ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி

March 14th, 2008 · 10 Comments · தமிழ்

கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி குறித்த சில தமிழ் வலைப்பதிவு இடுகைகள்:

தமிழ் வளர்ப்பு - அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும் - இலவசக் கொத்தனார்

மேற்கண்ட இடுகைக்கு வந்த தக்க எதிர்வினைகள்:

காதுல பூ - வவ்வால்

பள்ளிகளில் தமிழ் படிக்காதவர்கள் வெறும் 2% தானா? - புருனோ

இந்த இடுகைகள், மறுமொழிகளில் பிடித்த கருத்துகள்:

* “எதையும் கட்டாயப்படுத்தக்கூடாது. மாணவர் விருப்பத்துக்கு விட வேண்டும்” என்ற சல்லிக்கு எதிராக நவீன் சொன்னது:

‘பத்தாவது வரை தமிழ் படிப்பது கட்டாயம்’ என உத்தரவு வந்ததிலிருந்து இம்மாதிரியான அபத்தக்குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது ‘தனிமனித விருப்பம்’ என்ற பெயரில்.

‘மாணவன்’ என்பவன் யார்? கற்பவன் - பால்வாடி முதல் பல்கலை வரை. ‘எதன்பால் ஈர்ப்பு’ என ஒரு மாணவன் அறிவது எந்த வயதில்? பால்வாடி/ஆரம்பகல்வி மாணவனுக்கு பள்ளியின்மீதே ஈர்ப்பில்லை. அதட்டி பள்ளியில் சேர்ப்பது பெற்றோர் கடமையா இல்லையா? தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் (நன்கு எழுத/படிக்க) தமிழ்கற்றுக்கொள்வது இங்கு சமூகவாழ்வுக்கு அவசியமா இல்லையா?. கற்றுகொடுப்பது அரசின் கடமையா இல்லையா?

சரி, ஒரு மாணவனுக்கு ஆங்கிலத்தின் மீது அல்லது கணக்கின் மீது அல்லது வேறுபாடத்தின் மீது ஈர்ப்பு இல்லையென்றால் அதை படிக்காமல் தவிர்க்க (உயர்நிலை வரை) வழி இருக்கிறதா? இல்லாதபோது, அது கட்டாயபடுத்தல் ஆகாதா? பிடித்தோ பிடிக்காமலோ பத்தாவது வரை அனைவரும் ஒரு பாடத்திட்டத்தை படித்துதான் தீரவேண்டும். ஒரு மாணவன் தன்னை ஈர்க்கும் பாடம் எது என அறியக்ககூட பாடங்களின் அறிமுகமும் அறிவதற்கான காலமும் அறிந்துகொள்ளும் முதிர்ச்சியும் தேவை. அதற்குதான் பத்தாண்டுகள் நம் கல்வி திட்டத்தில். அதன்பின் தன் விருப்பப்படி தேர்வு செய்ய (ஓரளவு) வழி இருக்கிறது. ஆக, அரசு தன் கடமையைச் செய்கிறது. செய்யவிடுங்கள்!

* “இப்படி கட்டாயப்படுத்துவது மக்களாட்சியா” என்ற கேள்விக்கு

இராமனாதன் சொன்னது:

‘தமிழகத்தில்’ தமிழை கட்டாய பாடமாக்க வேண்டுமா வேண்டாமா என்பது விவாதத்துக்குரியதாக இருக்க முடிகிறது என்பதைத்தவிரவும் உண்மையான மக்களாட்சி நடைபெறுகிறது என்பதற்கு என்ன சான்று வேண்டும்? இங்கே பலர் குறிப்பிட்ட படி, சீனாவிலோ ரஷ்யாவிலோ ஜெர்மனியிலோ ப்ரான்சிலோ, ஏன் ‘உண்மையான’ மக்களாட்சி நடைபெறும் இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ அந்தந்த மொழிகள் கட்டாயமாக இருக்கிறதா இல்லையா?

இந்த விசயம் குறித்த என் சிந்தனைகள்:

தமிழே எழுதப் படிக்கத் தெரியாமல் நல்ல தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி பயின்று தமிழ்நாட்டிலேயே வேலைக்கு அமர்பவர்கள் எப்படி தமிழ் பேசும் பாமர மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும்? (இந்த முக்கியமான பிரச்சினையை வவ்வால் சுட்டி இருந்தார்). ஏற்கனவே ஆங்கில மயமாகி வரும் அரசு, தனியார் துறைகளை தங்கள் வசதிக்காக முழுக்க ஆங்கில மயமாக்குவார்கள். “மனித உரிமை” என்ற பெயரில் தமிழைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கும் தமிழர்களே, தமிழ் முழுக்க அரசு மொழியாவதற்கு பெருந்தடையாக இருப்பார்கள்.

மாணவரின் விருப்பத்தின் படி வேண்டாத பாடங்களை விடுக்கலாம் என்றால், முதலில் கசக்கக் கசக்க சிரம்பபட்டுப் படித்த புவியியல் படிப்பதை நிறுத்தி இருப்பேன் ;) கணக்குப் பாடத்தில் calculus, trignometry நீக்கிப் படித்து இருப்பேன் ;)

ஆங்கிலப் பாடத்தில் பயிற்சி பெறாத ஒரே காரணத்தால் பள்ளியில் தேர்ச்சி அடையாமல் படிப்பைப் பாதியில் எத்தனை மாணவர்கள் கைவிடுகிறார்கள்? பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு எத்தனை பேர் வேறு வேலைகளுக்குச் செல்கிறார்கள்? இவர்களின் விருப்பத்தை எல்லாம் கேட்டிருந்தால் முதலில் ஆங்கிலப் பாடத்தைத் தான் வேண்டாம் என்றிருப்பார்கள். தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை இவர்கள் விருப்பம் அறியாமல், அவர்களுக்குத் தேவை இல்லாமல் திணிப்பதை விடவா தாய்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குவது பெரிய குற்றம்?

தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியினருக்கும் வெளியே போக வர, பேச தமிழ் தேவை என்ற அடிப்படையில் தமிழ் கற்பிப்பது தவறு இல்லை. பிற மொழி மாணவர்களும் தமிழ் கற்பது அவர்கள் வாழும் சமூகத்தில் உள்ள பிற தமிழ் மாணவர்களோடு இணைந்து நட்பு பெறவே உதவும். கட்டாயத் தமிழ்க் கல்வித் திட்டத்துக்கு எந்த மாணவரும் முணுமுணுப்பதாகத் தெரியவில்லை. பெற்றோர்கள் தான் குதிக்கிறார்கள். ஏன்?

அறிவியல் பாடங்களுக்கு காசு கட்டி ஒன்றுக்கு நான்கு பயிற்சி வகுப்பு மாணவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டுப் படித்தால் ஏன் தமிழ்ப் பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற இயலாது? தமிழ் ஆசிரியர்கள் போதிய மதிப்பெண் போடுவதில்லை என்பதை நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். மாணவர்கள் அதற்குத் தேவையான முயற்சிகளைச் செய்வதில்லை என்றே கருதுகிறேன். ஒரு பாடத்தை அணுகும் போதே அதைக் கிள்ளுக்கீரையாக நினைத்து அணுகினால், பிறகு எப்படி அதில் தேர்ச்சி கிட்டும்? தமிழில் பத்தாம் வகுப்பில் 94/100 ம், 12ஆம் வகுப்பில் 185/200ம் எடுத்திருந்தேன். இதனால், வேறு படிப்புகளுக்கு நான் செலுத்திய கவனம் எந்த வகையிலும் குறையவில்லை. உண்மையில், அசர வைக்கும் அறிவியல் பாடங்களுக்கு இடையில் தமிழ்ப் பாடங்கள் சுவையாக இருந்தன.

தாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.

வேறு என்ன சொல்ல?

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: ······

10 responses so far ↓

  • 1 ILA // Mar 14, 2008 at 5:55 pm

    //ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்//

    இல்லை, கன்னடத்தில இந்த மாதிரி பிரச்சினை ஆரம்பிச்சு ரொம்ப வருஷம் ஆச்சு.

  • 2 ரவிசங்கர் // Mar 14, 2008 at 11:11 pm

    இளா, ஒரு பேச்சுக்கு உணர்ச்சி நிறையச் சொன்னேன்னு வைச்சுக்குங்களேன் :) ஏற்கனவே கர்நாடகம், மராட்டியத்தில் கட்டாய உள்ளூர் மொழிக் கல்வி வந்திடுச்சு தானே?

  • 3 புருனோ // Mar 15, 2008 at 4:09 am

    //‘பத்தாவது வரை தமிழ் படிப்பது கட்டாயம்’ என உத்தரவு வந்ததிலிருந்து இம்மாதிரியான அபத்தக்குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது ‘தனிமனித விருப்பம்’ என்ற பெயரில்.//

    இதே உத்தரவு இருக்கும் கர்நாடகத்திலோ, ம்காராஷ்டிரத்திலோ யாரும் ஏன் தனி மனித உரிமை பற்றி பேச வில்லை. அங்கும் நடப்பது மக்களாட்சிதானே.

    பேரூந்து பெயர் பலகை கூட படிக்க முடியாதவர் (எனது பதிவில் ஒரு கதை இருக்கிறது http://payanangal.blogspot.com/2008/03/2.html) எப்படி மக்கள் மருத்துவராக முடியும்

    //இவர்களின் விருப்பத்தை எல்லாம் கேட்டிருந்தால் முதலில் ஆங்கிலப் பாடத்தைத் தான் வேண்டாம் என்றிருப்பார்கள். தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை இவர்கள் விருப்பம் அறியாமல், அவர்களுக்குத் தேவை இல்லாமல் திணிப்பதை விடவா தாய்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குவது பெரிய குற்றம்?//

    சிக்ஸர் !!!

  • 4 கலை // Mar 15, 2008 at 8:14 am

    பொதுவாக எந்த ஒரு நாட்டிலும், அவர்களது தாய்மொழி கட்டாய பாடமாக இருப்பதுதான் வழமை. அது அவசியமும் கூட. அது தேவையே இல்லை என்பது ஏன் என்பது புரியவில்லை.

    பொதுவாக மக்களிடம் நேரடி தொடர்பு கொண்டிருக்கும் தொழில்சார் வேலைகளுக்கு அது அவசியமும்கூட.

  • 5 ரவிசங்கர் // Mar 15, 2008 at 9:58 am

    புருனோ, உங்கள் நண்பரின் கதையே முன்பே படித்துவிட்டேன். எல்லாருக்கும் அது போல் ஒரு நண்பர் இருக்கிறார். சிரிப்பதா நோவதா என்று தெரியவில்லை. ம்ம்..

  • 6 புருனோ // Mar 15, 2008 at 1:08 pm

    //எல்லாருக்கும் அது போல் ஒரு நண்பர் இருக்கிறார். சிரிப்பதா நோவதா என்று தெரியவில்லை. ம்ம்..//

    கண்டிப்பாக நோக வேண்டிய விஷயம் தான் இது :) :)

  • 7 நவீன் // Mar 15, 2008 at 6:11 pm

    தனிமனித விருப்பம் - கட்டாயப்படுத்தல் என்ற ஓர் அடிப்படை புள்ளியில் நான் மறுமொழி இட்டிருந்தேன். அதை விரிவாகவும், மேலும் சிலகோணங்களையும் காட்டுகிறது உங்களின் இந்த பதிவு.
    நன்றிகளும் வாழ்த்துகளும் !

  • 8 ரவிசங்கர் // Mar 17, 2008 at 11:09 am

    புருனோ - நோக வேண்டிய விசயம்னு நீங்க happy smiley போடுற மாதிரி தான் சிரிப்பதா நோகுறதான்னு கேட்டேன் :)

    நன்றி நவீன். இது குறித்த கருத்துக்களிலேயே உங்கள் கருத்து நச்சுன்னு இருந்துச்சு. நீங்க வலைப்பதிவில் எழுதுவதுண்டா?

  • 9 நவீன் // Mar 18, 2008 at 2:28 pm

    இல்லை ரவிசங்கர். பதிவுகள் படிப்பதில் பெரும் ஆர்வமுண்டு. இப்போதைக்கு பின்னூட்டங்கள் தான் எழுதமுடிகிறது :)

  • 10 ரவிசங்கர் // Mar 18, 2008 at 2:47 pm

    நவீன் - விரிவா எழுதுற மறுமொழிகளையே ஒரு பதிவில் போட்டு வைச்சிடுங்க :) ஒரே விசயம் நிறைய பதிவுகள்ல பேசப்படும்போது தொடுப்பு கொடுக்க உதவுமே…

Leave a Comment