கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து சிந்திக்கையில் எழும் எண்ணங்கள்:

* thamiழ், thiruஞaanasambandhar, vaள்ள்i, faன், hஆட், jஓக், shஅவர், பs என்று எழுதுவதற்கும் விஜய், ஹாரி, ஜெய் என்று எழுதுவதற்கும் என்ன வேறுபாடு? ஆங்கிலத்தோடு தமிழ் கலந்து எழுதுவது உறுத்துகிறது; கிரந்தத்தோடு தமிழ் கலந்து எழுதுவது மட்டும் ஏன் உறுத்த வில்லை? பழகிப் போவதால் ஒரு பிழை சரியாகுமா?

* டாய்ட்ச், நெதர்லாந்து மொழிகளில் ஓசை இல்லை. ramanujan என்று எழுதினால் ராமானுயன் என்று தான் வாசிப்பார்கள். தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள்?  thamil என்று கூட எழுதாமல் tamil என்று ஆங்கிலேயர் எழுதுவது தமிழரை அவமதிப்பதாகுமா? கிரந்தம் கலந்து ஒலிப்பு பிசகாமல் எழுதி ஒருவரைக் காறித் துப்பவும் முடியும். கிரந்தம் தவிர்த்து எழுதி ஒருவரைப் போற்றவும் முடியும். ஒருவரைப் போற்றவோ தூற்றவோ ஒலிப்பு ஒரு பொருட்டே இல்லை.

* இந்து, பௌத்த, இன்னும் பல சமய மந்திரங்களின் ஒலிப்பில் மந்திர ஆற்றல் உள்ளதாகவும் அதைக் காக்க கிரந்தம் அவசியம் என்றும் சொன்னால், சீன, சப்பானிய மொழிகளில் இந்த ஒலிப்புகளுக்குத் தொடர்பே இல்லாமல் இம்மந்திரங்கள், பெயர்களைச் சொல்லி வழிபடுகிறார்களே? அவர்களுக்கு அருள் கிடைக்காதா? கிரந்த எழுத்துகளே கலக்காமல் பாடல் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் வீடுபேறு அடையவில்லையா? பக்திக்கு ஒலிப்பு எவ்விதத்தில் முக்கியமாகிறது? மொழியின் இயல்பு, கவனக் குறைவு, இயலாமை காரணமாக ஒருவர் ஒலிப்புப் பிசகிப் பேசினாலும் பாடினாலும் பக்தனின் உள்ளத்தை அறிந்து அருள இயலாத மூடரா கடவுள்? ஒரு கடவுளுக்குப் பல அவதாரங்கள், ஒவ்வொரு அவதாரத்துக்கும் பல பெயர்கள், ஒவ்வொரு மொழி, நாட்டிலும் ஒவ்வொரு ஒலிப்பு என்று இருக்கையில் ஒரு கடவுளின் பெயரை ஒலிப்பு கெடாமல் எழுதுவது அவசியமா? கண்ணன், திருமகள் என்று கிரந்த எழுத்துத் தேவையின்றி பிற மொழிச் சமயப் பெயர்களையும் தமிழாக்கிக் கூட எழுதலாமே? எல்லாம் கடந்த ஒரு ஓசையில் தான் கடவுள் தங்கி இருக்கிறாரா? ஒலிப்பை மாற்றிச் சொன்னால் மதிப்புக் குறைவு என்று கோபப்படுவரானால், பக்கத்துத் தெரு அரசியல்வாதிக்கும் கடவுளுக்கும் அவரது தூதர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு?

* கிரந்தம் கலக்காமல் தமிழ் எழுத்துகளில் மட்டும் எழுத வேண்டும் என்று சட்டம் இல்லை. அதே போல், கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்றும் சட்டம் இல்லை. தமிழ் இலக்கணப் படி பள்ளியில் சொல்லித் தரப்பட்ட தமிழ் எழுத்துகளை மட்டும் கொண்டு எழுதுவதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு.

* “தமிழ் இயல்புக்கு ஏற்ப ஒலிகளை உள்வாங்கியும் கிரந்தத் தவிர்த்தும் எழுதுவது தங்களை, தங்கள் நம்பிக்கைகளை அவமதிப்பதாகும்” என்று எவரும் சொல்வது ஒரு தொன்மையான இனத்தின் தன்மானத்துக்கு விடப்படும் நேரடி மிரட்டலாகும்.

* தமிழில் எழுதும் போது தமிழ் ஒலிகளை மட்டும் பயன்படுத்துங்கள் என்று தமிழரிடம் வேண்டுவது எவ்வாறு தமிழ்த் திணிப்பாகும்?

* பிற மொழி ஒலிப்புகள், அதை எழுதுவதற்கான தேவை ஏதோ புதிதாய் எழுந்தது இல்லை. தொல்காப்பியக் காலத்தில் தமிழருக்கு பிற மொழி, வட மொழியனருடன் தொடர்பு உண்டு. அதனாலேயே அச்சொற்களை எப்படி ஆள்வது என்று இலக்கணம் இயற்றப்பட்டது. வரலாற்றுக் காலம் நெடுகிலும் உலகம் முழுக்க வணிகத் தொடர்புகளைத் தமிழர் கொண்டிருந்திருக்கின்றனர். இத்தனை காலமும் கிரந்தம் இன்றி இருக்க வல்லதாய் இருந்த தமிழுக்குத் தற்போது மட்டும் கிரந்தத்தின் தேவை என்ன?

* புஷ்பா, ஹரீஷ் என்று எழுதினாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு புசுப்பா, அரீசு என்றே அழைக்க வருகிறது. அதை ஏன் புசுப்பா, அரீசு என்றே எழுதி விட்டுப் போகக்கூடாது? சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும் அவர்கள் யாரும் நம்மோடு சண்டைக்கு வரப் போவதில்லை. அவர்களே கண்டு கொள்ளாத போது நாம் ஏன் விழுந்து விழுந்து ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டும்? கிரந்த ஒலிகள், எழுத்துகள் தேவைப்படுவோரைக் காட்டிலும் அவற்றின் தேவையின்றி வாழும் தமிழர் எண்ணிக்கை மிகக் கூடுதல். கிரந்தத்தை வலியுறுத்துவது தான் அவர்கள் மேலான உண்மையான திணிப்பு.

* கிரந்த எழுத்துகளைப் பொது ஊடகங்களில் பயன்படுத்துவது என்பது ஒரு சிலர் முடிவு எடுத்த, ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய மரபு. கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல. கிரந்த எழுத்து அறிமுகத்தில் பிற மொழி, சமய, இனத்தினர் நலமே மிகுந்துள்ளதே தவிர தமிழ், தமிழர் நலம் காக்கப்படவில்லை.

* அச்சூடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகத்தில் ஒலிப்பைச் சுட்ட எழுத்துகளின் தேவை குறைவு. ஒலிக்கோப்புகள் மூலம் ஒலிப்பை எளிதாகச் சுட்ட முடியும். வருங்காலம் முழுக்க முழுக்க இணைய மயமான உலகாக இருக்கும் என்பதால் ஒலிப்பைக் கற்பதற்கு எழுத்துகளை மட்டும் தங்கியிருக்கத் தேவை இல்லை.

* “ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டும் இருப்பது கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு இலகுவாக இருக்கிறது.  தமிழில் 247 எழுத்துகள் இருப்பது சிரமமாக இருக்கிறது. அதைக் குறைத்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்” என்று சொல்பவர்கள் மேற்கொண்டும் கிரந்த எழுத்துகளுக்காக (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) 66 மேலதிக எழுத்துகளைக் கற்கச் செய்வது ஏன்?

* பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: , ,

77 Comments to “கிரந்தம்”

  1. செ.இரா.செல்வகுமார் says:

    ரவி,

    திரு பாலாஜி கூறிய சில கருத்துகளுக்கு என் எதிர்க்கருத்துகளை கூற விரும்புகிறேன்.

    1)பாலாஜி கூறுகிறர்: ஆங்கிலம் … அந்த 26இல் W (double u = uu) உள்ளிட்ட எழுத்துகள் பின்னர் சேர்க்கப்பட்டவையே.

    எப்பொழுது? தொடக்ககாலத்தில் தானே. ஏன், ஆங்கிலம் தற்கால வடிவம் பெறும் முன்னர், பலவகையான தகர ஒலிகள் அவர்கள் மொழியில் அடிப்படையான சொற்களில் இருந்தும் கூட (the, this, that, then, thick, thin, there..) அதுவும் அவர்கள் மொழியில் ஒருகாலத்தில் தார்ன் þ (thorn) போன்ற எழுத்துகள் இருந்தும் அவற்றை நீக்கவில்லையா? ஆங்கிலத்திலே ச, த, ஷ முதலான எழுத்தொலிகளுக்குத் தனி எழுதில்லையே, ஏன் புதிய எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளவில்லை? இருந்ததையும் அல்லவா விலக்கி உள்ளார்கள்! எனவே 2500 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்ப்புடன் தன் நிலைநின்ற தமிழில் ஏன் புது எழுத்துகள் வேண்டும்? மொழியின் அடிபடையையே, அகரவரிசையையே மாற்றக்கூறுவது ஏற்கமுடியாதது. இது எம்மொழிக்கும் உள்ள நிலைதான். சிறுபான்மையான இடங்களில் வேற்றொலிகளைக் குறிக்க சிறு சிறு ஒலித்திரிபுக்குறியீடுகள் *வேண்டுமென்றால்* இடலாம். இந்த ஒலித்திரிபுகள் கூட கூடாது, திரித்தே எழுதுதல் வேண்டும் என்று கூறுவோரும் உள்ளனர் (அதுவே சரியான நேர்மையான கருத்தும் முடிவும் ஆகும்).
    ஒவ்வொரு மொழியும் அதன் இயல்புப்படியே இயங்கும், அதுவே அழகு, வழமை.

    2) அரபு மொழி உள்பட பல உதாரணங்கள் காட்ட முடியும். என்கிறார் பாலாஜி.

    அரபு மொழியில் எப்பொழுது எந்தக்காலத்தில் மாற்றம் ஏற்பட்டது? ஏன் அரபு மொழியில் இன்றும்கூட ச, ப இல்லை? ஸ்ரீராம் என்று எழுதவேண்டும் என்று கூறி அவர்களை ஸ்ரீ என்னும் ஓரெழுத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்களேன்?

    3)பாலாஜியின் கூற்று: எழுத்துகள் கண்டுபிடிப்பது சாதாரணமான காரியமில்லை. சுமார் 2500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதத்தெரிந்த சமூகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கையில் தமிழர் இருந்தனரா என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

    கட்டாயம் இருந்தனர். தமிழ் எழுத்துகள் கி.மு 500 உக்கும் முந்தையது.
    பார்க்கவும்:
    http://www.hindu.com/2004/05/2.....871200.htm
    அசோகனுடைய பிராமிகூட தமிழ் பிராமியின் வழி வந்ததாக இருக்கலாம். என்னும் கருத்து உள்ளது. எப்படியாயினும். தமிழின் எழுத்து வரலாறு குறைந்தது 2500 ஆண்டுகளாகவேனும் இருந்து வருவது.
    எந்தவித ஆதாரமும் இல்லாமல்
    நீங்கள் “தமிழ் உள்பட பல மொழிகள் பிறரிடமிருந்தே எழுத்துகளைப் பெற்றிருக்கின்றன.” என்று கூறுவது தவறு . அல்லது வலுவான சான்றுகோள் காட்டுங்கள். பிராமி என்று அழைக்கப்படும் எழுத்துமுறையை யார் கண்டுபிடித்தார்கள் என்று தெரியுமா? திடீர் என்று அசோகன் கல்வெட்டுகள் எப்படித் தோன்றின? சிந்துவெளி எழுத்துகள் போன்ற எழுத்துக்கள் தமிழகத்தில் கண்டெடுத்துள்ளன்ர். பார்க்கவும்:
    http://www.hindu.com/2008/05/0.....942200.htm

    4) பாலாஜியின் கூற்று: 18 மெய்களோடு இன்னும் பிற மெய்கள் சேர்த்தால் என்ன குறை என்று நீங்கள்தான் விளக்கவேண்டும். மற்றவர் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது நல்ல சப்பைக்கட்டு.

