எழுத்துப் பிழை

விக்கியில் உழன்று உழன்று உலகமே ஒரு விக்கி உருண்டையாகி விட்டது. எழுத்துப் பிழைகள் எங்கு கண்ணில் பட்டாலும் திருத்தக் கை துடிக்கிறது 🙂

f -ஆய்த எழுத்து

ஷ ஸ வேறுபாடு

எழுத்துச் சீர்மையும் எழுத்துப் பிறழ்ச்சியும்

இந்த எழுத்துப் பிழைகள் சொல்லும் செய்தி என்ன? 🙂

14 thoughts on “எழுத்துப் பிழை”

 1. எங்கோ ஒரு சிறுகதை படித்தது நினைவுக்கு வருகிறது. அச்சகத்தில் மெய்ப்பார்ப்பவராகப் பணிபுரியும் ஒருவருக்கு பொட்டுக்கடலையை மடித்துத் தரும் தாளிலும் பிழைகள் தென்பட்டு அல்லல் படுவதை மையமாகக் கொண்ட கதை. விக்கியர்களுக்கும் இது பொருந்தும். ஆங்கில விக்கியில் ஒருவர் யாரும் பார்க்காத இடங்களில் சிறு கத்தி கொண்டு பெயர்ப்பலகைகளில் உள்ள எழுத்துப்பிழைகளைத் திருத்தியதாகச் சொன்னார்!

  நீங்கள் காட்டியுள்ள எழுத்துப்பிழைகள் சொல்லும் செய்தி ஒன்றே: வேற்றுமொழிச்சொல்லை எழுதிக்காட்டுகிறேன் பேர்வழி என்று துல்லியமும் இல்லாமல் எழுத்துமுறை ஒழுங்கும் இல்லாமல் உள்ள நிலை. தமிழில் பெயர்களா இல்லை? மற்ற மொழிச்சொற்களை மொழிபெயர்க்கவோ தமிழ் எழுத்துமுறைப்படி ஒலிபெயர்க்கவோ முடியாதா என்ன?

  1. //அச்சகத்தில் மெய்ப்பார்ப்பவராகப் பணிபுரியும் ஒருவருக்கு பொட்டுக்கடலையை மடித்துத் தரும் தாளிலும் பிழைகள் தென்பட்டு அல்லல் படுவதை மையமாகக் கொண்ட கதை.//

   🙂

   //ஆங்கில விக்கியில் ஒருவர் யாரும் பார்க்காத இடங்களில் சிறு கத்தி கொண்டு பெயர்ப்பலகைகளில் உள்ள எழுத்துப்பிழைகளைத் திருத்தியதாகச் சொன்னார்! //

   !!

   முக்கியமான செய்தியைச் சுட்டிக் காட்டி உள்ளீர்கள். இந்த எழுத்துப் பிழைகளில் இன்னும் பல செய்திகள் உள்ளன:

   * முதலில் உள்ள Lifestyle கடை சென்னையின் பெரிய வணிக வளாகமான City Centerல் அமைந்து உள்ளது. இவ்வளவு பெரிய பெயர் விளக்கை வடிவமைத்தவர்கள், பொருத்தியவர்கள், கடையின் பணியாளர்கள் எவருக்கும் தமிழ் எழுத்து முறை தெரியவில்லையா?

   இதே போல் ஆங்கிலத்தில் ஒரு பிழைஇருந்திருந்தால் இவ்வளவு பெரிய கடையில் விட்டு வைத்திருப்பார்களா? அது அந்நிறுவனத்தின் தொழில்நேர்த்திக்கு ஊறு விளைவிப்பதாக கருதி இருக்க மாட்டார்களா? தமிழ் என்றால் அசட்டையா? அரசு உத்தரவு போன்ற விசயங்களுக்காக கடனுக்குப் பொருத்திய பலகையா? ஒரு முறை கடையில் உள்ள பொருள் ஒன்றின் அட்டையில் எழுத்துப் பிழை இருந்ததால் அந்தப் பொருளையே வாங்காமல் விட்டேன். தொழில்நேர்த்தி உள்ள ஒரு நிறுவனம் இவ்வாறு பிழைகள் விடக்கூடாது என்பது என் எதிர்பார்ப்பு.

   லைப் ஸ்டைல் என்று எழுதாவிட்டாலும் பரவாயில்லை. லைஃப் ஸ்டைல் என்றாவது வழமை போல் எழுதி இருக்கலாம். f ஒலிக்குத் துல்லியமாக வருவது போல் ஃப் போட விரும்புகிறார்கள். ஆனால், ஆய்தத்தையும் பகரத்தையும் இடம் மாற்றிப் போடும் பிழையைப் பல இடங்களில் கண்டுள்ளேன். தமிழ் எழுத்துகளில் ண,ந,ன, ர, ற, ல, ழ, ள பிழைகள் மலிந்திருக்குமே தவிர, ஒரு எழுத்தையே இடம் மாற்றிப் போடும் குழப்பம் வருவதில்லை.

   * பழைய பேப்பர் கடை என்று எழுதினாலே பெருவாரி மக்களுக்கு இயல்பாக புரிந்திருக்கும். கீழேயே பழைய என்ற சொல்லையும் ஆண்டிருக்கிறார். பழைய என்பதற்கும் waste என்பதற்கும் பொருள் வேறுபாடு உண்டு. Lifestyle போன்ற கடைகளில் கடனுக்காக தமிழில் எழுதினால், இது போன்ற கடைகளில் ஆங்கிலத்தில் எழுதினால் தான் ஒரு பெருமை போன்று எழுதுகிறார்கள். பிற மொழி ஒலிகளின் துல்லியம் கருதித் தான் கிரந்த எழுத்துகள் வேண்டும் என்கிறார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் போன்ற மக்களுக்கு ஸ், ஷ் வேறுபாடு துல்லியமாகத் தெரியாததன் காரணமாகவே ஒன்றுக்குப் பதில் இன்னொன்றை உச்சரிக்கிறார்கள். எழுதுகிறார்கள். எனவே, துல்லியம் என்பதன் தேவையே அடிபட்டுப் போகிறது.

   * தமிழகத்தில் அதிகம் பிழையாக எழுதப்படும் ஆங்கிலச் சொல் juice தான் என்று வலைப்பதிவர் சாத்தான் ஒரு முறை குறிப்பிட்டார். பெரும்பாலான கடைகளில் ஜீஸ் (jeese) கடை என்று தான் எழுதி இருப்பார்கள். இது ஏன் என்று எனக்குப் பிடிபடவில்லை. தமிழ் எழுத்துச் சிதைவு பற்றிய உரையாடலில் முனைவர் மணிவண்ணன் தமிழ் எழுத்துப் பிறழ்ச்சி குறைவு என்பதைச் சுட்டிக் காட்டிய போது தான் இது உரைத்தது. படத்தில் ஹீரோ ஹோண்டா என்று எழுதுவதற்குப் பதில் பிறழ்ந்து ஹூரோ ஹோண்டா என்று எழுதி இருக்கிறார்கள். இதை இங்கே எழுதும் போது கூட சரியாகத் தான் எழுதுகிறேனா என்று திரும்பத் திரும்ப சரி பார்த்தே எழுதுகிறேன் 🙂

   தமிழுக்குப் பதில் ஆங்கிலத்தில் எழுதுவது மூலப் பிரச்சினை என்றாலும், இங்கு இந்த எழுத்துகளே ஏதோ ஒரு வகையில் பிரச்சினையோ என்று தோன்றுகிறது. எழுத்துகளிலேயே பிரச்சினை உள்ளதா அல்லது அவற்றோடு போதிய அறிமுகம், புழக்கமின்மை காரணமாக இப்பிழைகள் வருகின்றனவா என ஆய வேண்டும்.

   1. சரியாச் சொன்னீங்க, இரவி. நீங்கள் குறிப்பிட்ட எழுத்துக்களிலேயே சிக்கல் உள்ளது என்று நானும் நினைக்கிறேன்.

 2. Well done.

  Could you tell me that how to type in tamil as you have typed on the face book.

  Live for tamil
  Die for tamil

  Tamil is OUR life.

  With love and thanks
  Jonathan Dhaya

 3. எழுத்துப் பிழை இல்லாமல் என்னால் இன்று வரை எழுத முடிவதில்லை. ஆங்கிலத்திலும் அப்படியே. ஆங்கில வழி கல்வியில் படிக்க வைக்கிறேன் என்று இப்படி இரண்டு மொழிகளிலும் சொதப்ப வைத்து விட்டார்கள்.

  எவ்வளவு பிழைகள் இருந்தாலும் நம்மவர்கள் இன்று ஆங்கிலத்தில் எழுதுவதை பெருமையாக நினைக்கிறார்கள். கேட்டால் கல்லூரியில் இரண்டாவது மொழி ஃபிரெஞ்ச் என்பார்கள். அதிலும் உருப்படியாக எழுத தெரியாது.

 4. எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும் நீங்கள் தமிழ் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டியிருந்தால் நன்று. முதலில் என்னைப் பத்தி என்பதை என்னைப் பற்றி என மாற்றுங்கள். தமிழ் ஆர்வலரான நீ்ங்களே தவறு செய்யலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

  1. வணக்கம் ஐயா. உங்கள் வரவு கண்டு மகிழ்ந்தேன். எல்லா மொழிகளிலும் எழுத்துப் பிழைகள் என்பது வழமை தான். ஆனால், பிற மொழிச் சொற்கள் / எழுத்துகள் கலப்பில் உள்ள எழுத்துப் பிழைகளின் பின் உள்ள சமூக உளவியலை அலசுவதே இந்த இடுகையின் நோக்கம்.

   காற்று – காத்து, நேற்று – நேத்து என்பது போல பற்றி – பத்தி என்று பேச்சுத் தமிழில் எழுதினேன். தற்கால இலக்கியத்திலும் பேச்சுத் தமிழ், வட்டாரத் தமிழுக்கு ஒரு இடம் உண்டு தானே? தவறு என்றால் திருத்திக் கொள்கிறேன். நன்றி.

 5. நண்பரே,
  இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கலாம் என்று தோன்றியது. “இதயம்” என்பதற்கு தூய தமிற்சொல் உண்டோ?. இப்பொருள் தரும் சொல் இலக்கியத் தமிழில் உண்டா? உ-ம் ” இதயத் துடிப்பு” ,”இதயத்தில் இடம்”.

  நன்றிகளுடன்,
  வடமலை கணேஷ்

  1. அடடா, தமிழ் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லீங்க. விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கி, அதன் மூலமாக கற்றுக் கொண்டது நிறைய. ஐதராபதில் இருக்கிறேன்.

   1. sry to type in English…
    i want to improve my tamil writing. i fear i leave many ண,ந,ன, ர, ற, ல, ழ, ள mistakes!
    apart from reading/writing practice, is there any specific way to rectify this? it will be a great help sir.

 6. நண்பரே ! என்னைப் பததி எனத் தலைப்பில் உள்ள தொடரை உடன் மாற்ற அன்புடன் வேண்டுகின்றேன்.

  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

  1. தகுந்த இடங்களில் பேச்சுத் தமிழ் / நாட்டுப்புற வழக்கில் எழுதுவதும் ஏற்புடைய ஒரு நடை தானே?

Comments are closed.