பேச்சுத் தமிழ்

March 14, 2008

in தமிழ்

நேத்து கல்லூரி நண்பன் ஒருத்தன் கிட்ட பேசினேன். என்னோட பதிவுகளைப் படிச்சு பிடிச்சுப் போய், “ரவிசங்கர், இனி நாம் தூய தமிழிலேயே பேசுவோம், சரியா?” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரம் “தூய” தமிழில் பேசப் பார்த்தான். அதைத் “தூய” தமிழ்னு சொல்லுறத விட உரைநடைத் தமிழ் / மேடைப் பேச்சுத் தமிழ் / மேடை நாடகத் தமிழ் / பழங்காலத் திரைப்படத் தமிழ் – னு சொல்லலாம்.

அவன் கிட்ட நான் பகிர்ந்துகிட்ட கருத்துக்களும் அதுக்கு அப்புறம் மனசில தோணினதும்:

* பேச்சுத் தமிழ் வேற. உரைநடைத் தமிழ் வேற. தமிழ்ல எல்லா காலத்திலயும் இது ரெண்டுக்கும் தெளிவான வேறுபாடு இருந்திருக்கு. தமிழ் தொடர்ந்து நிலைச்சு நிக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம். இதை Diglossia அப்படிங்கிறாங்க. ஒரு மொழியோட பயன்பாடு இளக்கத்தன்மையோட இருக்க இது முக்கியம்.

* நல்ல தமிழில் பேசுறதுங்கிறது உரைநடைத் தமிழ்ல பேசுறது இல்ல. அப்படி பேசுறது செயற்கையாவும் உறுத்தலாவும் அமைஞ்சிடுது. இதனாலேயே நல்ல தமிழ் பேச நினைக்கிறவங்களைப் பார்த்து மத்தவங்க கேலியும் கிண்டலும் செய்ய வாய்ப்பாயிடுது.

ஆங்கிலமே அறியாத நாட்டுப்புறத்துக் காரங்க பேசுறது முழுக்கத் தமிழ் தான். ஆனா, ரொம்ப ஆராஞ்சு பார்த்தாலே ஒழிய அவங்க ஆங்கிலம் கலக்காம பேசுறாங்கங்கிறது நமக்கு தோணவே தோணாது. தமிழ்ல பேசுறோங்கிறதே உறுத்தாம பேசுறது தான் நல்ல தமிழ். மிச்ச எல்லாம் மொழிபெயர்ப்புத் தமிழ் தான்.

- புது சொற்களைக் கடன் வாங்குறத விட இருக்கிற சொற்களையே பயன்படுத்தாம விடுறது தான் பெரிய ஆபத்து. Current trends in Nonotechnology போன்ற விசயங்களை எல்லாம் தமிழ்ல பேச முற்படுறதுக்கு முன்னாடி, எனக்கு Call பண்ணு, ஒரு walk போனேன்னு சொல்லுறதையாவது மாத்தி தமிழ்ல பேசப் பார்க்கணும். ஏற்கனவே தமிழ்ல இருக்க இலகுவான விசயங்களைத் தமிழ்ல பேசினாலே போதும். பாதித் தமிழைக் காப்பாத்திடலாம்.

- தமிழ்ல பேசும் போது மட்டும், “language is just a communication medium, அடுத்தவனுக்கு நாம சொல்லுறது புரிஞ்சா போதும்”னு சாக்குப் போக்கு சொல்றோம். ஆனா, ஒரு தமிழர் கிட்ட ஆங்கிலத்தில பேசம்போது கூட ஏன் “i was நடந்துfyingனு” சொல்லுறதில்லை? அப்படி சொன்னாலும் அவருக்குப் புரியும் தானே? ஏன்னா, ஆங்கிலம் என்றால் என்ன, அது எப்படி பேசப்படணும்னு தெளிவான கட்டளைகளை நம் மூளைக்குத் தெரிவிக்கிறோம். ஆனா, நம்ம மொழி குறித்த இந்த வரையறைகளை மதிக்காம அலட்சியப்படுத்திடுறோம்.

