தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமா?

என் விருப்ப வலைப்பதிவரும் குட்டித் தோழியுமான அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கடிதம் ஒன்று அனுப்பி இருந்தேன்:

Dear Anjali kutty, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

வாழ்த்துக்கு நன்றி சொல்லிவிட்டு அவள் கேட்ட முதல் கேள்வி:

குட்டி என்பது தமிழ்ச் சொல். அதை எப்படி நீங்கள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதலாம்?

அஞ்சலிக்கு வயது 9. பிறந்தது முதல் வளர்வது நோர்வேயில்.

எதிர்ப்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பாராத நேரத்தில் வந்த கேள்வி திகைக்க வைத்தது. ஒரு சிறு பிள்ளைக்குப் புரியும் அபத்தம் ஆறு கோடித் தமிழருக்கு உறுத்தாமல் போனதே என்று நினைக்க வைக்கிறது.

நோர்வே மொழி, ஆங்கிலம் அறிந்திருந்தாலும் தமிழர் என்றால் தமிழில் கதைக்கத் தான் அஞ்சலிக்கு விருப்பம் என்று அவர்கள் அம்மா சொன்னார்கள்.

இனி முதற்கொண்டு Busபஸ் என்று எழுதாமல் Bus என்று எழுதவும் “எப்படி இருக்க” என்பதை “eppadi irukka” என்று எழுதாமல் “எப்படி இருக்க” என்றே மறக்காமல் எழுதவும் உறுதி பூண்டிருக்கிறேன். இப்படி எழுதும் போது தேவையில்லாமல் ஆங்கில எழுத்தகளில் எழுதப்பட்ட ஆங்கிலச் சொற்கள் கட்டுரை முழுக்க கண்ணை உறுத்தும் என்பதால், இயன்ற அளவு தமிழில் எழுத முனைவோம். ஸ்கூல், ரைஸ், டீவீ, ஹேப்பி பர்த்டே என்று தமிழில் எழுதப்படும் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் என்று எண்ணி வளரும் ஒரு கவலைக்குரிய தலைமுறை வந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம், இது ஆங்கிலச் சொல் என்பதையாவது வாசிப்பவருக்கு நினைவூட்டும். இதே போல் பல வேற்று மொழிச் சொற்கள், ஒலிகளையும் தமிழில் எழுதிக் காட்டுவதற்காக கிரந்த எழுத்துகளை அதிகமாகப் பயன்படுத்தித் தமிழைக் கொல்லாமல் தமிழ் ஒலிப்புக்கு ஏற்பவே எழுதி விட்டு, தேவைப்பட்டால் அடைப்புக்குறிகளுக்குள் அந்தந்த மொழி எழுத்துக்களாலேயே எழுதிக் காட்டவும் நினைத்து இருக்கிறேன். (கிரந்த எழுத்துக்களை ஏன் இயன்ற அளவு தவிர்க்க நினைக்கிறேன் என்பது இன்னொரு பெரிய தனிக்கதை. அது தனி இடுகையாக வரும்.)

இன்று முதல் இந்த கொள்கை முடிவு நடப்புக்கு வருகிறது 🙂

தொடர்புடைய இடுகை:

English words in spoken Tamil

7 thoughts on “தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமா?”

  1. Dear Anjali kutty, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
    இதை முதலில் பார்த்தும் et tu brute என்று தோன்றியது. கடைசியில் 😉
    இதை நான் நிரம்ப நாட்களாக கடைப்பிடித்து வருகிறேன். அதனாலேயே இன்னும் மொழி செழுமை அடைகிறது.

    (என்னுடைய முதல் பின்னூட்டம் தவறாக பதியப்பட்டது, விலக்கிவிடவும்)

  2. Sathia » என்னை brutusனு சொல்லிட்டீங்களே 🙁 அழுகை அழுகையா வருது 🙂 பொதுவாகவே தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதுவதைத் தவிர்ப்பவன் தான். ஆனால், ஏதோ ஒரு அசட்டையில் அந்த வாழ்த்து அப்படி அமைந்து விட்டது. ஒரு வேளை அவள் வெளிநாட்டில் வளரும் சின்னப் பிள்ளை தானே என்று நினைத்து விட்டேனோ 🙁

  3. வணக்கம்.
    நல்ல யோசனைதான்.

    1. மன்னிக்கணும், hema. நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்கன்னு புரியல.

Comments are closed.