    மேலும் எழுத்துக்களை சேர்த்தால் என்ன குறை என்றா கேட்கிறீர்கள்? சேர்த்தால் எழுத்துக்கள் கூடும் :) மற்றவர்கள் சேர்க்கவில்லை என்பது சப்பைக்கட்டு அல்ல. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றார் போல புதிய புதிய எழுத்துகளைச் சேர்க்க முடியாது. ஏன் ஆங்கிலத்தில் sh க்கு ஒரு தனி எழுத்து சேர்க்கலாமே. தமிழ் என்று எழுதவும், நம் பழனியப்பனை அழைக்க ழகரத்தைச் சேர்க்கலாமே என்று கூறமுடியுமா? Jeus என்பதைக் கூட ஒலிக்கமுடியாத எசுப்பானிய மொழி, டாய்ட்சு (செருமானிய மொழி) இல்லையா? அதற்காக அவர்கள் என்ன ஜகரம் என்னும் எழுத்தை சேர்த்துக்கோண்டார்களா?

    5) “என்னால் கிரைஸ்டாப் கெஸ்லாவ்ஸ்கி” என்று கூறமுடிகின்றது என்கிறீர்கள். ஏன் கிரைசுடாப் கெசுலாவிசிக்கி என்று சொன்னால் என்ன? நீங்கள் எழுதியுள்ளவாறு சொன்னாலும் திரிபுதானே? இதெல்லாம் வாதமா? இன்னொரு இடத்தில் ஹாஹா என்று எழுதமுடிகிறதே என்கிறீர்கள். ஏன் தமிழர்கள் இதுவரை யாருமே சிரிக்கவில்லையா, அல்லது ஹாஹா என்றுதான் சிரிக்கிறார்களா? ஏன் ஃஆ ஃஆ அல்லது ஆஃகாஃகா என்று சிரிக்ககூடாதா, இஃகீஃகீ என்று சிரிங்களேன். கிரந்தச்சிரிப்பு தனித்தமிழ் சிரிப்பு என்ரு உண்டா??!! அவன் கெக்கெகே என்று சிரித்தான் என்று எழுதுவதில்லையா? ஆகா அருமை என்று சொல்வதில்லையா? அனுமான், அரி, அரன் என்று எழுதுவதில்லையா? தமிழில் எல்லா ஒலிகளுக்கும் எழுத்து என்பது கிடையாது. மாடு ஓட்டுபவன் நாவை மடித்து சொடுக்கி ஒலிக்கும் ஒலிக்கெல்லாம் எழுத்து என்பது தமிழில் கிடையாது. kaboom என்று எழுதினாலும் அப்படியா வெடிக்கின்றது. ஏன் பறவை ஒலிகளை எழுதிக்காட்டுங்களேன். தமிழ் எழுத்துக்கள் தமிழுக்காக. பிறசொற்கள் மற்றும் வேற்றொலிகளை தம் இயல்புக்கு ஏற்றவாறு மாற்றி எழுதி வழங்குவதே முறை. எல்லா மொழிகளும் அதனையே செய்கின்றன. என் பெயர் Selvakumar என்று ஆங்கிலத்தில் (இலத்தீன் எழுத்துகளால்) எழுதினாலும், அவர்கள் ஒலிப்பு தவறாகவே உள்ளது அதற்கு என்ன செய்ய? இத்தனைக்கும் எல்லா ஒலிப்புகளும் அவர்கள் மொழியில் உள்ளது. ஆனால் சீராக ஒவ்வொரு உயிர்மெய் ஒலிகளையும் சொல்லும் வழக்கம் அவர்களிடம் இல்லை. கண்ணன் என்னும் எளிய பெயரைக்கூட அவர்களால் சொல்ல இயலவில்லை. ணகரத்தை எடுத்துக்கொள்ளச்சொல்லி அவர்கள் எடுத்துக்கொண்டாலும் முன்னேற்றம் ஏதும் காண்பது அரிது. மொழியின் இயல்பு (ஒலிக்கும் இயல்பு) அப்படி.

    இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் இதுவே மிகவும் நீண்டுவிட்டது. தமிழ் மொழியில் எழுதும் பொழுது தமிழ் மொழியின் முறைமகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதே முறைமை. அது மொழித் தூய்மை அல்ல, அடிப்படைப் பண்பாடு, உலக வழக்கு.

    செல்வா

  2. ரவிசங்கர் says:

    விளக்கங்களுக்கு நன்றி செல்வா. மொழியியல் நோக்கில் தமிழுக்கு வலு சேர்க்கும் கருத்துகளை தொகுத்து உங்கள் வலைப்பதிவில் எழுதினால், அதைச் சுட்டிப் பேசுவதற்கு உதவியாக இருக்கும்.

