பண அட்டைகள் குறித்த தமிழாக்கங்கள் பற்றி இராம.கி எழுதி இருந்தார். இது தொடர்பான உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்தில் நடந்தது.
ஒரு ஆங்கிலச் சொல் வெவ்வெறு சூழல்களில், வெவ்வேறு சொற்கூட்டுகளில் வரும்போது, தமிழில் அச்சொற்களை மொழிபெயர்க்கும் போதும் எல்லா இடங்களிலும் ஒரே சொல் கொண்டு தான் மொழிபெயர்க்க வேண்டும் என்பது இராம. கி அவர்களின் பரிந்துரை. இதே நிலைப்பாட்டை இன்னும் சிலரும் கொண்டிருக்கலாம். இது தொடர்பில் என் கருத்துக்கள்:
ஆங்கிலத்தில் ஒரு வேர்ச்சொல் பல இடங்களில் வரும்போது அவ்வெல்லா இடங்களுக்கும் ஒரே தமிழ்ச் சொல்லை ஆளத்தான் வேண்டும் என்ற அணுகுமுறையில் இருந்து பெரிதும் வேறுபட விரும்புகிறேன்.
ஒரு பேச்சுக்கு, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கிறோம் என்று வைப்போம்..கண், கண்ணாடி, கண்ணீர் என்பதை eye, eye glass, eye water என்றா மொழிபெயர்ப்போம்? eye, glass, tear என்று அந்த ஊர் மொழிச் சொல்லை வைத்து தானே மொழிபெயர்க்கிறோம்..பிறகு ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு ஆளப்படும் தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை. ஒரு புதிய சிந்தனையைச் சூழலைப் புரிந்து கொள்ள ஆங்கிலச் சொல் ஒரு கருவியாக இருக்கலாமே தவிர, தமிழின் அனைத்துப் புதுச் சொற்களும் ஆங்கில அடிப்படை, சார்பு உடையதாக இருப்பது ஏற்கத்தக்கதா என்று தெரியவில்லை. உலகின் எல்லா மொழிகளும் credit என்ற சொல்லின் அடிப்படையிலேயே credit cardஐத் தங்கள் மொழிகளில் அழைக்கும் என்று தோன்றவில்லை. அப்படியே credit card என்று நாம் அழைத்தாலும், credit என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழாக்கினாலும், மக்களின் புரிதலில் இது கடன் கொடுக்கும் அட்டை. அவ்வளவு தான். credit card company காரர்கள் அடாவடி எல்லாம் பார்த்தால், அவர்கள் “நம்பிக் கொடுத்த நண்பன்” போல் யாரும் நினைக்க மாட்டார்கள்
இரு சக்கர வண்டி, துவி சக்கர வண்டி என்றெல்லாம் பலவாறாக மொழிபெயர்த்தாலும் மிதிவண்டி என்ற சொல் நிலைத்ததைக் கவனிக்க வேண்டும். மக்களைப் பொருத்தவரை அது மிதித்தால் நகரும் வண்டி. அவ்வளவு தான். சில சமயம் நாம் பரிந்துரைக்கும் சொற்களை நாம் புரிந்து கொள்ளவே பல அகரமுதலிகளைப் புரட்ட வேண்டி இருக்கையில், பாமர மக்களிடம் இச்சொற்களை எப்படி கொண்டு சேர்ப்பது என்று கவலையாக இருக்கிறது. மக்கள் புழங்கத் தானே சொற்கள்?
சொல்லைத் தமிழாக்காமல் சிந்தனையைத் தமிழாக்குவதே நல்ல தமிழாக்கமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆங்கில மொழியே இல்லாவிட்டாலும், அந்தச் சொல்லையே அறியாவிட்டாலும், நம்முடைய தமிழ்ச் சிந்தனையில் நம்முடைய பார்வையில் நம்முடைய புரிதலுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படித் தான் சொல் ஆக்க வேண்டும். அது தான் மொழி மரபு என்பது என் நம்பிக்கை, நிலைப்பாடு. ஆங்கிலச் சொற்களை அச்சு பிசகாமல் மொழிபெயர்த்தால் தமிழில் ஒரு வித செயற்கைத் தனம் வந்து விடுவதாகத் தோன்றுகிறது. ஒரே பொருளை இரு வேறு மொழியினர் வேறு விதமாகப் பார்ப்பது இல்லையா? rainbow - ஆங்கிலேயேனுக்கு rainன் வில்லாகிறது; நமக்கு வானின் வில்லாகிறது. இரண்டுமே ஏற்புடையது தான். வானவில் என்பது நம் சிந்தனை; மழைவில் என்பது அவனது சிந்தனை - ஆனால், இரண்டும் குறிக்கும் பொருள் ஒன்று தான். அது போல் அறிவியல், அன்றாடத் தமிழ் நுட்பச் சொற்களும் வெளிநாட்டவரின் சொற்களை மொழிபெயர்ப்பதாக இல்லாமல் உள்ளூர் சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆகவே, ஆங்கிலச் சொற்களைப் பற்றி அதிகம் அலட்டாமல் சாதாரண பாமரர் பார்வையில் அது எப்படி பார்க்கப்படும் என்று யோசிக்க வேண்டும். ஆங்கிலச் சொற்களை ஒதுக்கி வைத்து விட்டு, இந்தச் சூழலில் இதை எப்படி சொல்லலாம் என்று தமிழ் வழி சிந்திப்பதே பல எளிமையான சொற்களைத் தரும்.
அஞ்சலி, condolence meeting போன்ற வேற்றுச் சொற்கள் எல்லாம் இருக்க, இரங்கல் கூட்டம் என்ற வழமையான தமிழ்ச் சொற்கள் இருக்க, அழகாக அக வணக்கம், வீர வணக்கம் போன்ற சொற்களை ஈழத்தவர்கள் ஆக்கிப் பயன்படுத்துவதைக் கவனிக்கலாம். இந்தச் சொற்களின் ஊடாக வெளிப்படும் அம்மக்களின் பண்பாடு அம்மக்களுக்கும் மொழிக்குமே உரித்தானது. இதைத் தலைகீழாக நின்றாலும் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து விட முடியாது. இது போல் நாம் பயன்படுத்தும் பிற சொற்களும் நம் சமூகத்தை, பண்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
7 responses so far ↓
1 கலை // Feb 1, 2008 at 4:00 am
எப்படி இப்படியெல்லாம் உங்களால் தெளிவாக சிந்திக்க முடிகின்றது?
ஏதோ நம்மபாட்டுக்கு எந்த மொழியிலாவது (கலந்துகட்டி) பேசிக்கொண்டு, எழுதிக்கொண்டு போவோம் என்றில்லாமல், மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உங்கள் பதிவுக்கு பாராட்டுக்கள்.
2 ரவிசங்கர் // Feb 1, 2008 at 5:28 am
கலை »
//எப்படி இப்படியெல்லாம் உங்களால் தெளிவாக சிந்திக்க முடிகின்றது? //
கண்டிப்பா தனியா அறை எடுத்து யோசிக்கலை
//பதிவுக்கு பாராட்டுக்கள்.//
நன்றி
3 அருண் // Feb 6, 2008 at 3:18 pm
சிறந்த பதிவு.
ஆனால் //சொல்லைத் தமிழாக்காமல் சிந்தனையைத் தமிழாக்குவதே நல்ல தமிழாக்கமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து//
விளங்கவில்லை
இன்றைய உலகில் பாலர் பாடசாலையே போகாதவர்கள் கூட தமது அன்றாக வாழ்வில் என்னற்ற ஆங்கில சொற்களை உபயோகிப்பதை அவதானிக்கலாம். இவை ஆங்கில சொற்களா, தமிழ் சொற்களா என்றுக்கூட பலருக்கு தெரியாது. அதுபற்றிய சிந்தனையோ ஆராய்ச்சியோ அவர்களிடம் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை.
இந்த சூழ்நிலையடிப்படையில் எப்படி சிந்தனையை தமிழாக்குவது?
பேசுவது தமிழா ஆங்கிலமா என்ற எந்த சிந்தனையுமின்றி தமது எண்ணக்கருவை வெளிப்படுத்தினால் சரி எனும் போக்கில் பேசிவரும் மக்கள் மத்தியில், எழுத்துத்துரையில் தம்மை ஈடுபடுத்தியுள்ளவர்களாவது முடிந்தவரையில் தூய தமிழ் சொற்பிரயோகங்களை உபயோகித்தால் தான் தமிழ் சொற்களின் சிதைவுகளில் இருந்து தமிழை நிலை நிறுத்த முடியும் என்பது எனது கருத்தாகும்.
மொழி சிந்தனையற்று பேசிவரும் நம்மவர்களுக்கு வாசிக்கும் போதாவது தூய தமிழ் சொற்கள் சென்றடையட்டுமே.
