செருமன் நாட்கள்

 

சிங்கப்பூரில் பாதிப்படிப்பை முடித்து மீதிப்படிப்புக்காக வந்துள்ள இடம் செருமன் மாநகரமான முன்சன் (ஆங்கிலத்தில் Munich – மியூனிக்).

முதல் ரெண்டு வாரம் அரிசிச்சோறே சாப்பிடவில்லை. இத்தனை நாட்களுக்கு அரிசி சோறு சாப்பிடாமல் வாழ முடியுமா? அரிசி விற்கும் கடையைக் காட்டுவதாக பக்கத்து அறையிலுள்ள சீன நண்பர் சொல்லியிருக்கிறார். ஒரு வாரமாக முட்டையை வேக வைத்தே தின்ற பின் தான் அதை வைத்து ஆம்லெட் கூட போட முடியும் என நினைவு வந்தது. நான் ஆம்லெட் செய்வதைப் பார்த்த சீனாக்காரன், இது என்ன இந்திய பீட்சாவா என்றான். பன்னிக் கறி நிறைய கிடைக்கிறது. ஆனால் சாப்பிட மனம் ஒப்பவில்லை. பிரட் செய்வதில் ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு நிறைய பிரெட் வகை வைத்திருக்கிறார்கள். விருந்து என்றால் கண்டிப்பாக மது, வைன் உண்டு. ஆண், பெண் பாகுபாடின்றி ரசித்து ரசித்து குடிக்கிறார்கள். புகைக்கிறார்கள். 

எப்போதாவது தான் இந்தியர்கள் தென்படுகிறார்கள். பார்த்தால், மறக்காமல் புன்னகைக்கிறார்கள். நேரம் இருந்தால் கை குலுக்கி ஊர், பெயர், வேலை அறிந்து விடை பெறுகிறார்கள். பெரும்பாலும் மாணவர்களும் மென்பொருள் வல்லுனர்களும் தான். இந்தியப் பெண்கள் ரொம்பக் குறைவு. அப்படியே இருந்தாலும் திருமணமானவர்களாக இருக்கிறார்கள். ம்ம்.. 🙂 பஞ்சாபி உணவகங்களில் நம்மவர்களை விட வெளி நாட்டவர்கள் தான் கூடுதலாக விரும்பிச் சாப்பிடுகின்றனர். இந்தி, தமிழ்த் திரைப்படங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. கொஞ்சம் ஆப்பிரிக்கர்கள், வளைகுடா பகுதி ஆட்கள் தவிர எல்லாரும் வெள்ளையாக இருப்பதால் எந்த நாட்டவர் என்று சொல்ல முடியாது. கல்லூரியில் நிறைய நாட்டவர்கள் இருக்கிறார்கள். 

பத்து மணி வரை சூரியன் இருப்பது புதுமை. குளிர் காலத்தில் 4 மணிக்கு எல்லாம் இருட்டி விடுமாம். போன வாரம் எல்லாருடனும் சேர்ந்து பக்கத்திலுள்ள ஆசுத்திரியா நாட்டுப்பகுதியில் உள்ள ஆல்ப்சு மலைத் தொடருக்கு சென்று வந்தோம். முதன் முறையாக பனி மலை பார்க்கிறேன். நான் ஏன் இன்னும் இமய மலையைப் பார்க்கவில்லை என்று எல்லாரும் கேட்டார்கள். நம்ம ஊர் ஊட்டி, கொடைக்கானல் இன்பச் சுற்றுலா போல் இல்லை. கொஞ்சம் கடினச் சுற்றுலாவாக இருந்தது. பெரிய பெரிய மூட்டைகளை முதுகில் கட்டிக்கொண்டு மலை உச்சி வரை ஏறிச் சென்றோம். அங்கு ஒரு மரக் குடிசையில் இரண்டு நாள் தங்கியிருந்து சமைத்துச் சாப்பிட்டு, விளையாடி, கலந்து பேசி திரும்பினோம். கூட இரண்டு பிரஞ்சுக் காரர்கள் வந்திருந்தார்கள். பிரஞ்சு மொழி தவிர வேறு ஒன்றும் அறியாத நல்லவர்கள்.

