மாற்று! எப்படி மாற்று?

April 19, 2007

மாற்று! தளத்தைப் பார்வையிட்ட நண்பர்கள் பலரும் கேட்ட கேள்வி, இத்தளம் எப்படி ஒரு மாற்றாக விளங்கும் என்பது தான். திரட்டிகள் என்ற அளவில் தமிழ்மணம், தேன்கூடு, TamilBlogs தளங்கள் இருப்பதும் பரிந்துரைத் தளங்களாக கில்லி, DesiPundit போன்ற தளங்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேம்போக்காகப் பார்க்கையில், மாற்று! இன்னுமொரு தமிழ்த் தளமாகத் தெரியலாம் என்றாலும், இதன் தோற்றம், செயல்பாடு, நிர்வாகம், ஒருங்கிணைப்பு, தள வடிவமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் உண்டு.

வாசகருக்கான நன்மைகள்

* முழுக்கத் தமிழ் உள்ளடக்கம் உள்ள இடுகைகள் மட்டுமே காட்சிப்படுத்தப்படுகின்றன.
* வலைப்பதிவுகள் மட்டுமல்லாது http://www.varalaaru.com , http://www.bbc.co.uk/tamil/ , http://in.tamil.yahoo.com/index.htm , http://tamil.in.msn.com/ போன்று செய்தியோடை வசதி தரும் அனைத்துத் தமிழ்த் தளங்களில் இருந்தும் விருப்ப இடுகைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. விரைவில் எந்த ஒரு தமிழ்த் தளத்தில் இருந்தும் விருப்ப இடுகைகளை காட்சிப்படுத்த இருக்கிறோம்.
* விருப்ப இடுகைகள் மட்டுமே காட்சிப்படுத்தப்படுவதால், இடுகைகளின் உள்ளடக்கம், தரம் ஒருவராலாவது விரும்பப்பட்டும் உறுதிப்படுத்தப்பட்டுமே வெளிவருகிறது. இதனால், மதம், இனம், சாதி, மொழி, தேசம், தனி நபர் மற்றும் இன்ன பிற அடிப்படைகளில் வெறுப்புமிழக்கூடிய இடுகைகள், கண்ணியக் குறைவாக எழுதப்பட்ட இடுகைகளை 99.9% மாற்று! தளத்தில் காண இயலாது.
* தானியக்கத் திரட்டிகளில் இணைக்கப்படாத வலைப்பதிவுகளின் இடுகைகளையும் இங்கு காணலாம். ஒரு பதிவரின் ஒவ்வொரு இடுகையும் படிக்கப்பட்டே பகிர்வதால் தரம், சுவை, பயன் மிகவும் குறைந்த இடுகைகளை காண்பது குறைவாக இருக்கும்.
* 40க்கும் மேற்பட்ட தலைப்புகள் வாரியாக பகுக்கப்பட்டு காட்சிப்படுத்தும் வசதி.
* பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட இடுகைகளுக்கு தாரகைப் புள்ளிகள் வழங்குகிறோம். இதனால், மாற்றில் இடுகைகளைப் பார்வையிடும்போதே பெரிதும் விரும்பப்பட்ட இடுகைகளை இனங்காணலாம்.
* முடிவில்லாமல் பின்னோக்கி இடுகைகளைப் படித்துக் கொண்டே செல்லும் வசதி. இதனால் பகுப்புகள், தாரகைப் புள்ளிகள் அடிப்படையில் மிகப் பழைய இடுகைகளையும் தொடர்ந்து படிக்கலாம்.
* எளிமையான, கண்ணை உறுத்தாத, விளம்பரங்கள் இல்லாத பக்க வடிவமைப்பு.
* தானியக்கத் திரட்டிகளின் உள்ளடக்கத்தை எழுத்தாளர்கள் தீர்மானிக்கிறார்கள். ஆனால், மாற்று!-ன் உள்ளடக்கத்தை வாசகர்களே தீர்மானிக்கிறார்கள். இதனால், supplier dictated medium என்பதில் இருந்து மாறி user dictated medium ஆக வாசகரை மையமாக வைத்து மாற்று! செயல்படுகிறது.

இதன் மூலம் கட்டற்ற வாசிப்பனுபவத்தை ஊக்குவிக்க முயல்கிறோம். மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் தரம் உறுதிப்படுத்தப்பட்ட இடுகைகள் எவ்வளவு இருந்தாலும் அவ்வளவையும் எண்ணிக்கை கட்டின்றி காட்சிப்படுத்த முனைகிறோம்.

சிறப்பான ஓடை வசதி:

* மாற்று தளத்தின் செய்தியோடையை இந்த முகவரியில் காணலாம். தாரகைகள் மட்டுமுள்ள செய்தியோடை – http://www.maatru.net/feed.php?tag=starred
பகுப்பு வாரியான செய்தியோடைகள் –
எடுத்துக்காட்டுக்கு, ‘தமிழ்’ என்ற பகுப்புக்கு http://www.maatru.net/feed.php?category=தமிழ்
என்ற முகவரியைப் பயன்படுத்த வேண்டும்.

வலைப்பதிவருக்கான நன்மைகள்

* மாற்று!-ல் தங்கள் தளத்தை இணைக்க என வலைப்பதிவர்கள் ஒரு நிரலையும் இணைத்துக் கொள்ளத் தேவை இல்லை. இதனால், அவர்கள் வலைப்பதிவின் வேகத்தை மாற்று! தளத்தில் இணைந்திருத்தல் பாதிக்காது. நிரல் ஏதும் இல்லாததால் அவர்கள் எந்த வலைப்பதிவு மென்பொருளைக் கொண்டும் வலைப்பதியலாம். தங்கள் வலைப்பதிவுகளை மாற்றில் இணைக்கச் சொல்லி விண்ணப்பிக்கவோ காத்திருக்கவோ தேவையில்லை. மாற்றுக்கு இணைப்பு தரத் தேவையில்லை. ஒவ்வொரு புது இடுகைக்கும் மாற்றுக்குத் தெரிவிக்கத் தேவையில்லை. துறை வாரியாகவும் தாரகைப் புள்ளி வாரியாகவும் இடுகைகளை காட்சிப்படுத்துவதால் சிறப்பாக வலைப்பதிபவர்களுக்கு கூடுதல் வெளிச்சமும் ஊக்கமும் கிடைக்கும்.

ஒவ்வொரு இடுகையாகத் தான் பகிர்கிறோம் என்பதால், ஒரு தமிழ்த் திரட்டியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக பதிவர்கள் தங்களின் ஒரு பதிவு முழுவதும் தமிழில் மட்டுமே எழுத வேண்டிய கட்டாயம் இல்லை.

இதன் மூலம் கட்டற்ற வலைப்பதிதலை ஊக்குவிக்க முனைகிறோம்.

பதிவர்கள் தங்கள் வலைப்பதிவின் பக்கப்பட்டையில் தமிழ் வலைப்பதிவுகளின் செய்தி ஓடை தருவது வழக்கம். மாற்று! குறிச்சொல் ஓடைகளைப் பயன்படுத்தி துறை சார் ஓடைகளை வலைப்பதிவுகளில் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, என் கணிமை வலைப்பதிவில் கணினி, இணையம் குறித்த ஓடைகளைத் தந்திருக்கிறேன்.

தள நிர்வாகம், செயல்பாடு, ஒருங்கிணைப்பு

தளம் துவங்கியதில் இருந்து இன்று வரையும் என்றும் இது ஒரு கூட்டு முயற்சியாகும். தளத்துக்கான ஆலோசனைகள், நிரலாக்கம், வடிவமைப்பு ஆகியவை அனைத்தும் மாற்று! பங்களிப்பாளர்களின் கூட்டு முயற்சியாகும். மாற்று!-ல் பங்களிப்பாளராக ஆவதற்கென்று சிறப்புத் தகுதிகள் ஏதும் இல்லை. மாற்று! கொள்கைகளுக்கு உட்பட்டு இணக்க முறையில் ஒரு குழுவாகப் பங்களிக்கக்கூடிய அனைவரையும் மாற்று! தளத்திற்குப் பங்களிக்க வரவேற்கிறோம். தற்போதைய மாற்று! பங்களிப்பாளர்கள் எவரும் தனிப்பட்ட முறையில் பெரிதும் அறிமுகமானவர்களோ முகம் பார்த்துக் கொண்டவர்களோ இல்லை. எனினும், நேர்மறையான தமிழிணையச் சூழல் என்ற நன்னோக்கத்தை முன்னிறுத்தி இணைந்திருக்கிறோம். தளத்துக்குத் தலைவர், நிர்வாகி, முடிவெடுப்பவர், உரிமையாளர் என்று தனியாக யாரும் கிடையாது. கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே செயல்படுகிறோம். தளம் குறித்த அனைத்து செயல்பாடுகளையும், இடுகைகளின் தரம் குறித்த கருத்து வேறுபாடுகளையும் திறந்த நிலையில் உரையாடுகிறோம்.

ஒருவர் மாற்று! பங்களிப்பாளர் ஆன பின் அவரது இடுகைகளை காட்சிப்படுத்துவதைத் தவிர்க்கிறோம். இதனால், எங்கள் இடுகைகளை நாங்களே விளம்பரப்படுத்தாமல் இருக்க முனைகிறோம்.

இது ஒரு கூட்டு முயற்சி என்பதால் என்றும் ஒரு வணிக நோக்கமற்ற, விளம்பரங்கள் இல்லாத ஒரு தளமாக இருக்கும்.
பெயரளவில் கூட .net ஆக இருப்பதைக் கவனிக்கவும். .com இல்லை.

தமிழிணையச் சூழலில் உள்ளடக்கம், செயல்பாடு, பங்களிப்பு ஆகியவற்றில் மாறுபட்ட ஒரு அணுகுமுறையைக் கொண்டு வர மாற்று! முனைகிறது. இதன் மூலம் Quality, Change (வினை) , alternative என்ற பொருள் தரும் மாற்று! என்னும் சொல்லுக்கு ஏற்ப ஒரு ஆக்கப்பூர்வமான தமிழிணையச்சூழலைக் கொண்டு வர முயல்கிறோம்.

செயல்பாட்டு அளவில், பரிந்துரைக்கத்தக்க இடுகைகளின் கட்டற்ற திரட்டியாக மாற்று! விளங்கும்.

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

{ 1 trackback }

How to be picky with blog posts? - Primer for selective reading « Snap Judgment
April 15, 2008 at 7:06 pm

{ 6 comments… read them below or add one }

பாலாஜி April 19, 2007 at 10:05 pm

>> இதன் மூலம் Quality, Change (வினை) , alternative என்ற பொருள் தரும் மாற்று!

ஆகா! புள்ளரிக்குது!

Reply

ravidreams April 19, 2007 at 10:50 pm

பாலாஜி – ;)

Reply

கூமுட்டை April 20, 2007 at 4:25 am

தல,
- தாரகை புள்ளினா என்ன ?
- விருப்ப இடுகைகளை யார் மாற்றில் சேர்க்கிறார்கள் ? அல்லது எப்படி நான் ஒரு இடுகையை மாற்றில் பரிந்துரைப்பது ?
- //சொடுக்கி (mouse) இல்லாதோரும் எளிதில் தளத்தைப் பார்வையிடும் வகையில் குறுக்குவிசை வசதிகள்.// – இது சூப்பர்.
- //எளிமையான, கண்ணை உறுத்தாத, விளம்பரங்கள் இல்லாத பக்க வடிவமைப்பு.// முகப்பில் font ரொம்ப சின்னதா இருக்கு தல. fontஐயும் மாத்துங்க.
- //ஆனால், மாற்று!-ன் உள்ளடக்கத்தை வாசகர்களே தீர்மானிக்கிறார்கள்.// அத எப்படி செய்யுறது ? ஒண்ணுமே புரியல.
- பார் எக்ஜாம்புள்., நான் “கோழி புடிப்பது எப்படி ?”னு உலகத்துக்கு தேவையான இடுகையை பரிந்துரைக்கலாமா ? அந்த இடுகையை நண்பர்கள் மூலமாக, மாற்றில் அதன் ரேட்டிங்கை எகிறச் செய்ய முடியுமா ?

Reply

ravidreams April 20, 2007 at 7:11 am

தொண்டா,
- தாரகைப் புள்ளின்னா star point..சாரி for the too much tamil ;)
- மாற்றில் இடுகைகளை சேர்ப்பவர்கள் பட்டியல் இங்கே – http://blog.maatru.net/?page_id=3 . மாற்று! கொள்கைகளுடன் உடன்படுபவர்களை எங்களுடன் இணைந்து பங்காற்ற வரவேற்கிறோம்.
- எழுத்துரு குறித்து நீங்கள் சொன்னதை கவனிக்கிறோம்.
- இன்று நீங்கள் மாற்று! வாசகர். நாளை நீங்கள் பங்களிப்பாளராகி அதன் உள்ளடக்கத்தை மாற்ற முடியும். விக்கி தளங்களை அதன் வாசகர்களே மாற்றுவது போலத் தான்.
- நீங்கள் மாற்று! பங்களிப்பாளர் ஆன பின் உங்கள் விருப்ப இடுகை எதையும் இணைக்கலாம். ஆனால், சுவை, பயன், தரம் இதில் ஒன்றேனும் சற்றும் இல்லாத உருப்படாத இடுகையாக இருந்தால் பிற மாற்று! பங்களிப்பாளர்கள் தங்கள் மறுப்பைத் தெரிவித்தால், நீங்கள் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும். மாற்றில் பங்களிப்பாளராக ஆனால், நீங்கள் எழுதிய இடுகைகளை இணைப்பதை நிறுத்தி விடுவோம். தவிர, ஒரு பங்களிப்பாளருக்கு ஒரு வாக்கு தான். நண்பர்களின் பரப்பு வேலைக்கும் இடமில்லை ;)

Reply

து.சாரங்கன் April 20, 2007 at 9:42 pm

எழுதுரு சற்றுச் சிறியதாகதான் உள்ளது. எழுத்துருவை Firefox and IE உலாவிகளில் மிகவும் எளிதாக பெரிதாகவும் சிறிதாகவும் மாற்றாலாம். மாற்றுத் தளத்திலேயே இதைச் செய்தால் screen resolution குறைவாக உள்ளவர்களின் உலாவியில் எழுத்துக்கள் குண்டாய் பெரிதாய் தெரியும். இதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Reply

ravishankar May 4, 2007 at 4:12 pm

கூமுட்டை – இப்பொழுது எழுத்துரு அளவு பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி

Reply

Leave a Comment

Previous post:

Next post: