ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?

தமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படை நிறைகளை அறியும் முன் தமிங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா?

தமிங்கில விசைப்பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் சொல்ல முடியுமா? தட்டச்சுப் பொறிகள் முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அவற்றில் வேகமாகத் தட்டச்சினால் அவை பழுதடைந்து விடுகின்றன என்ற காரணத்துக்காக, எழுத்துக்களைக் கலைத்துப் போட்டுத் தட்டச்சும் வேகத்தைக் குறைக்க உருவாக்கபட்டத்தே இப்போது உள்ள ஆங்கில விசைப்பலகை. ஆங்கில எழுத்து வரிசைக்கே அடிப்படை இல்லாத போது அதை அடிப்படையாகக் கொண்டு தமிங்கில விசைப்பலகை உருவாக்குவது எப்படி பொருந்தும்? தவிர w = ந போன்ற முட்டாள்த்தனமான விசை அமைப்புகள் மனதில் பதிவதால் weenga wallaa irukkengkaLaa என்று தமிங்கில மடல் எழுதுவோரைப் பார்த்திருக்கிறேன். இருக்கிற தமிழ் எழுத்துகளுக்கே விசைப்பலகையில் இடம் இல்லை என்று இருக்கிற போது p, b = ப்; t, d = ட்; s, c = ச்; k, g = க என்று ஒரே எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளைத் தந்து இடத்தை வீணாக்குகிறோம். q, x, f விசைகளுக்கு வேலையே இல்லை! அதிகம் பயன்படாத ஜ போன்ற எழுத்துக்களுக்குத் தனி விசையாக j. அந்த இடத்தை ள, ழ, ண, ற போன்ற எழுத்துக்களுக்குத் தந்திருந்தால் ஒவ்வொரு முறை அவற்றை எழுதும்போதும் shift அடிக்கத் தேவை இல்லையே?

இந்தத் திறம் குறைந்த qwerty விசைப்பலகைக்கு மாற்றாகத் திறம் கூடிய dvorak விசைப்பலகை 1936லேயே பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், வணிகக் காரணங்களுக்காக அதைப் பரவலாக்காமல் செய்து விட்டார்கள்.

தமிழுக்கும் அப்படி நேராமல் இருக்கவும் உலகெங்கும் சீர்தரமாக ஒரு விசைப்பலகை இருக்கவும் தமிழ்99 முறை அறிஞர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக அரசால் 1999ல் பரிந்துரைக்கப்பட்டது. இதில் என்ன இலக்கணச் சிறப்பு என்றால்,

tamil99.JPG

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

உயிர் குறில்கள் – இட நடு வரிசை
உயிர் நெடில்கள் – இட மேல் வரிசை.
அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.

அதிகம் பயன்படும் க ச த ப – வல நடு வரிசை.

அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.

ஞ ச வரிசையாக அடித்தால் அதுவே ஞவுக்குப் புள்ளி வைத்து ஞ்ச என்று எழுதி விடும். ஏனென்றால் தமிழ் இலக்கணப் படி ஞவும் சவும் அடுத்தடுத்து வரும்போது கண்டிப்பாக ஞ்ச என்று தான் வரும். எனவே, பயனர் தனியாக ஞவுக்குப் புள்ளி வைக்கத் தேவை இல்லை. ன்ற, ங்க, ஞ்ச, ந்த, ம்ப, ண்ட எல்லாமே இப்படித் தானாகப் புள்ளி வரும். ட ட என்று இரு முறை அடித்தால் ட்ட ஆகி விடும். ன்ன, க்க, ப்ப, த்த, ண்ண, ட்ட எல்லாமே தானாகவே புள்ளி வைத்துக் கொள்ளும். தமிழ்ச் சொற்களைக் கூர்ந்து கவனித்தால் இது போன்ற விசை வரிசைகள் எவ்வளவு அடிக்கடி வருகின்றன என்று உங்களுக்குத் தெரியும். இப்படி புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் தட்டச்சுவதில் 40% மிச்சப்படும். ஓரிரு சொற்களில் பின்னூட்டம் போடும் போது இதன் அருமை தெரியாது. ஆனால், பக்கம் பக்கமாகப் புத்தகம் எழுதுகிறவர்கள், மணிக்கணக்கில் விக்கி தளங்களில் கட்டுரை எழுதுகிறவர்களுக்கு இது தட்டச்சு வேகத்தை அதிகரிக்கும் வரப்பிரசாதம்.

தமிங்கில விசைப் பலகையில் கவனக்குறைவால் ர வர வேண்டிய இடத்தில் ற வும் ன-ண-ந, ல,ழ,ள குழப்பங்களும் தட்டச்சுப் பிழைகளும் மலிய வாய்ப்பு உண்டு. தமிழ்99ல் எல்லாமே தனித்தனி விசைகள் என்பதால் தவறுதலாக ஒன்றுக்குப் பதில் இன்னொன்றை அழுத்தி விட வாய்ப்பில்லை.

தமிங்கிலத்தில் த என்று எழுது tha என்று மூன்று விசைகளை அழுத்த வேண்டும். தமிழ்99 த என்று ஒரு விசை அழுத்தினால் போதும். த்+உ =து போன்ற இலக்கண அடிப்படையில் தான் எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் தமிழ்99ல் வருகின்றன.

தமிழில் அ, க, ச, ப, வ என்று அகரங்கள் அடிக்கடிப் பயன்படுவது வாடிக்கை. தமிழ்99ல் இவற்றை ஒரே விசையில் அழுத்தி விடலாம். அடுத்து அதிகம் பயன்படும் நெடில் ஒலிகளையும் ஒரே விசையில் அழுத்தலாம். தமிங்கிலத்தில் தோ என்று எழுத thoo அல்லது th shift o என்று நான்கு விசைகள் தேவை. தமிழ்99ல் த ஓ இரண்டு விசைகளில் எழுதி விட முடியும். எல்லா நெடில்களுக்கும் இப்படியே.

தமிங்கிலம், தமிழ்99 இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களின் key strokes per minute rate ஒன்றாக இருந்தாலும் கூட letters written per minute rate நிச்சயம் தமிழ்99ல் 40% கூடுதலாக இருக்கும்.

நம் விரலகள் இலகுவாகச் சென்று வரக்கூடிய விசைகளில் நாம் அடிக்கடி பயன்படும் எழுத்துக்கள் இருப்பதாலும், அவை இடம், வலம், மேல், கீழ் என்று முறையாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் கை வலிக்காது.

தவிர, தமிங்கிலப் பலகையால் ஆங்கிலமும் குழம்பலாம். ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்கும் நம் மனதில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறோம். ஆங்கிலத்தில் e (ஈ, இ) அதுவே தமிழில் எ. அங்கே i (ஐ) நமக்கு இ, ஈ என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழ்99ல் இந்த ஆங்கில எழுத்துக்கு இந்தத் தமிழ் எழுத்து என்று கொள்ளாமல் அனைத்து விசைகளையும் தமிழ் எழுத்துக்களாத் தான் மனதில் பதிகிறோம். அதனால் எந்த குழப்பமும் வராது.

முக்கியமாகத் தமிங்கிலத்துக்குப் பழகியவர்கள் மனதில் தமிழ் ஒலிகள் ஆங்கில எழுத்துக்களாகவே பதிந்திருக்கும். நன்றி என்ற சொல் w a n shift r i என்று மனதில் பதிவது நல்லது ந ன் றி என்று மனதில் பதிவது நல்லதா? தமிழ்99ஐப் பரிந்துரைப்பது வேகம், திறம், போன்ற காரணங்களைத் தாண்டி இந்தத் தமிழ்ச் சிந்தனையை முன்மொழியும் கொள்கையும் முக்கிய காரணம். இதே காரணத்துக்காகவே பாமினி போன்ற பிற விசைப்பலகை அமைப்புகளை நான் எதிர்ப்பதுமில்லை.

சிந்திக்கத் தெரியாத தட்டச்சுப் பலகைக்குத் தான் ஒவ்வொன்றையும் சொல்லித் தர வேண்டும். கணினி என்றாலே வேலைகளை இலகுவாகச் செய்யத் தானே? நம் மொழியின் எழுத்து இலக்கணத்தை அதற்குச் சொல்லித் தந்து விட்டால், அது நம் வேலையை மிச்சப்படுத்தி விடும். எளிதான உவமை சொல்வது என்றால், செல்பேசியில் dictionary modeலும் no dictionary modeலும் சொற்களை எழுதுவதற்கு உள்ள வேறுபாடு போல் தான் இது.

தமிழ்99ல் விசையின் இடங்களை நினைவில் கொள்வது எளிது. தமிழ் மட்டும் தெரிந்து கணினிக்கு வரும் ஒருவர் முதலில் ஆங்கில விசைப்பலகை எழுத்துக்கள் எங்கிருக்கு என்று பார்த்து , அப்புறம் அதில் எந்த எழுத்து தமிழுக்கு என்று புரிந்து மனதுக்குள்ளேயே map செய்து அடிப்பதற்குள், நேரடியாகத் தமிழைத் தட்டச்சும் முறையைப் புரிந்து கொள்ளவும் நினைவில் கொள்ளவும் பழகவும் அவருக்கு எளிது. ஆங்கில விசைப்பலகை அறிந்த ஒருவருக்கு தமிழ் விசைப்பலகைக்கு மாற எவ்வளவு தயக்கம் இருக்குமோ அவ்வளவு தயக்கம், சுணக்கமும் தமிழ் மட்டுமே அறிந்தவருக்கு ஆங்கிலப் பலகையைக் கற்று பிறகு தமிழில் தட்டச்ச வேண்டி இருப்பதால் வரலாம். தமிழ் மட்டும் அறிந்த பெரும்பாலான தமிழர்களை கணினியிடம் இருந்து அன்னியப்படுத்தவே இது வழிவகுக்கும். ஆங்கிலம் அறிந்த தலைமுறையை மட்டும் கணக்கில் கொள்ளலாகாது. கணித்தமிழைப் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல தமிழ் மட்டும் போதுமானதாக இருக்கும்போது, இன்னொரு விசைப்பலகை எதற்கு? தமிழில் தட்டச்ச வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் பழகு என்று சொல்வது எப்படி நியாயம்? நம்முடைய மொழியின் தேவை, சிறப்புக்கு ஏற்ப ஒரு இலகுவான விசைப்பலகையைக் கூட வடிவமைத்துக் கொள்ள இயலாத ஆங்கிலச் சார்பை, அடிமை மனப்பான்மையைத் தான் தமிங்கில விசைப்பலகை வெளிப்படுத்துகிறது. புதிதாக நமக்காக ஒன்றாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள,முயல விரும்பாத சோம்பலை என்னவென்று சொல்வது?

ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தும் ஜெர்மன், பிரெஞ்சு விசைப்பலகைகளில் கூட எழுத்துகள் இடம் மாறி இருக்கும். ஜெர்மனில் zம் yம் இடம் மாறி இருக்கும். ஏனெனில் அதில் zன் பயன்பாடு அதிகம். பிரெஞ்சு மொழியில் இன்னும் ஏகப்பட்ட எழுத்துக்களை இடம் மாற்றிப் போட்டு வைத்திருப்பார்கள். அருகருகே உள்ள மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரே எழுத்துக்களைப் பயன்படுத்தும் மொழிகள் கூட தங்கள் மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப விசைப்பலகையை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். தொடர்பே இல்லாத தமிழ் ஏன் ஆங்கிலத்துக்கே திறமற்ற ஒரு விசைப்பலகை அமைப்பைப் பின்பிற்றித் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்?

விசைப்பலகை தொடங்கி பல அறிவியல் கண்டுபிடிப்புகள், நடைமுறைகளிலும் உலக அல்லது இன்னொரு குழுவின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம் தேவைகள், சிறப்புகளுக்கு ஏற்ப localized ஆக சிந்திப்பது தான் சிறந்தது. எல்லார் காலுக்கும் ஒரே செருப்பு பொருந்துமா? இருக்கிற செருப்பை வைத்து ஒப்பேற்றுவோம் என்று நினைப்பதுண்டா?

தமிழ்99க்கு மாறவே முடியாத அளவுக்கு பழக்கம்,மனத்தடை இருக்குமானால், குறைந்தபட்சம் புதிதாகத் தமிழ்த் தட்டச்சை அறிமுகப்படுத்தி வைப்பவர்களுக்காவது தமிழ்99 சொல்லிக் கொடுக்கலாமே? இப்பொழுது விழித்துக் கொண்டால் தான் ஆயிற்று. இல்லாவிட்டால், காலம் கடந்து விடும்.

தமிழ்99 முறையில் தட்டச்சு செய்வதற்கான எ-கலப்பை மென்பொருளை இங்கு பதிவிறக்கலாம்.


தமிழ்99 பயிற்சி நிகழ்படம்

பி.கு – இந்த இடுகை முதலில் ஒரு நீண்ட மறுமொழியாக இங்கு இடப்பட்டது. தொடர்புடைய முந்தைய உரையாடல்களை அதே பக்கத்தில் பார்க்கலாம்.

20 thoughts on “ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?”

