ஈழத்தமிழர்களுடன் பழகுபவர்கள் எல்லாரும் விடுதலைப்புலிகளா?
1991ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது எனக்கு வயது 9. அதைத் தொடர்ந்து சில நாட்களில் தான் விடுதலைப் புலிகள் என்ற பெயர் முதன்முதலில் எனக்குத் தெரிய வந்தது.
உயர்நிலைப்பள்ளியில் இருக்கும்போது ஈழத்தில் இருந்து வந்த சில நண்பர்களும் என்னுடன் படித்தார்கள். படகில் ஏறி, துப்பாக்கிச் சூடுகளுக்கு இடையே நாடு தப்பிய கதைகளையும் அவர்கள் கடைகள், வீடுகள், உடமைகள் சீரழிக்கப்பட்ட கதைகளையும் சொல்வார்கள். கேட்டுக் கொள்வோம்.
ஜெர்மனியில் முதுகலைப் படிப்பு படித்த போது அங்கிருந்த புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்றின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. தமிழைக் கேட்காமல் தடுமாறிய ஊரில் அவர்களின் கனிவும் விருந்தோம்பலும் தமிழ் உணர்வும் மனம் கவர்ந்தது. வார இறுதி நாட்களில் அவர்கள் வீட்டுக்குச் செல்வதும் அவர்கள் பிள்ளைகளுடன் விளையாடுவதும் தமிழாலயப் பள்ளியில் தமிழ்ப் பாடம் சொல்லித் தருவதும் என்று வார இறுதிகள் அருமையாக கழிந்தன. அவர்கள் மூலமாக ஈழத்து வாழ்க்கை, மனிதர்கள், உணர்வுகள், பிரச்சினைகள், உணவு குறித்து நேரடியாக அறிய முடிந்தது. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டில் குடியேறி இருக்கும் ஒரு தமிழ்க்குடும்பத்தைக் காட்டிலும் அவர்கள் கூடுதல் கனிவுடன் என்னை நட்பு பாராட்டியதாகத் தான் தோன்றுகிறது. பொங்கல் விழா அன்று பொங்கல் சமைத்து தேவாரம் பாடி இறைவனை வாழ்த்தியதும் அதைத் தன் பிள்ளைகளுக்கும் அவர் சொல்லித் தந்ததும் விந்தையாக இருந்தது.
லைடன் வந்த பிறகு இசுலாமியரான ஒரு இலங்கைத் தமிழருடன் பழக நேர்ந்தது. இலங்கையில் அரசியல் அடிப்படையில் இசுலாமியர் வேறு, தமிழர் வேறு என்று அப்பொழுது தான் உறைத்தது. ஈழப் போராட்டம் குறித்த அவர்களின் வேறுபட்ட பார்வையும் புரிந்தது (இவிங்க (விடுதலைப்புலிகள்) ஏன் shell அடிச்சு சாவிறாகள்? இருக்கத வச்சுக்கிட்டு இருக்க வேண்டியது தானே? சும்ம்மா..!!! என்ற வகையில் அவரது கருத்து இருந்தது !). எந்த ஓரு தமிழ்நாட்டுத் தமிழனுக்கும் இது எளிதில் புரிபடாத ஒன்று.
இங்கு, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உணவகங்களில் வேலை பார்ப்பார்கள் போலும். குறைந்தபட்சத் தகுதிகளுடன் புலம் பெயரும் சில ஈழத்தமிழர்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வேலையும் அது தானே? இங்கு வந்த புதிதில் என்னைப் பார்த்த பல ஈழத் தமிழரும் முதலில் கேட்ட கேள்வி – எந்த restaurantல் வேலை பார்க்கிறீர்கள்? ஆனால், இங்கேயே பிறந்து வளர்ந்து கல்வி கற்கும் பிள்ளைகள் உள்ளூர்ப்பிள்ளைகளுக்கு ஈடாக எல்லா துறைகளிலும் மிளிரத் தொடங்கி இருக்கிறார்கள். தொழில் முனையும் ஈழத்தமிழரும் நிறைய இருக்கிறார்கள். நெதர்லாந்தில் நடந்த மாவீரர் நாள் கூட்டத்துக்குச் சென்று வந்ததும் ஒரு நல்ல அனுபவம்.
விக்கிபீடியா, விக்சனரி, மாற்று!, தமிழ் வலைப்பதிவுலகம் என்று நான் உலவும் பல தமிழ்க் களங்களிலும் ஈழத் தமிழர்களுடனான நட்பு இன்னும் பெருகிக் கொண்டே போகிறது. அடிக்கடி அவர்களிடம் இருந்து வரும் மடல்கள், அழைப்புகள், சந்திப்புகள் ஆகியவற்றைக் காண நேரும்போதும், இது குறித்து ஊரிலோ வீட்டிலோ நண்பர்களிடமோ பேசும் போது வரும் தவறாத, உடனடி மறுமொழிகள் இப்படி இருக்கும் -
”ஏ..நீயும் புலியா?”, “உங்கிட்ட சாக்கிரதையா இருக்கணும் டோய்”, “அடுத்து எங்க தாக்குதல்?” “பிடிச்சு உள்ள போடப் போறாங்க”
இதன் உள்ளார்ந்த பொருளும் தொனியும் புரிதலும் இது தான் -
ஈழத் தமிழர்களுடன் பழகுபவர்கள் எல்லாரும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுடன் பழகாமல் இருப்பது நல்லது. ஈழத் தமிழர்களுடன் பழகப் போய் ஏன் வம்பு? சும்மா, வீணா சண்டை போடுகிறார்கள்.
என்னை மிகவும் கவலை கொள்ள வைப்பதுவும் எரிச்சலடைய வைப்பதும் இது போன்ற தொனிகளில் வரும் மறுமொழிகள் தான். இப்படி பேசுபவர்களிடம் உடனடியாக நான் திருப்பிக் கேட்பது – “சரி, உங்களுக்கு ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள் குறித்து தெரிந்ததைச் சொல்லுங்கள்”. அவர்களின் பதில்கள் பெரும்பாலும் ராஜீவ் காந்தி கொலையில் தொடங்கி ராஜீவ் காந்தி கொலையில் முடிந்து விடும் தட்டையான காலாவதியான புரிதலுடையதாகவே இருக்கிறது. இந்தக் கருத்தைப் பரப்பியதில் தமிழ்நாட்டு ஊடகங்கள் பயந்தாங்கொள்ளித்தனமான நேர்மையற்ற பங்கு வகித்திருக்கின்றன. உரிமைப்போராட்டமோ தீவிரவாதமோ – குண்டு போட்டான், செத்தான் – என்ற பரபரப்புச் செய்தியைத் தாண்டி அவற்றின் பின்னணி, வரலாற்றை விளக்க பெரும்பாலான மக்களீர்ப்பு ஊடகங்கள் தவறி விடுகின்றன. அல்லது – அச்சோ பாவம், எப்படி சாகிறார்கள் பாருங்கள் – என்று அனுதாப பிரியாணிப் பொட்டலங்ககளைக் கட்டி விற்று காசு பார்க்கின்றன.
ஈழப் போராட்டப் பின்னணி, வரலாறு, விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கு முன்னமே இலங்கையில் இருந்து பாரபட்ச நிலை, அறவழிப் போராட்டங்கள், கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, அடக்கு முறை, அமைதிப் பேச்சுக்கள், உயிர்-உடமை-கற்பு இழப்புகள், இலங்கை அரசுக் கூற்றுக்கள், நிலைப்பாடுகள், இந்திய அமைதிப்படையின் செயல்பாடுகள் என்று பல விசயங்களையும் கோர்வையாக எடுத்துரைத்த பின்னர் கொஞ்சம் பின்வாங்கி – “ஓ, இதுல இப்படி எல்லாம் இருக்கா” என்பார்கள்.
ஆனால், இது ஏதோ நான் பழகிய ஓரிருவர் மனநிலையை எதிரொலிப்பவை அல்ல. படிக்காதவர் முதல் படித்தவர் வரை இந்த மனநிலை தமிழகத்தில் புரையோடி இருக்கிறது என்று சொல்லலாம். அயல்நாட்டில் இன்னும் மோசம். இங்கு வந்த புதிதில் என் உடன் வேலை பார்ப்பவர் ஒருவர் நான் தமிழ்நாட்டுத் தமிழன் என்று அறிந்து – “ஓ, நீங்க நல்ல தமிழரா?” என்று போகிற போக்கில் ஒரு வரி சொன்னார். “ஈழத் தமிழன் கெட்ட தமிழன்” என்ற ஒரு கருத்தை வெளிநாட்டு ஊடகங்கள் தெளிவாகப் பரப்பி விட்டிருக்கின்றன.
தமிழகத்தின் முன்னணி நாளிதழில் ஒரு முக்கியமான பொறுப்பு வகிக்கும் நண்பர் ஒருவரிடம், “தமிழ் விக்கிபீடியா குறித்த தகவல்களை ஏன் நீங்கள் அவ்வளவாகத் தருவதில்லை” என்று கேட்டதற்கு – “அதில் ஈழத்துக் காரர்களின் பங்களிப்பும் வாடையும் அதிகம் இருக்கிறதே” என்று தயங்கினார். எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. ஒரு உலகளாவிய தமிழ்த் திட்டத்தில் ஈழத்துக் காரர்களின் பங்கு அதிகம் இருப்பதற்கு அவர்கள் பெருமைப்பட வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெட்கப்பட்டு மேலும் பங்களிக்க முன் வர வேண்டும். அதை விடுத்து அங்கு ஈழத்தவர் அதிகம் என்று ஒதுங்குவது என்ன மனப்பான்மை?
மாற்று! குறித்து அவரிடம் உரையாடிய போதும் ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புகளை அவ்வளவாகக் காட்சிப் படுத்த வேண்டாம் என்றும் அதில் தமிழக வாசகர்களுக்கு அவ்வளவு ஆர்வமிருக்காது என்றும் கூறினார். பிபிசி தமிழ் வானொலி அதிக அளவில் ஈழத்துச் செய்திகள் தரப்போய் தான் தமிழக நேயர்களை இழந்திருக்கிறது என்றும் கூறினார். வணிக வெற்றி நோக்கில் அவரது அணுகுமுறை சரியாக இருக்கலாம். இருந்தாலும் வணிக வெற்றி தாண்டி தார்மீகப் பொறுப்பும் இருக்க வேண்டிய ஊடகத்துறையில் இருக்கும் இவர்களைப் போன்றோரின் மனநிலை கவலை கொள்ள வைக்கிறது. காத்தவராயன்பட்டியில் தேநீர்க்கடையில் பேருந்து புகுந்ததைக் கட்டம் கட்டி செய்தி வெளியிடும் ஊடகக்காரர்கள் ஈழத்தின் செஞ்சோலைக் கொடுமைக்கு எந்த அளவு முக்கியத்துவம் தந்தார்கள்?
இலண்டன் குண்டு வெடிப்புக்கு ஓராண்டுக்குப் பிறகும் மெழுகு வர்த்தி ஏற்றி சோகப் பாடல் இசைப்பதை நாள் முழுதும் காட்டும் அதே ஊடகங்கள் ஈராக்கில் வல்லரசு ஆதரவுடன் அன்றாடம் நடக்கும் உயிரிழப்புகளை வானிலை அறிக்கை, உணவுப் பட்டியல் விவரம் போல் சொரணையின்றி அலைபரப்புவது என்ன நியாயம்? தீவிரவாதி போட்ட குண்டு தான் துளைக்குமா? அரசு ஆதரவுடன் கட்டவிழ்க்கப்படும் வன்முறை என்ன மயிலிறகு போல் தடவிக் கொடுக்குமா? ஆயிரம் தான் அடிச்சாலும் அவன் புருசன் என்ற பெண்ணடிமை மனநிலைக்கும் அரசாங்கம் அடிச்சா வாங்கிக்க வேண்டியது தானே என்ற அடிமை மனநிலைக்கும் என்ன வேறுபாடு?
வன்முறை, அரசாங்கங்களின் அடிப்படை உரிமை போல் ஏற்றுக் கொள்ளப்படுவதும் மக்கள் போராட்டங்கள் என்றால் காலணா தட்டியில் வாசகங்கள் எழுதி சாலை மறியல் செய்வது தான் என்பது போன்றும் சொரணையற்ற ஒரு சமூக மனநிலை கட்டி எழுப்பப் படுகிறது. “காந்தி தான் அறவழியில் போராடி இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்” என்று பள்ளிக்கூட வரலாற்றுப் பாடநூல்கள் மூலம் பசுமரத்தாணி போல் பலர் மனதில் பதிய வைத்து இருக்கிறார்கள். இந்தியா விடுதலை அடைந்த கால கட்டத்தில் விடுதலை அடைந்த இன்னும் பல நாடுகளில் எந்த காந்தியும் இல்லாமல் எப்படி விடுதலை கிடைத்தது என்று எவரும் எண்ணிப் பார்ப்பது இல்லை. அறவழியில் போராடுபவன் நல்லவன் என்றும் மாற்று வழிகளில் போராடுபவன் கெட்டவன் என்றும் மசாலாத்தனமான ஒரு மனப்பாங்கு நிலவுகிறது.
**
ஈழத் தமிழர்கள், அவர்களுடன் பழகுபவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளா, புலிகள் நல்லவர்களா கெட்டவர்களா என்ற கேள்விகளுக்குச் செல்லும் முன் ஈழ வரலாறு-தற்போதைய நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வு, அங்கு வாழும் மனிதர்களின் உண்மை நிலை, துயரங்கள் குறித்த குறைந்தபட்ச மனிதத் தன்மையுடனான அணுகுமுறையாவது ஒவ்வொருவருக்கும் தேவை.
பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து கொண்டு அறிவுரை சொல்லி எழுதுவது எவருக்கும் எளிது. பாதிக்கப்படப்போவது அங்குள்ள மக்களே. அவர்களின் ஆயுதத்தை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.
**
இந்த முற்றுப்பெறாத இடுகை ஓராண்டுக்கும் மேலாக Draftகள் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தது. இதை எப்படி முடிப்பது என்றும் தெரியவில்லை. அவ்வப்போது திரும்பத் திரும்ப வந்து போகும் எண்ணங்கள், கேள்விகளின் தொகுப்பாக இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும்.
என் நண்பன் பெங்களூரில் தன்னுடைய அலுவலக பேருந்தில், பிரபாகரனின் சுயசரிதை பொத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவனுடைய சகாக்கள் சிலர் “நீ என்ன புலிகளின் ஆதரவாளரா ? ” என்று எதோ தீண்டத்தகாத செயல் செய்பவனைப் பார்த்து கேள்வியினை எழுப்புவது போல கேட்டுள்ளனர். புலிகள் பக்கம் உள்ள நியாயத்தை பற்றியோ அல்லது சில ஈழம் பற்றிய நம் கருத்தினை உதிர்த்தாலே நாம் விடுதலைப்புலி இயக்கம் சேர்ந்தவரோ என்ற நோக்கில் தான் கருத்துகளும் கேள்விகளும் வருகிறது.
//ஈழத் தமிழர்களுடன் பழகுபவர்கள் எல்லாரும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுடன் பழகாமல் இருப்பது நல்லது. ஈழத் தமிழர்களுடன் பழகப் போய் ஏன் வம்பு? சும்மா, வீணா சண்டை போடுகிறார்கள்.//
ஈழத் தமிழர்களுடன் பழகுபவர்களே விடுதலைப் புலிகள் என்று கருதினால், அப்போ ஈழத் தமிழர்கள் அனைவரும் அவர்கள்தான்னு நினைக்கிறாங்களா?
சந்தோஷ் – உங்கள் நண்பருக்கு நேர்ந்த அனுபவங்கள் தான் எனக்கும்.
கலை,
//ஈழத் தமிழர்களுடன் பழகுபவர்களே விடுதலைப் புலிகள் என்று கருதினால், அப்போ ஈழத் தமிழர்கள் அனைவரும் அவர்கள்தான்னு நினைக்கிறாங்களா?//
இதுல உங்களுக்குச் சந்தேகம் வே இருக்கா
புலிகள் = ஈழத்தமிழர்கள்னு அரசும் ஊடகங்களும் ஒத்துக் கொள்வதில்லை. ஆனால், ஈழத்தமிழர்கள் = புலிகள்னு மட்டும் பரப்புறாங்க. இது என்ன சமன்பாடு
//அரசு ஆதரவுடன் கட்டவிழ்க்கப்படும் வன்முறை என்ன மயிலிறகு போல் தடவிக் கொடுக்குமா? ஆயிரம் தான் அடிச்சாலும் அவன் புருசன் என்ற பெண்ணடிமை மனநிலைக்கும் அரசாங்கம் அடிச்சா வாங்கிக்க வேண்டியது தானே என்ற அடிமை மனநிலைக்கும் என்ன வேறுபாடு?//
நன்றி
//தமிழகத்தின் முன்னணி நாளிதழில் ஒரு முக்கியமான பொறுப்பு வகிக்கும் நண்பர் ஒருவரிடம், “தமிழ் விக்கிபீடியா குறித்த தகவல்களை ஏன் நீங்கள் அவ்வளவாகத் தருவதில்லை” என்று கேட்டதற்கு – “அதில் ஈழத்துக் காரர்களின் பங்களிப்பும் வாடையும் அதிகம் இருக்கிறதே” என்று தயங்கினார். //
நாளிதழும் ஒரு ஊடகத்துறைச் சார்ந்தது அல்லவா? குறிப்பாக ஊடகத்துறையில் உள்ளோர் எந்த ஒரு விடயத்தையும், செய்தியையும் பக்கச்சார்பின்றி பகுத்து ஆய்வு செய்தே கருத்து வெளியிடபவர்களாக அல்லவா இருக்கவேண்டும்?
(ஈழத்துக் காரர்களின் பங்களிப்பு என்பதை விடுங்கள்) பொதுவாக அந்த வாடை, இந்த வாடை என்று ஒரு குறிப்பிட்டசார் தகவல்களையே பார்க்கச் சகிக்காதவர், எவ்வாறு அவை சார்ந்த சரியான செய்திகளை மக்களுக்கு வழங்கமுடியும்? எவ்வாறு இதுப் போன்றவர்களால் நாளிதழின் முக்கிய பொறுப்புவகிப்பவாராக இருக்கமுடியும்? இவருக்கு கீழ் பணிபுரிவோரின் நிலை எவ்வாரானதாக இருக்கும்?
ஆக இதுப்போன்றவர்கள் முக்கிய பொறுப்பு வகிக்கும் நாளிதழாக இருக்குமானால், அது (துர்) நாறுமிதழாகத்தான் இருக்கமுடியும்.
//தமிழகத்தின் முன்னணி நாளிதழில் ஒரு முக்கியமான பொறுப்பு வகிக்கும் நண்பர் ஒருவரிடம், “தமிழ் விக்கிபீடியா குறித்த தகவல்களை ஏன் நீங்கள் அவ்வளவாகத் தருவதில்லை” என்று கேட்டதற்கு – “அதில் ஈழத்துக் காரர்களின் பங்களிப்பும் வாடையும் அதிகம் இருக்கிறதே” என்று தயங்கினார். //
2005-ல் ஒருமுறை தினமலரிலிருந்து ஒரு பத்திரிகையாளர் என்னிடம் தொடர்புகொண்டு பேசும்போது ஊடே சொன்னார், பலகாலம் தமிழ்மணம் ‘ஒரு ஈழத்தவரால் நடத்தப்படுகிறது’ என்று நம்பியதால் அதை ஒதுக்கிவிட்டுப் போய்க்கொண்டிருந்தாராம் (என் பெயர் வேறு ‘காசி ஆறுமுகம்’, கவிஞர் காசி ஆனந்தனைப்போல ஒலிக்கிறதாச்சா? பிறகு கேட்கணுமா?:))
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மற்ற எல்லாவற்றையும் விட மிக மோசமாக பாழ்பட்டுக் கிடப்பது ஊடகங்களே.
அருண் – உங்கள் கருத்துக்கள் சரி. ஆனால், தற்போது இருக்கும் எந்த பெரிய வெகுமக்கள் ஊடக நிறுவத்தின் நடுநிலைத் தன்மையிலும் எனக்கு நம்பிக்கையும் இல்லை. எதிர்ப்பார்ப்பதும் இல்லை.
காசி – உங்கள் பேரை ஒருவேளை காசி என்று மட்டுமோ காசி விசுவநாதன் என்றோ வைத்திருந்தால் உதவி இருக்குமோ
ரவி,
நனவோடைக்கு நன்றி. வலைப்பதிவிலே ஈழத்து விவகாரத்தில் புகுந்து புறப்படும் பதிவர் ஒருவர், நான் ஈழப்பதிவர்களுடன் ‘எண்டு’ ‘அங்கடை’ ஏலை’ என்று எழுதிக்கொண்டிருப்பதைப்பார்த்து ‘நீங்களும் ஈழம் என்று நினைச்சுகிட்டு இருந்தேன்” என்றார். ஆனால் அவர் நீங்கள் சொல்வது போல் ஈழத்துக்கு எதிரானவர் அல்ல.
//1991ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது எனக்கு வயது 9.//
தம்பி அப்படியா?
karthikramas –
ஒரு வேளை நீங்க ஈழத்தவர்னு நினைச்சதால் “நீங்க விடுதலைப்புலியா” ன்னு கேக்கத் தேவையில்லாம முடிவே கட்டிட்டாங்களோ
சும்மா பகிடிக்கு
எல்லாரும் ஈழத்துக்கு எதிரானவங்க இல்லை. ஆனா, இடுகையில் சொன்னபடி உள்ளவங்களையே அதிகம் சந்திச்சிருக்கேன்.
//தம்பி அப்படியா?//
ஆமாங்ணா
நன்றி, ரவி,
சொல்ல வேண்டிய கருத்தை, தெளிவாக உறைக்க கூடிய முறையில் கூறியிருக்கிறீர்கள். வியாபார நோக்கோடு செய்தி வழங்கும் ஊடகங்கள், மக்களை சிந்திக்க விடுவதில்லை. ஒரு செய்தியை வழங்கும் போது, அதன் பின்னணி பற்றி அலசி ஆராய்ந்து, வாசகர்களின் அறிவை வளர்க்கும் நேர்மையான ஊடகத்துறை வரும் வரை, இந்த நிலைமை நீடிக்கும் என நினைக்கிறேன். இருந்தாலும் உங்களைப் போன்ற சிலராவது, குறைந்த பட்சம் இணையத்திலாவது எழுதுவது ஆறுதலான விடயம். ஒரு சிறு தீப்பொறி கூட வருங்ககாலத்தில் பெருந்தீயாக மாறலாம்.
மக்கள் மயப்பட்ட ஊடகத்திற்காக சேர்ந்து போராடுவோம்.
-கலையரசன்
கலையரசன் – நன்றி. வருங்காலம், இணையம் ஊடான மக்கள் ஊடகங்களுக்குத் தான் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை.
//புலிகள் = ஈழத்தமிழர்கள்னு அரசும் ஊடகங்களும் ஒத்துக் கொள்வதில்லை. ஆனால், ஈழத்தமிழர்கள் = புலிகள்னு மட்டும் பரப்புறாங்க. //
உது இலங்கையில பல இடங்களில் கேட்ட சமன்பாடு. பல ஈழத்தமிழர் மீது சுமத்தப்படும் சமன்பாடுந்தான்.
ரவி சொல்லவேண்டியவற்றை நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். ஈழத் தமிழர் பிரச்சினையை ராஜீவ் காந்தி கொலையுடன் மட்டுமே தொடர்புப் படுத்திப் பார்ப்பவர்கள் வாசிக்க வேண்டிய பதிவு.
இங்கே வட இந்திய நன்பரொருவரோடு நட்புக் கிடைத்தது அப்போது அவர் கேட்ட முதல் கேள்வியே “ஏன் அவர்கள் ராஜிவைக் கொன்றனர்?” என்பது தான். அந்த வட்டத்திலிருந்து அவரை வெளியே கொண்டுவர முழு வரலாற்றையும் கூறவேண்டியிருந்தது.
நன்றி, டெரன்ஸ். என் அனுபவமும் உங்களுடையதைப் போன்றே. தமிழர் அல்லாதவர்கள், அதுவும் வடக்கே மேலே செல்லச் செல்ல புரியவைக்க இன்னும் சிரமப்பட வேண்டி இருக்கும். ஏனெனில், இன உணர்வு என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டில் தான் இது தொடர்பில் கொஞ்சமாவது மாற்றுக் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
ரவி அருமையான பதிவு… புரிதலுக்கு கோடி நன்றிகள். மனதில் இருப்பதை இப்படி வெளிப்படையாக இந்தியத் தமிழ் நண்பர்கள் சொல்வதில்லை.. சாதுவாக மழுப்புவார்கள்!!!
எனக்கு இணையத்தில் ஒரு ஹிந்தி நண்பர் இருக்கின்றார். கிட்டத்தட்ட 5 வருடங்கள் இருவரும் நண்பர்கள். இன்னமும் அவருக்கு இலங்கைப் பிரைச்சனை பற்றிய தெளிவான பார்வையை ஏற்படுத்த முடியவில்லை!!! எதைத் தொடங்கினாலும் ராஜூவில் வந்து நிற்பார்…!!!
நன்றி!
ரவி அருமையான பதிவு… புரிதலுக்கு கோடி நன்றிகள்.
ரவி உண்மையை சொன்னால் நன் ரொம்ப சந்தோஷ படுவேன் ஒரு விடுதலை புலியாய் இருந்த குறைந்த பட்சம் என் உயிரை விடலாம் என்ன சொல்றேங்க ரவி. என் அப்பா 10 வருஷம் இலங்கையில் இருந்தவர் அவர் நேரிய சொல்லுவர் அங்க நடக்கிற கொடுமைகள் பற்றி. உண்மையை சொன்ன இந்திரா காந்தி அம்மையார் தன் விடுதலை புலிகள் ஆயுதும்ஏந்தகாரணமானவர். இதெல்லாம் சொன்ன எந்த மடையனும் நம்ப மாட்டான். தவிர 1983 இல தான் புலிகள் இலங்கை தமிழ் மக்கள் சார்பா ஆயுதம் ஏந்திணங்க அது வரை அஹிம்சை போராட்டம் தான் நடந்து இருந்தது. உண்மை என்னன்னா தமிழ் மக்கள் பத்தி பேர்க்கு இலங்கை பற்றி தெளிவான கருதது இல்ல. அதை தெளிவா சொல்லி தரவும் எந்த தமிழ் தலைவருக்கும் நேரம் இல்லை.எல்லாம் நம்ம நேரம்.
Hi Ravi
I totally agree with your view. The peoples dont have idea about Eelam. They only know that Rajiv was killed by LTTE. But they even dont know that Rajiv was tried by a SriLankan navy man. There is no leader to explain what is happening in Eelam.It is our responsibility to tell the truth.
With Regards
R.Prakash
//ஈழப் போராட்டப் பின்னணி, வரலாறு, விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கு முன்னமே இலங்கையில் இருந்து பாரபட்ச நிலை, அறவழிப் போராட்டங்கள், கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, அடக்கு முறை, அமைதிப் பேச்சுக்கள், உயிர்-உடமை-கற்பு இழப்புகள், இலங்கை அரசுக் கூற்றுக்கள், நிலைப்பாடுகள், இந்திய அமைதிப்படையின் செயல்பாடுகள் என்று பல விசயங்களையும் கோர்வையாக எடுத்துரைத்த பின்னர் கொஞ்சம் பின்வாங்கி – “ஓ, இதுல இப்படி எல்லாம் இருக்கா” என்பார்கள்//
நூற்றுக்கு நூறு உண்மை
விடுதலை புலிகள் ஆயுத மேந்து வதற்கு முந்தய நிலயை தெளிவாக்கும் வட்டுகோட்டை பிரகடனம் எத்தனை பேரை சென்றடைந்து இருக்கிறது …
முழு பிரகடனமும் படிக்க
http://www.tamilnation.org/selfdetermination/tamileelam/7605vaddukodai.htm
நன்றி
கோகுல்
வணக்கம்
சமூகத்தைப் பற்றிய ஒரு நல்ல தகவல்களை தந்திருந்தீர்கள். புத்திரிகை துறையில் இருப்பவர்களுக்கு நாம் வாழும் பொருளாதார அமைப்பில் ஒரு மனிதனுக்கு கொடுக்கக் கூடிய ஜனநாயக உரிமைகள் என்ன என்பதை தெரியாதவர்களாக இருக்கின்றனர். நீங்கள் கூறுயது போல ஆண்டான் அடிமை மனநிலை அப்படியே இருக்கின்றது.
சுப்பிரமணிசாமி மீதான முட்டையடிக்குப் பின்னர் அவாளுக்கு பாதிப்பு என்றால் அரச இயந்திரம் எப்படித் துடித்தது என்பதை பார்க்க முடிந்தது.
இவை மாத்திரம் அல்ல. ஒரு மனிதனுக்கு பேச்சுத் சுதந்திரம்இருக்கின்றது என்பதை அறியாதவர்ளாக
நறுக்குன்னு இருக்கு நண்பரே
//தமிழகத்தின் முன்னணி நாளிதழில் ஒரு முக்கியமான பொறுப்பு வகிக்கும் நண்பர் ஒருவரிடம், “தமிழ் விக்கிபீடியா குறித்த தகவல்களை ஏன் நீங்கள் அவ்வளவாகத் தருவதில்லை” என்று கேட்டதற்கு – “அதில் ஈழத்துக் காரர்களின் பங்களிப்பும் வாடையும் அதிகம் இருக்கிறதே” என்று தயங்கினார். எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. ஒரு உலகளாவிய தமிழ்த் திட்டத்தில் ஈழத்துக் காரர்களின் பங்கு அதிகம் இருப்பதற்கு அவர்கள் பெருமைப்பட வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெட்கப்பட்டு மேலும் பங்களிக்க முன் வர வேண்டும். அதை விடுத்து அங்கு ஈழத்தவர் அதிகம் என்று ஒதுங்குவது என்ன மனப்பான்மை?
மாற்று! குறித்து அவரிடம் உரையாடிய போதும் ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புகளை அவ்வளவாகக் காட்சிப் படுத்த வேண்டாம் என்றும் அதில் தமிழக வாசகர்களுக்கு அவ்வளவு ஆர்வமிருக்காது என்றும் கூறினார். பிபிசி தமிழ் வானொலி அதிக அளவில் ஈழத்துச் செய்திகள் தரப்போய் தான் தமிழக நேயர்களை இழந்திருக்கிறது என்றும் கூறினார். வணிக வெற்றி நோக்கில் அவரது அணுகுமுறை சரியாக இருக்கலாம். //
இன்று மீண்டும் ஒரு முறை இந்த இடுகையைப் பார்த்தேன். உங்களது அந்த நாளிதழில் பணிபுரியும் நண்பர் தற்போது தனது அபிப்பிராயத்தை மாற்றியிருக்கவும் கூடும் என நினைக்கிறேன். தற்போது தமிழக மக்களின் மனநிலையை புரிந்து கொண்டிருந்தால், வணிக ரீதியில் வெற்றி பெறவாகவேனும் அவர் யோசிக்கக் கூடும். ஈழ மக்களின் வாடையே விரும்பாதவர் என்ன செய்வார் என்று சொல்வதும் கடினம்தான்.
I am all for you to pour out your feelings on the issue.There are so many dimensions to the srilankan tamil issue.You criticise people for not knowing about all aspects on the matter.Just google -srilanka cabinet of ministers-and see how many people of indian tamil origin are ministers even now.I promise you this information is not hard to find.
ஆணித்தரமான கருத்துக்கள். ஒரு சுள்ளென்ற வெயிலில் நனைந்த சுகத்தை தந்தது..
பாராட்ட வார்த்தை இல்லை. இது ஈழத்தில் கொள்ளப்படும் ஒவ்வொரு அப்பவித் தமிழனுக்கும் சமர்ப்பனமாகட்டும்… தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ் துரோகிக்கும் சவுக்கடி ஆகட்டும்..