எந்த மொழியில் கணினி விசைப்பலகையில் எழுதப் போறோம்னு முடிவெடுக்கிற மாதிரி, எந்த மொழியில் பேச நினைக்கிறோம்கிறது நாம நம்ம மூளைக்குத் தரும் ஒரு முக்கியமான தெளிவான கட்டளை. நல்ல தமிழ் பேசணுங்கிற உணர்ச்சிப்பூர்வமான ஆவலுக்கும் மேல இந்தத் தெளிவான முடிவுக்கு மூளையைப் பழக்காவிட்டால், தொடர்ந்து நல்ல தமிழ்ல பேசுறதும் கை கூடாது.

- எந்த வகைத் தமிழைக் கேட்கிறோம், பார்க்கிறோம், படிக்கிறோம்கிறது நம்ம பேச்சையும் எழுத்தையும் பெருமளவில மாத்துது. தொடர்ந்து சன், விசய் மாதிரி தொலைக்காட்சிகள், மிர்ச்சி, சூரியன் மாதிரி வானொலிகள், தினமலர், விகடன் மாதிரி இதழ்களைப் பயன்படுத்தினால் தமிங்கிலம் கூடுவது நிச்சயம். நல்ல தமிழ் விரும்புறவங்க இந்த சேவைகளைப் புறக்கணிக்கிறது நல்லது.

சில பேருக்கு பள்ளிக்கூடத்தில் இல்லாத தமிழ் ஆர்வம் கூட தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் வலைப்பதிவுகள் படிச்சு வருவதைக் கண்டிருக்கேன். அதுக்கு இந்தத் தளங்கள்ல பயன்படுத்துற நல்ல தமிழும் ஒரு முக்கிய காரணம்.

- ரெண்டு ஆண்டு முன்னாடி எங்க ஊர் பள்ளி விழாவுல என்னைப் பேசச் சொன்னாங்க. முடிஞ்ச அளவு ஆங்கிலம் கலக்காம பேசினேன். வெளிநாட்டுல வாழ்ந்திட்டு வந்து எப்படி இப்படி ஆங்கிலம் கலக்காம பேசுறேன்னு ஆச்சர்யப்பட்டாங்க. தங்களால அப்படி பேச இயலலையேங்கிற அவங்க இயலாமையும் அந்தச் சொற்கள்ல தென்பட்டுச்சு. இப்ப எல்லாம் அப்பாவுக்கு மக்கள் தொலைக்காட்சி பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. காரணம், அதில பேசுற தமிழ் தான். உண்மைல நல்ல தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தருது. ஏதோ இழந்த சொத்து திரும்பக் கிடைச்ச மாதிரி. அப்படி பேசுறது பல பேருக்குப் புடிச்சிருக்கு. ஆனா, அவங்களுக்கு அப்படி பேசத் தெரியலை; பேச வர்றதில்லை. அதுக்கான போதுமான முயற்சி, முடிவு, பயிற்சி எடுக்கிறதில்லை.

- தமிழ்நாடு, இலங்கையின் பகுதிகளில் உள்ள உள்ளூர் வழக்குத் தமிழ் என்பது கலப்புத் தமிழ் இல்லை. இந்த வழக்குத் தமிழ்ச் சொற்கள் எல்லாம் தமிழோட சொத்து. பல பழைய தமிழ்ச் சொற்கள், தமிழர் வரலாறு எல்லாம் இந்த வழக்கு மொழியல தான் புதைஞ்சு கிடக்கு.

இப்ப இந்த வழக்கு மொழிகளுக்கு வந்திருக்க பெரிய ஆபத்து என்னன்னா, தொலைக்காட்சி தான் !!
இந்த வழக்கு மொழிகள் உயிர்ப்போட இருக்க சிற்றூர்கள்ல வீட்டுக்கு வீடு இப்ப தனியார்த்தொலைக்காட்சி வந்து உக்கார்ந்திக்கிட்டுருக்கு. இந்தத் தொலைக்காட்சிகள்ல புழங்குற தமிழ் அவங்களோட வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத தமிழ். நகரத்தில 10 ஆண்டுகளா தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்து அலுத்துப் போய் தொலைக்காட்சி பார்க்கிறதை நிறைய பேர் குறைச்சுக்கிட்டு வர்றாங்க. ஆனா, சிற்றூர்களுக்குத் தனியார் தொலைக்காட்சி ஊடகம் புதுசு. அதைப் பார்த்து தங்கள் உள்ளூர் வழக்குத் தமிழ் பத்தி தாழ்வு மனப்பான்மை கொண்டு நகர மேட்டுக்குடி ஊடகத் தமிங்கிலத்துக்கு மாற முற்படுவாங்க. செல்வி, அமுதான்னு பேர் வைச்ச குடும்பங்கள் எல்லாம் இப்ப தொலைக்காட்சி நாடகங்கள்ல வர்ற நடிகைகளைப் பார்த்து வர்ஷிணி, தர்ஷிணின்னு பேர் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க :(

வழக்குத் தமிழின் களஞ்சியம் போல இருக்கவங்க பாட்டி, தாத்தாங்க தான். ஆனா, தொலைக்காட்சி வந்த பிறகு இப்ப அவங்க கூட பேசி மகிழ யாருக்கும் நேரம் இல்லை. எல்லாரும் ஒன்னா உக்கார்ந்து தொலைக்காட்சி நாடகங்களை உத்துப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. இதனால, அவங்க கிட்ட இருந்து சொற்கள் அடுத்த தலைமுறைக்கு நகர்வது நின்னு போகுது :(

* இலக்கியம், உரை நடைலயும் பேச்சுத் தமிழ்ல எழுதலாம். தவறில்லை. இயல்பாவும் இருக்கும். தவிர, பேச்சுத் தமிழ்ல எழுதுறது என்பது ஒரு கலை. சில சமயம் கூட மெனக்கட வேண்டியும் இருக்கும். எல்லாருக்கும் அது கை கூடாது.

பின் குறிப்பு: இது ஊருக்கு அறிவுரை இல்லை. நானும் இந்த விசயத்தில் எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கு :(

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

{ 11 comments… read them below or add one }

கலை March 14, 2008 at 3:54 pm

நிறைய யோசிச்சு எழுதி இருக்கிறீங்க. கவலையான விசயம் நானும் முன்னேற நிறையயயயயய இடமிருக்கு. :(

Reply

காசி March 14, 2008 at 7:21 pm

முழுக்க உடன்படுகிறேன்.

Reply

பூர்ணா March 14, 2008 at 7:58 pm

ஒரு சின்ன சந்தேகம் – உரைநடைத் தமிழ் – உரைங்கி்றது பேச்சா இல்லை எழுத்தா? உரை நடை என்பதே பேச்சு நடை தானே?

Reply

ரவிசங்கர் March 14, 2008 at 11:08 pm

கலை, காசி – நன்றி.

பூர்ணா – உரை என்றாலும் பேச்சு தான். ஆனால், இன்னும் formal ஆனது.

Reply

venkatramanan March 15, 2008 at 4:54 am

//தமிழ்ல பேசுறோங்கிறதே உறுத்தாம பேசுறது தான் நல்ல தமிழ்//
ரவி! அருமையான கருத்து! மக்கள் தொலைக்காட்சியில் “தமிழ் பேசு தங்கக் காசு” நிகழ்ச்சியில் (“நம்ம தமிழ்ல ரெண்டு நிமிஷம் பேசிட முடியாதா”னு) கலந்து கொள்பவர்கள் எவ்வளவு சிரமப்படறாங்கனு அவ்வப்போது கவனித்ததுண்டு – அப்போது தெரிகிறது நாம் எவ்வளவு தூரம் தமிழை விட்டு விலகி வந்து விட்டோமென்று!
இப்போது என் செய்தியோடைப் பட்டியலில் (Feed readerக்கு தமிழில் என்னனு சொன்னீங்கனா கொஞ்சம் வசதியா இருக்கும்!) உங்க பதிவுக்குத்தான் முன்னுரிமை!

