ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

முன்சன் தமிழாலயப் பள்ளி

April 13th, 2007 · 4 Comments · தமிழ், நாட்குறிப்பு

2005 நவம்பர் முதல் 2006 ஜனவரி வரை ஜெர்மனியின் முன்சன் நகரில் உள்ள தமிழாலயப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை ஓய்வு நாளில் தமிழ்ப் பாடம் சொல்லித் தந்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். பெரும்பாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், அதுவும் நன்கு படித்த தமிழர்கள், ஈழத் தமிழர்களுடன் ஒப்புக்கு ஓரிரு சொற்கள் பேசுவதுடன் ஒதுங்கிக் கொள்வது தான் வழக்கம் என்றும், இப்படி ஒருவர் நேரடியாக உதவ வந்திருப்பது பெரு மகிழ்ச்சி என்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் தெரிவித்தார்கள்.

இது போன்ற தமிழாலயப் பள்ளிகள் ஜெர்மனியில் மட்டும் 123 இருக்கின்றன. முன்சன் பள்ளியில் 100 குழந்தைகளுக்கும் மேல் படித்தார்கள். ஒவ்வொரு ஞாயிறும் ஒரு வாடகை கட்டடத்தில் இந்த வகுப்புகள் இடம்பெற்றன. நடைமுறைச் செலவுகளுக்காக மிகக் குறைந்த தொகையே பிள்ளைகளிடம் இருந்து பெறப்பட்டது. உலகெங்கும் உள்ள தமிழாலயப் பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம் பின்பிற்றப்படுகிறது. தமிழ், சுற்றாடல் (புவியியல், வாழ்க்கைக் கல்வி, சுற்றுச்சூழல் போன்ற பாடங்களின் கலவை) ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நகரில் இருக்கும் ஓரளவு நன்கு தமிழ் படித்த ஈழத் தமிழர்களே தன்னார்வ அடிப்படையில் ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். தவிர, நாட்டளவில் பல மொழி, விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகளை நடத்துகிறார்கள்.

மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இருக்கிறது. ஏழாம் வகுப்புக்கு மேல் மாணாக்கர் வருகை குறைவே. ஏழாம் வகுப்பைத் தாண்டுகையில் பிள்ளைகள் பதின்ம வயதை அடைவதால் அவர்களுக்கு வரும் பிற ஈடுபாடுகளும் சுதந்திரமும் தமிழ்ப் பள்ளிக்கு வருவதில் ஆர்வம் குன்றச் செய்கின்றன என நினைக்கிறேன். எல்லா வகுப்புகளிலும் அண்மைக் காலத்தில் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் நன்றாகப் பயின்றார்கள். பள்ளி நிர்வாகிகள் அனுபவம் கூடக் கூட இன்னும் திறமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதனால், துவக்க வகுப்புப் பிள்ளைகளின் தமிழ்த் திறன் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது. வீட்டில் பெற்றோர்களுடன் பேசுவது, தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பதின் காரணமாக அவர்களின் தமிழ் பேச்சு மற்றும் புரிந்து கொள்ளும் திறன் நன்றாக இருக்கிறது. தமிழ் வாசிக்கத் தடுமாறுகிறார்கள். எழுதும் திறன் கடைநிலை. இருந்தாலும் சமூகத்திலும் பள்ளியிலும் முழுக்க அன்னிய மொழியான ஜெர்மன் சூழலில் வளரும் இவர்களில் இருக்கும் தமிழ்த் திறன் எவ்வளவாயினும் மெச்சத்தக்கதே. வகுப்புக்கு ஓரிரு கெட்டிக்காரப் பிள்ளைகளின் மொழித் திறன் எந்த அளவும் தமிழ்நாடு, ஈழத்தில் வளரும் குழந்தைகளுக்கு குறைவில்லாமல் இருக்கிறது. ஆசிரியர்களின் பிள்ளைகள் இன்னும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.