 1. முதலில் ஒரு நீண்ட மறுமொழியாக => இப்ப மட்டும் நீளமா இல்லைன்னு சொல்ல வரீங்களா? 😉

 2. புதிய முறைக்கு மாற காலம் பல ஆகும்…தமிங்கில முறையே சிறமமாக இருக்கு இதுல தமிழ்99 வேரையா………….பார்ப்போம்.

  சித்திரமோ கைபழக்கம்
  தமிழ்99ஓ……………………………..

 3. நான் தற்போது அவ்வை தமிழ் தட்டச்சு முறையை இணையத்தில் வைத்து டைப் செய்து பின் காப்பி பேஸ்ட் செய்து கொள்கிறேன். தமிழ்தட்டச்சை டவுன்லோட் செய்யும் வசதி இல்லையா?

 4. தமிழ் தட்டச்சு முறையை பயன்படுத்த என்ன செய்யவேண்டும் ?

  நான் தற்போது அவ்வை தமிழ் தட்டச்சு முறையை இணையத்தில் வைத்து டைப் செய்து பின் காப்பி பேஸ்ட் செய்து கொள்கிறேன். தமிழ்தட்டச்சை டவுன்லோட் செய்யும் வசதி இல்லையா?

 5. http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?op=&cid=3 என்ற முகவரியில் ekalappai 2.0b (tamilnet99) என்று ஒரு இணைப்பு இருக்கும். அதைச் சொடுக்கினால் zip கோப்பைப் பதிவிறக்கலாம். அதை unzip செய்து கிடைக்கும் .exe கோப்பை நிறுவுங்கள். அதைப் பயன்படுத்தி தமிழ்99 முறையில் தட்டச்சு செய்யலாம்.

 6. நன்றாக சொன்னீர்கள்.

  ஆனால், இந்த தட்டச்சின் குறைகள் என்ன என்று ஒருவரும் கருத்துப் போடுகிறார்கள் இல்லை.

  இதுவே சிறந்தது எனில், ஏன் மற்றய பாமினி போன்ற மற்றயவை தோன்றின/ ஆதரிக்கின்றன?

  முக்கியமாக, இதைப் பழக எங்காவது மென்பொருள் இருக்கிறதா? நானாக பழக முயற்சிக்கலாம் என்று பார்த்தேன் குழப்பமாக இருக்கிறது.

 7. capitalz – இதன் குறை என்று ஒன்றும் இல்லை. வேறு விசைப்பலகை முறைக்கு நீங்கள் பழகி இருந்தால் அதில் இருந்து இதற்கு மாற, பழக ஒரு வாரமாவது ஆகும். முயற்சி, விருப்பம் தேவை. சோம்பல் இருந்தால் பழக இயலாது. ஆனால், எந்த புதிய நல்ல விசயத்துக்கு மாறுவதற்கும் இந்த மனத்தடைகள் பொருந்தும்.

  இந்த முறை 1999ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னே வேறு முறையைப் பயின்றவர்கள் பழக்கத்தின் காரணமாக அவற்றிலேயே தொடர்கிறார்கள். 1999க்குப் பிறகும் இது குறித்த விழிப்புணர்வு பரப்பப்படாததால் தொடர்ந்து தமிங்கலம் மற்றும் வேறு முறைகளுக்கு அறிமுகமாகிப் பயின்று வருகிறார்கள்.

  இதற்கான தட்டச்சுப் பயிற்சிக் கருவிகளை உருவாக்க முயன்று வருகிறோம். அது வரை எ-கலப்பையின் தமிழ்99 பொதி கொண்டே பழக வேண்டி இருக்கும்.

 8. Is there any typing tutor for Tamil99 keyboards as you would find for QWERTY keyboards?

 9. இது வரை இல்லை சாரங்கன். இது உடனடித் தேவை. கட்டற்ற தமிழ்க் கணிமை குழுவில் கேட்டிருக்கிறேன். இதற்கு ஆங்கிலத்தில் firefox நீட்சிகள் உண்டு. தமிழுக்குச் சுட்டுப் போட முடிந்தால் பரவாயில்லை 🙂

  1. நான் டைப் அடிக்க இப்போது தான் கற்றுக்கொள்கிறேன்.வயது 67.எளிதாக உள்ளது.பணி சிறக்க வாழ்த்துக்கள்!

 10. வணக்கம்.

  நான் Word Press இல் Blog எழுதிய போது Keyman விசைப்பலைகை மூலம் unicode font இல் TSCu_ Paranar ஐ உபயோகித்து தமிழில் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது எனக்கென ஒரு Website வாங்கி
  அதில் WordPress engine ஐப் பொருத்தி முயற்சித்த போது தமிழ் எழுத்துக்கள் சரியாக வரவில்லை.

  நீங்கள் Website வைத்திருப்பதால் இதற்கு எதுவும் தீர்வு சொல்ல இயலுமா என்று எண்ணி இந்தக் கடிதம் எழுதுகிறேன். தயவு கூர்ந்து
  விரைவில் பதிலளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

  அன்புடன்,
  மைக்கேல்.

 11. michael – http://blog.ravidreams.net/wordpress-jilebi/ கட்டுரை உதவுகிறதா என்று பாருங்கள். பிரச்சினை நீடித்தால் உங்கள் வலைத்தள முகவரியைத் தெரிவித்தால் வேறு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்

 12. மகிழ்ச்சி மோகன் குமார். Fedora Linuxல் எப்படி தமிழ்99 பயன்படுத்துவது என்று ஒரு சிறு கையேடு அளித்தீர்கள் என்றால் அனைவருக்கும் பயன்படும்.

 13. தமிழில் எழுதுவது எப்படி?

  1. முதலில் இ-கலப்பையை கிழ் கண்ட இடத்தில் பெறவும்.
  http://thamizha.com/project/ekalappai
  2. அதை உங்களின் பிசி-யில் install செய்யவும்.
  3. உங்களின் டாஸ்க் மெனுவில் உள்ள த என்ற குறியிட்டை மவுசின் இடது புறத்தில் அலுத்தவும்.
  4. அதில் தமிழ்99 என்பதை காண்பிர்கள்
  5. f2 கீ முலம் அங்கிலம் அல்லது தமிழை தேர்வு செய்து உபயோகம் செய்யவும்.
  6. ஒரு பயனுள்ள இடைதளம் கிழ் கொடுக்கப்பட்டுள்ளது.
  http://tamil99.org/tamil99-software/

 14. அன்பார்ந்த நண்பரே!

  தமிழ்99 பற்றிய இந்தக் இணையக் கல்வெட்டுக்காக நன்றி!

  பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, தமிழ் மட்டுமே தெரிந்தவனாகக் கணினி பயன்படுத்த வந்தவன் நான். எடுத்தவுடனேயே தமிழ்99-இல்தான் நான் பழகினேன். இன்று வரை தட்டெழுத அதை மட்டும்தான் பயன்படுத்தியும் வருகிறேன். “கணித்தமிழைப் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல தமிழ் மட்டும் போதுமானதாக இருக்கும்போது, இன்னொரு விசைப்பலகை எதற்கு? தமிழில் தட்டச்ச வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் பழகு என்று சொல்வது எப்படி நியாயம்?” என்ற உங்கள் கேள்விகளும் இன்ன பிற கருத்துக்களும் நூற்றுக்கு நூறு நியாயமானவை. “தமிழ் மட்டும் தெரிந்து கணினிக்கு வரும் ஒருவர் முதலில் ஆங்கில விசைப்பலகை எழுத்துக்கள் எங்கிருக்கு என்று பார்த்து , அப்புறம் அதில் எந்த எழுத்து தமிழுக்கு என்று புரிந்து மனதுக்குள்ளேயே map செய்து அடிப்பதற்குள், நேரடியாகத் தமிழைத் தட்டச்சும் முறையைப் புரிந்து கொள்ளவும் நினைவில் கொள்ளவும் பழகவும் அவருக்கு எளிது” என்ற உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. அதற்கு உயிருள்ள சான்று நானே.

  நான் கணினி பயன்படுத்த வந்த புதிதில் தமிழில் இத்தனை விசைப்பலகைகள் இருப்பதைக் கண்டு எதைப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்தபொழுது தமிழுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்பதால்தான் தமிழ்99-ஐத் தேர்ந்தெடுத்தேனே தவிர, அதில் இத்தனை வசதிகள் இருப்பதும், அதைப் பயன்படுத்த இத்தனை நியாயங்கள் இருப்பதும் எனக்கு இன்று வரை தெரியா. உங்கள் பதிவு அற்புதம்! அதுவும் ஆங்கில விசைப்பலகை பற்றி நீங்கள் தொடக்கத்தில் கூறியுள்ள அந்தக் கருத்து இதுவரை அறியாதது!

  முடிந்த வரை இதைப் பரப்புவேன். மிக்க நன்றி!

Comments are closed.