தனிமையின் பெயர்

உறக்கம் வரா ஆம்சுடர்டாம் இரவு 11.30 மணி.
ஏதோ பேசித்தீர்க்க விழையும் மனம்.

பெல்சியம், செருமனி, லக்சம்பர்க், பிரான்சு..

”இத எல்லாம் நாங்க TVல தான் பார்க்கணும்..நீ நேர்லயே பார்க்கிற..” – அப்பா.
“எந்த TVயும் உங்கள காட்டுதில்லையே..” – நான்.

சின்ன வயசுல உலகம் பார்ப்பது சாதனையாம்.
பறவை கூட தான் நாடு விட்டு நாடு போகிறது.

சாதனையா என்ன?

பிழைப்பு !

பார்க்க, பேச வலைப்படக் கருவியும் தொலைபேசியும் உண்டு.
அக்கா மகனை தூக்கிக் கொஞ்சத் தான் தொழில்நுட்பம் இல்லை.

மீந்த பருக்கைகள் தின்ன வரும் குருவிகளுக்கு என் மொழி தெரியாது.
வாரக் கடைசி நண்பர்களுக்கு என் வலி புரியாது.
மது விற்கும் இரவுக்கடைக்காரனுக்கு சிரிக்கத் தெரியாது.

என் கண்ணாடி சன்னலின் வழி
காற்றும் மாசும் இரைச்சலும் எப்போதும் வந்தாலும்
ஒருபோதும் வருவதில்லை ஒரு பறவையும்..

திருமணம் செய்யலாமா, புது நண்பர் பிடிக்கலாமா – அக்கறையோடு கேட்கும் அக்கா.
ஒரு container நிறைய என்னோடு மனிதர்களை போட்டு அடைத்தால் சரியாகி விடுமா என்ன?
இது வெட்ட வெளியில் ஒரு மூச்சுத் திணறல்.

வருகிறார்கள். நுழைகிறார்கள். திரை மூடுகிறது. திரை விலகுகிறது. செல்கிறார்கள்.
20 நிமிடங்கள் – 50 ஐரோ மட்டுமே.
”என்ன செய்யலாம்?”
”என்ன வேண்டுமானாலும்..Su** and F***, two positions..”


ஏதாவது பேசுவாயா என்றா கேட்க முடியும்?
நகர்கிறேன்.

குளிர் நாட்டில் நடுநிசி நாய்களைக் காணோம்.
மனிதர்கள், வண்டிகள், கடைகள் மட்டுமே.

இன்னொரு சன்னல். இன்னொரு பெண்.
அதே உரையாடல்.
நகரப் பார்த்தபோது கேட்டாள்:

”யாரும் வருகிற பாட்டை காணோம்… விடியல் வரை கண் முழிக்கணும்…
சும்மானாச்சும் கொஞ்ச நேரம் ஏதாச்சும் பேசேன்”?


என்ன பேசி விட முடியும்?

போதை, புகை, மாது, கேளிக்கை, கொண்டாட்டம் நிறைய கிடைக்கிறது.
வாழ்க்கை மட்டுமே விற்பனைக்கு கிடைப்பதில்லை.

அலைந்த களைப்பில் உறக்கம் வரலாம்.
அப்போதும் யாரும் வரப்போவதில்லை பேசித் தீர்க்க –
எனக்கும் அவளுக்கும் அனைவருக்கும்.

18 thoughts on “தனிமையின் பெயர்”

  1. நண்பரே!
    கவிதைக்கும் காதலுக்கும் கடவுளுக்கும் யாரும் வரைவிலக்கணம் கொடுத்துவிட இயலாது. நீங்கள் கவிதை என்று நினைக்கும் வடிவம் உங்களுக்குக் கவிதையெனில் சரி. ஊரையும் உறவுகளையும் விட்டு உழைப்புக்காக புலம்பெயர்ந்திருக்கும் எல்லோருடனும் கூடவே இருப்பது தனிமைதான். வாஜ்பாய் அவர்கள் சொன்னதுபோல ‘கூட்டத்துள் தனிமை’. தனிமையை விடக் கொடியது வறுமை. கையில் பணமில்லாதபோது இழிவுபடுத்தப்படுவதைக் காட்டிலும் கொடியதில்லை தனிமை. இல்லையா…?

  2. தமிழ்நதி – சரியான நேரத்தில் வாஜ்பாயின் கவிதையை நினைவூட்டி உள்ளீர்கள். அதைத் தான் கவிதையில் தெரிவிக்க முயன்றேன். நிறைய பேர் கூட ஆளில்லாமல் இருப்பது தான் தனிமை என்று நினைத்துக் கொள்கிறார்கள். தனிமையினும் வறுமை கொடிது தான். ஆனால், நாங்க எல்லாம் காசு பணம் சேர்க்க இங்க வரலாமுங்க..படிக்க வந்திருக்கமுங்கோ 🙂

  3. ரவிசங்கர்

    வசன கவிதை என கொள்ளுங்கள்..

    நன்றாக இருக்கிறது.

    தனிமைய தொலைக்கத்தான் நட்பு இருக்கிறது.
    ஆயினும் தன்னில் தானே தனிமையை உணரும் தருணங்களும் இருக்கின்றன… எங்கு இருந்த போதிலும்..

  4. ரெம்ப நல்லாயிருந்தது. வாழ்த்துக்கள்.

  5. உனக்கும் கீழே உள்ளவர் கோடி – நினைத்துப்
    பார்த்து நிம்மதி நாடு.

  6. சாத்வீகன், சிறில் அலெக்ஸ் – வருகைக்கும் ஊக்க மொழிகளுக்கும் நன்றி.

    யோகேசு – நமக்கும் மேலே எத்தனை கோடி? அவரைப் போல் நாம் ஆவது எப்படி? என்று?

    ஹரி –

    //Paravaigal ponaalum eppothu thirumbum endru theiryum…aanaal namakku…//

    இதுவே ஒரு கவிதையின் வரி மாதிரி தான் இருக்கு !

  7. உளப்பூர்வமான எண்ணங்களும், ஏக்கங்களும் தான் சிறந்த கவிதையாகிறது.

    படிக்க சென்ற நீங்களே இப்படி எழுதும் பொழுது சம்பாதிப்பதற்காகவே வாழ்க்கையை பாதியிலே விட்டு பிள்ளைகளின் மழலைச் சொற்களை கூட நேரில் கேட்கமுடியாமல் தவிக்கும் சகோதரர்களை என்னவென்பது… சொல்லெணாத் துன்பத்தில் அவர்கள், அக்கரையிலே.

  8. நுங்கம்பாக்கம் ராஜ்பவன் ஹோட்டலில் மதிய உணவு அருந்த சென்று ஒரு இடத்தையும் பிடித்தாயிற்று. பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எதிர்த்த டேபிளில் ஒரு நாலு பேர் கொண்ட குடும்பம். அந்த அம்மாவுக்கு 50 வயது தாண்டியிருக்கும். அவரது கணவர், அவரது பேரக் குழந்தைகள் 2 பேர் என 4 பேர் அந்த டேபிளில் அமர்ந்தனர். டக்கென்று நிமிர்ந்து பார்த்த எனக்கு, அந்த அம்மா கிராமத்து பாணியில் புடவையை கட்டியிருந்ததும் முக அமைப்பும் ஊரிலிருக்கும் என் அம்மாவை எனக்கு நினைவூட்டி விட்டது. இவ்வாறு நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த அம்மா தன் பேரனுக்கு இலையை சரிப்படுத்துவதிலும், கணவனுக்கு சாப்பிடுவதில் அறிவுரை செலுத்துவதிலும் மும்முரமாக, எனக்கு கண்களில் நீர் பொங்கி விட்டது. அந்த மதிய வேளையில் உணவருந்திக் கொண்டிருந்த ஒரு ‘டீசன்டான’ நபர் ஏன் திடீரென்று அழ வேண்டும் என்று யாரேனும் என்னை கவனித்திருந்தால் நினைத்திருக்க கூடும். நான் என் கட்டுப்பாட்டை இழக்கக் கூடாது என்று முடிவெடுத்து கண்களை துடைத்து விட்டு நிமிர்ந்து பார்க்காமல் சாப்பிட்டு விட்டு வெளியேறினேன்.

    இதை எதற்காக சொன்னேன் என்று கேட்கிறீர்கள் தானே. இந்த தனிமை உணர்வு இடம், பொருள், ஏவல் எல்லாம் பார்ப்பதில்லை. எல்லோருக்குமே வருகிறது. பிழைப்புக்காக சுகவாசி வாழ்க்கையை இழக்க விரும்பாதவர்களுக்கு பொருளியல் வாழ்க்கையின் யதார்த்தம் வாட்டுகிறது. பிழைப்புக்காக இடம்பெயர்பவர்களுக்கு வாழ்க்கை சுகத்தை பிரியும் தனிமை வாட்டுகிறது. எதை விற்று எதை வாங்குவது என்று நாம் முடிவெடுத்து கொண்டே இருக்க வேண்டியிருப்பது தான் விதி, மதி என்றெல்லாம் பேசவைத்து மனிதனை ஞானியாக்குகிறது.

