ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

கற்றது தமிழ்

November 26th, 2007 · 4 Comments · தமிழ், திரை, நாட்குறிப்பு

நான்காம் வகுப்பு படித்தபோது அப்பா சிறுவர் மலரை அறிமுகப்படுத்தித் தந்தார். அதன் பின், பாப்பா மலர், அம்புலி மாமா, தினகரன் வசந்தன், தினமணிக் கதிர், தினமணிச் சுடர், வாரமலர் என்று தொடங்கி எட்டாம் வகுப்பு படித்தபோது மு.வ.வின் 400 பக்க மண் குடிசை நாவலைப் படித்து முடித்த போது அப்பாவே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவ்வளவு bore அடிக்கும் நாவல் அது :) அது தான் நான் படித்த முதல் நாவல். அதன் பிறகு மு.வ, நா.பா, கல்கி, சாண்டில்யன் என்று பள்ளிக்கூட நூலகமே கதியாகக் கிடந்தேன்.

LKG, UKG தொடங்கி இன்று வரை ஆங்கில வழியத்தில் தான் படிப்பு என்றாலும் எப்படியோ தமிழ் மொழிப் பாடம் மீது தணியாத ஆர்வம் இருந்தது. ஆர்வம் என்று சொல்வதைக் காட்டிலும் அதைப் படிப்பது இயல்பாக இருந்தது. என்னைக் கூப்பிட்டுப் பாராட்டாத தமிழம்மாக்கள், ஐயாக்களே இல்லை எனலாம். பெற்றோர் சந்திப்புக்கு அப்பா வரும் போது எல்லாம், உங்கள் பையனை தமிழ் படிக்க வையுங்களேன்..என்பார்கள். ஆனால், பொறியலோ மருத்துவமோ படிக்க வைக்காமல் இவனை எங்கே தமிழ் படிக்க வைக்கப் போகிறார்கள் என்று ஒரு வித நம்பிக்கை இன்மையுடன் தான் சொல்வார்கள்.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு அழகான, இனிய, அருமையான தமிழம்மா எங்களுக்கு வாய்த்தார்கள். நான் பயின்ற வகுப்பில் என்னைத் தவிர எல்லாரும் விடுதியில் தங்கிப் படித்தவர்கள் என்பதால், எங்கள் எல்லாருக்கும் இந்தத் தமிழம்மாவிடம் பெரிய ஒட்டுதல். வகுப்பில் யாருக்கும் உடம்புக்கு முடியாமல் போனால் தமிழம்மா தான் தலையில் துணி வைத்து ஒத்தி எடுத்து காய்ச்சல் போக்குவார். வீட்டு நினைவு வந்து யாரும் அழுதால் தேற்றுவார்கள். ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் ஒரு கதை சொல்வார். அந்த நாளுக்காகவே வாரம் முழுக்கக் காத்து இருப்போம். பாடங்களில் வரும் ஒவ்வொரு கதை மாந்தராகவும் எங்களையே நடிக்க வைத்து எளிதாகப் புரியுமாறு பாடம் நடத்துவார். ஏதாவது குறும்பு செய்து மாட்டினால் கூட, வலிக்காமல் தான் அடிப்பார். அவர் அடிக்கிறேன் என்று சொன்னால், தப்பு செய்யாதவன் கூட ஆசையாய் வரிசையில் நின்று அடி வாங்கப் போவான்..அவ்வளவு இனிமையான அம்மா. நகரத்தில் படித்தவர் என்பதால் தமிழ் அளவுக்குப் புலமையுடன் ஆங்கிலமும் பேசுவார். ஆங்கில வழியத்தில் படித்த எங்களுக்கு அது பெரு வியப்பாய் இருக்கும்.

ஒன்பது, பத்தாம் வகுப்பில் அதே தமிழம்மாவின் கணவர் தமிழ்ப்பாடம் எடுத்ததால் அவர் மீது இருந்த பாசம் முழுக்க தமிழையாவுக்கு transfer செய்தோம் :) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் முன்னே, அகால வயதில் ஒரு சாலை விபத்தில் அவர் இறந்து போன போது முழு பள்ளியுமே சோகத்தில் உறைந்தது. “தமிழனே தமிழில் கையெழுத்துப் போடாவிட்டால் வேறு யார் தமிழில் கையெழுத்துப் போடுவார்கள்” என்று அடிக்கடி சொல்வார் எங்கள் தமிழையா. அதைக் கேட்டு இன்று வரைத் தமிழில் தான் கையெழுத்து இடுகிறேன்.

சென்ற முறை இந்தியா சென்ற போது, பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தத் தமிழம்மாவைப் போய் பார்த்தேன். சற்றும் தாமதிக்காமல், “வா ரவி” என்று அவர்கள் அடையாளம் கண்ட போது உணர்ந்த மகிழ்ச்சிக்கும் பெருமிதத்துக்கும் அளவே இல்லை. நம்ம பிள்ளை என்ற உரிமையுடனும், எப்படி வளர்ந்துட்ட என்ற வாஞ்சையுடனும் அவர்கள் பேசியது அனுபவித்தால் மட்டுமே புரியும் ஒரு உணர்வு. மற்ற எல்லா ஆசிரியர்களைக் காட்டிலும் இறுக்கம் குறைந்தவர்களாகவும் தேர்வுகளைக் காட்டி பயமுறுத்தாதவர்களாகவும் மனிதத்தை வெளிப்படுத்த வாய்ப்பு இருப்பவர்களாகவும் தமிழாசிரியர்கள் தான் என் மனக்கண்ணில் வந்து போகிறார்கள்.

11, 12 வகுப்புகளிலும் 70 வயது தமிழ்ப் புலவர் ஐயா ஒருவரும் இன்னொரு திறமையான தமிழம்மாவும் வாய்த்தார்கள். எல்லாரும் அறிவியல் பாடங்களுக்கு மாதிரித் தேர்வு எழுதினால் நான் தமிழுக்கு உட்கார்ந்து மாதிரித் தேர்வு எழுதிக் கொண்டு இருப்பேன் :) பத்தாம் வகுப்பு, +2 இரண்டிலுமே சொல்லி வைத்தது போல் தமிழில் 94% மதிப்பெண்கள். ஆனால், மேற்கொண்டிருந்த பயிற்சிகளுக்குப் பயனாக இன்னும் கூடுதல் மதிப்பெண் எதிர்ப்பார்த்திருந்தேன் !

பள்ளிக்கூடத்துக்குப் பிறகு தமிழ் வாசம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த பின் முற்றிலும் இல்லாமல் போனது. இணையத்தில் படிக்கக் கிடைக்கும் தமிழ் ஒரு ஆறுதல். இந்த முறை விடுமுறைக்கு வந்திருந்த என் நண்பர்கள் சிலர், எப்போதும் தமிழ்த் தளங்களே கதியாய் நான் கிடைப்பதைப் பார்த்து, “இவ்வளவு தமிழார்வம் இருந்தால் பேசாமல் நீ தமிழ் படித்திருக்கலாமே” என்றார்கள்.. ஆனால், இன்று வரை கல்லூரியில் தமிழ் படித்திருக்கலாமே என்று தோன்றியதில்லை. தமிழின் பேரில் உள்ள ஆர்வத்துக்கும் செய்ய நினைப்பவற்றுக்கும் கற்றுக் கொள்ள நினைப்பவற்றுக்கும் கல்லூரி பட்டப்படிப்பு அவசியம் என்றோ போதும் என்றோ எனக்குத் தோன்றவில்லை.

—-

தமிழ் M.A (எ) கற்றது தமிழ் படம் குறித்த கதை கேள்விப்பட்ட போதும், படத்தைப் பார்க்கும் போது என் பள்ளி வாழ்க்கை, தமிழுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு, தமிழ் படித்திருந்தால் நான் எப்படி இருந்திருப்பேன் போன்ற நினைவுகள் வந்து போயின. ஏனடா பார்த்தோம் என்று எண்ணற்ற படங்கள் நோக வைக்கையில் நம் வாழ்க்கை குறித்த நினைவுகளைக் கிளறி விட இயல்வது ஒரு கலைபடைப்பின் வெற்றி தான். சிவாஜி திரைப்படத்துக்கு இணையாக எண்ணற்ற விவாதங்களையும் இப்படம் கிளப்பி விட்டிருப்பதும் பாராட்டத்தக்கதே. இப்படி ஒரு படம் வந்திருக்காவிட்டால் இன்றைய சூழலில் தமிழ்ப் படிப்பு, தமிழ்ப் பட்டதாரிகள் நிலை, படம் தொட்டுக் காட்டும் சமூக ஏற்றத் தாழ்வுகள் குறித்து இன்றைய சூழலில் ஒரு விழிப்புணர்வு உரையாடல் இவ்வளவு பெரிதாய் நடந்திருக்க வாய்ப்பில்லை.

படத்தைப் பார்த்து விமர்சித்தவர்கள், உரையாடியவர்கள் பலரும் படத்தின் இறுதியில் சுட்டிக்காட்டிய விசயங்களை அலசினார்களே தவிர, ஒரு படமாய் இதன் கலைத்திறனை விமர்சித்தவர்கள் மிகக் குறைவு. படம் சுட்டிக் காட்டும் விசயத்துக்காப் படத்தைப் பாராட்டியவர்கள் தான் பலர். ஒரு இணையத்தளம் இப்படத்தை இந்திய சினிமாவின் குறிஞ்சி மலர் என்றது. பாலுமகேந்திரா இதை ஆசியாவின் சிறந்த ஐந்து படங்களில் ஒன்று என்றார். இப்படத்தின் இயக்குனர் பாலுமகேந்திராவின் மாணவர் என்பதால் நெகிழ்ந்து சொன்னாரா இல்லை உண்மையிலேயே இந்தப் படத்தில் அப்படி ஏதும் இருக்கிறதா என்றும் என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

ஒன்று, ஒரு படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்க இயலும் படி ஒரு அருமையான entertainerஆக இருக்க வேண்டும். இல்லை, கனமான விசயங்களை அலசும் சோகப் படம் என்றால், இன்னொரு முறை பார்க்கத் துணியாத அளவுக்கு உறைய வைக்கும் தாக்கம் உடையாதாக இருக்க வேண்டும். இந்தப் படம் இந்த இரண்டிலும் சேர்த்தி இல்லை. இன்று வரை, இந்தப் படத்தைப் பாருங்கள் என்று எந்தக் காரணத்துக்காகவும் என் நண்பர்களுக்குப் பரிந்துரைக்க இயலாத வணிக நியதிகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட ஒரு அரை வேக்காட்டுப் படமாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. படம் அலசும் விசயம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். குத்துப் பாட்டு இல்லை, ஆபாசம் இல்லை என்பதற்காக ஒரு படத்தை நல்ல படம் என்று சொல்லி விட முடியாது. இந்த மாதிரிப் படங்களை “critically acclaimed” என்று ஊடகங்கள் கொஞ்சம் போது எரிச்சலே மிஞ்சுகிறது.

படத்தின் பெரும் குறைகளாக நான் நினைப்பது:

1. கதையை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றிச் சொல்வது பரபரப்பாக இருக்கும் என்று இயக்குநர் நினைத்திருப்பார் போல். எனக்கு அப்படி ஒன்றுமே தோணவில்லை. உருப்படியாக நேர்க்கோட்டிலேயே கதை சொல்லி இருக்கலாம். முன்னும் பின்னுமாகச் சொல்வது எல்லாம் இயக்குநரின் மேதாவித்தனத்தைக் காட்டத் தான் என்று தோன்றுகிறது.

2. படத்தில் சுட்டிக்காட்டும் முக்கிய விசயங்கள் எல்லாம், முக்கியமாக climaxக்கு நெருங்கிய, சமூக ஏற்றத்தாழ்வு குறித்த விசயங்கள் எல்லாம் வசனங்களாகவே முன்வைக்கப்படுகிறது. காட்சிப்படுத்தல் திறம் சிறிதும் இல்லை. இந்த வசனம் இல்லை என்றால் இதைத் தான் இயக்குநர் சொல்ல வருகிறார் என்பது ஒருவருக்கும் புரிந்து இருக்காது. இந்த விசயத்தைச் சொல்ல ஒரு சிறந்த மேடைப்பேச்சோ மேடை நாடகமோ போதுமே? திரைப்படம் எதற்கு?

3. குழப்பமான பாத்திரப் படைப்பு. ஒரு காட்சியில் காலைப் பிடித்துக் கெஞ்சுவது போல் இருக்கிறார் நாயகன். அடுத்த காட்சி ஆவேசமாகப் பேசுகிறார். புரட்சிக்காரன் போல் தன் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்கிறார், அப்புறம், என்னத்துக்காக அதைத் தானே காவல் துறையிடம் கொடுத்து விட்டு லூசுத்தனமாகச் செத்துப் போகிறார் என்று புரியவில்லை.

4. குழப்பமான கதை. அன்பும் ஆதரவுமற்ற சிறு வயது, காதல் தோல்வி, சமூக ஏற்றத் தாழ்வு என்று நாயகனின் மனப்பிறழ்வுக்கு பல காரணிகள் இருக்கும் போது குறிப்பிட்ட எந்தக் காரணியின் மீதும் பார்வையாளின் சிந்தனை செல்வது இயலாததாக இருக்கிறது. ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் துவக்கத்திலேயே ஆனந்தியோ பெற்றோரோ நாயகனுடன் இருந்திருந்தால் அவன் இப்படி ஆகி இருப்பானா என்று நினைப்பதைத் தவிர்க்க இயலாது. மனம் பிறழ்ந்த ஒருவனின் கதையை dramaticஆகச் சொல்லாமல் சமூகத்தில் பலரைப் போல் இருக்கும் ஒருவனின் கதையை இன்னும் நேர்மையாக உறைக்கும் படிச் சொல்லி இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.

தான் எடுக்க நினைக்கும் கதையை எடுக்க இயக்குநருக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்றாலும், இந்தக் கதையை உருவாக்கிய அடிப்படையாக இயக்குநர் சொல்வது எனக்கு எரிச்சல் ஊட்டியது. தன் வாழ்வில் பார்த்த பலரது நிகழ்வுகளின் தொகுப்பே இந்தக் கதை என்கிறார் இயக்குநர். பலருடைய வாழ்க்கைக் கதைகளை எடுத்து ஒரே ஆளின் கதையாகச் சொல்லும் உத்தி இன்னும் சில தமிழ்த் திரைப்படங்களிலும் இருக்கிறது. ஆனால், இப்படிச் செய்வது ஒரு அதீத செயற்கைத் தனத்தை நுழைத்து விடுகிறது என்று தான் தோன்றுகிறது. சொல்வதானால் ஒருத்தனின் வாழ்வில் உண்மையிலேயே நடந்த கதையைக் கொஞ்சம் கூட்டிக் குறைத்துச் சொல்லலாம். பலரது வாழ்வைக் குழப்பி அடித்து சொல்ல நினைப்பதை எல்லாம் ஒரே படத்தில் சொல்ல நினைத்துச் சொதப்பியதாகவே இந்தப் படம் தெரிகிறது.

ஒருவனின் நாய்க்குட்டி சாகிறது, அம்மா சாகிறாள், அப்பா விடுதியில் விட்டு விட்டு இராணுவத்துக்குப் போகிறார், விடுதியில் இருந்த அன்புள்ள தமிழையாவும் இறக்கிறார், காதலித்த பெண் பிரிந்து போகிறாள், காசில்லாத நாயகன் காவலர்களிடம் மாட்டுகிறார், பைத்தியமாகிறார், ஏகப்பட்ட கொலைகள் செய்கிறார், காதலித்த பெண் விலைமாதாகிறாள், திரும்ப சந்தித்து இருவரும் சாகிறார்கள்…uff..இந்தக் கதையை என் நண்பரிடம் சொன்ன போது, ஆள விடுறா சாமி என்று தெறித்து ஓடிவிட்டார் :) படம் ஏன் வணிக ரீதியில் பெரு வெற்றி பெற வில்லை என்று இப்போது புரிகிறது :)
அண்மைய தமிழ்த் திரைப்படங்களில் எரிச்சலூட்டும் இன்னொரு போக்கு - காவியப்படுத்தப்படும் சிறு வயது அல்லது பள்ளிக்காலக் காதல். ஏதோ ஓரிரு படத்தில் இப்படி காவியமாக்கிக் காட்டினால் பொறுத்துக் கொள்ளலாம். பல படங்களில் இதையே காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். இது உண்மையில் நிகழக்கூடிய ஒன்றாகவே எனக்குத் தோன்றவில்லை. இந்தக் கதையையே எடுத்துக்கொண்டால், பிரபாகர் ஆனந்தியை வளர்த்த பிறகு பார்த்திருக்காவிட்டால், ஆனந்தி மேல் இவ்வளவும் பற்றுதலும் பாசமும் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனந்தி ஒரு மோசமான மாமனிடம் மாட்டி விலை மாதாக ஆகி இராவிட்டால் பிரபாகர் கூப்பிட்டவுடன் உயிர் உருகி வந்து செத்துப் போய் இருக்க மாட்டாள்.

—-

படத்தின் கலைத்திறம் வேறு, படம் சொல்ல முற்படும் செய்தியின் முக்கியத்துவம் வேறு. அந்த விதத்தில் படம் சொல்ல முற்படும் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து விரிவாக, ஆழமாக அலசும் அளவுக்கு எனக்கு அறிவு இருப்பதாகத் தோன்றவில்லை :) என்பதால் அது பற்றி ஏதும் எழுதாமல் இருப்பதே நலம்.

—-

இதே போல் அதிகம் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட இன்னொரு படம் பார்த்தேன். அம்முவாகிய நான். ஹ்ம்ம்..இது தான் தமிழ்த் திரையுலகில் நல்ல படம் என்றால், பிறகு மோசமான படங்களைப் பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்தப் படத்தை ஒரு தொலைக்காட்சித் தொடராக எடுத்திருந்தால் ஒப்பேற்றி இருக்கலாம். அவ்வளவு logic ஓட்டைகள், செயற்கைத் தனம், சினிமாத்தனம்.

—-

தீபாவளிப் படங்கள் எல்லாம் பார்த்து அலுப்பாக இருக்கிறது. திரைப்படங்கள் பார்ப்பதைக் காட்டிலும், அதைக் குறித்த செய்திகள், கிசுகிசுக்கள், துணுக்குகள், விமர்சங்கள் என்று படிப்பதில் ஏகத்துக்கும் நேரம் வீணாகிறது. நேரம் வீணானாலும் பரவாயில்லை. ஆனால், இப்படி உள்ளூர் செக்கிலேயே சுற்றுவது, கலை ரசனை குறித்த ஒரு விதமான மழுங்கல் தன்மையைக் கொண்டு வந்து விடுகிறதோ என்று தான் கவலையாக இருக்கிறது. வரைமுறை இன்றி இந்திய மசாலா திரைப்படங்கள் பார்ப்பதை, செய்திகள் படிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உலகத் திரைப்படங்கள் பக்கம் போக வேண்டும் !

—–

நண்பர்கள் சேர்ந்து திரை விமர்சனத்துக்கு என ஒரு கூட்டுப் பதிவு தொடங்கி இருக்கிறோம். பார்க்க - திரை விமர்சனம் . நீங்களும் எங்களுடன் இணைந்து எழுதலாமே? இந்தக் கூட்டுப் பதிவுக்கென நீங்கள் மெனக்கெட்டு எழுதத் தேவை இல்லை. உங்கள் பதிவில் எழுதும் போது, இங்கும் அதை வெட்டி ஒட்டலாம். திரைப்படங்கள் மூலம் மக்களை வலைப்பதிவுகளுக்கும் தமிழிணையத்துக்கும் இழுக்க ஒரு முயற்சி !

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: ·······

4 responses so far ↓

  • 1 கலை // Nov 26, 2007 at 11:55 am

    உங்க தமிழ் கற்ற அனுபவமும், கற்றது தமிழ் விமர்சனமும், இரண்டுமே நல்லா இருக்கு.

  • 2 உமையணன் // Nov 26, 2007 at 2:28 pm

    //இன்று வரைத் தமிழில் தான் கையெழுத்து இடுகிறேன்.//

    நானும் தமிழில்தான் கையெழுத்திடுகிறேன். நான் தமிழில் கையெழுத்திடுவதற்கு என் அப்பாதான் காரணம். என் அப்பா சொல்வார், நாம் என்ன இலண்டனிலா இருக்கிறோம் ஆங்கிலத்தில் கையெழுத்துப்போட என்று. இன்று நான் இலண்டனிலேயே தமிழில்தான் (என் அலுவலகம், வங்கிக்கணக்கு உட்பட) கையெழுத்துப்போடுகிறேன்.
    ஒவ்வொருமுறை கையெழுத்துப்போடும்போதெல்லாம் என் அப்பா சொன்னதைத்தான் நினைத்துக்கொள்வேன்.

  • 3 kalavathy // Nov 28, 2007 at 3:37 am

    ravi,
    i am not ponniyinselvan,.
    i am karthikeyan’s mother.he must be your senior in Anna Uni.he worked in Dell and met with a fatal accident.
    you might be knowing him. he was the quiz master, and computer society secretary in 2001-2002.
    as a bereaved mother, i continue his blog.
    karthik belongs to 2002 batch.do u know him.?
    write to me.
    anbudab,
    karthik amma

  • 4 ரவிசங்கர் // Nov 28, 2007 at 3:43 am

    அம்மா, நீங்கள் சொன்னதைக் கேட்டு மனசுக்கு கஷ்டமா இருக்கு. நான் 2003ல் ac tech கல்லூரியில், b.tech bio tech படிச்சு முடிச்சேன். அவர் எந்த branch படிச்சாருன்னு சொல்வீங்களா?

    அன்புடன்
    ரவி

Leave a Comment