இன்றைய உதவிக் குறிப்பில், நீங்கள் புதிதாக வாங்கிய மேலைநாட்டு ஆங்கிலச் சிந்தனைச் செருப்புக்குப் பொருத்தமாக உங்கள் தமிழ்க் காலை வெட்டுவது எப்படி என்று பார்ப்போம்.
1. திற, மூடு, நிறுத்து, துவக்கு போன்ற பல சுருக்கமான தமிழ் வினைச்சொற்களை கற்றுக் கொள்வது, நினைவுகூர்வது, பயன்படுத்துவது மிகவும் சிரமம் என்பதால் பண்ணு என்ற ஒரே ஒரு “magic வினைச்சொல்லை” மட்டும் பயன்படுத்துங்கள். இதனுடன் open, close , start , stop போன்ற ஆங்கில வினைச்சொற்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். do open, do start, did stop என்று எந்த ஆங்கிலேயனும் சொல்வதில்லை. ஆனால், அதற்காக open பண்ணு, start பண்ணு, stop பண்ணினேன் என்று சொல்ல நீங்கள் வெட்கமோ கூச்சமோ கொள்ள வேண்டாம்.
இந்த முறையின் சிறப்புகள் -
- இந்தப் பண்ணித் தமிழ் மொழியால் உங்கள் ஆற்றல், சுருக்கமாகத் தெரிவிக்கும் திறன் வீணாகும் என்பது வியக்கத்தக்க முன்னேற்றமாகும்.
எடுத்துக்காட்டுக்கு, ஆங்கில / பண்ணித் தமிழ் / தமிழ் முறைகளுக்குத் தேவைப்படும் எழுத்துக்கள், அதனால் வீணாகும் ஆற்றல், நேரம் குறித்து பார்ப்போம்.
| ஆங்கிலம் | பண்ணித் தமிழ் | தமிழ் | பண்ணித் தமிழ் வீணாக்கும் எழுத்துக்கள் |
| opened | ஓபன் பண்ணினேன் | திறந்தேன் | 3 |
| close | க்ளோஸ் பண்ணு | மூடு | 4 |
| think | தின்க் பண்ணு | நினை, யோசி | 4 |
| cut | கட் பண்ணு | வெட்டு | 2 |
- நீங்கள் வளர வளர உங்கள் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளும் சிரமம் இல்லை. என் அக்கா மகன் twenty nineக்கு அடுத்து twenty ten என்கிறான். அவனைப் போல் நீங்களும் தமிழ் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளாமல் என்றும் சிறியோனாக ஆங்கில வினைச்சொல்+பண்ணு என்ற சமன்பாட்டை எளிதாகப் பின்பற்றலாம்.
- ஆங்கில வழியத்தில் பயிலும் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் கற்கச் சிரமப்பட வேண்டாம். இதனால் அவர்கள் பாடச்சுமை குறையும்.
2. பண்ணித் தமிழ் கற்ற பிறகு, கணினியில் அதை எழுதும்போது தமிங்கிலத் தட்டச்சுப் பலகையைப் பயன்படுத்துங்கள். இதனால், உங்கள் தட்டச்சும் நேரம் அதிகமாகும், கை வலிக்கும், தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதிவீர்கள், மூணு சுழி ண-வா இரண்டு சுழி ன-வா என்பது போய் SHIFT+nஆ nஆ என்று நவீனமாகச் சிந்திப்பீர்கள் என்பது பெரு மகிழ்ச்சிக்குரியதாகும்.
எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்கில முறைக்கும் தமிழ்99 முறைக்கும் தேவைப்படும் விசையழுத்தங்களைப் பார்ப்போம்.
| சொல் | romanised | தமிழ்99 | தமிங்கிலத் தட்டச்சு வீணாக்கும் எழுத்துக்கள் |
| தொழிலாளி | thozilaa+SHIFT+li | த ஒ ழ இ ல ஆ ள இ | 3 |
| வெற்றி | ve+SHIFT+r+SHIFT+ri | வ எ ற ற இ | 2 |
| கணையாழி | ka+SHIFT+naiyaazi | க ண ஐ ய ஆ ழ இ | 4 |
| தந்தம் | thantham | த ந த ம f | 3 |
4. ஆங்கிலச் சொற் திருத்திகளை உருவாக்குபவர்கள் அனைத்து ஆங்கிலச் சொற்களையும் குவித்து ஒரு தொகுப்பு உருவாக்கி அதில் இருந்து பிழைகளை சரி பார்ப்பார்கள். நாமும் இலட்சக்கணக்கான தமிழ்ச் சொற்களை இப்படிக் குவித்து சொற் திருத்தி உருவாக்குகிறோம் என்று ஆமை வேகத்தில் ஆண்டுகணக்கில் கூட்டு முயற்சியில் ஈடுபடுவோம். தமிழ் ஒரு கட்டமைப்புடைய மொழி என்பதையும் அதற்கு இலக்கணத் திருத்தியே* கூடிய பொருத்தமாகவும் இருக்கும் என்பதையும் மறந்து எளிமையான சொற் திருத்திகள் உருவாக்கும் முறையைக் கிடப்பில் போடுவோம்.
5. ஏழு கோடி தமிழ் மக்களுக்கு தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்பும் நுட்பத்தைக் கொண்டு வராமல், தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதி அனுப்புவோம். இதன் மூலம் தனித்துவமான எழுத்துக்களே இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதிக் காட்டும் வளர்ச்சியுறா மொழி போல் தமிழை மாற்றுவோம். இல்லை, மெனக்கெட்டு தமிழ் எழுத்துக்களை படமாக வரைந்து அவற்றை படச் செய்திகளாக (picture message) அனுப்புவோம். தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி ஓரிரு இடங்களில் வந்தாலும் அவற்றுக்கும் தமிங்கில விசைப்பலகையைப் பயன்படுத்துவோம். கணினியில் 26 விசைகளைக் கொண்டு தமிழை எழுதி வீணாக்கும் ஆற்றலை விட செல்பேசியில் இருக்கும் 10 விசைகளில் தமிங்கில முறையில் தமிழ் எழுதி இன்னும் மும்மடங்கு ஆற்றல், நேரத்தை வீணாக்குவோம். கணினிக்கு ஒரு தமிழ்99 விசைப்பலகை இருப்பது போல் செல்பேசிக்கும் ஒரு தனித்துவமான திறம் மிக்க தமிழ் விசைப்பலகை உருவாக்க இயலும் என்பதை நினைக்க மறப்போம்**.
6. ஆங்கிலம் - தமிழ், தமிழ் - ஆங்கிலம் ஆகிய வழிகளில் மொழிபெயர்ப்பு மென்பொருள்கள் வருவதற்கான வழியைக் காணாததால், இந்தப் பணிகளில் ஈடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருப்பதால், தமிழ்நாட்டுத் தமிழர் அனைவருக்கும் ஆங்கிலத்தை நன்றாகச் சொல்லிக் கொடுப்போம். இதனால் ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்புக்கான தேவையை ஒழிக்கலாம். அப்படியே தமிழையே ஒழித்து விட்டால், தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்புக்கான தேவையும் இல்லாமல் போகும் என்பது அருமையான குறுக்கு வழியாகும்***.
—
* தமிழுக்கான சொற் திருத்தி குறித்த மயூரனின் கட்டுரை.
** செல்பேசியில் தமிழை உள்ளிடுவதற்கான திறம்மிக்க ஒரு தளக்கோலத்தை (layout) உருவாக்குவதற்கான யோசனைகள் உண்டு. விரைவில் அவற்றைப் பதிகிறேன். ஆர்வமுடையவர்கள் நிரலாக்கத்தில் உதவலாம்.
*** தமிழுக்கான மொழிபெயர்ப்புக் கருவிகள் உருவாக்குவதாகச் சொல்லும் அண்ணா பல்கலைக்கழகம் உருப்படியாக ஒன்றும் செய்வதாகக் காணோம். மிகவும் துவக்க நிலை மொழிபெயர்ப்பு மென்பொருள் ஒன்றையாவது உருவாக்குவது அவசியமாகும்.
மேற்கொண்ட மூன்று குறித்துமே தமிழா! கட்டற்ற தமிழ்க் கணிமை அமைப்பில் கலந்துரையாடப்படுவதுண்டு. ஆனால், தன்னார்வ அமைப்பு என்பதாலும், மிகக் குறைவான உறுப்பினர்களே இருப்பதாலும் முன்னேற்றங்களின் வேகம் மிகவும் குறைவு.
தமிழுக்கு, தமிழ்க் கணிமைக்கு நிறுவனங்கள், அரசுகள் ஆகியவை ஆற்றிய பங்கைக் காட்டிலும் தனி மனிதர்கள் தங்கள் ஆர்வத்தால் தன்னலமின்றி செய்த பங்களிப்புகளே மிக அதிகம்.
மிக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் மென்பொருள் துறையில் இயங்கி உலக வணிக நிறுவனங்களின் மென்பொருள் தேவைகளை நிறைவு செய்கிறார்கள். அவர்களில் 1% வீதத்தினர் வாரம் ஒரு மணி நேரம் தமிழ்க் கணிமைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக ஒதுக்கினால் கூட, எவ்வளவோ செய்ய முடியும்.
செய்வார்களா?
தொடர்புடைய தமிழிணைய, தமிழ்க் கணிமை கூட்டு முயற்சிகள் சிலவற்றை அறிய என் ஈடுபாடுகள் பக்கத்தைப் பார்க்கவும்.
நன்றி.
4 responses so far ↓
1 சயந்தன் // Apr 15, 2007 at 5:19 pm
உங்க பதிவை ஓப்பன் பண்ணினதில இருந்து குளோஸ் பண்ணும் வரைக்கும் படித்தேன். நிறைய திங் பண்ண வைச்சிருக்கிறீங்க.. உங்களுக்கு தாங்க் பண்ணணும்.
2 து.சாரங்கன் // Apr 16, 2007 at 4:03 am
பல தமிழருக்கும் பழக்கப்பட்ட பல திரைப்படங்களிலும் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்ட “பண்ணித்தமிழ்” பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள். இது எதிர்வினையாகக் கூறும் கருத்து (sarcastic comment) என்று அறியாமல் உண்மையாகவே பின்பற்றிவிடப் போகிறார்கள், ஜாக்கிரதை
இதேபோல் ஒரு தமிழ் சொல்லொடு அதே பொருள் தரும் ஆங்கிலச் சொல்லைச் சேர்த்துப் பயன்படுத்துவதை - நடு சென்டர், கட்ச் பிடி - என்னவென்று சொல்வது?
3 கூமுட்டை // Apr 16, 2007 at 4:36 am
ரொம்ப உண்மைங்க. நான் கூட முதன் முறை தமிழ் தட்டச்சு செய்யும் போது பலர் தமிங்கலத்தை பரிந்துரைத்தார்கள். சிலர் தமிங்கலம் மட்டும் தான் உள்ளது என்றும் அது தான் சிறந்தது என்றும் வாதிட்டனர். என்ன செய்வது தவறான வழிகாட்டலில் நானும் தமிங்கலத்தையே பயின்றுவிட்டேன். தங்கள் பதிவின் மூலம் தமிழ்99 பற்றி அறிந்து கொண்டேன். கற்று வருகிறேன். கூடிய விரைவில் மாறுவேன்.
நன்றி.
4 ravishankar // Apr 16, 2007 at 9:48 am
சயந்தன் - என் பிளாக்குக்கு நீங்க விசிட் பண்ணது ஹேப்பியா இருக்கு
என்னளவில் பேசும்போது பண்ணத்தமிழையும் இந்த ‘ஆ’ தமிழையும் குறைக்கப் பார்க்கிறேன். இன்னுமொரு ரொம்பவும் கொச்சையான போக்கு - ஆங்கிலப் பெயர்ச்சொல் + தமிழ்ப் பெயர்ச்சொல் கலந்து கூட்டுச் சொற்களை உருவாக்குவது. எடுத்துக்காட்டுக்கு, பீச்சாங்கரை (beach+கரை = பீச்சாங்கரை = கடற்கரை!)..இந்த எடுத்துக்காட்டில் தெரியும் உறுத்தல் டீ+கடை = டீக்கடை என்பதில் தெரிவதில்லை. அப்படியே கேட்டுக் கேட்டு நம் மூளை மழுங்கி விட்டது. சிங்கப்பூரில் தேக்கடை என்று கூறும் வழக்கம் இருக்கிறது.
சாரங்கன் - நடு செண்டர், கேட் வாசல் போன்ற சொற்பயன்பாடுகள் ஒப்பீட்டளவில் குறைவு தான். ஆனால், கவலை தரும் இன்னொரு போக்கு என்னவென்றால் ஆங்கில உரிச்சொல்+ {அ, ஆ, ஆன} போட்டு பேசுவது. எடுத்துக்காட்டுக்கு, starightஆ போ, leftல cut பண்ணு, freeஆ விடு, homelyஆன பொண்ணு, superஆ இருக்கு
கூமுட்டை (ஏங்க உங்க பேர மாத்திக்கக்கூடாதா, இப்படி அழைக்க சங்கடமா இருக்கு!) - தமிழிணையத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் கூட தமிங்கிலத் தட்டச்சு முறையைத் தொடர்ந்து புதியவர்களுக்கு சொல்லித் தருவது கவலையளிக்கிறது. நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
Leave a Comment