    இதற்கு ஞானிகள் சொல்லும் வழி, யாதும் ஊரே யாவரும் கேளிர் தான். எங்கிருந்தாலும் அந்த சமுதாயத்தை, மக்களை நேசிக்க கற்றுக் கொண்டால் துயரத்தை தவிர்க்கலாம் என்பது தான் நான் கேள்விப்பட்ட வரைக்கும்.

    உங்கள் கவிதை மிகவும் நெருக்கமாகவும், சிறப்பாகவும் இருந்ததால் நான் கொஞ்சம் ஓவராகவே உளறிட்டேன்னு நினைக்கிறேன்.(இருந்தாலும் பாதியைக் குறைத்து உங்களை காப்பாற்றியிருக்கிறேன்) சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.

  9. /அக்கா மகனை தூக்கிக் கொஞ்சத் தான் தொழில்நுட்பம் இல்லை.

    இது வெட்ட வெளியில் ஒரு மூச்சுத் திணறல்

    ஏதாவது பேசுவாயா என்றா கேட்க முடியும்?

    என்ன பேசி விட முடியும்?

    வாழ்க்கை மட்டுமே விற்பனைக்கு கிடைப்பதில்லை. //

    கவித்துவமான வரிகள். ரசித்தேன்.


    சொந்த நாட்டிற்கு திரும்ப துடிக்கும் இன்னொரு ஜீவன்

    http://www.geeths.info

  10. சிங்கப்பூரில் நான் இருந்த போது எங்க ஊர் மாமன்,மச்சான், சித்தப்புகள், அண்ணன் என்று ஒரு பெரிய கூட்டமே அங்கு உழைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் வாழ்க்கையை வெளியில் இருந்து பார்ப்பதற்கே எனக்கு கஷ்டமாக இருந்தது. அவர்களை போன்ற யாரும் வலைப்பதிய வரும்போது உண்மைகள் தெரிய வரும். உங்க ஊர்ப்பக்கம் இருந்தும் நிறைய பேர் வளைகுடா நாடுகளில் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    ஏதோ நான் கொஞ்சம் senti ஆள் அப்படிங்கிறதுனால கொஞ்சம் கஷ்டம். இல்லாட்டி படிக்க வர்ற பசங்களுக்கு இங்க அனுபவிக்க நிறைய விஷயம் இருக்கு. கல்யாணம், குடும்பப் பொறுப்புகள் எதுவும் இல்ல. பொண்டாட்டி பிள்ளைய விட்டு வாழறவங்க நிலைமை தான் கஷ்டம்

  11. உலகன், கீதா – ரொம்ப நாளா என் நண்பர்கள் சிலர் என் கவிதைய ஓட்டிக்கிட்டே இருப்பானுங்க..உண்மைல நமக்கு தான் எழுதத் தெரியலியா இல்ல விளையாடுறானுங்களான்னு எனக்கே சந்தேகமா போச்சு. உங்க பாராட்டுக்கு அப்புறம், “சரி, நம்ம எழுதறதும் நாலு பேருக்கு புரியுத”-னு ஒரு சந்தோஷம், தொடர்ந்து வலைப்பதிவுக்கு வாருங்கள். கவிதைகளுக்கு-னு ஒரு வாசக வட்டத்த உருவாக்குவோம்

  12. கவிதையா, இல்லையா என்றெல்லாம் சொல்லுமளவுக்கு எனக்கு கவிதைகள் தெரியாது. 🙂

    ஆனாலும் மிகவும் நன்றாக உள்ளது. தனிமையை எளிமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  13. //ஏதாவது பேசுவாயா என்றா கேட்க முடியும்?
    நகர்கிறேன்.//

    நல்லாயிருக்கு

  14. கலை, மயூரன் – பாராட்டுக்கு நன்றி

  15. தனிமையின் அவஸ்தை வரிகளில் தெரிகின்றது

  16. பொன்ஸ், சிரிக்கிற பொம்மை எதுக்குன்னு புரியலியே

Comments are closed.