in tamil alsoவா?

May 22, 2007

in தமிழ்,நாட்குறிப்பு

கல்லூரியில், வேலை பார்க்கும் இடத்தில், தங்கி இருக்கும் இடத்தில் தனியாக ஒரு தெலுங்குக்காரர் தமிழர்களிடம் மாட்டிக் கொண்டால் அவர் பாடு பெரும் பாடு தான். கருணையே இல்லாமல் GULTI, GOLTI என்று எவ்வளவு ஓட்டித் தள்ளினாலும், நட்புக்கு உலை வைக்காமல் சிரித்தபடியே தாங்கிக் கொள்ளும் நல்லவர்கள்.

இது வரை கன்னடர்களுடன் பழகியதில்லை. ஒரே ஒரு மலையாளி மட்டும் தனியாகப் பழக நேர்ந்ததில் நல்ல நட்பு வாய்த்தது. ஆனா, நான்கைந்து சேட்டன்கள் ஒன்று சேர்ந்து விட்டால் நம்முடன் ஒட்டிப் பழகுவார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை. என்ன இருந்தாலும், ஆந்திராகாருகள் மாதிரி வராது.

இங்கு பிரசாத் என்று ஆந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். பேசுவதற்கு ஒன்றுமில்லாவிட்டால், “பிரசாத், what is that in telugu, what is this in telugu” என்று அவரைப் போட்டு புரட்டி எடுப்பது வழக்கம். 12ஆம் வகுப்பு வரை தெலுங்கு வழியத்தில் தான் படித்து இருக்கிறார். ஆனாலும், பல சமயங்களில் திணறுவார். அவர் ரொம்ப யோசித்தால் அதற்கான தமிழ் சொல்லுடன் +உ சேர்த்து சொல்வோம். இல்லை, புலம், பணி போன்ற தமிழ் சொற்களையே சொன்னால், முகம் மலர “in tamil also same word-ஆ” என்பார். “in tamil also இல்ல பிரசாத்..telugu also” என்று திருத்துவோம் :) தமிழ் சொல் ஒத்து வராத வேளையில் அதற்கான வட மொழிச் சொல் சொன்னால் பொருந்தி வரும்..அதுவும் இல்லாவிட்டால், ஆங்கிலத்தில் சொன்னால், “yes in telugu also we say like that only..we don have separate telugu word” என்பார். தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகியவற்றை நீக்கினால் தெலுங்கில் என்ன மிஞ்சும் என்றே தெரியவில்லை ! ஆனால், இதில் என்ன வசதி என்றால் நம்மைப் போன்ற அண்டை மொழிக் காரர்கள் அவர்கள் படங்கள், பாடல்கள், உரையாடல்களைக் கேட்கையில் வெகு இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே வேளை, தமிழிலும் ஆங்கிலம், வட மொழி என்று வகை தொகை இல்லாமல் கலந்து கொண்டே போனால் எங்கு போய் நிற்போம் என்பதற்கு கண் முன் சாட்சியாக எச்சரிக்கை மணியடிப்பதாகவும் இருக்கிறது.

எவ்வளவு தான் எடுத்துக்காட்டுக்கள் தந்தாலும், தெலுங்கு தமிழில் இருந்தும் தோன்றி இருக்கலாம் என்பதை ஒத்துக் கொள்ளவே மாட்டார். வடமொழியில் இருந்து தான் தெலுங்கு தோன்றியது என்று சொல்வதில் என்ன புளங்காகிதம் என்று புரியவில்லை. அவர்கள் பள்ளிக்கூடங்களில் சமசுகிருதப் பாடம், கவிதைகள் படித்தாலும் அதைத் தெலுங்கு எழுத்துகளில் எழுதித் தான் படித்ததாகச் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன் பயன்படாத சில தெலுங்கு எழுத்துக்களை அரசு நீக்கி விட்டதாகவும் சொன்னபோது ஆடிப்போனோம் ! தெலுங்கு மாதப் பெயர்களை அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. கேட்டால், பள்ளிக்கூடத்தில் எங்களுக்கு சொல்லித் தரவில்லை என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். மாதப் பெயர்களைக் கூடச் சொல்லித் தராமல் எப்படி ஒரு பாடத்திட்டம் இருக்கும்? இப்படி மொழி குறித்த அவர்கள் அணுகுமுறை, பார்வையில் பல ஆச்சரியங்கள் எங்களுக்கு. இன்னும் பலரிடம் பழகிப் பார்த்து இந்தக் கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தெலுங்கு, மலையாளம் என்று பிற மொழிகள் குறித்த ஆர்வத்துக்கு இன்னொரு காரணம் – தமிழில் காணாமல் போன பல பழஞ்சொற்கள் எப்படி அங்கு இன்னும் புழக்கத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் சுவாரசியம். முதலில் தெலுங்குச் சொல் என்று நினைத்துக் கொண்டிருந்த சில சொற்கள் அவ்வப்போது திருக்குறள் போன்ற இலக்கியங்களில் தலை காட்டும் போது வரும் மகிழ்ச்சியே தனி. புதுசா ஏதோ புதையலைக் கண்டெடுத்த மாதிரி ! நேற்று இப்படி ஒரு சொல்லைக் கண்டெடுத்தேன். தெலுங்குல “நச்ச லேதா” அப்படின்னா “விருப்பமில்லையா”ன்னு பொருள். இதே பொருள்ல ஒரு திருக்குறளல் நச்ச என்ற சொல் வருகிறது !!

