நீத்தார் பெருமை – திருக்குறள் உரை

1.1.3. நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21

இந்த உலகத்தில் பெரியவங்க எழுதுன எல்லா நூல்லயும், ஆசையை விட்ட, ஒழுக்கத்தில சிறந்த துறவிகளைப் பத்தி தான் உயர்வா எழுதி இருக்கும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22

ஆசை, விருப்பு, பிடிப்புகளை விட்டவங்க பெருமைய அளக்கிறது, உலகத்தில இது வரைக்கும் இறந்து போனவங்கள எண்ணுற மாதிரி இயலாத, முடியவே முடியாத செயல்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. 23

நல்லது எது, கெட்டது எதுன்னு ஆராய்ந்து நல்லதை மட்டும் பின்பற்றுறவங்க தான் பெருமை அடைவாங்க.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24

மன உறுதி, அறிவு கொண்டு தன்னோட ஐந்து புலன்களையும் அடக்குறவனே, துறவறம், அதனால் கிடைக்கும் பேரின்பத்துக்குத் தகுதியானவனா தன்னை மாத்திக்கிறான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. 25

இந்திரனே கூட தன் புலன்களைக் கட்டுப்பட்டுத்த இயலாம போனது நமக்குத் தெரியும். அப்படின்னா, தன் புலன்களைக் கட்டுப்படுத்தி புகழ் அடைஞ்சவங்க எல்லாம் எவ்வளவு ஆற்றல் மிக்கவங்களா இருந்திருக்கணும் !

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 26

பெருமை தரக்கூடிய, செய்வதற்குச் சிரமமான செயல்களைச் செய்யுறவங்க பெரியவங்க. அப்படி ஒன்னும் செய்ய இயலாம இருக்கவங்க சிறியவங்க.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. 27

(சுவை, ஒளி, ஓசை, தொடுதல், மணம் இப்படி) ஐந்து புலன்களோட இயல்பு அறிஞ்சு அதைக் கட்டுப்படுத்தி வாழ்றவனுக்கு இந்த உலகமே கட்டுப்பட்டு இருக்கும்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28

நல்லா வாழ்ந்தவங்களோட பெருமையை, உலகத்தில் என்னைக்கும் அழியாம இருக்கிற அவங்களோட நூல்கள் மூலமா அறிஞ்சிக்கலாம்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. 29

மலை மாதிரி குணத்தில் உயர்ந்து இருக்கவங்க மனசில, கோபம் ஒரு நொடி அளவு தோன்றி மறைஞ்சா கூட, அத நம்மளால தாங்கிக்க முடியாது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30

எல்லா உயிர்கள் கிட்டயும் அன்பா இருக்கவங்களைத் தான் அந்தணர் அப்படின்னு அழைக்கிறோம்.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்


Comments

6 responses to “நீத்தார் பெருமை – திருக்குறள் உரை”

  1. மயூரேசன் Avatar
    மயூரேசன்

    ரவி என்னா இது.. பக்தி மயமா.. 🙂

  2. மிகவும் இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய உரைநடைதான்.

  3. மயூ – வள்ளுவர் அப்படி தான் எழுதி இருக்கார்..நான் என்ன பண்ண 🙂 விரைவில் எனக்குப் பிடித்த அரசியல், பொருளியல் அதிகாரங்களுக்கு கடந்து செல்ல முயல்கிறேன்

  4. து.சாரங்கன் Avatar
    து.சாரங்கன்

    நீத்தார் என்றால் துறந்தவர் என்று பொருள்தானே? அப்போ “ஒழுக்கத்து நீத்தார்” – ஒழுக்கத்தை துறந்தவர்களா?

  5. சாரு,

    வலையில் திருக்குறள் பொழிப்புரை கிடைத்தால் சொல்லுங்கள். இங்கே நான் தந்திருக்கும் பொருளை ஒட்டித் தான் பெரும்பாலான உரைநூல்கள் பொருள் தந்துள்ளன.

    ஒழுக்கத்து நீத்தார் – என்று அடுத்தடுத்த சொற்களின் பொருளைப் பார்க்காமல், ஒழுக்கத்து விழுப்பத்து – என்று தாவிச் சென்று சொற்களைச் சேர்த்துப் பார்த்தால் – ஒழுக்கத்தில் உயர்ந்த என்ற பொருள் வரும். பிறகு, ஒழுக்கத்தில் உயர்ந்த நீத்தார் பெருமையை சான்றோர் நூல்கள் விளம்பும் என்று பொருள் கொள்ளலாம். இப்படி சொற்கள் வரும் வரிசையில் இல்லாமல் இடம் மாற்றி பொருள் கொள்வது ஒரு வகை அணி. அணியின் பெயர் மறந்து விட்டது. தேடிப் பார்த்துச் சொல்கிறேன். இந்த பொழிப்புரை விளக்கம் தவறு என்றாலும் சுட்டிக் காட்டுங்கள்.

  6. கலை. செழியன் Avatar
    கலை. செழியன்

    அன்பிற்கினியீர், தங்கள் ஆர்வத்தைக் கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துகள். தங்கள் விளக்க உரையைப் படித்தேன்; மகிழ்ந்தேன். ஒரு சின்ன விண்ணப்பம். எளிமையாக எழுத வேண்டும் என்பதால், மக்களின் பேச்சு வழக்கில் உள்ள சொல்நடையைத்தான் பின்பற்றி ஆக வேண்டும் என்பதில்லை. உலக வழக்கு என்பது இலக்கிய வழக்கிலிருந்து வேறுபட்டது. இலக்கிய வழக்கில் கூட எளிமையாக எழுத முடியும். ‘சொல்ற பையன அடிச்சாங்க’ என்பது குறிப்பிட்ட பகுதியிலுள்ள மக்கள் வழக்கு. ‘சொல்கிற பையனை அடித்தார்கள்’ என்பது இலக்கிய வழக்கு; இவ்வழக்கு உலகப் பொதுமை பெற்றது. எனவே, தங்களுக்கும் ஏற்புடையதாகப் பட்டால், பொதுமைப்பட்ட இலக்கிய வழக்கில் தங்கள் எழுத்துப் பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள். வணக்கம்.

    எழுச்சியுடன்,
    கலை. செழியன்