அங்கு ஓரளவு இறுக்கமான பாரம்பரியமான ஆசிரியர் - மாணவர் உறவுச்சூழல் இருந்த நிலையில் நான் போன வகுப்புகளில் இந்த இறுக்கத்தைக் குறைக்கப் பார்த்தேன். இதனால் பல பிள்ளைக்களுக்கும் என்னைப் பிடித்துப் போய் ஒவ்வொரு வகுப்புப் பிள்ளைகளும் தங்கள் வகுப்புக்கு என்னை வரச் சொல்லி போட்டி போட ஆரம்பித்து விட்டார்கள் :) மாமா, மாமா என்று எல்லா பிள்ளைகளும் வாய் நிறைய அழைப்பதின் இன்பம் அதை அனுபவித்தால் தான் தெரியும். முன்சனை விட்டு வருகையில், “உண்மையிலே போறீங்களோ” என்ற அந்தப் பிள்ளைகள் கேட்டது நெகிழ்ச்சியான நினைவு. எனக்கு மிகவும் பிடித்த இரண்டாம் வகுப்புப் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட படம் கீழே. உடன் இருப்பது நண்பன் சுனந்த், சரசுவதி அக்கா (இரண்டாம் வகுப்பு ஆசிரியர்).

ஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் அண்ணா, அக்கா என்று அழைத்துக் கொண்டது சிறப்பு. தமிழ்நாட்டில் இப்படி மாமா என்று பொது இடங்களில் அறிமுகப்படுத்தும் வழக்கம் குறைந்து வருகிறது. எல்லாம் சார், மோர், மேடம் கலாச்சாரமாகி விட்டது :(

முன்சனை விட்டு வருகையில் பள்ளி நிர்வாகிகள். ஆசிரியர்கள் தனியாகக் கூட்டம் போட்டு பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்கள். ஒரு அழகான நினைவுப் பரிசும் தந்தார்கள். நான் தெரிவித்த ஆலோசனைகள்:

1. பல ஆசிரியர்களின் திறனை இன்னும் உயர்த்த அவர்களுக்குத் தனிப்பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும். ஆசிரியர்கள் கெட்டிக் காரர்களாக இருந்தால் பிள்ளைகளுக்கும் பாடத்தின் மீது தானாக ஆர்வம் வரும். சில ஆசிரியர்களின் திறன் குறைவாகவே இருந்தது. எனினும், அவர்களும் தன்னார்வத்தின் பேரில் வருவதால் பாராட்டத்தக்கவர்களே.

2. பாடத்திட்டத்தை இற்றைப்படுத்த வேண்டும். என்றோ இலங்கையில் வாழ்ந்த பண்டாரவன்னியனை மட்டும் ஆண்டு முழுக்கப் படிக்க ஜெர்மனியில் வளரும் தமிழ்க் குழந்தைக்கு ஆர்வம் இருக்கும் என்று சொல்ல முடியாது. நம் மரபுகளை சொல்லித் தருவது போக ஜெர்மனி, விளையாட்டு, என்று அவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் விசயங்களை தமிழில் சொல்லித் தர வேண்டும். தமிழை ஓரு மொழியாக மட்டும் பார்க்காமல் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல கருவியாக அவர்களை உணர வைக்க வேண்டும்.

3. வண்ணப் படங்கள் நிறைந்த கதைப்புத்தகங்கள் உள்ள நூலகத்தை உருவாக்கிப் பிள்ளைகளுக்குப் படிக்கத் தர வேண்டும்.

4. நூல்கள் மட்டும் அல்லாது, ஒலி, ஒளி மூலம் பிள்ளைகளின் தமிழ்த் திறனை இன்னும் ஆர்வமூட்டும் வகையில் வளர்க்க வேண்டும்.

5. இன்னும் இளமையான, அந்தப் பள்ளியிலேயே பயின்ற ஆசிரியர்களைக் கொண்டு வர வேண்டும். அங்கேயே பிறந்து வளர்ந்த இளைய ஆசிரியர்களுக்குப் பிள்ளைகளின் மனநிலை, அவர்களுக்கு எப்படிச் சொல்லித் தந்தால் புரியும் என்பது நன்றாகப் புரிபடும். பல விசயங்களை ஜெர்மன் மொழியில் விளக்கிச் சொன்னால் பிள்ளைகளை எளிதாப் புரிந்து கொள்வது கவனிக்கத்தக்கது. நம்மூர் ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் முறைக்கும் பாடத்திட்டத்துக்கும் ஜெமர்மன் முறைக்கும் பெரிய அளவிலான வேறுபாடு உண்டு. ஜெர்மன் பள்ளியில் ஒரு முறை, தமிழ்ப் பள்ளியில் அலுப்பூட்டும் இன்னொரு முறை என்றால் பிள்ளைகள் குழம்பிப் போவார்கள்.

6. பிள்ளைகளின் பெற்றோர்கள் இயன்றவரை அவர்களை அடிக்கடி ஈழத்துக்கு அழைத்துச் சென்று வர வேண்டும். அங்கு சென்று வரும் பிள்ளைகளின் ஈழம், தமிழ் குறித்த ஆர்வம், விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. ஆர்வமாகவும் பாடம் படிக்கிறார்கள்.

7. தேர்வு முறை, வீட்டுப் பாடம் ஆகியவற்றின் மீதான மிகையான கவனத்தைக் குறைக்க வேண்டும். இது மொழித் தகுதி பெறுவதற்கான வகுப்பு இல்லை என்பதால் கடுமையான பயிற்சிகளைக் குறைக்க வேண்டும். வாரம் 5 நாட்கள் உள்ளூர்ப் பள்ளிகளில் பயின்று விடுமுறை நாளில் பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிக்கு வருவதே பெரிது. அவர்களை அயர்வுறச் செய்வது போல் ஆகிவிடக்கூடாது.

8. பிள்ளைகளுக்குத் தமிழ் ஆர்வம் வராவிட்டாலும் பரவாயில்லை. தமிழை அலுப்பூட்டும் வகையில் திணித்து தமிழ் மீதான வெறுப்பு வருமாறு செய்து விடக்கூடாது. இந்தத் தலைமுறையில் வெறுப்புடன் தமிழ் பயிலும் பிள்ளைகள் அடுத்த தலைமுறையில் தங்கள் பிள்ளைகளை நிச்சயம் தமிழ் பயில அனுப்ப மாட்டார்கள்.

9. உலகம் முழுக்க ஒரே தமிழ்ப் பாட நூல் என்பது பொருந்தாது. ஒரு பாடமாவது பிள்ளைகள் வாழும் நாட்டைப் பற்றி இருக்க வேண்டும். இதை ஒரு தனித் தொகுதியாக அச்சடித்து பாடப்புத்தகங்களுடன் இணைத்துக் கொள்ளுமாறு சொல்லலாம். ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கில் தமிழ்ப் பிள்ளைகள் இருக்கும்போது இப்படி பாடங்களை உள்ளூர்ப்படுத்துவது பிள்ளைகளின் ஆர்வத்தை கூட்டும். தற்போது பாடத்திட்டம் வகுப்பது, தமிழாலய நிர்வாக முறை குறித்தவை மிகையாக மையப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. பாடத்திட்டம் வகுக்கும் அதிகாரமாவது இன்னும் பரவலாக்கப்பட்டு உள்ளூர்த் தேவைகள், போக்குகளை அனுசரிக்க வேண்டும்.

10. உள்ளூரில் பயின்று வளர்ந்துள்ள தமிழ்ப் பிள்ளைகள், உள்ளூர் வேற்று மொழி ஆசிரியர்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து தமிழைப் பயிற்றுவிக்கும் முறையும் அதற்கேற்ப மாற்றப்பட வேண்டும். வெறும் புத்தகத் திணிப்பாக இல்லாமல், பயிற்றுவிக்கும் முறை இன்னும் அதிக ஊடாட்டம் (interaction) உள்ளதாக இருக்க வேண்டும்.

இந்தத் தமிழாலய அனுபவம் சில கேள்விகளையும் நெருடல்களையும் புரிதல்களையும் மனதில் விதைத்தது.

நெருடல்கள் -

பெரும்பாலான பிள்ளைகள் தமிழ் தவிர பிற எதுவும் தெரியாத தங்கள் பெற்றோர், உறவினர், தாத்தா பாட்டியுடன் பேச மட்டுமே தமிழைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் ஒரு தலைமுறைக்குப் பிறகு தாத்தா பாட்டி இருக்க மாட்டார்கள்; உறவினர்களிடையே ஆங்கிலம் போன்ற பொது மொழி வந்து விடும். அப்பொழுது தமிழின் தேவை நீர்த்து விடுமா?
(இந்தக் கேள்வி தமிழ்நாட்டு தமிங்கிலத் தலைமுறைக்கும் பொருந்தும்! :( )

பிறந்தது முதல் வெளி நாட்டில் வளரும் பிள்ளைகள் உள்ளூர் பண்பாடு, வாழ்க்கை முறை, சிந்தனையோடு முழுமையாக ஒன்றிணைந்து விடுகிறார்கள். நாளை ஈழத்தில் நல்ல நிலை திரும்பினாலும் இவர்கள் நாடு திரும்புவது 99% அரிது. ஒரு வேளை நாடு திரும்பினாலும் ஜெர்மன் தமிழர்கள், டச்சுத் தமிழர்கள், கனடா தமிழர்கள் என்று ஈழத்திலேயே ஒரு படிநிலை சமூக அமைப்பு வர வாய்ப்பு இருக்கிறது. படிப்பு, பணம், பழக்க வழக்கம் ஆகியவற்றில் ஈழத் தமிழ் மக்களுடன் இருந்து அன்னியப்பட்டு இவர்கள் தனியாக்கப் படும், காழ்ப்புணர்வுடன் பார்க்கப்படும் அபாயம் இருக்கிறது. புலம்பெயர்ந்த நாட்டிலும் தாய் நாட்டிலும் என்று இரு இடங்களிலும் அன்னியப்பட்ட மக்களாகக் குழம்பும் வாய்ப்பு உண்டு.

ஈழத் தமிழர்களின் சிந்தனைத் திறம் வாய்ந்த அடுத்த தலைமுறை நாட்டுக்கு வெளியே தங்கி விடும் ஆபத்து தவிர்க்கப்பட வேண்டும். புது ஈழத்தை கட்டமைக்க பொருளுதவி தவிர அறிவு சார் பங்களிப்பும் தேவை. இப்படி நாட்டுக்கு வெளியே தங்கியிருக்கும் நல்ல கல்வி முறையில் பயின்ற பிள்ளைகளின் அறிவுத் திறத்தை நாட்டு வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்துவது என்று ஈழ நிர்வாகிகள் சிந்திக்கத் தொடங்க வேண்டும். மெய்நிகர்க் கட்டமைப்புகள் மூலம் அறிவுப் பரிமாற்றம் சாத்தியமாகலாம். நிறைய செய்ய வேண்டும்.

புரிதல்கள், நன்மைகள் -

உலகெங்கும் பரவி இருக்கும் ஈழத் தமிழர்கள் பல்வேறு மொழிகளில் பல்வேறு நாடுகளில் ஈழ விவரங்களை உலகுக்கு எடுத்துரைக்க முடியும். இது போராடும் பல இனக்குழுக்களுக்கும் வாய்க்காத ஒரு பேறு. இத்திசையில் முயற்சிகள் முடுக்கி விடப்பட வேண்டும்.

தமிழ்-ஆங்கிலம் என்ற தட்டையான இரு மொழிப்புலத்தில் இயங்காமல், பல மொழிகள் - தமிழ் , தமிழ் - பல மொழிகள் என்று மொழிபெயர்ப்புகள், அகரமுதலிகள், இலக்கியங்கள், படைப்புகள் ஆகியவற்றை இந்தப் பிள்ளைகள் கொண்டு வர முடியும். Desi literature என்று ஆங்கிலத்தில் வருவது போல் தமிழ் வாழ்க்கை சார் இலக்கியங்கள், படைப்புகள் பல மொழிகளிலும் வர வாய்ப்பு இருக்கிறது.

ஜெர்மனியிலும் நார்வேயிலும் பிரான்சிலும் வளரும் உறவுக்காரப் பிள்ளைகளுக்கு ஒரு பொதுவான இணைப்பு மொழியாகத் தமிழ் மட்டுமே இருக்க முடியும். இந்த வகையில் தமிழுக்கான தேவையும் தொடர்ச்சியும் இருக்கும்.

நெதர்லாந்து வந்த புதிதில் லைடனில் தமிழ்ப் பள்ளிகள் தேடத் தொடங்கினேன். ஆனால், மிகச் சிறிய பள்ளியே இங்கு இருக்கிறது. கோடை முடிந்து ஓரிரு மாதம் கழித்து பக்கத்து நகரான டென் ஹாக்கில் தேடிப் பார்க்கலாம் என்றிருக்கிறேன். எனக்குப் பிடித்தமான குழந்தைகளைப் பார்த்துப் பழகிய மாதிரியும் இருக்கும். தவிர, முன்சன் தமிழாலயப் பள்ளி இடைவேளைகளில் வீட்டில் செய்யப்பட்ட அருமையான கடலை வடை கிடைத்த நினைவும் இருக்கிறது ;)

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: ······

4 responses so far ↓

  • 1 உடுக்கை முனியாண்டி // Apr 15, 2007 at 12:47 am

    குழந்தைகளோட நேரம் செலவளிக்கறதோட சுகமே தனிதான்.

    மத்தபடி நல்ல அலசல்.
    குழந்தைகளுக்கு அவங்களுக்கு பிடிச்ச மாதிரியான பாடங்களோ இல்லை கத்துக் குடுக்கற முறைகளோ இல்லாட்டி அது ஒரு வித திணிப்பு தான். என்னோட அனுபவத்தில விளையாட்டோட சேத்து மட்டும் தான் எதையும் கத்துக் குடுக்க முடிஞ்சிருக்கு. அது இங்கிலீஸா இருந்தாலும், கணக்கா இருந்தாலும், அறிவியலா இருந்தாலும் நாம எதையோ புதுசா கத்துக் குடுக்க போறோம்னு சொன்னாலே/தெரிஞ்சாலோ தெறிச்சி ஓடிருவாங்க. ஆனா அதே விசயத்தை சின்ன சின்ன விளையாட்டுக்களோட சேத்து சொல்றதுன்னா குழந்தகளுக்கு எந்த வித பிரச்சனையும் இல்ல.

    இப்ப, அதிலயும் தமிழ் கத்துக் குடுக்கணும்னு வரும்போது அது இன்னு சிரமமான ஒன்னு. மரம் வெட்டினதயும் குளம் வெட்டினதயும் மட்டும் வைச்சி தமிழ் கத்துக் குடுக்கறது இன்னும் கொஞ்சம் கஷ்டமான விசயம்.

    உங்களோட அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்

  • 2 ravishankar // Apr 15, 2007 at 9:03 am

    உண்மை தாங்க..ஒன்னு சொல்லிக் குடுக்கிற ஆசிரியருக்கு குழந்தைங்க மேல நல்ல பிரியம் இருக்கணும். இல்ல, முறையான ஆசிரியப் பயிற்சி இருக்கணும்..இது இரண்டும் குறைவாக உள்ள ஆசிரியர்களின் திறத்தாலும் பாதிப் பிரச்சினைகள் எழுகின்றன. இது தமிழாலயப் பள்ளி என்றில்லை, உலகெங்கும் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும்.

  • 3 கலை // Apr 30, 2007 at 3:32 pm

    தமிழ் பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்கப்படும் தமிழ்பற்றி எனக்கு நிறைய விஷயம் சொல்ல வேண்டும். தமிழில் ஆர்வமுடைய குழந்தைகள் கூட பாடசாலைக்கு போக விரும்பாதவர்கலாக இருக்கிறார்கள். காரணம் அங்கே கல்வி கற்பிக்கப் படும் முறை அவர்களுக்கு ஆர்வமற்றதாகவும், அயர்ச்சி கொடுப்பதாயும் அமைவதுதான். அவர்களைப் பொறுத்த அளவில், ஐந்து நாள் பாடசாலை முடிந்து ஆறாவதுநாள் விளையாட்டுக்கும் ஓய்வுக்குமுரிய நாள். அந்த நாளில் பாடம் படிப்பதென்றால் அது போதியளவு ஆர்வத்தை தூண்டுவதாக அமைய வேண்டியது அவசியம். அப்படியல்லாமல் பாடத்திட்டம் உற்சாகமற்ற சூழலை கொடுப்பதால், குழந்தைகளுக்கு தமிழில் உள்ள ஆரவமும் இல்லாமல் போய் விட வாய்ப்பு அதிகரிக்கிறது. அதை நான் பல குழந்தைகளுடன் பேசிப் புரிந்து கொண்டேன். எனக்கும் இதுபற்றி ஒரு பதிவு எழுத நீஈஈஈஈஈஈஈஈண்ட நாள் ஆசை. ஆசை, அத்துடனே நிற்கின்றது.

  • 4 Arunrayan // Jan 11, 2008 at 7:48 am

    //ஈழத் தமிழர்களின் சிந்தனைத் திறம் வாய்ந்த அடுத்த தலைமுறை நாட்டுக்கு வெளியே தங்கி விடும் ஆபத்து தவிர்க்கப்பட வேண்டும். புது ஈழத்தை கட்டமைக்க பொருளுதவி தவிர அறிவு சார் பங்களிப்பும் தேவை. இப்படி நாட்டுக்கு வெளியே தங்கியிருக்கும் நல்ல கல்வி முறையில் பயின்ற பிள்ளைகளின் அறிவுத் திறத்தை நாட்டு வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்துவது என்று ஈழ நிர்வாகிகள் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.//

    வரவேற்கத்தக்க சிந்தனை. உங்கள் கருத்துக்களை சிறப்பாக கூறியிருக்கிறீர்கள்.

Leave a Comment