நெதர்லாந்தில் மாவீரர் நாள் கூட்டம்

December 9, 2006

in நாட்குறிப்பு, நெதர்லாந்து

நெதர்லாந்து உத்ரெட் நகர விளையாட்டு அரங்க கூடத்தில் டிசம்பர் 9, 2006 அன்று நன்பகல் 2.30 முதல் மாலை 8 மணி வரை மாவீரர் நாள் நினைவெழுச்சிக் கூட்டம் நடந்தது.

இலங்கைத் தமிழர்கள், அவர்களது செயற்பாடுகள், பண்பாடு, மாவீரர் நாள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலில் இக்கூட்டத்துக்குச் சென்றேன்.

அரங்கம் முழுக்க 3 மணி அளவில் நிறைந்திருந்தது. எப்படியும் 1500 பேருக்கு குறையாமல் கூடி இருப்பார்கள். ஜெர்மனி மாவீரர் நாள் கூட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கூடி இருந்தார்களாம் !! ஆனால், இங்குள்ள மொத்த இலங்கைத் தமிழர் தொகையைக் கணக்கில் கொண்டால் பத்தில் ஒருவர் பங்கு கொண்டிருப்பார் என்று சொல்லலாம். இந்த நாட்டில் உள்ளூர் மக்கள் கூட கேளிக்கை, சமயம் சாராத நிகழ்ச்சிக்கு இவ்வளவு பேர் கூடுவார்களா என்பது ஐயம் தான்.

அரங்கத்தில் நுழைந்தபோது மாவீரர் நினைவுப் படங்களுக்கு சாற்றுவதற்காக கார்த்திகைப் பூக்களைத் தந்தார்கள். இது தமிழீழ தேசியப் பூ. நம்மால் இயன்ற, விரும்பிய தொகையை கொடுத்து பூக்களைப் பெற்றுக் கொள்ளலாம். நிறைய மாவீரர்கள் மிகவும் இளம் வயதில் (30 வயதுக்குள்) இறந்து அமரர்களாய் இருந்தது மனதில் தைத்தது. ஏனோ, நம்ம ஊரில் திரையரங்கில் சீட்டு வாங்க நிற்கும்போது ரசிகர் மன்றம் சார்பாக வரிசையாக படம் போட்டு அடுக்கி வைத்திருக்கும் சுவரொட்டிகள் தான் நினைவுக்கு வந்தது. நம்ம ஊரில் வேறு எங்கு இளைஞர் படங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன?

தமிழகத்தில் தான் பொதுவாக இலங்கை என்று குறிப்பிடுகிறோம். ஆனால், அவர்கள் தமிழீழம், சிறீலங்கா அரசு என்று தெளிவாகத் தனித்தனியாகக் குறிப்பிடுகிறார்கள். அண்மையில் இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக கூட்டத்தில் இறுக்கம் நிலவுமோ என்று நினைத்து இருந்தேன். ஆனால், அனைவரும் உற்சாகத்துடன் இருந்தார்கள். பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தார்கள். இதை ஒரு திருவிழா போல் தான் கொண்டாடுவதாகத் தோன்றியது. மாவீரர் நினனவு என்றால் சோகமாக இருக்குமோ என்று நானாக நினைத்துக் கொண்டிருந்தது தவறாகப் போனது. பலர் பகட்டாடைகள், நகைகள் சூடி வந்திருந்தனர். ஒரு இனத்தின், சமூகத்தின் ஒன்று கூடல் நிகழ்வாகத் தான் என்னால் இதை பார்க்க முடிந்தது.

நிறைய பேர் பேசுவார்கள், தீவிரமாக ஏதாவது அலசப்படும் என்று எதிர்ப்பார்த்திருந்து ஏமாந்து போனேன். 2.30 முதல் கிட்டத்தட்ட 5 மணி வரை இசைக்குழுவினர் விடுதலைப் பாடல்களை பாடினார்கள். பிறகு, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை அவர்கள் 10 நிமிடம் போல் உரையாற்றினார். அவரது உரை அவ்வளவு சுவாரசியமாக இல்லை. கூடத்தில் இருந்த அனைவரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் பேசிய ஒரே பெரிய (வயது வந்த) ஆள் அவர் ஒருவர் தான். உள்ளூர் தமிழர்கள் ஏன் பேசவில்லை என்று எனக்குப் புரியவில்லை. நிர்வாகிகள் தவிர பிறர் படம் எடுப்பதும் தடை செய்யப்பட்டிருந்தது.

கூடத்தில் தமிழீழக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர்களின் படங்களைத் தாங்கிய படங்கள், நாட்காட்டிகள், நூல்கள், இசை வட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நிதித் திரட்டும் வெளிப்படையாகவே நடந்தது. அப்படி என்றால் ஐரோப்பிய ஒன்றியத் தடை என்றால் என்ன? ;)

பிறகு சிறுவர்களின் கன்னிப் பேச்சுகள், ஆடல், பாட்டு என்று நிகழ்ச்சி நகர்ந்தது. தமிழீழ நிலையை புதிய ஐ.நா செயலாளருக்கு எடுத்துரைப்பதற்காக கையெழுத்து வேட்டை ஒன்றும் நடத்தினார்கள். இலங்கை பொருட்களை அவர்கள் காசு கொடுத்து வாங்கினால் அந்தக் காசு இலங்கை அரசுக்குத் தான் போய்ச்சேரும்; அது தமிழரை அழிக்கத் தான் உதவும் என்பதால், இலங்கைப் பொருட்களை இறக்குமதி செய்து வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு நாடகம் போட்டார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இது போல் அன்னியத் துணிகள் எரிப்பை காந்தியடிகள் முன்னின்று செய்தது நினைவு கூறத்தக்கது.

ஏழு மணிக்குப் பிறகும் கூட்டம் நீண்டதால், நான் அரங்கில் இருந்து வெளியேறி விட்டேன். ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாள் கூட்டம் இப்படித் தான் நடக்கும் என்றால் அடுத்த ஆண்டு போக வேண்டும் என்று எனக்குத் தோன்றுமா தெரியவில்லை. ஆனால், அத்தனை தமிழ் முகங்களை, நல்ல நோக்கத்துக்காக ஒன்று கூடிய உள்ளங்களை ஒரே இடத்தில் கண்டதில் ஒரு நிறைவு இருந்தது.

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

{ 12 comments… read them below or add one }

கானா பிரபா December 9, 2006 at 11:16 pm

நன்றாகப் பதிவுசெய்திருக்கின்றீர்கள் தமிழகச் சகோதரனே, நன்றிகள்.

Reply

நற்கீரன் December 10, 2006 at 1:06 am

[[நெதர்லாந்தில் தமிழர்]] பற்றி த.வி. படங்களுடன் சேர்த்தால் நன்று :-;

புரிதல்களையும் பாலங்களையும் நீங்கள் ஏற்படுத்த எடுத்த இந்த பயணத்துக்கு நன்றி.

Reply

வெற்றி December 10, 2006 at 1:40 am

ரவிசங்கர்,
உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. மாவீரர் நாள் என்பது ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வோடு ஒன்றாகி விட்ட நாள்.

நன்றி.

Reply

Anonymous December 10, 2006 at 2:01 am

ஈழம் என்ற சொல்லுக்கே பொருள் விளங்காமல் இருக்கும் என்னைப்போல் எத்தனையோ சகோதரர்கள் இருக்கின்றார்கள். உங்களுக்கு அதனைப் பற்றி அறியக்கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்ச்சி.

நன்றி!

Reply

Anonymous December 10, 2006 at 2:57 am

நல்ல பதிவு..இங்கு நடப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றதோ..கானாபிரபா அண்ணா..என்ன சொல்கிறீர்கள்?…ஆயினும் நான் எங்கு மாவீரர் நாளுக்கு சென்றாலும் அழாமல் திரும்புவதில்லை….மாவீரர்களின் திருவுருவ படங்களை பார்க்கையில் என்னை மீறி நீர் துளிகள் சிந்தும்.. அதே சமயம் தமிழீழ தேசிய கீதம் இசைக்கும் போது ஒரு வித பெருமை..தானாக வரும் மனதில்..
நன்றி உங்கள் பதிவுக்கும்..மாவீரர் நாளுக்கு போனதிற்கும்..தொடர்ந்து செல்ல முயற்சி செய்யுங்கள்..:)

Reply

ரவிசங்கர் December 10, 2006 at 10:01 am

கானா பிரபா, நற்கீரன், ஜி, வெற்றி – வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி. ஏன் என்று தெரியவில்லை. யாரும் அழும் அளவுக்கு இக்கூட்டத்தில் ஒன்றும் நடக்கவில்லை. பெரும்பாலும் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் மட்டும் இடம்பெற்றிருந்தது ஒரு காரணம். ஆனால், வெளிநாடுகளில் எப்போதாவது நிகழும் இது போன்ற நிகழ்வுகள் தான் தமிழ்ச் சிறார்களின் திறன்களை எடுத்துக்காட்ட வாய்ப்பு என்பதால் பிழையாக கொள்ள முடியாது. (ஆனால், பெரிதும் உறுத்தியது என்னவென்றால் ஒரு பிள்ளை விடாமல் அனைவரும் தங்களுக்குள் டச்சு மொழியில் பேசிக் கொண்டது தான். தமிழ் வீட்டு மொழியாக மட்டும் இருக்கும் போல. இது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்). ஒரு இந்தியத்தமிழனின் பார்வையில் நிகழ்வு கலகலப்பாக இருந்தது என்று மேம்பாக்காக தெரிந்தாலும், இங்குள்ள தமிழர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது தான் சரியான அவதானமாக இருக்கும். மனதை கவர்ந்த இன்னொன்று யாரும் விழாக்குழுவினரில் தலைவர் தொண்டர் என்று இருந்தது போல் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகளுக்கு தலைவர், செயலாளர், பொருளாளர், கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர் என்று ஆளுக்கு ஐந்து நிமிடம் பேசி கழுத்து அறுத்து விடுவார்கள். இருக்கைகளும் யாரும் VIPக்களுக்கு என்று ஒதுக்கிப்போட்டதாகத் தெரியவில்லை. ஏழையும் பணக்காரனும் ஒன்றாக அமர்ந்ததை காண முடிந்தது. சிறுவன் (சிறுமி) ஒருவன், தேசியத் தலைவர் பற்றி பேசிய போது தலைவர் மாமா என்று விளித்தது ஆச்சர்யமாக இருந்தது. ஒருவரின் வயது அடிப்படையில் தலைவரை மாமா, அண்ணா, தம்பி என்று அழைக்க முடிவது அருமையான விதயம். தமிழ்நாட்டில் இது போன்று எந்த அரசியல் தலைவரையாவது மாமா என்று என் அக்கா மகனுக்கு அறிமுகப்படுத்த முடியுமா? அப்துல் கலாம் தாத்தா இருக்கிறார். ஆனால், அவரும் அரசியல்வாதி இல்லை. பொதுவாகவே தமிழ்நாட்டில் உறவு சொல்லி ஒருவரை அழைக்கும் பண்பாட்டை இழந்து வருகிறோம் என்பது நாம் மிகவும் வருந்தி வரும் விதயம். சிறு நகரங்களில், கொங்குப் பகுதிகளில், கிராமங்களில் அண்ணா, அக்கா என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால், படித்த சம நிலையில் உள்ளவர்களிடையில் அப்படி அழைப்பது குறைந்து வருகிறது. எல்லாம் sir, madam, மண்ணாங்கட்டி தான். சென்னையில் யாரைப் பார்த்தாலும் boss என்பார்கள். சின்ன வயதில் தமிழ்ப்படங்களில் பார்த்த கொள்ளைக்கூட்ட மொட்டைத் தலை bossகள் தான் நினைவுக்கு வருவார்கள்.ஹ்ம்ம்…

Reply

someone December 10, 2006 at 4:45 pm

In my view, I think the maavIrar day is a day to honour our fallen heroes. It’s observed in similar fashion (slightly less formal) to remebrance day obseverd by the western countries in memories of their soldiers. I wouldn’t expect people to grieve on that day although some may do so.

(sorry for typing in English)

Reply

ரவிசங்கர் December 10, 2006 at 10:49 pm

someone – நீங்கள் சொல்வது சரி. வீர மரணங்களை பெருமிதத்தோடு தான் கொண்டாட வேண்டும். என் புரிதல் தான் தவறாக இருந்தது. இருந்தும் யாழில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக இறுக்கம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அப்படித் தெரியவில்லை. ஒரு வேளை நான் பலரிடம் நெருங்கிப் பேசித் தெரிந்து கொள்ளவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம்

Reply

Anonymous December 12, 2006 at 8:39 am

ரவி ஒரு வேளை தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் மாவீரர் நாள் முறை உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமளிக்காமல் இருதிருக்கும். பின்வரும் சுட்டி தமிழீழத்தில் நடைபெற்ற மாவீரர் நாளைப் பற்றி ஒரு வலைப்பதிவாளர் எழுதியது. படித்துப் பாருங்கள்.
தமிழீழ மாவீரர் நாள் ஒரு அனுபவம்

Reply

ரவிசங்கர் December 12, 2006 at 10:52 am

அடையாளம் காட்டாத நண்பருக்கு நன்றி. நீங்கள் மேலே குறித்துள்ள பதிவு மனதை பிசைவதாக இருக்கிறது ;(

Reply

Arun February 13, 2008 at 9:50 pm

//இதை ஒரு திருவிழா போல் தான் கொண்டாடுவது போல் தோன்றியது. மாவீரர் நினனவு என்றால் சோகமாக இருக்குமோ என்று நானாக நினைத்துக் கொண்டிருந்தது தவறாகப் போனது//

மாவீரர் நாள் எமது தேசத்தின் துக்கதினம் அல்ல: நாம் கண்ணீர் சிந்திக் கவலைகொள்ளும் சோகதினமும் அல்ல: இன்றைய நாள் ஒரு தேசிய எழுச்சி தினம்: எமது தேசம் சுதந்திரம் வேண்டி உறுதி பூணும் புரட்சி தினம்.

இது தமிழீழத் தேசிய தலைவரின் சிந்தனை.

மாவீரர் நிகழ்வு பாடலை கேட்க விரும்பினால் எனது தளத்தில் கேட்கலாம்.http://hongkongeelavanvideo.blogspot.com/

தமிழீழம் தமிழகம் என்று கடல் பிரித்தாலும் தமிழர் எனும் எமது உணர்வும், எழுத்தும் என்றும் தொப்புல் கொடி உறவுகளாக என்றென்றும் இருப்பவை. அது ஓரே நாட்டில் வாழ்ந்தாலும் சிங்களவனோடு இருக்காது.

நன்றி

Reply

ரவிசங்கர் February 13, 2008 at 10:06 pm

Arun, நீங்கள் சொல்வது உண்மையே. மாவீரர் நாள் கூட்டத்துக்குப் போகும் வரை நான் தான் அதைப் பற்றி பிழையான புரிதல் கொண்டிருந்தேன். ஆனால், ஈழத்தில் வெளிநாட்டில் உள்ள அளவு கொண்டாட்டம் இருப்பதில்லை என்றும் இறுக்கம் கூடியதாக இருக்கும் என்றும் நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

Reply

Leave a Comment

Previous post:

Next post: