய்தி அனுப்பினால் அதே மாடல் செல்பேசியில்தான் அதைப் படிக்க முடியும் என்றால் அதில் மகிழ்ச்சியடைய எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

    1000 ரூபாய் செல்பேசியிலும் யூனிகோட் வசதி இருந்தால்தான் செல்பேசியில் தமிழைப் பயன்படுத்துவது சாத்தியமாகும். விலையுயர்ந்த செல்பேசிகளில் கூடத் தமிழ் எழுத்துகள் பெட்டிகளாகத்தான் தெரிகின்றன. நான் நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் ஆகிய செல்பேசிகளுக்கான தமிழ் இடைமுக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறேன் அல்லது சம்பந்தப்பட்டிருக்கிறேன். எல்லா மொழிபெயர்ப்புகளையும் யூனிகோடில் வாங்கிக்கொள்வார்கள். அவற்றைக் கண்டமேனிக்குக் கொந்திவைப்பார்கள். கடைசியில் ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்ப முடியாது. இதுதான் நிலைமை.

    1. //ஒரு செல்பேசியிலிருந்து தமிழில் குறுஞ்செய்தி அனுப்பினால் அதே மாடல் செல்பேசியில்தான் அதைப் படிக்க முடியும் என்றால் அதில் மகிழ்ச்சியடைய எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.//

      Nokia வில் தமிழ் ஆதரவு உள்ள எந்த வகை செல்பேசிக்கும் அனுப்பி படிக்க முடிகிறது. மற்ற நிறுவனங்கள் வருங்காலத்தில் தமிழ் குறுஞ்செய்தி ஆதரவு தந்தால், நோக்கியாவின் நுட்பத்தைப் பின்பற்றும் என்று எதிர்ப்பார்க்கலாமா?

      தமிழில் போய் சேருமா என்பது செல்பேசி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரையும் பொருத்திருக்கிறதாம். என் vodafone செல்பேசியில் இருந்து அப்பாவின் BSNL செல்பேசிக்கு அனுப்பி படிக்க முடிகிறது. மற்ற சேவை வழங்குனர்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

      1. தமிழ் ஆதரவு என்று குறிப்பாக எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. எழுத்துருவையும் தமிழ் உள்ளிடுவதற்கான அமைப்பையும் சொல்கிறீர்கள், இல்லையா?

        இந்த நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து இப்படியொரு அமைப்பைத் தங்கள் செல்பேசிகளில் செயல்படுத்தலாம். அவை தற்காலிக லாபத்திலேயே குறியாக இருப்பதால் அப்படி எதுவும் நடக்கவில்லை போலிருக்கிறது.

        1. //தமிழ் ஆதரவு என்று குறிப்பாக எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. எழுத்துருவையும் தமிழ் உள்ளிடுவதற்கான அமைப்பையும் சொல்கிறீர்கள், இல்லையா? //

          ஆமா.

      2. நான் ஏர்செல். ரவி அனுப்பியதை நான் படித்தேன். நான் அனுப்பியதை அவர் படித்தார்.

  7. விசைகளின் அமைப்பு நன்றாக்வே உள்ளது. பயன்படுத்திய சில நாட்களில் எளிதாக மனப்பாடம் ஆகி விட்டது.

  8. Pingback: செல் பேசியில் தமிழ் மொழி « தமிழ் வலைப்பதிவு
  9. நோக்கியா மட்டுமல்ல, மேலும் சில brandகளிலும் தமிழ்வசதி (இடமுகப்பு, படிக்கும்வசதி, சிலவற்றில் எழுதும் வசதியும்) உள்ளது.

    ஆனால் நீங்கள் சொன்னது மாதிரி highend மாடல்களில் தமிழ்வசதி இல்லைதான். நல்லவேளையாக நான் high-end மாடல்கள் வாங்காததால் அந்த ப்ரச்சனை எனக்கில்லை 🙂

    1. ஆண்டிராய்டு பரவலாகி அதில் தமிழிசைவு வந்தால் உயர் விலை செல்பேசிகளிலும் தமிழ் ஆதரவு தானாகவே கிட்டும் நாள் வரும் என்று நினைக்கிறேன்.

      1. தற்போது அந்திரோயிட் எல்.ஜி இரக தொலைபேசி பாவிக்கின்றேன். அதில் தமிழ் ஆதரவு பூச்சியம். ஹிந்தி ஆதரவு கூட இல்லை 😉

  10. open google transliertation. type in tamil.before u install nokia pc suite transfer the message and send to all. im also using nokia xpress music

  11. Pingback: There is tamil software for nokia 6600? | HyperFAQs
  12. Nanbargalukku vanakkam naan e71 nokia mobail vaithullen anaal athil tamil padikkamudiyavillai thayauseithu ungalukku ethavathu vibaram therinthal enakku e mail seiyavum.

Comments are closed.