ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமம்

November 7th, 2006 · 13 Comments · தமிழ்

bug, format, subtitle, screensaver, video, ring tone - இது போன்ற சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் என்ன? இவற்றை எங்கு அறிந்துகொள்வது? இல்லை, யாரைக் கேட்டால் விடை தெரியும்?

இது போன்று அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் அறிய உருவாக்க ஒரு கலைச்சொல்லாக்கக் குழுமம் உருவாக்கி இருக்கிறோம்.

குழும முகவரி: http://groups.google.com/group/tamil_wiktionary

இக்குழுமத்தின் நோக்கமாக ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை அறிவது, தேவைப்பட்டால் அவற்றை மேம்படுத்துவது, புழக்கத்தில் உள்ள பொதுச்சொற்களில் இருந்து கலைச்சொற்களை உருவாக்குவது, நுட்பப் பிழை இல்லாத, எவ்வளவு தரமான நல்ல எளிய சொற்பரிந்துரைகளாக தர இயலுமோ அவற்றைத் தருவது என்று கொள்ளலாம். இக்குழுவின் பணியாக நல்ல பரிந்துரைகளைத் தருவதை மட்டுமே கொள்ளலாம். எதையும் இது தான் சிறந்தது என்று இறுதி செய்து நாங்கள் திணிப்பதில்லை. திணிக்கவும் இயலாது.

இந்தக் குழுவின் சிறப்பு என்னவென்றால், இது சொற்களை ஆக்குபவர்கள் - சொற்களைப் பயன்படுத்துபவர்கள் - சொற்களைத் தேடுபவர்கள் ஆகிய அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது. இலங்கை, மலேசியா, தமிழகம் என்று உலகம் முழுமைக்குமான ஒரு தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுவாக இதை வளர்த்தெடுக்க விரும்புகிறோம்.

இந்த மடலாடற்குழு கட்டற்ற தமிழ் அகரமுதலியான விக்சனரிக்குத் துணையாகவும் இயங்கி வருகிறது. தமிழ் விக்சனரி குறித்த என் முந்தைய பதிவை இங்கு பார்க்கலாம். இந்தக் குழுவில் அலசி ஆராயப்பட்டு ஓரளவு கருத்தொத்ததாக வரும் சொற்கள் தமிழ் விக்சனரி தளத்தில் பரிந்துரைகளாகச் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் இவை பொதுப் பயன்பாட்டு வரத் துணையாகிறது.

இப்பொழுது இக்குழுவில் இயங்குபவர்கள் பலரும் ஆர்வமுடைய இளைஞர்கள் என்றாலும் எங்களின் தமிழறிவும் ஆழமும் மட்டுப்படுத்தப்பட்டதே. எனவே, தமிழ் கலைச்சொல்லாக்கத்தில் அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் எங்களோடு இணைந்து பங்களிக்க, வழிப்படுத்த முன்வர வேண்டும் என்பதற்கான அழைப்பாகவும் இதைக் கருதலாம்.

நீங்களும் இக்குழுமத்தில் இணைந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் அறிய விரும்பினால், இக்குழுவுக்கு மடல் எழுதலாம். இணையான நல்ல தமிழ்ச் சொல் ஏற்கனவே புழக்கத்தில் இருந்தால், பிற பயனர்கள் உங்களுக்கு மறுமொழி தருவர். ஏற்கனவே உள்ள சொல் வளம் குறைந்ததாக இருந்தாலோ சொல்லே இல்லாமல் இருந்தாலோ புதுச் சொற்களை ஆக்குவதற்கான ஆலோசனைகள், பரிந்துரைகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும். எந்தக் கலந்துரையாடல்களிலும் பங்கு கொள்ளாமல் வெறுமனே உரையாடல்களைக் கவனித்துக் கொண்டே கூட இருக்கலாம். புதுச் சொற்களை உள்வாங்கவும் சிந்தனைப் போக்குகளை அறியவும் உதவும்.

சரி, bug, format, subtitle, screensaver, video, ring tone - ஆகியவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் என்னவென்று அறிய உங்களுக்கு ஆவலா?

bug - வழு; format - வடிவூட்டம்; subtitle - உரைத்துணை அல்லது துணையுரை; screensaver - திரைக்காப்பு; video - நிகழ்படம்; ring tone - அழைப்போசை.

கடந்த ஒரு மாதத்தில் இது போன்று பல சொற்களுக்கும் புழக்கத்தில் இருக்கும் சொற்களைக் கண்டறிந்திருக்கிறோம். புதிதாகச் சொற்களை உருவாக்கியும் இருக்கிறோம். அவற்றை தனி இடுகையாகத் தருகிறேன்.

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: ········

13 responses so far ↓

  • 1 மு.மயூரன் // Nov 8, 2006 at 7:47 am

    எமது குழுமத்துக்கு மிக நல்ல அறிமுகம் ரவி.
    நன்றி.

    கலைச்சொல்லாக்கத்தின் தேவை உணர்ந்தவர்கள், கலைச்சொற்களை கேட்டு தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்தக்குழுவில் இணைந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். என் பங்குக்கு நானும் அவர்களை வரவேற்கிறேன்.

  • 2 குமரன் (Kumaran) // Nov 9, 2006 at 12:46 pm

    இரவி. தங்களின் இந்தப் பதிவைப் படித்துவிட்டு குழுமத்தில் நானும் சேர்ந்துவிட்டேன். மிக்க நன்றி.

  • 3 செல்லா // Dec 5, 2006 at 9:59 am

    Seen you in wiki! nice to know your efforts and wishes! Keep in touch!

  • 4 ஓகை // Dec 5, 2006 at 3:48 pm

    உடனே இணைந்துவிடுகிறேன்.

  • 5 ஞானவெட்டியான் // Dec 6, 2006 at 6:33 am

    நான் இணைந்து வெகு நாட்களாகின்றன. ஆயினும் சில்லாக்கம் பரிந்துரை செய்யப்படும் முறை, அவை ஏற்றுக்கொள்ளப்பட்டத? இல்லையா? என்னும் இறுதி முடிவிகள் அறியக் கிடைக்கவில்லை. இக்குறையைக் களையவேண்டும். நடைமுறை விதிமுறைகள் வரையறுக்கப்படல்வேண்டும்.

  • 6 வடுவூர் குமார் // Dec 6, 2006 at 6:33 am

    மயூரன் கூட சொல்லியிருந்தார்.
    நல்ல முயற்சி.சேர்ந்துவிடுகிறேன்.

  • 7 சந்தோஷ் // Dec 6, 2006 at 6:33 am

    Good Job Mayuran & Guys.

  • 8 சேதுக்கரசி // Dec 6, 2006 at 6:33 am

    தமிழ் விக்சனரி குழுமத்துக்கு வாழ்த்துக்கள். நிகரான தமிழ்ச்சொற்கள் பலவற்றுக்கும்
    இங்கேயும் செல்லலாம்.

  • 9 ரவிசங்கர் // Dec 8, 2006 at 11:16 pm

    மயூரன், குமரன், செல்லா, ஓகை, வடுவூர் குமார், சந்தோஷ், சேதுக்கரசி - உங்கள் வருகைக்கும் ஊக்க மொழிகளுக்கும் நன்றி.

    ஞானவெட்டியான் - மாதம் ஒரு முறை குழுவில் ஒத்த கருத்தில் அடையாளம் காணப்படும் சொற்கள் ஒரு சொற்பட்டியலாக வெளியிடப்படுகின்றன. இந்தக் குழுமம் இயங்கும் முறை விக்கிபீடியாவுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு தொடக்கத்தில் கொஞ்சம் புதிராகத் தான் இருக்கும். ஏனென்றால் இங்கு தலைவர், காலக்கெடு, இறுதி முடிவு கிடையாது. ஒத்த கருத்து, இணக்க முடிவு ஆகியவையே வழிகாட்டுகின்றன. குழுமத் தளத்தில் குழுமம் செயல்படும் முறை என்று ஒரு பக்கம் உள்ளது. தயவு செய்து அதைப் படித்து மேம்படுத்தல்கள் தேவை என்றால் சொல்லுங்கள். நன்றி

  • 10 வெற்றி // Dec 9, 2006 at 11:16 pm

    இரவிசங்கர்,
    நல்ல முயற்சி. எனக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    /*எந்தக் கலந்துரையாடல்களிலும் பங்கு கொள்ளாமல் வெறுமனே உரையாடல்களை கவனித்துக் கொண்டே கூட இருக்கலாம். */

    குழுமத்தில் இணைந்து நீங்கள் மேலே சொன்னதைச் செய்யவுள்ளேன்.
    மிக்க நன்றி.

    பணிவன்புடன்
    வெற்றி

  • 11 Anonymous // Dec 10, 2006 at 3:20 pm

    ரவி!
    நல்ல முயற்சி!!இதில் நானும் இணைகிறேன். தெரிந்ததைக் கூறுவேன்.கூடுதலானவரை இதைப் பயன்படுத்துபவனாகத் தான் ,இருப்பேன்.
    யோகன் பாரிஸ்

  • 12 அண்ணாகண்ணன் // Dec 10, 2006 at 3:20 pm

    நல்ல முயற்சி; வாழ்த்துகள்.

    ரிங் டோனுக்கு அழைப்போசை என்பதைவிட அழைப்பிசை பொருத்தமாக இருக்கும். பெரும்பாலும் அவை இசையாகவே இருக்கின்றன. விதிவிலக்காகச் சிலர் குழந்தையின் அழுகுரல், விருப்பமானவர்களின் குரல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையினர் மட்டும், அழைப்போசை அல்லது அழைப்பொலி என்பதைப் பயன்படுத்தலாம்.

  • 13 ரவிசங்கர் // Dec 10, 2006 at 11:27 pm

    யோகன், வெற்றி - உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.

    அண்ணாகண்ணன் - உங்களை போன்ற ஊடகக்காரர்களுடன் இணைந்து பங்காற்றுவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. கலைச்சொல்லாக்கத்தில் நிகழும் நல்ல மாற்றங்களை நீங்கள் உடனுக்குடன் மக்களுக்குச் சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழ் சிஃபியில் அண்மைய காலங்களில் தமிழ் கொஞ்சி விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

Leave a Comment