பேருந்து, தொடர்வண்டி, ட்ராம் வண்டி எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக மாதச் சீட்டு தந்து விடுகிறார்கள்.  ஞாயிற்றுக் கிழமை இங்கு உண்மையிலேயே ஓய்வு நாள் போல. பெரும் பாலான கடைகளை மூடி விடுகிறார்கள். பேருந்து வசதியும் குறைவு தான்.

நல்ல அழகான மரபு மிக்க பழங்காலக் கட்டிடங்கள், நிறைய ஏரிகள், ஒரு ஆறு உள்ளன. உலகிலேயே வாழ்க்கைத்தரம் கூடிய நகரங்களில், முன்சனுக்கு ஐந்தாவது இடம். இங்க தான் அடுத்த  உலகக் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. கல்லூரிக்கு வெளியில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்து இருந்தால் “என் தாத்தா செய்த நல்வினை” என்று மகிழலாம். வேற்று மொழி உதவியே இல்லாமல் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்!

அறையில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் 20 செருமன் மொழிக் காட்சிகள். போனால் போகிறது என்று சி. என். என் மட்டும் வருகிறது. கொஞ்சமாவது மொழியைக் கற்றுக் கொள்ளலாமே என்று,  செருமன் தொலைக்காட்சிகளையும் பார்க்கிறேன். நல்ல வேளையாக செருமன் மொழி எழுத்துக்கள் ஆங்கில எழுத்துகளைப் போல் இருக்கின்றன. சில சொற்களும் ஆங்கிலத்தை ஒத்து இருக்கின்றன. ஒரு நாளைக்கு 10 முறையாவது செருமன் அகரமுதலியைப் பார்க்கிறேன். அது இல்லாமல் வெளியில் செல்வது இல்லை.

சென்னையைத் தாண்டாத என் சில நண்பர்கள் நான் உலகம் சுற்றும் இளைஞனாகி விட்டதாக பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால் , நான் அடிக்கடி கேட்கும் பாட்டு என்னவோ “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா” தான். இப்பொழுது கொஞ்ச நாட்களாக தேசம் படத்திலிருந்து ” உந்தன் தேசத்தின் குரல்” பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் நிறைய சொல்லலாம். சொல்வேன். ஏனெனில் இங்கு தமிழ் பேச அவ்வளவாக ஆட்கள் இல்லை !!!

22 thoughts on “செருமன் நாட்கள்”

 1. வணக்கம் ரவிசங்கர்.
  ஆங்கிலம் தெரியாமல் எத்தனையோ
  நாட்டவர்கள் முன்னேறியிருக்கின்றனர்.
  பொருளாதாரத்தில். கலை கலாச்சாரத்தில்
  தொழில் நுட்பத்தில்
  நாம் தாம் ஆங்கிலம் இல்லாமல் ஒரு அடி கூட நகரமாட்டோம் என்கிறோமே.
  வலையுலகிற்கு வருக
  வருக என்று வரவேற்கிறேன்.
  நன்றி.

 2. வாங்க ரவிசங்கர். வலை ஜோதியிலே வந்து கலந்துக்கிட்டதுக்கு சந்தோஷம். அங்கேதான் நம்ம சந்திரவதனா இருக்காங்க(ன்னு நினைக்கிறேன்)

  இன்னும் அப்பப்ப உங்க அனுபவங்களை எழுதுங்க.

  குட்டன் டாக்!

  என்றும் அன்புடன்,
  துளசி

 3. Willkommen !!! Deutsch கற்றுக்கொள்வது அவ்வளவாக கடினமல்ல. நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்களும், ´கொஞ்சமும் ஆங்கிலம் தெரியாதவர்களும் Deutschசை மிக விரைவாக கற்றுவிடுவார்கள். ஆங்கிலம் கொஞ்சம் தமிழ்கொஞ்சம் தெரிந்தவர்கள். மூன்றுமொழியையும் கலந்தே கதைப்பார்கள். என்ன குழப்பமாயிருக்கிறதா(அதுதான் அவங்களுக்கு ஒன்றுமே ஒழுங்காவராது).அதுசரி நீங்கள் எந்த ரகம்? :-))

  (மொழிசம்மந்தமாக ஏதும் உதவி வேண்டுமெனில் கேளுங்கள் உதவி செய்ய முயற்சிக்கிறேன்.)

 4. வலைப்பூ உலகிற்கு நல்வரவு ரவிசங்கர்.
  Summerல் போயிருக்கிறதுனாலே acclimatize பண்ணிக்கிறது கொஞ்சம் சுலபமா இருக்கும்.

  ஜெர்மன் கத்துக்கிறதுக்கும் முன்னாடி இந்த சவுண்டை கொஞ்சம் practice பண்ணிக்கங்க: துப்புவதற்கு முன்னாடி தொண்டையை தயார் பண்ணிக்கிற சவுண்டு தான்! 🙂
  (என் ஐந்து வருட ஸ்விஸ் வாழ்க்கையில் தெரிந்து கொண்டது)

 5. // பன்னிக் கறி நிறைய கிடைக்கிறது //
  Different different color la kooda kedaikkum :). Aana thannikkuththan (normal water 🙂 ), thanni padaatha paadu padanum. Wasser endru kettal Soda Water koduththu tholachchuruvaanga. Thaagamum thaniyaathu, thanni kudichcha maariye irukkaadhu.

  // இந்தித் திரைப்படங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன். //
  Lot of Germans, who I met in Heidelberg enquire about India, know about Gandhi and then Amitabh. Yedho pazhaiya Hindi padam peru solli idhu paathurikkeengalannu kettaanga. Vazhinjikitte muzhichchen.

 6. ஆங்கிலம்=முன்னேற்றம் என்று சிந்திக்கும் கூட்டம் தமிழ் நாட்டில்தான் இருக்கின்றது போலும்! (வாசித்து அறிந்தது மட்டில், உண்மை நிலவரம் எனக்கு தெரியாது…. எப்பிடியிருந்தும் உங்கள் கனவு நினைவாக எனது வாழ்துக்கள்!!!
  யேர்மன் மொழி எனக்கு பிடித்தமான மொழி கொஞ்சம் என்னால் கதைக்கவும் முடியும், ஆனால் இலக்கணம்தான் கொஞ்சம் எனக்கு கஸ்டமக படுகின்றது முக்கியமாக இந்த டி டியர் டஸ்…. ம்……!!!!!

 7. @santhoshguru-நான் மாநகராட்சி குழாயிலேயே தண்ணீர் பிடித்துக்கொள்கிறேன்..ஆனால், எல்லாத்துலயும் சோடா கலக்கும் இவர்கள் சுவையைப்பத்தி என்னத்த சொல்ல..அப்புறம், அமிதாபை விட ஷாருக் ரொம்ப பிரபலம். ஆனால், என் இந்தி அறிவும் “ரகு தாத்தை ஹை” அளவு தான் 🙂
  @NONO-எல்லாம் நம்ம நாட்டு கல்வி முறையால் வந்த கோளாறு..பெரிய அளவில் சீர்திருத்தம் தேவை. பூனைக்கு யார் மணி கட்டுறதுன்னு தெரியல. நான் டாயிட்ஷ் மொழி இலக்கணம் பற்றி கவலைப்படும் அளவுக்கு எல்லாம் இன்னும் வர வில்லை.
  @கரிகாலன், துளசி, ரம்யா, தர்சன்-மறுமொழிகளுக்கும் மொழிக்குறிப்புகளுக்கும் ரொம்ப நன்றி 🙂

 8. //:). Aana thannikkuththan (normal water 🙂 ), thanni padaatha paadu padanum. Wasser endru kettal Soda Water koduththu tholachchuruvaanga. Thaagamum thaniyaathu, thanni kudichcha maariye irukkaadhu.//

  அதுக்குத்தான் பியர் இருக்குதே… 🙂

 9. ஆமாமா, தண்ணிய விட பியர் நிறைய, விலை மலிவா கிடைக்குது 🙂

 10. //அதுக்குத்தான் பியர் இருக்குதே… :-)//

  ஐரோப்பாவிற்கு போயிட்டு பியரா…ச்சே..நெவர்.. ஒன்லி ஒயின் மற்றும் ஷாம்பெயின் 😉 .

  (உண்மைய சொல்லனும்னா, பியர் நாத்தம் எனக்கு அலர்ஜி)

 11. //ஐரோப்பாவிற்கு போயிட்டு பியரா…ச்சே..நெவர்.. ஒன்லி ஒயின் மற்றும் ஷாம்பெயின் 😉 .//

  தண்ணித் தாகத்துக்கு எல்லாம் ஒயினும் ஷாம்பெயினும் குடிச்சா கட்டுபடி ஆகுமுங்களா ?!

 12. //(உண்மைய சொல்லனும்னா, பியர் நாத்தம் எனக்கு அலர்ஜி) //

  நீங்க வேற, இங்க எல்லாம் பீப்பாய் பீப்பாயா பியர் குடிக்கிறார்கள்.

  //தண்ணித் தாகத்துக்கு எல்லாம் ஒயினும் ஷாம்பெயினும் குடிச்சா கட்டுபடி ஆகுமுங்களா ?! //
  நல்ல வைன் கொஞ்சம் கட்டுபடியாகாது தான்.

 13. நல்வரவு…
  அப்புறம் நிறைய விஷயம் சொல்லிருக்கீங்க, பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்க…

  (பி.கு:
  அப்புறம் முன்னாடி சுபா அவ்வப்போது ஜெர்மனி பற்றி எழுதியிருக்கிறாங்க…

  http://subaonline.log.ag/
  http://subahome.blogspot.com/2005_02_27_subahome_archive.html

  CNN ்ப்ப்ப்பொரொட்ப்ட்ச்பின்ன் ல் பிடிக்காத நிகழ்ச்சி வரும்போது போய் பாருங்க:)

 14. வணக்கம் ரவி சங்கர் அண்ணா ..
  உங்களுடைய அனுபவங்களை
  எங்களுடன் பகிர்ந்து கொண்டதில்
  மகிழ்க்சி. வாழ்த்துக்கள் .தொடர்ந்து
  எழுதுங்கள்..
  நன்றி..

 15. வணக்கம் ரவிசங்கர்.
  ஜேர்மனியின் அழகிய இடங்களில் Bayernஇல் உள்ள Muenchenம் ஒன்று. சில தடவைகள் வந்து ரசித்திருக்கிறேன்.

  இந்தப் பாண் விடயத்தில் நானும் ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.

  பியர் மணம் எனக்கும் படு அலர்ஜி.
  பேரூந்தில் பியர் குடித்த யாராவது வந்து அருகில் இருந்தால் என்னால் அந்த மணத்தைத் தாங்க முடிவதில்லை. பல சமயங்களில் இடையிலே வரும் தரிப்பிடத்தில் இறங்கி வீடு வரை நடந்திருக்கிறேன்.

  Muenchen பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள்.

 16. ரவி சங்கர்,

  Grus Gott!

  ஐரோப்பாவின் சொர்க்கபுரி மியூனிக் என்றால் அது மிகையல்ல. மூன்று வருடங்கள் மியூனிக்கில் அலுவல் புரிந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த எங்கள் அலுவலகத்தின் கிளை மூடப்பட்டு ஸ்வீடன் மாற்றப்பட்டது. ஏறத்தாழ முப்பது பேர், பெரும்பாலும் தமிழர்கள் ஸ்விடனுக்கு வந்து விட்டோம், எனினும் மியூனிக்கில் வசித்த நாட்கள் மிக இனிமையானவை. கோடைக்காலங்களில் இஸார் நதிக்கரையும், அதன் கரையருகே அமைந்துள்ள வனப்பகுதியும் நல்ல இளைப்பாறல். ஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிற்கும் எளிதில் பயணம் செய்யும் வகையில் அமைந்த புவியமைப்பு. வரும் நாட்கள் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!

 17. எழில், சந்திரவதனா, அனிதாவுக்கு நன்றி. எல்லாரும் மியூனிக்கை பற்றி சிலாகித்து சொல்லக்கேட்பது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது. நேரம் கிடைக்கும்போது என் எஞ்சிய அனுபவங்களை எழுதுகிறேன்

 18. ரவி…

  உங்களது ஜெர்மன் அனுபவங்கள் 1 என்ற பகுதியை படித்துப் பார்த்தேன். மிக அருமை. உண்மையில் இது மிகைப்படுத்தாத வார்த்தைகள். உங்களுக்குள் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சிறு வயதில் இருந்து அருகில் இருந்து உங்கள் நட்புப் பெறவில்லையே என்று நான் நினைக்கிறேன்.
  உங்கள் அனுபவங்களை, உண்மையில் கைதேர்ந்த எழுத்தாளர் போல் எழுதியிருக்கிறீர்கள்.
  (நான் பொதுவாக, பத்திரிகையில் எதை எழுதப் போகிறேனோ அது சார்ந்த ஆங்கில தகவல்களை படிப்பதுதான் வழக்கம். செய்தித்தாள்களில் பிற செய்திகளை மேலோட்டமாக படிப்பேன். சில செய்திகளை மட்டும்தான் நான் உன்னிப்பாகப் படிப்பேன். )
  ஒரு கட்டுரை நன்கு வரவேண்டுமானால் இரு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று அதில் பொதிந்துள்ள அனுபவம். மற்றொன்னு அதைத் தொகுத்துப் பார்க்கும் கற்பனைத்திறம். இவ்வளவு சிறிய வயதில்… உண்மையில் இந்த உலகில் உருப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி உங்கள் மனதில் நிச்சயம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
  நான் பொதுவில் எத்தனையோ பேரை பார்க்கிறேன் பழகுகிறேன். ஆனால், உங்களிடம் மட்டுமே சற்று அதிகம் பேசுகிறேன். ஏன் என்று தெரியவில்லை… (உங்கள் வலைப்பூவைப் பார்த்த பின், தினமும் ஓர் வலைப்பூவை அறிமுகம் செய்யலாம் என்ற எண்ணம். இது உங்கள் முயற்சியிலிருந்து நான் பெற்றுக் கொண்டதுதான். தினமலரில் பலரது வலைப்பூக்கள் வருவதற்கு நீங்கள்தான் காரணம் என்று வலைப்பூவின் சொந்தக்காரர்களுக்கு தெரியாது.)
  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ரவி…

  என்றும் உங்கள் நட்பை விரும்பும்
  நாகரத்தினம்

 19. நாகரத்தினம், இந்தப்பதிவை பற்றி இன்றைய தினமலரில் குறிப்பிட்டதற்கு நன்றி. இன்று என் வலைப்பதிவின் hit counter எகிறி விட்டது :)தினமலருக்கும் எனக்கும் ஏதோ ராசி என்று நினைக்கிறேன். 8வது படிக்கும் போது சிறுவர்மலரில் நான் வரைந்த படம் ஒன்று வந்தது. அதற்குப் பிறகு சில துணுக்குத் தோரணங்கள் பிரசுரமாகியுள்ளன. கல்லூரிக்காலத்தில் விகடனுக்கு கவிதை எழுதி அனுப்பியது உண்டு..ஆனால் பிரசுரமாக வில்லை..இப்படி எழுதினால் இவர்கள் பிரசுரிப்பார்கள் என்று கணித்து எழுதினால் அது கவிதையே கிடையாது என்பதால் அதற்குப்பிறகு நான் கவிதைகள் எழுதினாலும் அதை நண்பர்களுடன் காட்டுவதுடன் சரி. இதழ்களுக்கு அனுப்புவதில்லை. பின்னர், புத்தமாக தொகுத்து வெளியிடலாம் என்று இருக்கிறேன்..சரி..அது போகட்டும்..ஜெர்மன் அனுபவங்கள் இரண்டாம் பாகம் எழுதும் அளவுக்கு இப்பொழுது விடயம் இருக்கிறது..நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்..

  வலைப்பதிவுகளில் பலர் தரமாக எழுதி வருகிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்தும் நல்ல பணியை நீங்கள் மேற்கொள்வதில் மகிழ்ச்சி. இது மேலும் பலரை தமிழ் இணையத்தை அறிந்து கொள்ளத்தூண்டும். பலரும் எழுதிப் பழகுவார்கள்..ஆனால், தமிழ் மணம் திரட்டியில் ஏகப்பட்ட பதிவுகள் வருவதால் நல்ல பதிவுகளை கொஞ்சம் மெனக்கெட்டு தான் கண்டுபிடிக்க வேண்டும். எனக்குத்தெரிந்த நல்ல பதிவுகளை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்..

 20. Hello ravi.. Gooten Morgan..
  i am in berlin… i read yr comments and its interesting…
  If u happen to come to berlin.. pls contact me…

 21. salai, ஏங்க ஒரு வாரம் முன்னாடி சொல்லி இருக்கக் கூடாதா? போன வாரம் தான் பெர்லின் வந்தேன். நீங்க மியூனிக் வந்தா எனக்கு சொல்லுங்க

Comments are closed.