இவ்வாரான சிறந்த சிந்தனைக்குரிய பதிவுகளே நம்மவர்களிடம் விழிப்புனர்வை ஏற்படுத்தக்கூடியன. நன்றி இரவிசங்கர்.
4 ரவிசங்கர் // Feb 6, 2008 at 7:23 pm
அருண் -
பண அட்டைகள் குறித்த இராம.கி அவர்களின் இடுகையைப் பாருங்கள். இதில் credit என்ற சொல்லின் பொருள் என்ன என்று ஆய்ந்து credit card என்பதற்கான தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்கிறார். இது சொல்லைத் தமிழாக்குவது.
credit என்பதன் பொருளை ஆயாமல் “credit card கடன் பெற உதவுகிறது; எனவே, இதைக் கடன் அட்டை என அழைக்கலாம்” என்று சொல்வது சிந்தனையைத் தமிழாக்குவது. இங்கு நாம் credit என்னும் சொல்லைக் குறித்து கவலைப்படுவதில்லை. அதன் பயன்பாடு, அது குறித்த நம் சிந்தனை, புரிதல் என்ன என்றே நோக்குகிறோம்.
இந்த எடுத்துக்காட்டு உங்கள் புரிதலுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
பாமரர்கள் தானாக ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்கு அச்சொற்களை அறிமுகப்படுத்துவதில் அச்சு, வானொலி, காட்சி ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, இவ்வூடகங்கள் நல்ல தமிழ்ச் சொற்களை ஆள்வதன் மூலம் பாமரர்களின் சொற் பயன்பாட்டிலும் மாறுதல்களைக் கொண்டு வர முடியும்.
என்றாவது ஒரு நாள் சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 கேட்டுப் பாருங்கள். நல்ல தமிழ்ச் சொற்கள் எவ்வளவு இலகுவாக மக்கள் வாயில் புழங்குகின்றன என்று புரியும்.
இந்த ஊடக வரிசையில் புதிதாக வலுவாகவும் இணைய ஊடகம் சேர்ந்திருக்கிறது. மற்ற ஊடகங்களைப் போல் அல்லாமல் இணைய ஊடகம் முழுக்க முழுக்க நம்மைப் போன்ற மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வல்லது என்பதால் இதில் நம் பொறுப்பை உணர்ந்து நல்ல தமிழ்ச் சொற்களை ஆள்வதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - தமிழ் வலைப்பதிவுகளில் இடுகைகள், பதிவு, மறுமொழி, வார்ப்புரு, ஓடை போன்ற அழகான தமிழ்ச் சொற்கள் புழங்குவது தான். இவற்றைப் புழக்கத்தில் கொண்டு வந்ததற்கு தமிழ் வலைப்பதிவுகள் தொடக்கத்தில் இத்துறையில் இயங்கிய தமிழார்வம் உள்ள தளங்கள், நபர்கள் முக்கிய காரணம். அது போலவே இனி வரும் காலங்களில் கணினியிலும் இணையத்திலும் வரும் நுட்பங்களை நல்ல தமிழில் சொல்லத் தொடங்கினோம் என்றால் அவை புழக்கத்துக்கு வரும்.
5 Arun // Feb 16, 2008 at 12:17 am
மீண்டும் ஒரு முறை இதே ஆக்கத்தை திரும்பிப்பார்த்தேன். உங்களது சீரிய விளக்கத்திற்கு மிக்க நன்றி!
//ஆங்கில மொழியே இல்லாவிட்டாலும், அந்தச் சொல்லையே அறியாவிட்டாலும், நம்முடைய தமிழ்ச் சிந்தனையில் நம்முடைய பார்வையில் நம்முடைய புரிதலுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படித் தான் சொல் ஆக்க வேண்டும். அது தான் மொழி மரபு என்பது என் நம்பிக்கை//
நம்பிக்கையல்ல, அது தான் மொழி மரபு.
உங்கள் கருத்து ஏற்புடையது. நன்றிகள்.
6 புருனோ // Aug 31, 2008 at 12:11 pm
எப்படி அழகு என்று ஒரு சொல்லுக்கு ஈடாக பல ஆங்கில சொற்கள் இருக்கின்றனவோ அது போல் ஒரு ஆங்கில சொல்லுக்கு ஈடாக பல தமிழ் சொற்களை பயன் படுத்துவது தவறல்ல
7 புருனோ // Aug 31, 2008 at 12:12 pm
Credit Card - கடனட்டை
Debit Card - செலவட்டை
Leave a Comment