நான் அறிந்த சில இணையத் தமிழ் நுட்ப ஆர்வலர்கள் பெயரைப் பதிந்து வைக்கிறேன்.
(எந்த வரிசையிலும் இல்லை)
1. முகுந்த் - தமிழா! அமைப்பின் முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவர். இவர் உருவாக்கிய எ-கலப்பை பல தமிழர்கள் கணினியில் எளிதாகத் தமிழ் எழுத உதவுகிறது. எந்த சர்ச்சையிலும் அடிபடாத திறமூல தமிழ்ப் பதிவுகள் திரட்டியை தனி உழைப்பில் நடத்தி வருகிறார்.
2. மாஹிர் - தமிழூற்று - தமிழர்களின் அறிவுச் சுரங்கம் என்ற பெயரில் சத்தமில்லாமல் தமிழிணையம் சார்ந்து பல நுட்பப் பணிகள் ஆற்றி வருகிறார். தமிழ் இணையத்தளங்கள், தமிழ் வலைப்பதிவுகள், தமிழ் விக்கி இயக்கங்கள் தொடர்பில் பயனுள்ள தேடு கருவிகள், வழிகாட்டுக் கருவிகள் உருவாக்கி உள்ளார்.
3. கோபி - இந்திய மொழிகள் பலவற்றுக்குமான ஒருங்குறி எழுது கருவிகள் செய்திருக்கிறார். இது தவிர, பல பயனுள்ள தமிழ் சார் Firefox நீட்சிகள் செய்து தந்திருக்கிறார். என் தெலுங்கு, வங்காள நண்பர்களுக்கு இந்த எழுது கருவிகளை அறிமுகப்படுத்தி, கூடவே, “இதை உருவாக்கியது ஒரு தமிழர்” என்று சொல்கையில் அவர்கள் முகம் போகிற போக்கைப் பார்ப்பதில் எனக்கு ஒரு சத்தோஷம் ![]()
4. ஜெகத் - இனியன் என்ற பெயரில் இந்திய மொழிகளுக்கான தமிழ் எழுத்துப் பெயர்ப்புக் கருவியைத் தனி உழைப்பில் கொண்டு வந்திருக்கிறார். இது போன்ற முயற்சிகள் பல்கலைக்கழக அளவில் தான் செய்யப்படுவது வழக்கம் !
5. Voice on Wings - முகுந்த், கோபியுடன் இணைந்து Firefox தமிழ்விசை நீட்சியின் உருவாக்கத்தில் பங்கு வகித்தவர். விக்கிபீடியா, வலைப்பதிவுகள் தொடர்பான Firefox நீட்சிகளையும் உருவாக்கி இருக்கிறார். இவரது அண்மைய உழைப்பு - மாற்று!.
6. மயூரன் - தமிழில் கட்டற்ற முயற்சிகள் எங்கிருந்தாலும் அங்கு மயூரனும் இருப்பார்! தமிழ் லினக்ஸ், தமிழ் உபுண்டு, தமிழ்க் கணிமை குழுக்களில் இவரது ஆர்வமும் ஈடுபாடும் உழைப்பும் பலரும் அறிந்தது.
மேற்கண்டவர்கள் பலரும் தொடர்ந்து முனைப்புடன் தமிழிணையக் களங்களில் இயங்கி வருபவர்கள். வருங்காலத்தில், இன்னும் பல தமிழ்க் கணிமை முயற்சிகளை இவர்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம். இவர்கள் தவிர,
7. காசி - தமிழ் வலைப்பதிவுகள் சிறுகச் சிறுகப் பெருகத் தொடங்கிய போது அவற்றைக் காட்சிப்படுத்தி, கூடிய வாசக வெளிச்சம் கிடைக்க உதவியாகத் தமிழ்மணம் திரட்டியை உருவாக்கினார். தற்போது, தனிப்பட்ட அலுவல்கள் காரணமாக தமிழிணையச் சூழலில் இருந்து விலகி நோக்கி வருகிறார் என்று நினைக்கிறேன்.
8. சுரதா - தமிழிணையக் கருவிகளுக்கு இவர் உருவாக்கிய சுரதா தளம் ஒரு களஞ்சியம் போல். இவருடைய சுரதா ஒருங்குறி எழுதி, பொங்குதமிழ் கருவிகளைப் பயன்படுத்தி இராதவர்கள் மிகக் குறைவே. தற்போது, இவரிடம் இருந்து புதுக் கருவிகள் உருவாகி வருவது போல் தெரியவில்லை. பிற அலுவல்களில் இவரது கவனம் இருக்கலாம்.
9. மறைந்த உமர் தம்பி அவர்கள் - இவர் குறித்த விரிவான விக்கிபீடியா கட்டுரை இங்கே. இவரது உழைப்பும் உணர்வும் கோபி, மாஹிர் போன்ற பலரையும் தூண்டி விட்டது பெரும் சிறப்பாகும்.
10. மறைந்த சாகரன் என்னும் கல்யாண் - தமிழ்மணம் என்ற முன்னணித் திரட்டி இருக்கையில் இன்னொரு திரட்டியின் தேவை உணர்ந்து முனைந்து உருவாக்கியதே பெரிய விசயம். இவரது தேன்கூடு திரட்டியை தெலுங்கு மொழிக்கும் கொண்டு சென்றது தமிழிணைய முயற்சிகளுக்கு ஒரு முன்மாதிரி ஆகும். தமிழில் உருவாகிய சன் தொலைக்காட்சி இப்பொழுது தென்னகம் எங்கும் விரிந்து வளம் கொழிப்பதை நினைவுகூரலாம்! எளிமையாக எவராலும் செய்து முடித்திருக்கக்கூடிய ஆனால் யாரும் செய்ய மறந்த ஒன்றை இவர் செய்தார்; அது - தேன்கூடு தமிழ் அகரமுதலிகள் வலைவாசல்.
–
அருஞ்சொற்பொருள்
1. திறமூலம் - open source
2. திரட்டி - aggregator
3. நீட்சி - extension
4. வலைவாசல் - portal
6 responses so far ↓
1 பொன்ஸ் // Apr 27, 2007 at 6:32 pm
தொகுத்தமைக்கு நன்றி ரவி.. எல்லாருக்கும் வாழ்த்துக்கள் என்பதைத் தவிர நாம் என்ன செய்திருக்கிறோம் என்ற கேள்விகளையும் எழுப்புகிறது இந்தப் பதிவு..
(இன்றைய நிலவரத்தில், இதைத் தமிழ்மணத்தில் இட்டிருக்கலாம்
)
2 ravishankar // Apr 27, 2007 at 6:54 pm
ஏற்கனவே, உலகில் உள்ள சிந்தனைகள், நுட்பங்களை தமிழ்ச் சூழலுக்குக் கொண்டு வந்ததற்கே இவ்வளவு நன்மை என்றால், தமிழக மென்பொருளாளர்கள், மென்பொருள் மாணவர்களில் ஒரு சிலராவது வாரம் ஒரு மணி நேரம் தமிழ்க் கணிமைப் பணிகளுக்கு ஒதுக்கினால் எவ்வளவோ செய்யலாம். தமிழ்க் கணிமையில் செய்யப்பட வேண்டியவற்றை குறித்து அடுத்து எழுதுகிறேன்.
3 மயூரேசன் // Apr 28, 2007 at 11:06 am
ரவி.. உங்க பெயரையும் சேர்த்திருக்கலாமே!!!!
தமிழார்வலர் பணி எல்லாத்திலையும் நீங்களும் இருப்பீங்களே!!
4 ravishankar // Apr 28, 2007 at 11:09 am
மேலே உள்ளவங்க எல்லாம் நுட்ப ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் அதற்கான நிரலாக்க வினைத்திறமும் உள்ளவர்கள். எனக்கு htmlஏ ஒழுங்காத் தெரியாது
கல்லூரியில் பேசாம கணினி அறிவியல் படிச்சிருந்தா நானும் கொஞ்சம் பங்களிக்க முடிஞ்சிருக்குமேன்னு இப்ப தோணுது..இருந்தாலும், ஓய்வு நேரத்துல php, javaனு சிலவற்றையாவது கத்துக்க முடியும்னு நினைக்கிறேன்.
5 மயூரேசன் // Apr 29, 2007 at 9:58 am
ஆமா.. ரவி.. நிரல் எழுதுதல் என்பதை விட அதற்கான ஆர்வம் முக்கியம்.. அது உங்களிடம் நிறையவே உள்ளது.. நீங்கள் நிரல் எழுதப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை!!! இல்லை!!!!

6 புருனோ // Aug 13, 2008 at 3:52 pm
//எல்லாருக்கும் வாழ்த்துக்கள் என்பதைத் தவிர நாம் என்ன செய்திருக்கிறோம் என்ற கேள்விகளையும் எழுப்புகிறது இந்தப் பதிவு..//
http://poorna.rajaraman.googlepages.com/home
Leave a Comment