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
Kural 1008

Prose
When he whom no man loves exults in great prosperity,
‘Tis as when fruits in midmost of the town some poisonous tree.

Translation
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.

ஆக, பிரசாத்தை ஓட்ட இன்னொரு tamil also word கிடைச்சாச்சு :) நல்லா, நச்சுன்னு ஒரு சொல் தான், இல்ல :)

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

{ 4 comments… read them below or add one }

கொழுவி May 22, 2007 at 4:05 pm

அட.. ஆந்திரப் பிரசாத் :) ))))

Reply

பொன்ஸ் May 22, 2007 at 4:14 pm

:) தெலுங்கு மாதப் பெயர்கள் சம்ஸ்கிருதமாகத் தான் இருக்கும்.. கன்னடத்திலும் அப்படியே..

தெலுங்குடன் பரிச்சயமான உடனேயே ‘நச்சு’ ஒற்றுமை புரிந்தது.. ஆனால் ‘நவுத்தாரு’ தான் வெகு நாட்களுக்கு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.. அப்புறம் நம்ம நகுமோ பாட்டு கேட்ட போது தான், ‘ஓ இதுவா’ என்று உறைத்தது.. :)

எந்துகு நவுத்தாரு? : ஏன் சிரிக்கிறாய்? = என்னிடம் அடிக்கடி அவர்கள் கேட்கும் கேள்வி :) )

Reply

ravishankar May 22, 2007 at 4:33 pm

கொழுவி – இவர் உத்தம பிரசாத் :)

பொன்ஸ் – எனக்கு தமிழ்ல நச்சுங்கிற சொல்லுக்கு இந்தப் பொருள்னு நேத்து திருக்குறள் பார்த்து தான் தெரியும். இதுவரை நச்சரிக்கிறது மட்டும் தான் தெரியும்.

நகு->நவு இந்தத் தொடர்பு இப்ப நீங்க சொல்லித் தான் தெரியும். இது மாதிரி கண்ணாமூச்சி ஆடும் சொற்கள் குறித்த உங்கள் அனுபவப்பட்டியலைத் :) தந்தா நல்லா இருக்கும்.

தெலுங்கு மாதப் பெயர்கள் முழுக்க சமசுகிருதம் கிடையாது, பொன்ஸ். அவருக்குத் தெரிந்த சித்திரை, பங்குனி போன்ற தெலுங்கு மாதப் பெயர்கள் தமிழ் மாதப் பெயர்களை ஒட்டித் தான் இருந்தது. ஆனால், தமிழ்ப்பெயர்கள் கூட உண்மையில் வடமொழி மூலம் கொண்டிருக்கலாம். அறிந்தவர் தான் சொல்ல வேண்டும். தமிழ் ஆண்டுப் பெயர்கள் கூட தமிழில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

Reply

மயூரேசன் May 23, 2007 at 8:45 am

புது தமிழ்/தெலுங்குச் சொல் படித்தாகிற்றாயிற்று… :)

ஏன் அவர்களுக்கு வடமொழி மீது இந்தக்காதலோ தெரியாது..!!! நாங்க எங்கட மொழியைப் பார்க்க வேண்டியதுதான்.. இவர்களைப் பற்றி அலட்டிக்கத் தேவையில்லை!!! :)

Reply

Leave a Comment

Previous post:

Next post: