பெண் பார்க்கப் போவது எப்படி?

திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி?

1. பெண் பார்க்கச் செல்லும் முன்னரே பெண்ணின் அப்பா / அண்ணன் போன்றோரிடம் தொலைப்பேசி மூலம் சுருக்கமாக பேசி ஒரு அறிமுகம் பெற்றுக் கொள்ளுங்கள். வரும் நேரம், வழி ஆகியவற்றை ஒப்புக்குக் கேட்கலாம். இதனால் முன் பின் அறியாமல் போய் விழிப்பதைத் தவிர்க்கலாம். பெண்ணிடமே முன்கூட்டிப் பேசி விட முடியுமானால் இன்னும் அருமை. பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து இதைக் கேட்டுப் பார்க்கலாமா என முடிவு செய்யலாம்.

2. கூட்டமாகச் செல்ல வேண்டாம். நம் பக்கத்தில் இருந்து முடிவெடுக்கக்கூடிய முக்கியமான உறவினர்கள் 4, 5 பேர் செல்லலாம். கண்டிப்பாக ஒரு பெண்ணாவது இருக்க வேண்டும். பல திருமணங்களை நடத்தி வைத்த அனுபவம் உள்ள பெரியவர் ஒருவர் இருந்தால் நன்று. நிறைய பேர் சென்றால் பெண் வீட்டாருக்கும் ஏற்பாடு செய்வது சிரமம். அந்தப் பெண்ணுக்கு இதற்கு முன்னரே நிறைய வரன்கள் வந்து சென்றிருந்தால், நாம் படை சூழப் போவது அவர்களுக்குத் தர்ம சங்கடமான நிலையைத் தரும். பெண் நிச்சயமானால், அடுத்த முறை இன்னும் நிறைய பேரை அழைத்துச் சென்று முறைப்படி பேசும் சூழல் வரும். குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களை வைத்துச் சற்று கலகலப்பாக பேச்சை வளர்க்கலாம். வாயாடிப் பிள்ளைகள் விளையாட்டுத் தனமாகப் பேசி நமது மானத்தை வாங்கலாம் என்பதால் இதில் சற்று கவனம் தேவை 🙂

3. பை நிறைய பூ, பழம், இனிப்புகள் வாங்கிச் செல்லலாம். நாம் எவ்வளவு வாங்கிச் செல்கிறோம் என்பதை வைத்து நமது தாராள குணத்தை அளக்கக்கூடும்.

4. கோயில், உணவகம் போன்ற இடங்களிலும் பெற்றோர்கள் உடன் மட்டும் சென்று பார்க்கலாம். இதில் சற்று இறுக்கம் குறைவாக இருக்கும். எனினும், எல்லா குடும்பங்களும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வீட்டுக்கே சென்று பார்ப்பதால், நாமும் அவர்களின் பழக்க வழக்கங்கள், உறவு முறைகளை அறிந்து கொள்ள முடியும்.

5. பெண் பார்க்கப் போகும் அன்று நன்கு தூங்கி எழுந்து, சவரம் செய்து, நன்றாகத் துவைத்துத் தேய்த்த ஆடையை அணிந்து செல்லுங்கள். விரல் நகங்களை வெட்டிச் சென்றால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்று எனக்கு ஒரு தோழி சொன்னாள் 🙂 தேவைப்பட்டால், வாடகைக்காவது ஒரு வண்டி எடுத்து அலைச்சல், உளைச்சல் இல்லாமல் சரியான நேரத்துக்குச் செல்லுங்கள்.

6. தனியாக இல்லாவிட்டாலும், மற்றவர்கள் முன்னிலையிலாவது பெண்ணிடம் ஏதாவது பேச்சு கொடுக்க முயலுங்கள். எல்லா கேள்விகளுக்கும் பெற்றவர்கள் முந்திக் கொண்டு பதில் சொன்னாலும், விடாமல் பெண்ணிடமே பேச்சு கொடுங்கள். நிமிர்ந்து உட்கார்ந்து நேராகப் பார்த்துப் பேசுங்கள். வள வள என்று பேசாமல் சுருக்கமாக, தெளிவாக பேசுவது நன்று. ஒரு சில நிமிடங்கள் பேசினாலும், பெண்ணைப் பற்றிய ஏதாவது ஒரு புரிதல் கிட்டும். பெண் பிடித்திருந்தால், அவர்களின் தொலைப்பேசி எண் கேட்டு வாங்கி மேலும் பேசிப் புரிந்து கொண்டு முடிவைச் சொல்லலாம்.

7. பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்டால், ஆமாம் / இல்லை என்று பட்டெனச் சொல்லி விடாதீர்கள். உங்கள் பெற்றோர், பெரியவர்களிடம் பேசி விட்டுச் சொல்வதாகச் சொல்லுங்கள். வாக்கு கொடுத்து மீறுவது போல் ஆனால் சிக்கலாகும். நமக்குப் பிடிக்கும் பெண் ஊகிக்கவே முடியாத காரணங்களுக்காக நமது பெற்றோருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

8. தரகர் மூலம் ஏற்பாடு ஆன பெண் என்றால், இயன்ற அளவு தரகரை கழற்றி விட்டு விட்டுச் செல்லவும். இரண்டு பக்கமும் மாற்றி மாற்றிப் பேசி குழப்புவதில் தரகர்கள் வல்லவர்கள். எந்த அளவுக்கு நேரடியாகப் பெண் வீட்டாரிடம் பேசுகிறோமோ அந்த அளவு நல்லது.

9. பணம், வரதட்சணை முதலிய தீவிரமான கேள்விகளைத் தவிருங்கள். இது ஒரு அறிமுக சந்திப்பே.

10. ஒரு மணி நேரத்துக்கு மேல் தங்காதீர்கள். தேநீர், இனிப்புகள் மட்டும் சாப்பிடுங்கள். பெண் நிச்சயமான பிறகே விருந்து சாப்பிடுவது பல ஊர்களிலும் உள்ள முறை.

தமிழில் பெயர்ப் பலகைகள்

பொருளகம், தங்கும் விடுதி, பெரு அங்காடி, காலணியகம், இனிப்பகம், உணவகம், மின்னணுப் பொருளம், எழுது பொருளகம், கணினி பயிற்சி மையம்.. இப்படிச் சென்னையின் சில கடைகளில் புதிய தமிழ்ப் பெயர்ப் பலகைகள் தென்படுகின்றன. என்னடா, இது தமிழ்நாடு தானா இல்லை இலங்கை, சிங்கப்பூரா என்று குழப்பமாகப் போய் விட்டது 🙂

தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று முன்பே அரசு உத்தரவு இருந்தாலும், இப்போது செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அந்த உத்தரவைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறார்களாம். நல்ல மாற்றம்.

இருந்தும், பல கடைகளில் மாற்றத்தைக் காணோம். சில கடைகள் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதி உள்ளன. இப்போது மாறியுள்ள சில கடைகளும் தற்காலிகப் பெயர்ப் பலகைகளை வைத்துள்ளன. சென்னைக்கு வெளியே இந்த நடவடிக்கைகளைக் காணவில்லை. மாநாட்டுக்குப் பிறகும் மாற்றம் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

கோவையில் உலகத் திரைப்படங்கள்

கோவையில் கோணங்கள் திரைப்படக் கழகம் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் மாலை 5.45 மணிக்கு ஒரு உலகத் திரைப்படத்தைத் திரையிடுகிறது.

விவரங்களுக்கு http://konangalfilmsociety.blogspot.com/ பார்க்கவும். நேற்று Akira Kurosowaவின் Red Beard திரையிட்டார்கள். மிகச் சிறப்பான திரையிடல். தொடர்ந்து செல்ல இருக்கிறேன்.

உலகத் திரைப்படங்கள் DVD வாங்க HollyWood DVD Shopee என்ற கடை இயங்குகிறது. இதன் முகவரி:

கற்பகம் வளாகம்,
சிறீ வள்ளி திரையரங்க பேருந்து நிறுத்தம் அருகில்,
173 / 22, N. S. R. சாலை, சாயிபாபா நகர்,
கோவை – 641011
செல்பேசி: 98416 58466, தொலைப்பேசி – 0422-4382331

email: sppbhaskaran@yahoo.co.in

இந்தி மொழிக் கல்வி

இந்தி ஒரு தேசிய மொழி இல்லை. இந்தியாவுக்குத் தேசிய மொழி என்று ஏதும் இல்லை. ஒருவர் இந்தி கற்று தான் இந்தியன் என்று நிரூபிக்க வேண்டுமா? ஒழுங்காக வரிகள் கட்டி, சட்டத்தை மதித்து நடந்தால் போதாதா? தமிழ்நாட்டில் இருந்து இந்தி தெரியாத இளைஞர்கள் இந்தியப் படைகளில் சேர்ந்து நாட்டுக்குப் பங்களிப்பதில்லையா?

தமிழரல்லாத இந்தியர்களும் கூடும் எல்லா இடங்களிலும் தவறாது வரும் “தமிழ்நாட்டில் இந்தி” குறித்த சில கேள்விகளும் பதில்களும்:

தேசிய மொழியான இந்தி தெரியாமல் இருப்பது அவமானமில்லையா?

இந்தி ஒரு தேசிய மொழி இல்லை. இந்தியாவுக்குத் தேசிய மொழி என்று ஏதும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கிறது. அதாவது பெரும்பான்மை மக்களிடம் தொடர்பு கொள்ள அந்த மொழி உதவுகிறது. அது போல இந்திய நடுவன் அரசின் ஆட்சி மொழிகளாக இந்தியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. இவ்விரு மொழிகளும் நடுவண் அரசு மாநிலங்களுடன் உரையாட உதவுகின்றன.

எனினும், இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று திட்டமிட்டு நன்றாகப் பரப்பப்படும் பொய்க்கருத்தை நம்புவோருக்குக் கூறிக் கொள்வது:

ஒருவர் இந்தி கற்று தான் இந்தியன் என்று நிரூபிக்க வேண்டுமா? ஒழுங்காக வரிகள் கட்டி, சட்டத்தை மதித்து நடந்தால் போதாதா? தமிழ்நாட்டில் இருந்து இந்தி தெரியாத இளைஞர்கள் இந்தியப் படைகளில் சேர்ந்து நாட்டுக்குப் பங்களிப்பதில்லையா?

புலி இந்தியாவின் தேசிய விலங்கு என்பதற்காக அதை எல்லாரும் வீட்டில் வைத்து வளர்க்கத் தேவை இல்லை. வளர்க்கவும் முடியாது. காட்டில் காணும்போது அடித்துக் கொல்லாமல் இருந்தால் சரி.

இந்தி இந்தியாவின் பெரும்பான்மை மொழி இல்லை. 40% மக்களாலேயே பேசப்படுகிறது. 10 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கிறது.

நாடு என்னும் அமைப்பு நமது பாதுகாப்புக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு தற்காலிக காலத்துக்குக் காலம் மாறும் நில வரையறை. அதுவும், இந்தியா என்னும் நாடு செயற்கையாக உருவாக்கப்பட்டே 60 ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆங்கிலேயர்கள் ஒட்டு மொத்தமாய் சில பகுதிகளைப் பிடித்து போகும் போது இந்தியா என்று பெயரிட்டு விட்டு விட்டுப் போனார்களே தவிர, இந்தியா என்பது வரலாற்றில் எப்போதும் ஒரு ஒற்றை நாடாக இருந்ததில்லை. அதற்கு என்று ஒற்றைக் குணங்கள் ஏதும் இல்லை.

ஒரு வேளை சீனாவையும் சேர்த்து இந்தியாவோடு ஒரு நாடாக சேர்த்துத் தந்து விட்டு ஆங்கிலேயர்கள் போயிருந்தால், கணிசமான மக்களால் சீனம் பேசப்படுகிறது என்ற காரணத்துக்காக அதைத் தேசிய மொழியாக அறிவித்து எல்லாரையும் அதைக் கற்கச் சொல்ல வற்புறுத்த முடியுமா? அதே அளவு அபத்தம் தான் இந்தியாவில் இருப்பதற்காக இந்தி கற்கச் சொல்லி வற்புறுத்துவதும்.

இந்தியா முழுதும் ஒரே மொழியைப் புரிந்து கொள்ள இயன்றால் நாட்டு முன்னேற்றத்துக்கு உதவுமே?

நாடு முழுவதும் ஒரே மொழி பேசியும் முன்னேறாமல் இருக்கும் எத்தனையோ நாடுகளைக் காட்ட முடியும். நாட்டு முன்னேற்றத்துக்கு வேறு எவ்வளவோ முக்கிய காரணிகள் உள்ளன. ஒரே மொழி பேசுவது ஒரு பொருட்டு இல்லை.

நாட்டு மக்களுக்கு எல்லாம் ஒரு மொழி புரிந்தால் ஒருவருக்கு ஒருவர் பேசிப் பழக உதவுமே? என்ன இருந்தாலும் இந்தியர்களுக்கு என்று ஒரு மொழி அடையாளம் வேண்டாமா?

இதற்கு அண்ணாத்துரை சொன்ன பதில் தான் பொருந்தும்:

ஒரு வீட்டுக்குள் சின்ன நாய் புகுவதற்கு என்று ஒரு சின்னக் கதவும் பெரிய நாய் புகுவதற்கென்று ஒரு பெரிய கதவும் வைப்பதில்லை. பெரிய கதவு வழியாகவே சின்ன நாயும் வரலாம். உலகம் முழுவதற்கும் பேசுவதற்கு என எல்லா இந்தியர்களும் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முனைகையில் இந்தியாவுக்குள் பேசுவதற்கு என்று மட்டும் ஒரு மொழி தேவை இல்லை.

இந்தியாவே வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு நாடு தான். இதில் அடையாளத்துக்காக என்று ஒரு மொழி தேவை இல்லை. மொழிகளைத் தாண்டி சமயம், இனம் என்று வேறு எத்தனையோ தனித்த அடையாளங்களைக் கொண்டே இருக்கிறோம்.

பிற மொழிகள், மொழி பேசுவோர் மேலான வெறுப்பு தானே இந்தி மொழி கல்லாததற்குக் காரணம்?

இந்தி கற்பிக்கப்படும் மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பிற மொழியினர், குறிப்பாக வடநாட்டவர் மிகப் பாதுகாப்பாக, வளமாக, மரியாதையுடன் தான் இருக்கின்றனர். நாம் இன்னொருவர் மொழியை மதிக்கிறோம் என்பதற்காக அதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இன்னொரு மொழி பேசும் மாநிலத்துக்குச் செல்கையில் வாழ்வியல் காரணங்களுக்காக அந்தந்த இட உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் பிற மொழியினர் தமிழ் கற்றுக் கொள்வது தான் சரியாக இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் வட மொழினரைக் காட்டிலும் வட நாட்டில் இருக்கும் தமிழர்கள் நன்றாகவே இந்தி பேசுகிறார்கள்.

இந்தி, பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் மேலானது என்ற எண்ணம் தான் தமிழ்நாட்டில் இந்தி கல்லாததற்குக் காரணமா?

இதில் மேல், கீழ் என்ற வாதத்தை விட்டு விடுவோம். தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் தவிர, தமிழ்நாட்டில் வாழ, வேலை செய்ய, பிழைக்க வேறு எந்த மொழியும் தேவையில்லை என்பதே முக்கியம். தேவையில்லாத ஒன்றைக் கற்பதாலும் கற்பிப்பதாலும் என்ன பயன்? கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டி வர்ணனைகள், இந்தித் திரைப்படங்கள், விடுதலை நாள் – குடியரசு நாள் உரைகள் கேட்க மட்டுமே உதவும். அதுவும் ஆங்கில உரைகள் கிடைக்கையில் இதற்காக மெனக்கெட்டு இந்தி படிக்க வேண்டுமா? சீனம், ஆங்கிலப் படங்களைத் தமிழாக்கிப் பார்ப்பது போல் இந்திப் படங்களையும் தமிழாக்கிப் பார்க்கலாமே? அல்லது, ஆங்கில உரைத்துணையோடு பார்த்து விட்டுப் போகிறோம். இந்திய மொழிகள் சொற்றொடர் அமைப்புகள் பெரிதும் தொடர்புள்ளவை என்பதால் 2, 3 மாதங்கள் எந்த மொழிப் படங்களைத் தொடர்ந்து பார்த்தாலும் விரைவில் அந்த மொழியைக் கற்றுக் கொள்ள முடியும்.

தமிழ்நாடு தாண்டி பிற மாநிலங்களுக்குப் போவோர் சிரம்பபட மாட்டார்களா? இந்தி கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்புகள் கூடாதா?

பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தொழிலாளர்கள் தமிழ் கற்றுக் கொண்டா வருகிறார்கள்? ஒரு வாழ்வியல் தேவை வரும்போது எந்த மொழியையும் ஓரிரு மாதங்களில் கற்றுத் தேற முடியும். எத்தனையோ பேர் பஞ்சம் பிழைக்க ஒரு மொழியும் தெரியாமல் சீனா, சிங்கப்பூர், அரபு நாடுகள், வட மாநிலங்கள் என்று செல்கின்றனர். அவர்கள் பிழைக்க மொழி தடையாய் இருப்பதில்லை. ஓரிரு மாதங்களில் உள்ளூர் மொழியைப் பேசிக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். அதிகம் படிக்காத பாமரர்களுக்குத் தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே கற்றுத் தேரும் திறன் இருக்கிறது.

இந்தி கற்பிக்கப்பட வில்லை என்று குற்றம் சொல்பவர்கள் என்றால் அரசு. தனியார் வேலைகளில் இருப்பவர்கள் தான். ஒரு வேலையில் சேரும்போதே, அவ்வேலையில் பதவி உயர்வு பெற இந்தி தேவையென்றால் முன்னரே ஓய்வு நேரத்தில் அதைக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டியது தானே? அதை விடுத்து அரசைக் குற்றம் சொல்வது நியாயம் இல்லை. தாய்மொழியையும் அதன் மூலம் அறிவையும் கற்பிப்பது மட்டுமே அரசின் கடமை.

இந்தி கற்றுக் கொள்ளாததால் தமிழ்நாடு பின்தங்கி விடாதா?

இந்தி பேசும், இந்தி கற்பிக்கும் மாநிலங்களை விட தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் பிறகு ஏன் வட நாடுகளில் இருந்து இங்கு சோன் பப்படி விற்கவும் கூலி வேலை செய்யவும் வருகிறார்கள்? ஒரு மாநில வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் அங்கு பேசப்படும் மொழிக்கும் பெரிய தொடர்பு இல்லை. ஒரு நாட்டு முன்னேற்றத்தைப் போலவே, ஒரு மாநில முன்னேற்றத்துக்கும் வேறு முக்கிய காரணிகள் உள்ளன.

இந்தி கற்பிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன?

வெளிமாநிலம் செல்வோர், இந்தியை அடிப்படையாகக் கொண்டு வேலை / பதவி உயர்வு பெறுவோர் என்று இந்தி அறிவின் தேவை உடையோர் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மிகக்குறைவான விகிதத்தினர். இவர்கள் தேவைக்காக ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இந்தி கற்பிக்கத் தேவை இல்லை. பள்ளிக்கு ஓரிரு இந்தி ஆசிரியர்கள், அவர்களைப் பயிற்றுவிக்கும் செலவு, இந்திப் பாடப்புத்தகங்கள் அச்சிடும் செலவு, தேர்வுச் செலவு போன்றவற்றில் செய்யப்படும் முதலீடு பயனுள்ளது தானா?

ஏற்கனவே பாடச்சுமையால் அல்லல்படும் மாணவர்களுக்கு மூன்று வெவ்வேறு எழுத்து முறைகளைக் கொண்ட மொழிகளைக் கற்பிப்பது பாடச் சுமையைக் கூட்டும். தமிழ்நாட்டில் பொது வழக்கில் கொஞ்சம் ஆங்கிலம் புழங்கும் போதே அதைக் கற்றுக் கொள்ளச் சிரமப்படும் மாணவர்களுக்கு ஒரு அறிமுகமும் இல்லாமல் இந்தி கற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும்.

கல்லூரி ஆண்டு இறுதி வரை ஆங்கில வழியில் படித்த பிறகும் கூட ஆங்கிலம் பேச, புரிந்து கொள்ளத் தடுமாறுபவர்கள் இருக்கையில், வெறுமனே இந்தியை மொழிப்பாடமாகப் படித்து மட்டும் அதில் பெரிய புலமை ஏதும் அடையப்போவதில்லை. இந்தி பிரச்சார சபா எல்லாம் போய் இந்தியில் பட்டங்கள் வாங்கிய நண்பனுக்கு இந்திப் படங்களில் பேசும் இந்தி புரியவில்லை. பேச்சு இந்தியைப் புரிந்து கொள்ள பாடப் புத்தக இந்தி பெரிய உதவி புரிவதில்லை. எனவே, கற்பித்தாலும் உதவாக்கரை மொழியாகத் தான் இருக்க வாய்ப்புண்டு. தவிர, சொந்த விருப்பினால் இந்தி கற்றுக் கொள்ள விரும்புபவர்களை எந்த விதத்திலும் அரசு தடை செய்யவில்லை.

இந்தி கற்பிப்பதால் வரும் வேறு முக்கிய பின்விளைவுகள் என்ன?

ஏற்கனவே ஆங்கில வழிக்கல்வி, ஆங்கில மோகத்தால் தமிழ்நாட்டில் தமிங்கில நோய் பெருகி வருகிறது. இதில் இந்தியும் கலந்தால் அது மேலும் மொழிச் சிதைவுக்கே இட்டுச் செல்லும். தமிழ்நாட்டில் வாழ தமிழ் தேவை இல்லை என்ற நிலை தமிழின் இருப்பையும் தொடர்ச்சியையுமே கேள்விக்குள்ளாக்கும்.  இந்தியா முழுதும் இந்தி தெரியும் என்ற நிலை வந்தால், அனைத்துச் செயற்பாடுகளையும் இந்தியிலேயே செய்யும் நடவடிக்கைகள் வேகம் பெறும். இது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டு புலமை பெற்றிராத பிறருக்கு சம வாய்ப்பைத் தராது. நாளடைவில் இந்தி சரிவரத் தெரியாத பிற மொழியினர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும்.ஒரு தேசிய மொழியை வலியுறுத்திப் பிற மொழிகளைப் புறக்கணித்த நாடுகள் பலவற்றிலும் இந்நிலையைக் காணலாம்.

தமிழ்நாட்டில் தொழில்புரிய, வாழ இந்தி தெரிந்தால் போதும் என்ற நிலை தமிழ், தமிழர் புறக்கணிப்புக்கு வித்திட்ட பிற மொழி ஆதிக்கத்தினருக்கு வழி வகுக்கும். மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் உள்ளூர் மொழி புறக்கணிக்கப்படுவதை எடுத்துக்காட்டாக நோக்கலாம். திரைப்படம், வணிகம், ஊடகம் என்று அனைத்து மட்டங்களிலும் உள்ளூர் மொழி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும். உள்ளூர்ப் பொருளாதாரம் அடி வாங்கும். உள்ளூர் நலன்களை முன்னிறுத்தும் கட்சிகளைக் காட்டிலும் தேசியக்கட்சிகள் முன்னிலை பெறலாம்.

தமிழருக்கு இந்தி தெரியவில்லை என்பது தமிழர்களைக் காட்டிலும் பிற மொழியனருக்குத் தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் இந்தி கற்பிக்க வேண்டும் என்று சொல்வது பிற மொழியனரின் நலன்களை முன்னிட்டே ஒழிய தமிழர்களின் நலன்களை முன்னிட்டு அல்ல.

தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்றுவது எப்படி?

தேடுபொறிகளில் முதல் சில முடிவுகளில் எப்படி வருவது?

இவை அனைத்தும் 100% நான் முயன்று பார்த்து உறுதிப்படுத்திக் கொண்ட அடிப்படையான விசயங்கள்:

தேடுபொறிகளில் முதல் சில முடிவுகளில் எப்படி வருவது?

இவை அனைத்தும் 100% நான் முயன்று பார்த்து நல் விளைவுகளை உறுதிப்படுத்திக் கொண்ட சில அடிப்படையான விசயங்கள்:

0. முதலில், உங்கள் தளத்தை தேடுபொறிகளால் அணுக இயல்கிறதா, அவை உங்கள் தளத்தை எப்படிப் பார்க்கின்றன என்று அறிய search engine spider simulator பயன்படுத்துங்கள். தளத்தின் தொடக்கத்திலேயே ஏகப்பட்ட ஜாவா நிரல்கள், flash பயன்பாடுகள் இருந்தால் தேடுபொறிகள் உங்கள் தளத்தைப் பார்ப்பதில் சிரமம் இருக்கும். தேடுபொறிகளுக்கு எழுத்துக்கள் மட்டும் தான் புரியும் என்பதால் அவை முழுக்கவும் முதலிலும் இலகுவாகத் தென்படுமாறு தளத்தை வடிவமையுங்கள். frames பயன்படுத்தாதீர்கள்.

1. பிறருக்குப் பயனுள்ள, ஆர்வமூட்டக்கூடிய, தரமான, உருப்படியான ஆக்கங்களைத் தாருங்கள். இத்தகைய ஆக்கங்களுக்குப் பிற வலைத்தளங்கள் தொடுப்புகள் தருவது வழமை. பிற தளங்களில் இருந்து கூடுதல் தொடுப்புகளைப் பெறப் பெற தேடுபொறிகளில் உங்கள் தளத்தின் முக்கியத்துவம் உயரும். உங்கள் தளத்துக்கு எத்தனை தொடுப்புகள் இருக்கின்றன என்பதை விட அத்தொடுப்புகளைத் தருபவர்களின் முக்கியத்துவம் தான் முக்கியமானது. எனவே, தேடுபொறிகளை ஏமாற்றும் முகமாக வெற்றுத் தொடுப்புகளைப் பெற முயல வேண்டாம்.

2. ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் பொருத்தமான குறிச்சொற்கள் இடுங்கள்.

3. பக்க முகவரிகளை அர்த்தமுள்ளதாக வையுங்கள்.

பார்க்க :

– தனித்தளத்தில் வேர்ட்பிரெஸ் வைத்திருப்பவர்கள் இதைச் செய்வதற்கான மயூரேசனின் குறிப்பு.

– பிளாகரில் இதைச் செய்வதற்கான இளாவின் குறிப்பு.

3.5 Dynamic முகவரிகளைத் தவிருங்கள்.

http://example.com/author?=ravi&date?=010101&num?=30&view?=normal என்பது போன்ற ஏகப்பட்ட ??? கேள்விக்குறிகளை அடுக்கும் dynamic முகவரிகள் தேடுபொறிகளுக்கு ஆகாது. இவற்றை பட்டியலிடாமலே போக வாய்ப்புண்டு. கேள்விக்குறிகளை குறைவாக வைத்திருந்தாலும் அவற்றை அடிக்கடி ஊர்ந்து பார்த்து இற்றைப்படுத்தும் வேகம் குறையும். இத்தகைய முகவரிகளைத் தவிர்ப்பது நலம்.

மேற்கண்ட முகவரியையே http://example.com/author/ravi/date/010101/num/30/view/normal என்று மாற்ற இயலும். இதற்கு உங்கள் .htaccess கோப்பில் சில வழிமாற்று விதிகளை எழுத வேண்டும். இந்த வேலையைச் செய்து தர இணையத்தில் பல இலவசக் கருவிகள் கிடைக்கின்றன. “mod rewrite tool” என்று தேடிப் பாருங்கள்.

4. இடப்பக்கம் பக்கப்பட்டை வைப்பதைத் தவிருங்கள்.

தேடுபொறிகள் உங்கள் இடுகைகளைப் பார்க்கையில் தென்படும் முதல் சில வரிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இடப்பக்கப் பக்கப்பட்டைகள் உங்கள் இடுகைகளின் உள்ளடக்கத்தை மறைத்துக் கொண்டு நிற்கக்கூடும்.

5. bold HTML tagக்குப் பதில் strong பயன்படுத்துங்கள்.

bold விளைவு மனிதக் கண்களுக்கு மட்டுமே புலப்படும். strong விளைவு மட்டுமே தேடுபொறிகளுக்குப் புரியும்.

6. பத்தி பிரித்து துணைத்தலைப்புகள் வைத்து எழுதுங்கள்.

துணைத்தலைப்புகளுக்குப் பொருத்தமான  h2, h3 HTML tagகள் தாருங்கள்.

7. உங்களின் முந்தைய இடுகைகளில் பொருத்தமானவற்றுக்குத் தொடுப்பு கொடுத்து எழுதுங்கள்.

தேடுபொறிகள் கொண்டிருக்கும் பக்கப்பட்டியல்களில் உங்கள் இடுகைகளைச் சேர்த்துக் கொள்ள, முக்கியத்துவத்தை உயர்த்திக் கொள்ள இது உதவும். உங்கள் பக்கங்களின் கூகுள் Pagerankஐப் பிற பக்கங்களுக்குப் பகிர்ந்து தரவும் உதவும். தொடுப்பு கொடுக்கும்போது அவ்விடுகைகளின் உள்ளடக்கத்தை விவரிக்கும் சொற்களைத் தொடுப்புச் சொற்களாகப் பயன்படுத்துங்கள்.

8. அடிக்கடி உங்கள் வலைப்பதிவில் எழுதி தொடர்ந்து இற்றைப்படுத்தி வாருங்கள்.

உங்கள் வலைப்பதிவின் முக்கியத்துவத்தைப் பொருத்து தேடுபொறிகள் உங்களை எவ்வளவு நாளைக்கு ஒரு முறை வந்து பார்க்கின்றன என்பது அமையும். மாதக்கணக்கில் எழுதாமல் இருந்தால் உங்கள் புது இடுகைகள் உடனுக்குடன் கூகுள் முடிவுகளில் தோன்றுவது தாமதமாகலாம்.

9. கூகுள், யாகூ, MSN லைவ் ஆகிய முதல் மூன்று முக்கியமான தேடுபொறிகள் உங்கள் தளத்தை ஊர்வது குறித்த தகவல்கள், கூடிய கட்டுப்பாடுகளைப் பெற Google Webmaster central, Live Webmaster central, Yahoo Site Explorerல் உங்கள் தளத்தைப் பதிந்து கொள்ளுங்கள்.

10. உங்கள் தளத்தின் உள்ளடக்கங்களைப் படி எடுத்து வேறு இடங்களில் ஒட்டாதீர்கள்.

தளப் பாதுகாப்பு காரணங்களுக்காக இடுகைகளைச் சேமிக்க விரும்பினால், தரவிறக்கி உங்கள் கணினியில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இடுகைகளை மறுபதிப்பு செய்ய அனுமதி கோருபவர்களிடமும் ஒரு சில வரிகள் மட்டும் மேற்கோள் காட்டச் சொல்லி முழு இடுகையையும் படிப்பதற்கு உங்கள் தளத்துக்குத் தொடுப்பு கொடுக்க கோருங்கள். உங்கள் உள்ளடக்கங்கள் வலையில் பல இடங்களிலும் சிதறினால் அவற்றுக்குக் கிடைக்கும் தொடுப்புகளும் சிதறி, உங்கள் பக்கங்களின் முக்கியத்துவமும் குறைய வழி வகுக்கலாம்.

11. முக்கியமான சொல்லைப் பக்கத்தலைப்பின் தொடக்கத்தில் வருமாறு எழுதுங்கள்.

பக்கத்தலைப்புகளைச் சுருக்கமாக வையுங்கள். பக்கத்தலைப்பில் உள்ள முக்கிய சொற்கள் முதல் பத்தியின் தொடக்கத்திலும் குறிச்சொற்களிலும் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.  பக்கத் தலைப்புகளில் உங்கள் தளப்பெயர் தோன்றுவதைத் தவிருங்கள். குறிப்பாக, தலைப்பின் தொடக்கத்தில் தளப்பெயர் தோன்றுவதை அறவே தவிருங்கள். தேடல் முடிவுகளில் பக்கத்தலைப்பின் முதல் ஒரு சிலச் சொற்கள் மட்டுமே தென்படும் என்பதால் மேற்கண்ட நடவடிக்கைகள் அவசியம்.

12. தனித்தள வேர்ட்பிரெஸ் பயனர்களுக்கான குறிப்புகள்:

– பின்வரும் நீட்சிகளைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்: All in one SEO pack, Google (XML) sitemaps generator, Robots Meta, Simple Tags .

– ஒவ்வொரு இடுகைக்கும் உள்ள excerpt வசதியைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் குறிச்சொல், பகுப்பு, தேதி வாரித் தொகுப்புப் பக்கங்கள் அனைத்திலும் ஒரே உள்ளடக்கம் தோன்றுவதைத் தவிர்க்கலாம்.

– தேதி வாரி, ஆசிரியர் வாரி தொகுப்புகள் தேவையின்றி பல பக்கங்களில் திரும்பத் திரும்ப ஒரே உள்ளடக்கத்தைக் காட்டுவதால் Robots Meta கொண்டு இவற்றை நீக்கலாம்.

– All in one SEO pack பயன்படுத்தி ஒவ்வொரு இடுகைக்கும் Meta description தாருங்கள். Settings – All in one SEO போய் Page titleஐ %post_title% என்று தாருங்கள்.

– Page slugஐ வேண்டிய அளவு தொகுத்து முழுமையான, முக்கியமான குறிச்சொற்கள் இடம்பெறுவது போல் செய்யுங்கள்.