இந்த பதிவிற்கு தொடர்பில்லாத வோறொரு கேள்வி!
சுஜாதா தங்களை, தங்கள் எழுத்துக்களை கண்டிப்பா பாதித்திருப்பார்னு நம்பறேன்! உங்ககிட்ட இருந்து ஒரு நினைவுகள் பதிவை எதிர்பார்த்தேன்! ஏன் போடலைனு தெரிஞ்சுக்கலாமா? பதிலளிக்க விருப்பமில்லேன்னா வேண்டாம்!

அன்புடன்
வெங்கட்ரமணன்

Reply

பெயர் அறிய விரும்பாதவன் March 15, 2008 at 6:06 am

நல்லா எழுதியிருக்கீங்க, கட்டுரை முழுமைக்காக சொல்கிறேன்,
1.சில சாதி சார்புள்ள வழக்குமொழிகளை ஏளனம் செய்வதாலும் தங்கள் சாதியை மறைப்பதற்காகவும் தமிங்கலத்திற்கு தாவுபவர்கள் உண்டு :(
2.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா எனச் சொல்வார்கள், மழலையர் பள்ளியிலிருந்தே பள்ளிகளில் வழக்குமொழி ஆங்கிலமாக கட்டாயமாக்கப்படுவது ஒரு காரணம். தொலைக்காட்சிகளை விட இந்த ஆரம்பமே முக்கிய காரணம். தமிழ் பாடத்தை கட்டாயமாக்குவதை விட( ஒரு பேச்சுக்கு, அது கட்டாயமாக்கபட வேண்டும் என்பதில் மறுப்பில்லை) பள்ளிகளில் தமிழில் பேசுவதை கட்டாயமாக்க முன்னுரிமை கொடுக்கலாம்.

Reply

ரவிசங்கர் March 15, 2008 at 10:19 am

வெங்கட்ரமணன்,

//இப்போது என் செய்தியோடைப் பட்டியலில் உங்க பதிவுக்குத்தான் முன்னுரிமை!//

கேட்க மகிழ்ச்சியா இருக்கு. நன்றிங்க.

Feed readerஐ ஓடை வாசிப்பான், ஓடை படிப்பான் என்று பலவாறாக அழைக்கிறார்கள். எதிலுமே எனக்கு நிறைவு இல்லை. இந்த -ஆன் ஈற்று நேரடித் தமிழாக்கங்கள் கொஞ்ச நாளாகவே உறுத்துகின்றன. Feed readerஐ Feed aggregator ஆக்கி ஓடைத் திரட்டி என்றே அழைத்து வருகிறேன். அந்த வகையில் கூகுள் ரீடரை கூகுள் திரட்டி என்று அழைக்கிறேன். Feed readerக்கும் Feed aggregatorக்கும் செயல்பாட்டில் நுணுக்கமான வேறுபாடுகள் உண்டு என்பதால் readerக்கான சொல்லையும் யோசிக்க வேண்டும் தான். Reader, inbox, RSS feed – தமிழில் என்ன இடுகையையும் பார்க்கலாம்.

சுஜாதா குறித்து – 12ஆம் வகுப்பு படிக்கும் வரை தினமணி, இந்தியா டுடே தவிர மற்ற தமிழ் வார இதழ்களைக் கண்ணில் காட்டாமல் வளர்த்தார் அப்பா. விகடன், குமுதம் போன்ற இதழ்கள் மூளையை மழுங்கடித்து விடும் என்பது அப்பாவின் நம்பிக்கை. (இப்போது அதை நானும் உறுதிப்படுத்துகிறேன் ;) ) அப்பாவின் நூல் தொகுப்பில் நா. பா, மு. வ, அகிலன் போன்றோரே அதிகம் இருந்தனர். தற்கால, கடந்தகால தமிழ், உலக இலக்கியச் சூழல் எதிலும் எனக்குப் பெரிய அறிமுகம் இல்லை. யாராவது பெரிய இலக்கியவாதியின் பெயரைச் சொல்லி மிரட்டினால் :) மாதிரிக்கு அவர்களின் கதை, புதினம் ஒன்றைப் படிப்பதுண்டு.

கல்லூரி காலத்தில் தான் விகடன் முதலியன அறிமுகமாயின. எனக்கு நினைவில் இருக்க, ஒரே ஒரு சுஜாதாவின் சிறுகதை மட்டுமே படித்திருக்கிறேன். அதன் பெயரும் கதையும் மறந்து விட்டது. கற்றதும் பெற்றதும் எப்போதாவது படிப்பதுண்டு. மற்றபடி அவரை ஒரு திரைப்பட கதை ஆசிரியராகத் தான் தெரியும். அதனால், அவருடைய இறப்பு ஏனோ பெரிய பாதிப்பை உண்டுபண்ணவில்லை. எழுத்தாளரோ தலைவரோ வேறு எவருமோ தற்போது வாழ்பவர்களில் யாருடைய இறப்பு என்னைப் பாதிக்கும் என்று எனக்கே தெரியவில்லை. பெரும்பாலான இறப்புகள், “ஓ இறந்துவிட்டாரா, அப்படியா” என்று செய்தியாகக் கேட்பதோடு சரி. நண்பர்களின், உறவுகளின் இறப்புகள் மட்டுமே பாதிக்கும் என நினைக்கிறேன். ஆனால், கண்டிப்பாக அதற்கு உட்கார்ந்து பதிவு எழுதிக் கொண்டு இருக்க இயலாது !!

நடப்பு நிகழ்வுகளில் அரசியல், விளையாட்டு, திரைப்படம், சமூக நிகழ்வுகள் என்று கருத்து சொல்லி பதிவு போடுபவர்கள் நிறைய. பொதுவாக, என் பதிவுகளைப் படிக்கும் போது இந்தப் பாணியை நான் பின்பற்றுவதில்லை என நீங்கள் உணரலாம். தொடக்கத்தில் நானும் இப்படி பல விசயங்களுக்குக் கருத்து சொல்லி எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு, ஒரு கட்டத்தில் அலுக்கத் தொடங்கி விட்டது. நிகழ்வுகளை அப்படியே உள்வாங்கிக் கொள்ளாமல் இதை பதிவில் எழுதலாமா, எப்படி எழுதலாம் என்று பதிவுகளைச் சுற்றியே நினைக்கத் தொடங்கும் வியாதி வந்துவிட்டதோ என்று பயந்து விட்டேன் :)
தவிர, எல்லாரும் கருத்து சொல்லும் விசயத்தில் நானும் இது என் கருத்து என்று பதிந்து வைப்பது பெரிய பயனாய் தெரியவில்லை. அப்படி கருத்து சொல்லும் பல விசயங்களில் நான் வல்லுனனும் கிடையாதே!!

படத்தை ரசித்துப் பார்க்காமல் படத்துக்கு எப்படி விமர்சனம் எழுதலாம் என்று எண்ணம் உறுத்திக் கொண்டு தொல்லைபண்ணியதால் இப்ப திரைப்பட விமர்சனம் கூட எழுதுவதில்லை..

Reply

ரவிசங்கர் March 15, 2008 at 10:30 am

பெயர் அறிய விரும்பாதவன்,

1. நீங்கள் சொல்வது போல் சாதியை மறைக்கவும் தமிங்கிலத்துக்குத் தாவுகிறார்களோ? தெரியலை. வட்டார வழக்கு துறுத்தக்கூடாது என்று நகர வழக்கிலோ ஆங்கிலம் கலந்தோ பேசுபவர்களைப் பார்த்திருக்கிறேன்.

2. ஆங்கில வழியத்தில் படித்து வளரும் தலைமுறையில் இந்தப் பிரச்சினை இருப்பது உண்மை தான். நானும் LKG முதல் கல்லூரி வரை ஆங்கில வழியத்தில் படித்தவன் தான். ஆனால், எங்கள் பள்ளிகளில் ஆங்கிலத்தில் பேசியதில்லை. எல்லா ஆங்கில வழியப் பள்ளிக்கூடங்களிலும் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி வலியுறுத்துவதாகத் தெரியவில்லை. வலியுறுத்தினாலும் மாணவர்கள் பின்பற்றுவதில்லை. மிகுந்த தரம் உயர்ந்த ஆங்கில வழியப் பள்ளிகளில் பயின்று வீட்டிலும் ஆங்கிலம் பேசும் சூழலில் வளர்வோரே பள்ளியிலும் முழுக்க ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், இப்படி முழுக்க ஆங்கிலத்தில் பேச வலியுறுத்தப்படுவதை விட முக்கியப் பிரச்சினை என்னவென்றால் எண்கள், வண்ணங்கள், வடிவங்கள், விலங்குப் பெயர்கள் என்று பல அடிப்படையான விசயங்களும் ஆங்கில வழியக் குழந்தைகளுக்கு ஆங்கிலத்திலேயே அறிமுகமாவது தான். என் அக்கா பையனுக்கு school, green , square எல்லாம் தமிழ் தான். அதற்கு வேறு தமிழ்ச் சொற்கள் இருப்பதே தெரியாது :( இவர்கள் வளர வளர உரிய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்க வேண்டியது தான்.

ரொம்ப எரிச்சலூட்டும் இன்னொரு போக்கு என்னவென்றால் முழுக்கத் தமிழ் வழியத்தில் படித்து, நன்கு தமிழ் அறிந்தவர்களும் கூட தேவையில்லாமல் ஆங்கிலம் கலப்பது தான். சிலர் சூழல் தாக்கத்தால் தங்களை அறியாமல் கலக்கிறார்கள்.

“ஒரே headacheஆ இருந்துச்சு. Doctor கிட்ட போய் eye test பண்ணி medicine வாங்கிட்டு வந்தேன்ப்பா” என்று என் அப்பா சொல்கிறார். அப்பா கல்லூரிப் படிப்பு முடித்திருக்கிறார். அதையே அம்மா சொல்லும் போது “தலைவலிக்குதுன்னு போய் கண் check பண்ணிட்டு மருந்து வாங்கிட்டு வந்தார்” என்கிறார். அம்மா பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை . தனித்தமிழ் இயக்கத்தை என் வீட்டுல இருந்தே தொடங்கணும் போல :(

சிலர் இப்படி சொல்லுக்குச் சொல் ஆங்கிலம் கலந்து பேசுவது தான் மதிப்பு என்று பிழையாக நினைத்துக் கொண்டு படுத்தி எடுக்கிறார்கள். போன தலைமுறை ஆட்கள் தற்காலப் போக்குடன் பொருந்திப் போவதாக நினைத்து இப்படிப் பேசிக் கெடுக்கிறார்கள்.

Reply

சந்தோஷ் March 16, 2008 at 1:48 pm

// நிகழ்வுகளை அப்படியே உள்வாங்கிக் கொள்ளாமல் இதை பதிவில் எழுதலாமா, எப்படி எழுதலாம் என்று பதிவுகளைச் சுற்றியே நினைக்கத் தொடங்கும் வியாதி வந்துவிட்டதோ என்று பயந்து விட்டேன் :) //

இந்த விடயத்தில் நீங்க தனி ஆள் இல்ல :-)

Reply

ரவிசங்கர் March 16, 2008 at 3:39 pm

சந்தோஷ், தனி ஆள் இல்லைன்னு தெரியும். ஆனா, முத்துறதுக்கு முன்னாடி கொஞ்சம் முழுச்சிக்கிட்டாச்சு :)

Reply

keerthivasan August 22, 2010 at 5:30 pm

hai ravi sir

Reply

Leave a Comment

Previous post:

Next post: