நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

நோக்கியாவின் அடிப்படை செல்பேசி வகைகள் சிலவற்றில் தமிழில் எழுதலாம். தமிழ் விசைப்பலகையை முடுக்க குறுஞ்செய்தி எழுதும் பெட்டித் தெரிவுகளில் writing language – > தமிழ் என்று தெரிவு செய்யுங்கள். பல செல்பேசிகளில் தமிழ் எழுத்துகள் அச்சிடப்படாமல் இருக்கலாம். எனவே, விசை எண்  மற்றும் விசையில் உள்ள எழுத்து வரிசைகளைக் கீழே காணலாம்.

1 – புள்ளி, ஆய்தம்.

2 – அ, ஆ, இ, ஈ, உ, ஊ

(உயிரெழுத்துகள் முதல் பகுதி)

3 – எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

(மீதம் உள்ள உயிரெழுத்துகள்)

4 – க, ங, ச, ஞ

(ங்க, ஞ்ச ஒன்றாக வருவன)

5 – ட, ண, த, ந

(ண்ட, ந்த ஒன்றாக வருவன)

6 – ப, ம, ய

(ம்ப ஒன்றாக வரும்)

7 – ர, ல, வ

8 – ழ, ள, ற, ன

(ன்ற ஒன்றாக வரும்)

9 – ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ

(குறைவாகப் பயன்படும் க்ஷ, ஸ்ரீ கடைசியாக)

பள்ளியில் தமிழ் அரிச்சுவடி படித்த வரிசையிலே இவ்விசைகள் அமைந்துள்ளன. அரிச்சுவடி மறந்து விட்டதா ? 🙂 பெரும்பாலும் ஒரு ஒலிக்கான விசை தட்டுப்படும்போதே அதனுடன் வரும் ஒலியும் அடுத்த விசையில் இருக்கும்.

எடுத்துக்ககாட்டு: தம்பி, கம்பி, நம்பி போன்ற சொற்களில் ம்பி என்று ஒன்றாக வருவதைக் காணலாம். எனவே, 6 ஆம் எண் விசையில் ப தட்டுப்படும் போதே அடுத்து ம வரும் என்று உள்ளுணர்வாக அறியலாம்.

தனி எழுத்துகளை எப்படி எழுதுவது?

செல்பேசி ஆங்கில விசைப்பலகையில் 2ஆம் எண்ணில் abc என்று இருக்கும். c வர வேண்டுமானால் 2ஆம் எண்ணை 3 முறை அழுத்துவோம் அல்லவா? அதே போல் தான் தமிழுக்கும். குறிப்பிட்ட எழுத்து வரும் வரை அழுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்:

2 = அ

22 = ஆ

333 = ஐ

777 = வ

ஒரே எண்ணை அடுத்தடுத்து அழுத்தும் போது மிக வேகமாக அழுத்த வேண்டும். இல்லாவிட்டால், 22 = ஆ என்று வருவதற்குப் பதில் அஅ என்று வரும்.

கூட்டு எழுத்துகளை எப்படி எழுதுவது?

பா = ப் + ஆ.

பா = ப + புள்ளி + ஆ

பா = 6 + 1 + 22

என்று எழுத வேண்டும் என்று நினைப்பீர்கள். அது தான் இல்லை 🙂

பா = 6 + 2 என்று அழுத்தினாலே போதும்.

6 + 2 = பஅ என்று தான் வர வேண்டும். ஆனால், தமிழில் இப்படி உயிர்மெய் எழுத்துக்கு அடுத்து உயிர் எழுத்து வராது. எனவே, செல்பேசி தமிழ் இலக்கணத்தின் அடிப்படையில் செயற்படத் தொடங்குகிறது. ப என்ற விசை இந்த இடத்தில் ப் என்ற மெய்யெழுத்தைக் குறிக்க வேண்டும் எனப் புரிந்து கொள்கிறது. ப என்ற விசை ப் ஆகிறது. ப்+2 = ப என்ற வர வேண்டும். ஆனால், ஏற்கனவே தான் ப என்ற எழுத்துக்குத் தனி விசை உண்டே. எனவே, பயனர் திரும்பவும் ப அடிக்க முயலவில்லை என்பதை ஊகிக்கிறது. அகரத்துக்கு அடுத்த உயிரைப் பொருத்திப் பார்க்கிறது. எனவே 6 + 2 = பா ஆகிறது. பி = 6 +22, பீ = 6+222 என்று தொடரும்.

சில பயிற்சிகள் பார்ப்போமா?

கணினி = 4 + 55+ 22+ 8888 + 22

வாழ்க = 777 + 2 + 8 + 1 + 4

கொடுப்பினை = 4 + 3333 + 5 + 2222 + 6 + 1 + 6 + 22 + 8888 + 333

என் அப்பா இந்தச் செல்பேசியை வாங்கிய புதிதில் கொ, கோ எல்லாம் எழுத கொம்புகளைக் காணோமே என்று தேடிக் கொண்டிருந்தார் 🙂  க வுக்கு முன்பே கொம்பு வருவதால் முதலில் ஒ அழுத்தி பிறகு க அழுத்திப் பார்த்தார் 🙂

நினைவில் கொள்ளுங்கள்: எப்பொழுதும் மெய் எழுத்து மேல் தான் உயிர் எழுத்து ஏறும். உடம்பில் தான் ஆவி புகும். ஆவிக்குள் உடம்பு புகாது 🙂

எஃகு = 3 + 1 + 4 + 2222

இங்கு எ க்கு அடுத்து 1 அடித்தால் புள்ளிக்குப் பதில் தானே ஆய்த எழுத்து வருவதைக் கவனியுங்கள். ஏனெனில், இலக்கணப் படி உயிர் எழுத்து மேல் புள்ளி வராது என்பதை செல்பேசி புரிந்து கொள்கிறது.

தமிழ்99 முறை அறிமுகமானவர்களுக்கு இந்த முறை மிகவும் எளிதில் பிடிபடும். கணினியில் தமிழ்99 எழுதும் போது அதில் இன்னும் கூட சிறப்பான குறுக்கு வழிகள் உள்ளன. முயன்று பாருங்கள்.

ஒரு முறை writing language தெரிவில் தமிழ் எனத் தந்தால் செல்பேசி முழுக்க எல்லா இடங்களிலும் தமிழ் எழுத்துகள் வரும். எனவே, தேவை இல்லாத போது திரும்ப எழுத்துத் தெரிவுகளை மாற்றிக் கொள்ளுங்கள்.

நோக்கியா தவிர்த்த பிற செல்பேசிகளில் தமிழ் எழுதும் முறை எப்படி இருக்கிறது என்று அறிந்தவர்கள் தெரிவியுங்கள். நன்றி.


Comments

9 responses to “நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?”

  1. பயனுள்ள தகவல்,

    நோக்கியா 5800x பாவிப்பவர்கள் என்ன செய்வது? 🙁

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      நன்றி பீர். வேற வழியில்ல.. தமிழாதரவு செல்பேசிக்கு மாறிடுங்க 🙂 எல்லாரும் கேட்டா தானே அவங்களும் எல்லா வகை செல்பேசிகளிலும் தமிழாதரவு தருவாங்க.

  2. செல் பேசியில் தமிழ் மொழி « தமிழ் வலைப்பதிவு

    […] இருப்பதாகக் கூறியிருந்தார். நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டச்… என்றும் ரவி ஒரு பதிவிட்டுள்ளார். […]

  3. இரவி வர்மா Avatar
    இரவி வர்மா

    தோழரே எமக்கு NOKIA தமிழ் software வேண்டும் நான் 3120c என்ற NOKIA கைபேசியைப் பயன் படுத்துகிறேன். அதில் எப்படி தமிழ் எழுத்தை புகுத்துவது.. தாங்கள் அவசியம் எம் மின் அஞ்சலுக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்….

    1. பேசாமல் தமிழாதரவு நொக்கியா செல்பேசிக்கு மாறுவதே ஒரே வழி 🙂

      சிம்பியன் ஓ.எஸ் சில் தமிழ் எழுத்துருக்களைப் புகுத்துவதற்கு ஏதும் வழிமுறை இருக்கின்றதோ தெரியவில்லை.

  4. கலை Avatar
    கலை

    தமிழ்ல தொலைபேசில எழுதுறதெல்லாம் இருக்கட்டும். முதல்ல தொலைபேசியில வரும் தமிழ் எழுத்தை எப்படி வாசிப்பதென்று எனக்கு யாரேனும் சொல்லித் தாங்கோ. ஏதோ ஒரு மென்பொருளை கைத்தொலைபேசியில் தரவிறக்கம் செய்து கொண்டால் தமிழ் யூனிக்கோட் எழுத்தில் வருபவற்றை வாசிக்கலாம் என்று அறிந்தேன். அதற்குரிய இணைய இணைப்பு யாரேனும் அறிந்திருந்தால், எனக்கும் அறியத் தாருங்கள்.

  5. தோழரே எமக்கு NOKIA தமிழ் software வேண்டும் நான் Nokia e63 என்ற NOKIA கைபேசியைப் பயன் படுத்துகிறேன். அதில் எப்படி தமிழ் எழுத்தை புகுத்துவது.. தாங்கள் அவசியம் எம் மின் அஞ்சலுக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

  6. […] 7. How to guide for writing in Tamil enabled Nokia mobile phones […]