ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !

February 14th, 2008 · 16 Comments · இணையம், கணினி, தமிழ்

ப்ளாகருக்கு உள்ளிருந்து தமிழில் எழுதும் வசதி வந்திருப்பதாக மயூரேசன் எழுதி இருந்தார். முன்பே இது போல் ஆர்க்குட்டுக்கு உள்ளிருந்தும் கூகுள் தமிழ் எழுதி பக்கத்தில் இருந்தும் எழுதும் வசதி இருக்கிறது. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றுக்கும் இந்த வசதி உண்டு. இன்னும் பல இந்திய மொழிகளுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தித் தருமாறு இந்திய கூகுள் உருவாக்குநர் குழுமத்தில் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழ் உட்பட்ட எந்த ஒரு இந்திய மொழி கூகுள் எழுதியையும் ப்ளாகர், ஆர்க்குட் போன்ற தளங்களில் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில்,

1. தட்டச்சு என்பது ஒரு மனப்பழக்கம். இந்த கூகுள் தமிழ் எழுதியில் எழுதிப் பழகி விட்டால், பிற எழுதிகளைப் பயன்படுத்த உங்களுக்கு கை வராது. ஆர்க்குட், ப்ளாகர் தவிர்த்த பிற தளங்களில் தமிழில் எழுதுவது உங்களுக்குச் சிரமமாகும். அதன் விளைவாக, கூகுள் தமிழ் எழுதி பக்கத்தை நாடத் தொடங்குவீர்கள். நேரடியாக எல்லா தளங்களிலும் இலகுவாகத் தமிழில் எழுதுவதை விடுத்து வீணே கூகுள் தமிழில் எழுதியில் இருந்து வெட்டி ஒட்டத் தொடங்குவீர்கள். இதனால், கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள். அல்லது, பிற தளங்களில் எழுத வேறு மென்பொருள்கள், வேறு தட்டச்சு முறைகளைப் பயில வேண்டும். இதனால் உங்கள் மூளை குழம்பும்.

ஒரு மொழியை எழுதுவதற்கான தட்டச்சு மென்பொருள் என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. இந்த மென்பொருள்களை மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் உங்களுக்கு இருப்பது முக்கியம்.

2. எ-கலப்பை, NHM Writer போன்று அல்லாது கூகுள் எழுதி ஒரு dynamic writer. அதாவது, இன்ன விசையை அழுத்தினால் இன்ன எழுத்து வரும் என்று உங்களால் ஊகிக்க இயலாது. நீங்கள் எழுத எழுத உங்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளும்.

ஒரு தட்டச்சும் பழக்கத்தை மிகையாகத் தன்விருப்பமாக்குவது தவறு. ஏனெனில், கூகுள் தன் ஊகிக்கும் நிரலாக்கத்தை மாற்றினால் நீங்களும் உங்கள் பழக்கத்தை மாற்ற வேண்டி இருக்கும். அவசரத்துக்கு வேறு மென்பொருள்களை நாட வேண்டி வந்தால் உங்களால் வேகமாக எழுத இயலாது. துவக்க நிலையில், இது இணையத்தில் உள்ள பெரும்பாலானோர் எந்த ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழை எழுதுகிறார்கள் என்பதன் அடிப்படையில் செயல்படுகிறது. நீங்கள் வேறு மாதிரி எழுதும் முறையைக் கொண்டிருந்தால் துவக்கத்தில் சிரமப்பட வேண்டி இருக்கும்.

ஒவ்வொரு விசையை அழுத்தும் போதும் என்ன எழுத்து வெளிவரும் என்று அறிய இயல்வது முக்கியம். ஆனால், கூகுள் எழுதியில் முழுச் சொல்லையும் எழுதிய பிறகே தமிழுக்கு மாறுகிறது. இப்படி வெளிவரும் சொல் பிழையாக இருந்தால் backspace அழுத்திச் சென்று பிழை நீக்குவது பெரிய தலைவலியாகப் போகும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு பத்து வரி கட்டுரை எழுதிப் பார்த்தால் கூகுள் எழுதி எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்று புரியும்.

பயன்பாட்டில் இருக்கிற இந்திய மொழி விசைப்பலகைகள், மென்பொருள்கள் குறித்து எதுவுமே அறியாத, அறிந்து கொள்ள விரும்பாத, பயன்படுத்த விரும்பாத, ஒரு சில வரிகள் குறுஞ்செய்தி போல் மட்டும் எழுத விரும்பும் இளைய தலைமுறை கூகுள் பொறியாளர்களின் சிந்தனையில் இந்தத் திட்டம் தோன்றியிருக்குமோ என்று நினைக்கிறேன். தொலைப்பேசிக் குறுஞ்செய்திச் சேவைகளுக்கு வேண்டுமானால் இந்த முறை கொஞ்சம் உதவலாம்.

3. நாளை யாகூ, எம்எஸ்என் எல்லாரும் இது போன்ற ஊகித்தறியும் மென்பொருள்களை ஆளுக்கு ஒருவராக அறிமுகப்படுத்தினால், ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் இந்த ஊகித்தறியும் மென்பொருள்கள் எந்த அளவு ஒரு போல் இயங்கும் என்று சொல்ல இயலாது. ஒரே தமிழ்ச் சொல்லை வெவ்வேறு முறையில் வெவ்வேறு தளங்களில் எழுத வேண்டி வருவது குழப்பமாக இருக்கும்.

3. இணைய வசதி இன்றி வெறுமனே கணினியில் எழுத இது உதவாது. இணையத்தில் எழுத ஒரு முறை, இணைப்பறு நிலையில் எழுத ஒரு முறை என்று பழகினால் மூளை குழம்பும். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி எழுத இயல்வது தான் வேகமாக தட்டச்சுக்கு உதவும்.

4. நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்கள் என்பதை ஊகித்துக் கற்றுக் கொள்வது போல் இது அமைக்கப்பட்டிருப்பது இந்த மென்பொருளின் சிறப்பாகப் பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில், இது தான் இதன் பெரிய குறை. ஆங்கிலத் தட்டச்சுக்கு இது போல் ஊகித்தறியும் மென்பொருள் வந்தால் உங்களுக்கு எவ்வளவு அயர்ச்சியாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

செல்பேசியில் அதிக விசைகள் இல்லாத நிலையில் குறுஞ்செய்தி போன்று சிறிய அளவிலான செய்திகள் எழுத இந்த ஊகிக்கும் முறை உதவும். கணினியில் பெரிய கட்டுரைகள் எழுத இது உதவாது. ல, ழ, ள, ற, ர, ண, ன, ந எழுத்துக்கள் அடங்கிய சொற்களை எழுதிப் பாருங்கள். இந்த முறையின் அயர்ச்சி புரியும்.

தவிர, இந்த கற்றல் நிகழ்வு உங்கள் உலாவியின் நினைவகத்தில் நடக்கிறது. நீங்கள் வேறு கணினி, இயக்குதளங்கள், உலாவிகளைப் பயன்படுத்தினால் திரும்ப முதலில் இருந்து கூகுளுக்குத் தமிழ் சொல்லித் தர வேண்டி இருக்கும். இது உங்கள் தட்டச்சும் வேகத்தைப் பெரிதும் மட்டுப்படுத்தும்.

5. ஒரே கணினி, உலாவியை உங்கள் நண்பர்கள், உறவினர்களோடு பகிர்ந்து கொண்டால் நீங்கள் செய்து வைத்திருக்கும் தன்விருப்பமாக்கல்கள் குளறுபடி ஆகலாம்.

6. சில சொற்களைத் தலைகீழாக நின்றாலும் எழுத முடியாத அளவுக்கு வழுக்கள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, guha priya, guhapriya என்று எழுதிப் பாருங்களேன் ;) (நன்றி - கோபி)

7. இவை எல்லாவற்றையும் தாண்டி, ஆர்க்குட் போன்ற தளங்களின் பிரபலம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான இளைய தலைமுறையினர் இந்திய மொழி எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதித்துக் கொள்ளத் தொடங்குவார்கள். தொன்மையான வரலாற்றைக் கொண்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளுக்கு இதை விட வேறு அவமானம் உண்டோ?

இந்தத் தீமைகளை ஓரளவேனும் தவிர்க்க வேண்டும் என்று கூகுள் நினைத்தால், பின்வருவனவற்றைச் செய்யலாம்:

1. இணைப்பறு நிலையிலும் செயல்படுமாறு தரவிறக்கிக் கொள்ளத்தக்க மென்பொருள் பொதியாக இதை மாற்ற முனைய வேண்டும்.

2. கணினி, உலாவி, இயக்குதள சார்பு இன்றி குறைந்தபட்சம் கூகுள் பயனர் கணக்கோடு இணைந்ததாக இந்த மென்பொருளை மாற்ற வேண்டும்.

3. எல்லா தளங்களிலும் இதைப் பயன்படுத்த இயல்வது போல் இந்த மென்பொருளுக்கான API வெளியிடலாம்.

ஆனால், இவ்வளவையும் செய்தாலும்,

தமிழ்99 போன்று அந்தந்த மொழிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தட்டச்சு முறைகள், அவற்றை ஊக்குவிக்கும் எ-கலப்பை, NHM Writer போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள் என்றே பரிந்துரைப்பேன். அஞ்சல் / தமிங்கில முறை தான் வேண்டுமென்றாலும் குறைந்தபட்சம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தட்டச்சு செய்ய உதவும் நிலையான மென்பொருள்களை நாடுங்கள்.

இந்திய மொழிகளுக்கான கூகுள் எழுதியைப் புறக்கணியுங்கள். இது குறித்த விழிப்புணர்வையும் பரப்புங்கள்.

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: ·······

16 responses so far ↓

  • 1 ஜ்யோவ்ராம் சுந்தர் // Feb 14, 2008 at 1:11 pm

    மிக முக்கியமான கட்டுரை. நன்றி.

  • 2 உண்மைத்தமிழன் // Feb 14, 2008 at 2:58 pm

    இப்போதைய நிலையில் வலையுலகத்தினருக்கு மிகத் தேவையான விஷயம் இதுவே..

    நானும் இதனால்தான் கடந்த 8 ஆண்டுகளாக யாராலும் கற்றுக் கொள்ள விரும்பாத inscript முறையிலயே டைப் செய்து கொண்டிருக்கிறேன்.

    இதனை மாற்றி வேறு முறைக்கு போக வேண்டுமானால் நான் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது வேலையில்லாமல் இருக்க வேண்டும்..

    மீண்டும் குழப்பம் வரும். அனிச்சை செயலாக எனது கை தற்போதைய முறைக்கு ஆட்கொண்டுவிட்டதால் என்னால் மாற முடியவில்லை. விருப்பமும் இல்லை. அப்படியே விட்டுவிட்டேன்..

    நன்றி ரவி..

  • 3 மயூரேசன் // Feb 15, 2008 at 7:33 am

    //guha priya, guhapriya//
    இந்த நூற்றாண்டின் பெரிய பகிடிகளில் இதனைச் சேர்த்து விடலாம்.

    //API வெளியிடலாம்//
    இங்க பாருங்க!!
    http://gmodules.com/ig/creator?synd=open&url=http%3A//www.google.com/ig/modules/indic_transliteration.xml

    அனைத்தையும் ஏற்றுக் கெள்கின்றேன். ஆனாலும் எமது மக்கள் இலகுகருதி எதையும் அடைமானம் வைக்கத் தயங்கார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.!!!

    வாழ்க தமிழ் 99 ;)

    PS:எனது தளத்துக்கான இணைப்பில் ஒரு பிழை உள்ளது. அதை ஒருக்கா கவனியுங்க தலை!!!

  • 4 ரவிசங்கர் // Feb 15, 2008 at 12:36 pm

    ஜ்யோவ்ராம் சுந்தர், உண்மைத் தமிழன் - நன்றி.

    மயூ - உங்கள் தளத்துக்கான தொடுப்பை சரி செஞ்சுட்டேன்.

    உண்மையில் கூகுள் எழுதி இலகுவா இருந்தா பரவாயில்லையே..அது ஒரு சில சொற்கள் கொண்ட குறுஞ்செய்தி எழுதத் தான் உதவும். பத்து வரி கொண்ட கட்டுரை எழுத முயன்று பாருங்க. மூச்சு முட்டிப் போகும். அப்ப எது இலகு? அது இலகு இல்ல..ஆனா, இலகு மாதிரி தோணுது :)

    அந்த gadget குறித்து தெரியும். ஆனால், அதை வைத்து வெட்டி ஒட்டத் தானே முடியும்? நேரடியா தளங்கள்ல எழுத இயலாதே?

  • 5 கோபி // Feb 15, 2008 at 3:53 pm

    guhapriya என்ற பெயரைக் ‘குதப்பிய’ கூகிள் மொழிமாற்றியை நான் என்றுமே பயன்படுத்தப் போவதில்லை. :-)

    தமிழ் 99 தான் ‘தமிழை தமிழால் தமிழாக தட்டச்சிட சிறந்தது’ என்பது மட்டுமல்ல. அது தான் தமிழ் விசைப்பலகைகளிலேயே புத்திசாலித்தனமானது.

  • 6 Divya // Feb 16, 2008 at 12:43 am

    தகவல்களுக்கு நன்றி ரவி சங்கர்!

  • 7 மயூரேசன் // Feb 16, 2008 at 10:39 am

    ஆர்கூட்டில் ஸ்கிராப் எழுத் சில வேளைகளில் பயன் படுத்தியிருக்கின்றேன். பெரிய பந்திகளாக எழுதியதில்லை!!!

  • 8 வினோத் // Feb 16, 2008 at 1:35 pm

    என்ன வந்தாலும் நமக்கு இப்போ XP ல் தமிழ் புகுத்தி எழுதிவருவதலால் இகலப்பை கூட கடினமாக இருக்கிறது. இம்முறையில் வேகமாக எழுதவும் இயல்கிறது. அதே போல மற்ற மொழியில் எழுதுவதென்றாலும் மொழிதெரியாவிட்டால் கூட அதிக கஷ்டமாக தெரியவில்லை.

  • 9 ரவிசங்கர் // Feb 16, 2008 at 2:24 pm

    வினோத், அது என்ன xpல் தமிழ் புகுத்தி எழுதும் முறை?? கொஞ்சம் விளக்க இயலுமா? இன்னொன்று, எ-கலப்பை என்பது ஒரு மென்பொருள் தான். அதிலும், அஞ்சல், தமிழ்99, பாமினி என்று வெவ்வேறு விசைப்பலகைகள் கிடைக்கின்றன. அனேகமாக நீங்கள் அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பிற மொழி எழுத்துக்கள் தெரியாதவர்களுக்கு அஞ்சல் போன்று அந்தந்த மொழிகளுக்கு உள்ள விசைப்பலகைகள் உதவும் என்பது உண்மை தான். இதே தேற்றத்தைத் திருப்பிப் போட்டு, தமிழ் எழுதத் தெரியாத பிற மொழிக் காரர்களுக்கு அஞ்சல் பயன்படும் என்றும் சொல்லலாம் ;) கூகுள் எழுதியைக் காட்டிலும் அஞ்சலில் எழுதுவது இலகு என்று தான் தோன்றுகிறது.

  • 10 மயூரேசன் // Feb 17, 2008 at 2:14 pm

    என்று அவர் சொல்வது, இன்ஸ்கிரிப்டை…!!!
    ஒரு இந்திய மொழி பயின்றுவிட்டால் எல்லா இந்திய மொழிகளையும் அதே தளக்கோலத்தில் தட்டச்சிட முடிவது இதன் சிறப்பியல்பு!

  • 11 புருனோ // Feb 19, 2008 at 5:09 am

    என்னால் எ-கலப்பையை சில கணணிகளில் நிறுவ முடியவில்லை. (உதாரணம் Windows 2003 Server)

    ஆனால் NHMWriter மிகவும் பயனுள்ளதாக உள்ளது….. இதில் உள்ள பெரிய பயன் என்னவென்றால் உடையும் எழுத்துக்களை தானாகவே சீர் செய்து விடுகிறது…

    தமிழக அரசு நிறுவனமான ELCOT வழங்கும் கணணிகள் பெறும்பாலும் Linux ல் இயங்குபவை….

    இப்பொழுதைய தேவை… NHM Writer Linux Version….

    நான் கூகிள் தமிழ் எழுதி பயன்படுத்துவதில்லை. மொழிக்கென்று ஒரு அங்கிகரிக்கப்பட்ட TamilNet 99 இருக்கும் போது இப்படி ஆளுக்கு ஆள் வித விதமான போனடிக் முறைகளை அறிமுகப்படுத்துவது கொடுமை !!!

  • 12 ரவிசங்கர் // Feb 19, 2008 at 10:55 am

    புருனோ, NHM மென்பொருள்களின் லின்க்ஸ் பதிப்பு உருவாக்கத்தில் இருக்கிறது என்று நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன்.

    மயூரேசன் - தகவலுக்கு நன்றி.

    திவ்யா - இத்தகவல் உங்களுக்குப் பயன்பட்டதில் மகிழ்ச்சி. நன்றி.

  • 13 பிளாக்கரில் தமிழில் உள்ளிடலாம் « தமிழில் நுட்பம் சார் தகவல்கள் // Feb 19, 2008 at 3:27 pm

    [...] பயன் படுத்துவதால் என்ன தீமை என்று விளக்குகின்றார் [...]

  • 14 தமிழ் வலைப்பதிவு » Blog Archive » பிளாக்கரில் நேரடியாகத் தமிழில் எழுதும் வசதி // Apr 22, 2008 at 2:34 pm

    [...] கூகிள் தமிழ் எழுதியைப் பயன்படுத்தாத

  • 15 மாதரசன் // Jun 26, 2008 at 1:09 pm

    நல்ல ஆய்வு…

  • 16 ரவிசங்கர் // Jun 27, 2008 at 12:58 am

    நன்றி மாதரசன்.

Leave a Comment