  3. //ஆங்கிலத்திலே ச, த, ஷ முதலான எழுத்தொலிகளுக்குத் தனி எழுதில்லையே, ஏன் புதிய எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளவில்லை? //

    நல்ல கேள்வி. பதில் இல்லையே

    அது போல்

    உங்களுக்கு இந்தி தெரியுமா

    தமிழ் என்பதை எப்படி எழுதுகிறார்கள்

    तमिल என்றா
    அல்லது
    तमिழ் என்றா

    இந்தி தெரிந்தால் நீங்களே பதில் கூறுங்கள்

    அல்லது யாரிடமாவது கேட்டு கூட கூறலாம்

    இதற்கும் பதில் இல்லை :) :)

  4. திரு செல்வகுமார்,

    // 1) (W சேர்க்கப்பட்டது) எப்பொழுது? தொடக்ககாலத்தில் தானே. //

    லத்தின் வரலாற்றில் W சேர்க்கப்பட்ட ஏழாம் நூற்றாண்டு தொடக்க காலமா? சுமார் 2500 ஆண்டு தமிழர் எழுத்து வரலாற்றில் சுமார் 1000 ஆண்டுகள் சமீபம் ஆகிவிட்டதா? நல்ல சப்பைக்கட்டு.

    // அதுவும் அவர்கள் மொழியில் ஒருகாலத்தில் தார்ன் þ (thorn) போன்ற எழுத்துகள் இருந்தும் அவற்றை நீக்கவில்லையா? //

    மொழிக்கு தேவையானவற்றை சேர்த்துக்கொள்வதும், தேவையில்லாதவற்றை நீக்குவதும் இயல்பானது என்று மீண்டும் நிரூபித்தமைக்கு நன்றி!

    // ஆங்கிலத்திலே ச, த, ஷ முதலான எழுத்தொலிகளுக்குத் தனி எழுதில்லையே, ஏன் புதிய எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளவில்லை? //

    மடத்தனமான கேள்வி. ஒரே எழுத்தில் எழுதவேண்டும் என்பது எனது வாதமல்ல. அந்த ஒலியை அந்த எழுத்தில் எழுதமுடிகிறதா என்பதே விவாதம். sa, tha, sha என்று சுலபமாக எழுதமுடிகிறதே.

    // 2) அரபு மொழியில் எப்பொழுது எந்தக்காலத்தில் மாற்றம் ஏற்பட்டது? ஏன் அரபு மொழியில் இன்றும்கூட ச, ப இல்லை? ஸ்ரீராம் என்று எழுதவேண்டும் என்று கூறி அவர்களை ஸ்ரீ என்னும் ஓரெழுத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்களேன்? //

    அரபு எழுத்துகளில் பாரசீக மொழியை எழுதுவதற்காக அரபு எழுத்துகளில் புதிய எழுத்துகள் சேர்க்கப்பட்டன. தமிழில் கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட்டதற்கான மிக நேரான உதாரணம் நான் கொடுத்தது.

    சிறீராம் என்று அரபு மொழியில் எழுதவேண்டிய அவசியமென்ன? தமிழருக்கு தெரிந்த ஒலிகளை தமிழில் எழுத முடியவேண்டும் என்பதே விவாதம்.

    கிரந்தம் சேர்த்தாலும் உலகின் எல்லா மொழிகளையும் தமிழில் எழுதிவிடமுடியும் என்று நான் எங்கும் சொல்லவில்லை. தமிழருக்கு பரிச்சயமான ஒலிகள், தமிழுக்கு வார்த்தைகளை வழங்கிய, வழங்கும் நிலையிலிருக்கும் இந்திய மொழிகள், ஆங்கிலம், அரபு மொழி ஆகியவற்றை பற்றி கவலைப்பட்டாலே போதுமானது.

    // 3) கட்டாயம் இருந்தனர். தமிழ் எழுத்துகள் கி.மு 500 உக்கும் முந்தையது.
    பார்க்கவும்:
    http://www.hindu.com/2004/05/2.....871200.htm
    அசோகனுடைய பிராமிகூட தமிழ் பிராமியின் வழி வந்ததாக இருக்கலாம். //

    பிராமி, இந்து சமவெளி எழுத்துகள் குறித்து கிடைத்துவரும் சான்றுகளை நான் எனது வலைப்பதிவில் சுட்டுவது வழக்கம்.

    நாம் பயன்படுத்தும் வட்டெழுத்து பிராமி எழ்த்துகளினின்று வந்தது என்றும், அந்த பிராமி எழுத்துகள் மகதத்திலிருந்து வந்த சமணர் கொண்டுவந்திருக்கலாம் என்பதும் மிகச் சாதாரணமான மொழி அறிவு.

    நடுவன் கற்களில் எழுதப்பட்டதே தற்போதைய தமிழ் எழுத்தின் மூலம் என்று நிறுவப்படவேண்டும் என்று நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.

    எழுத்து கண்டுபிடிக்கப்பட்டாலே அது தமிழ் எழுதப் பயன்பட்டது என்று சொல்லி விடமுடியாது. இந்து சமவெளி எழுத்தெல்லாம் தமிழரின் எழுத்து என்னும் கீழ்த்தரமான போலி மார்த்தட்டலில் இறங்கவேண்டியதில்லை. (we are not discussing the dravidians here, only about the tamil language.) ஆதாரங்கள் கிடைக்கும்வரை அடங்கியிருப்பதும், கிடைத்தால் தீர ஆராய்வதுமே சான்றோர்க்கு அழகு.

    // Jeus என்பதைக் கூட ஒலிக்கமுடியாத எசுப்பானிய மொழி, டாய்ட்சு (செருமானிய மொழி) இல்லையா? அதற்காக அவர்கள் என்ன ஜகரம் என்னும் எழுத்தை சேர்த்துக்கோண்டார்களா? //

    மற்றவர் செய்யவில்லை என்பது சப்பைக்கட்டு என்றும், செய்துள்ள அரபு, லத்தின் மொழிகள் பற்றியும் நான் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

    // ஏன் ஃஆ ஃஆ அல்லது ஆஃகாஃகா என்று சிரிக்ககூடாதா, இஃகீஃகீ என்று சிரிங்களேன். கிரந்தச்சிரிப்பு தனித்தமிழ் சிரிப்பு என்ரு உண்டா??!! அவன் கெக்கெகே என்று சிரித்தான் என்று எழுதுவதில்லையா? //

    ஹாஹா, புஸ்வானம், உஷ், ஜல்ஜல் என்ற ஒலிகள், சொற்களெல்லாம் கிராமத்தவருக்கும் நன்கு பரிச்சயமானவையே என்று வலியுறுத்தவே அந்த உதாரணங்களை நான் கொடுத்தேன். அந்த ஒலிகள் தமிழில் எழுதப்படவேண்டியவைதானே?

    ஆயுதம் கொண்டும் கிரந்த ஒலிகளை எழுதமுடியும் என்று நான் ஏற்கனவே மேலே குறிப்பிட்டிருக்கிறேன். ஆயுதம் கொண்டெழுதினாலும், கிரந்தம் கொண்டெழுதினாலும் எனக்கு சந்தோஷமே. அந்த ஒலிகளே எங்களுக்குத் தேவையில்லை என்னும் ‘தனித்தமிழ்’ முட்டாள்தனத்தையே நான் எதிர்க்கிறேன்.

    // Selvakumar என்று ஆங்கிலத்தில் (இலத்தீன் எழுத்துகளால்) எழுதினாலும், அவர்கள் ஒலிப்பு தவறாகவே உள்ளது அதற்கு என்ன செய்ய? //

    பழக்கமின்மை ஒரு பிழையில்லை என்று நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். கிரைஸ்டாப் கெஸ்லாவ்ஸ்கி உதாரணம் அதற்குதான் கொடுத்தேன். என் கிராமத்தவருக்கு தெரிந்ததே தமிழ் என்னும் ரவியின் சங்கை நீங்களும் வாங்கி ஊதவேண்டியதில்லை. selvakumar என்று ஆங்கிலத்தில் எழுதமுடிவதுதான் முக்கியம்.

  5. ரவிசங்கர் says:

    * இலத்தீனம் W சேர்த்துக்கொண்டது பிற மொழிச் சொற்களை எழுதிக் காட்டவா தன் மொழிச் சொற்களை எழுதிக் காட்டவா?

    * //அரபு எழுத்துகளில் பாரசீக மொழியை எழுதுவதற்காக அரபு எழுத்துகளில் புதிய எழுத்துகள் சேர்க்கப்பட்டன.//

    சேர்த்தவர்கள் அராபியர்களா? பாரசீகர்களா? இப்போது இவ்வெழுத்துகள் அரபு மொழியிலும் பாரசீக / பாரசீக மொழியல்லா சொற்களை எழுதும் தேவை பொருட்டு புழக்கத்தில் உள்ளனவா? நீங்கள் குறிப்பிட்ட விக்கிப்பீடியா கட்டுரையிலேயே

    Languages using the Perso-Arabic script

    Currently Use

    * Azerbaijani
    * Balochi
    * Gilaki
    * Kashmiri
    * Kazakh In China and Iran
    * Kurdish (Kurmanji dialect in Iran and Iraq, Soranî dialect)
    * Kyrgyz in China and Afghanistan
    * Mazandarani
    * Persian, except Tajik dialect
    * Western Punjabi (Shahmukhi script)
    * Sindhi
    * Turkmen
    * Urdu
    * Uzbek in China and Afghanistan
    * Uyghur

    Used Before
    A number of languages have used the Perso-Arabic script before, but have since changed.

    * Azerbaijani in the Republic of Azerbaijan (changed first to Latin, then Cyrillic)
    * Chaghatay Turkic (changed first to Latin, then Cyrillic)
    * Turkish (changed to Latin)
    * Tajik (changed first to Latin, then Cyrillic)
    * Turkmen in the republic of Turkmenistan (changed first to Latin, then Cyrillic)
    * Uzbek (changed first to Latin, then Cyrillic)

    என்று உள்ளதே? இதில் அரபு மொழியைக் காணோம்? இவ்வெழுத்துகள் அராபியருக்குத் தேவையா? பிற மொழியினருக்குத் தேவையா?

    பாரசீக மொழியை எழுதும் தேவைக்காக, தங்களுக்கு என தனித்த எழுத்து முறை இல்லாத பாரசீகர்கள், அராபிய மொழி எழுத்துகளோடு சில எழுத்துகளையும் சேர்த்து தங்கள் மொழியை எழுதி உள்ளார்கள் என்பதே என் புரிதல். இது எப்படி தமிழ்-கிரந்த உறவுக்கு நேராகும்? உங்கள் கூற்றுப்படி, தமிழர்கள் பாரசீகர்கள் போல் தங்களுக்கு என்று எழுத்தே இல்லாமல் இருந்து பிறரிடம் இருந்து எழுத்துகளைப் பெற்றாலும், தங்கள் மொழிக்கான எழுத்துகளை அல்லவா பெற வேண்டும்? தங்கள் மொழியில் இல்லாத ஒலிகளுக்கான எழுத்துகளை ஏன் பெற வேண்டும்? ல, ழ, ள, ற, ர, ன, ண, ந என்று துல்லியமான ஒலி வேறுபாடுகளும் எழுத்துகளும் உள்ள பிற மொழிகள் என்ன? இல்லை, பிற மொழிகளில் இருந்து வெறும் தேவையான எழுத்து வடிவங்களைப் பெற்று மாறுபட்ட தனது ஒலிகளுக்கான எழுத்து வடிவங்களாகப் பொருத்திக் கொண்டதா?

    அல்லது, கிரந்தம் எழுதியவர்கள் பாரசீகர்கள் போல் தமிழில் இருந்து சில எழுத்துகளைப் பெற்று கூடவே கிரந்த ஒலிகளுக்கான எழுத்துகளையும் சேர்த்துக் கொண்டார்களா? பிற மொழியாளர்களின் தேவைக்கு எழுதிய ஒரு எழுத்து முறையை எப்படி தமிழ் என்று ஏற்றுக் கொள்ள முடியும்? Perso-Arabic script போல தமிழ்-கிரந்த எழுத்து என்று வேண்டுமானால் பெயர் சூட்டிக்கொள்ளலாம். ஒரு வேளை மலையாளத்துக்கு இது பொருந்துமோ? அதன் எழுத்துகள் தமிழை ஒத்தும், கிரந்த ஒலிகளைச் சுட்டும் தேவையான எழுத்துகளுடனும் உள்ளது.

    * அவன் செய்யவில்லை என்பதால் நாமும் செய்யத் தேவையில்லை என்பது சப்பைக்கட்டு என்றால் அவன் செய்தான் என்று நாமும் செய்வோம் என்பதும் சப்பைக் கட்டு தான். எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டதற்கு இரண்டு மொழிகள் எடுத்துக்காட்டு என்றால் சேர்த்துக்கொள்ளாமலேயே நன்றாக இருக்கும் மொழிகளுக்கு 100 எடுத்துக்காட்டுகள் தரலாம். உலக கொள்கைகள் பல இருந்தாலும் உள்ளூர்த் தன்மை, இயல்பு, நிலை குறித்து ஆய்ந்தே முடிவு செய்ய இயலும்.

  6. // * அவன் செய்யவில்லை என்பதால் நாமும் செய்யத் தேவையில்லை என்பது சப்பைக்கட்டு என்றால் அவன் செய்தான் … //

    அப்பா சாமி!!! வேறு எந்த மொழியிலாவது செய்திருக்கிறார்களா என்று சரமாறியாக சல்லியடித்துக்கொண்டிருந்த உங்களுக்கு பதில் அளிக்கத்தான் லத்தீன், பாரசீகம் போன்ற உதாரணங்களைக் கொடுத்தேன். ஆரம்பம் முதலே தமிழுக்குத் தேவையான ஒலிகளை தமிழில் எழுத முடியவேண்டுமென்பதே எனது விவாதம். சும்மா சுழற்றி சுழற்றி விதண்டாவாதம் செய்ததில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதே உங்களுக்கு மறந்துவிட்டதா?!

    மற்றபடி நீங்கள் கேட்டிருக்கும் மற்ற இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்கும் முன், இந்த விசயங்களை இணையத்தில் தேடி தெரிந்துகொள்ள ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்குமா? உங்களது கருத்துகளுக்கு எதிரான ஆதாரங்களை நீங்கள் புறக்கணிக்க விரும்புகிறீர்கள் என்று தோன்றுகிறது. நான் பிடித்த முயலுக்கு …

    1. லத்தீன் Nordic மற்றும் Germanic மொழிகளின் பரிச்சயத்தால் புதிய எழுத்துகளை, சொற்களை பெற்றது. மேலும் விவரங்களை நீங்களே இங்கு படியுங்களேன்!

    பிற மொழி சொற்களை, அதன் மூலம் புதிய ஒலிகளை, தேவைப்பட்டால் எழுத்துகளை ஏற்றுக்கொள்வது எல்லா மொழிகளுக்கும் அழகே.

    2. அரபு எழுத்துகளுக்கும், தமிழுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று நான் சொன்னது நம்பமுடியாத அளவுக்கு உண்மையே!! அரபு எழுத்துகள் கொண்டு பிற மொழிகளை எழுதவே Perso-arabic எழுத்து கண்டுபிடிக்கப்பட்டது என்பது சரியே. ஆனால் பிற்காலத்தில் எப்படி கிரந்த எழுத்துகள் தமிழுக்கே தேவைப்பட்டு அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதோ, அதே போல Va, Pa, Cha, Gaf உள்ளிட்ட எழுத்துகள் மீண்டும் அரபு மொழியிலேயே பயன்பட ஆரம்பித்தன.

    தமிழ் போன்றே அங்கும் பிறமொழிகளினின்றும் உள்வாங்கப்பட்ட சொற்களை எழுதவே இந்த எழுத்துகள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. உங்களைப் போன்றே அங்கும் இவ்வெழுத்துகளை தவிர்த்து எழுதுவோரும் உண்டு.

  7. >> ல, ழ, ள, ற, ர, ன, ண, ந என்று துல்லியமான ஒலி வேறுபாடுகளும் எழுத்துகளும் உள்ள பிற மொழிகள் என்ன?

    இந்த நகைச்சுவைக்கு முடிவேயில்லையா? நீங்கள் ‘விரும்பி வெறுக்கும்’ சமசுகிரதம், ஹிந்தி உள்ளிட்ட எண்ணற்ற இந்திய மொழிகளையே உதாரணம் காட்டலாமே?

    தமிழ் மேல் காதல் இருப்பது பாரட்டத்தக்கதே. அதற்காக பிறமொழிகளை இகழவேண்டியதில்லை. தமிழ் ஏன் செம்மொழியாய் கருதப்படுகிறது என்பதையும் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்வது இத்தகைய சுய-தம்பட்டங்களைத் தவிர்க்க உதவும்.

    கொஞ்சம் “மனோதத்துவ ஆராய்ச்சி” செய்ததில், நீங்கள் ஆங்கிலத்தை குறைவாக மதிப்பிடுவது இத்தகைய நகைச்சுவைகளுக்கு காரணமென்று நினைக்கிறேன். நான் சொல்வது சரியா?

  8. ரவிசங்கர் says:

    balaji, தனியாள் சாடல்களும், உளவியல் ஆராய்ச்சிகளும் இவ்வுரையாடலை நட்புடன் தொடர எந்த வகையிலும் உதவாது.

  9. ம்… கேட்ட கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லியிருக்கிறேனே? எனது முந்தைய பதிலை அனுமதிக்கப் போவதில்லையா?

    மற்றபடி “ல, ழ, ள, ற, ர, ன, ண, ந” மாதிரி நகைச்சுவைகளெல்லாம் நீங்கள் செய்யவது ஏனென்று யோசித்தேன். அவ்வளவே.

  10. பாலா’சி,

    நீங்கள்:
    //மொழிக்கு தேவையானவற்றை சேர்த்துக்கொள்வதும், தேவையில்லாதவற்றை நீக்குவதும் இயல்பானது என்று மீண்டும் நிரூபித்தமைக்கு நன்றி!//

    எனவே இப்பொழுது கலந்து வரும் கிரந்த எழுத்துக்களை நீக்கலாம் என்கிறீர்கள்.

    நன்றி.

    செல்வா

  11. ரவிசங்கர் says:

    balaji, WordPress சில சமயம் நீளமான மறுமொழிகளையும் தொடுப்புகள் உடைய மறுமொழிகளையும் மட்டுறுத்தல் வரிசையில் தானாக சேர்த்து விடுகிறது. மற்றபடி, மறுமொழிகள் மட்டுறுத்தல் இன்றி உடனுக்குடன் வெளியாவதை நீங்கள் காணலாம். //கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்// என்று சொல்லும் முன் மட்டுறுத்தல் வரிசையில் உங்கள் பதில் இருந்ததைக் கவனிக்கவில்லை. கவனித்த பின் என் மறுமொழியைத் திருத்திக் கொண்டேன். குழப்பத்துக்கு மன்னிக்கவும்.

    * ழகரம் தமிழுக்குத் தனித்துவமானது என்கிறார்கள். பிறகு, அதற்கான எழுத்தை மட்டும் வேறு எந்த மொழியில் இருந்து பெற்றுக் கொண்டது? ஏதோ ஒரு எழுத்தைப் பெற்றுத் தனக்குத் தேவையான ஒலிக்குப் பொருத்திக் கொண்டதா என்பதே கேள்வி. இவ்வுரையாடலைப் படிப்போருக்கு இரு பக்க தகவல்களும் தெரியட்டும் என்றே நேரடியாக உங்களிடமே கேள்விகளைக் கேட்டு பதிலைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    * //ஒரே எழுத்தில் எழுதவேண்டும் என்பது எனது வாதமல்ல. அந்த ஒலியை அந்த எழுத்தில் எழுதமுடிகிறதா என்பதே விவாதம். sa, tha, sha என்று சுலபமாக எழுதமுடிகிறதே//

    பிறகு ஏன் ஸ்ரீ என்பதை மட்டும் ஒரே எழுத்தில் எழுத வேண்டும்? சிறீ என்று எழுதலாமே? siri வேறு sri வேறு என்பீர்கள். தமிழில் மெய்யெழுத்து முதலில் வராது என்பது இலக்கணம். பிரியா (ப்ரியா அல்ல), கிருத்திகா (க்ருத்திகா அல்ல) என்று எழுதுவது போல் இலக்கணப்படி சிறீ அல்லது சிரீ என்று எழுதுவது சரியாகவே இருக்கும்.

    நன்னூல், தொல்காப்பியங்கள் எழுதியவருக்கு வட மொழி தெரியாமல் போயிருக்கலாம் என்கிறீர்கள். திருவாய் மொழி எழுதியவருக்காவது தெரிந்திருக்குமா?

    திருவாய்மொழி இரண்டாம் பகுதியில் (பாடல் 2858ல்)

    தூமனத் தனனாய்ப் பிறவித்

    துழதி நீங்க என்னைத்

    தீமனங் கெடுத்தா யுனக்கென்

    செய்கேனென் சிரீதரனே!

    என்று வருவதைக் கவனிக்கலாம்.

    இல்லை, திருவாய்மொழி எழுதியவரும் உங்கள் பார்வையில் வட மொழி வெறுப்பாளர், தமிழ் மொழி பெரிசு என தம்பட்டம் அடிப்பவரா?

    ஸ்ரீ குறித்த இடுகையையும் பாருங்கள்.

  12. நான்: “ஆங்கிலத்திலே ச, த, ஷ முதலான எழுத்தொலிகளுக்குத் தனி எழுதில்லையே, ஏன் புதிய எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளவில்லை? ”

    ‘பாலா’சியின் மறுமொழி:

    //மடத்தனமான கேள்வி. ஒரே எழுத்தில் எழுதவேண்டும் என்பது எனது வாதமல்ல. அந்த ஒலியை அந்த எழுத்தில் எழுதமுடிகிறதா என்பதே விவாதம். sa, tha, sha என்று சுலபமாக எழுதமுடிகிறதே. //

    “மடத்தனமான கேள்வி” என்று கூறுவதில் இருந்து உங்கள் பண்பாடு விளங்குகின்றது.

    இப்பொழுது செய்திக்கு வருவோம். ஒரே எழுத்து தேவை இல்லை எனில் நாம் எவ்வளவோ முன்னேறலாம் (இந்த வேற்றொலிகளைத் தமிழில் சிறுபான்மை குறிக்க)!!

    Ga, Gi, Gu.. = ‘க ‘கி, ‘கு
    Ja, Ji, Ju..= ‘ச, ‘சி, ‘சு
    D, Di, Du…. = ‘ட, ‘டி. ‘டு
    Dha, Dhi, Dhu….= ‘த, ‘தி, ‘து
    Ba, Bi, Bu…= ‘ப, ‘பி, ‘பு

    Sha = ^ச
    ஸ = ˘ச
    Za = *ச

    Ha = ஃஅ (அல்) ஃக
    (இப்பொழுது Hanuman = அனுமான். துல்லியம் வேண்டின் ஃஅனுமான்;
    இட்லர் -> ஃஇட்லர்).

    கடைசியாக , நீங்கள்
    //அந்த ஒலியை அந்த எழுத்தில் எழுதமுடிகிறதா என்பதே விவாதம். sa, tha, sha என்று சுலபமாக எழுதமுடிகிறதே.//

    கூறும்பொழுது ஆங்கிலேயரால், யாழினி, பழனியப்பன், வள்ளியம்மாள், அழகப்பன், ஆறுமுகம், ஞானசம்பந்தன் முதலான பெயர்களை ஆங்கிலத்தில் எழுத முடியவில்லையே என்றும் கருதவேண்டும்.

    எல்லா ஒலிகளையும் எல்லா மொழிகளிலும் எழுதி ஒலிக்க முடியாது என்னும் அடிப்படையை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.

    அனைத்துலக ஒலிப்பியல் குறியீடுகளைத் தங்கள் மொழிகளில் அன்றாடப் பயன்பாட்டுக்காக, “இயல்பாக” மற்ற எல்லா மொழிகளும் பயனபடுத்தத் துவங்கும் பொழுது நாமும் அதுபற்றிச் சிந்திப்போம். அப்பொழுதும் துல்லியம் முழுவதுமாகக் காட்ட இயலாது என்பது உண்மை.

    செல்வா

    பி.கு நீங்கள் ஓரெழுத்தில் எழுதத் தேவை இல்லை, ஒலிதான் முக்கியம் என்றதால், உங்கள் பெயரை ‘பாலா’சி என்று எழுதியுள்ளேன். தமிழில் உங்கள் பெயரை பாலாசி என்றுதான் எழுதவியலும். எசுப்பானிய மொழியிலும் ‘டாய்ட்சு மொழியிலும் உங்கள் பெயரை ‘பாலாஃகி, ‘பாலாயி என்றுதான் ஒலிப்பார்கள். அதற்காக அவர்கள் மொழியை மாற்றிக்கொள்ளச்சொல்ல முடியாது. அதுபோலத்தான் தமிழ்மொழிக்கும். அவர்கள் மாற்றிக்கொண்டாலும் தமிழும் மாற்ற வேண்டும் என்னும் கட்டாயம் ஏதும் இல்லை. அதனையும் நினைவில் கொள்க. மொழியையே மாற்றாமல், சிறுபான்மை இடங்களில் குறியீடு இட்டு ஒலிப்புத்துல்லியத்தைக் கூட்டிக் காட்டுவதில் ஓரளவுக்கு எனக்கு ஏற்பு உண்டு.

  13. ரவி,

    நாம் இந்த விவாதத்தின் இந்தப் பகுதியை இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    இந்த கொடுக்கல்-வாங்கலின் முடிவில் கிரந்த எதிர்ப்புக்கு எந்தவொறு நல்ல காரணமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

    திசைச்சொற்கள் தவிர்த்து தொல்காப்பியத்திலும், குறிப்பாக நன்னூலிலும் தமிழின் ஒலி குறைபாடுகள் அறியப்படாமையும், அறிந்திருந்தால் அது பெரிதாக செப்பணிடப்படவேண்டியதாக கருதப்படாததும் ஏனென்று மட்டும் நான் தெரிந்துகொள்ள வேண்டியிருப்பது தெரிகிறது.

    எப்போதும் போலவே :) விவாத சூட்டில் நான் தெரிவித்த ரசக்குறைவான கருத்துகளுக்காக வருந்துகிறேன். என்னுடைய sarcasm என்னை பிரச்சனையில் மாட்டச்செய்வது இது முதல் முறையன்று. உங்களுடைய பொறுமை உங்களைக் கைவிடவில்லை!

    மற்றபடி, உங்களின் கிரந்த எதிர்ப்பு எனக்கு உண்மையிலேயே மிகுந்த மனவருத்தத்தை தருகிறது.

    1. முதலில் இது உங்களுக்கு நேர விரயம். இந்த நேரத்தில் உபயோகமான பல செயல்களை நீங்கள் செய்ய்க்கூடியவர் என்று எனக்குத் தெரியும்.

    2. balaji மாதிரியெல்லாம் நண்பர்களின் பெயர்களை நீங்கள் மாற்றி எழுதி அதுவே நாகரீகம் ஆகிவிடப்போகிறது!!

    சில நூறு ஆண்டுகள் புதிய கிரந்தம் வேண்டாமெனினும், பல ஆயிரம் நொடிகள் பழமையான தமிழ் ஆசான் செல்வகுமாரின் apostrophe கொண்டாகிலும் தூய தமிழை வளருங்கள் :)

    damn, sarcasm again … sorry.

    3. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டலும், உங்கள் கருத்துகளை சேரியமாய் எடுத்துக்கொள்பவர்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் அல்லது விக்கி திட்டங்களில் இருக்கக்கூடும் என்பதையும் நீங்கள் கவணத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

  14. ரவிசங்கர் says:

    //ஹாஹா, ஜல்ஜல், புஸ்வானம், பாம்பு புஸ் புஸ் என்றது என்பதை கிரந்தம் இல்லாமல் எப்படி எழுதுவது//

    என்று தொடர்ந்து பல இடங்களில் கேட்கிறீர்கள்.

    ஹாஹா, ஜல்ஜல், புஸ் புஸ் போன்றவை சொற்களே அல்ல. இவை தொடர்புடைய ஒலிகளை எழுதிக் காட்ட ஒரு குறியீடு. அவ்வளவு தான்.

    கிரந்தம் இருப்பதால் சிலர் அதைக் கொண்டும் எழுதுகிறார்கள். இல்லாவிட்டாலும், ஆகா, சல சல என்று எழுதுவோம்.

    ஆற்று நீர் சலசலவென்று ஓடியது என்று எழுதினால் அது ஓடாமல் நின்றுவிடுமா?

    கிரந்தம் வருவதற்கு முன் யாரும் சிரிக்கவே இல்லையா? இல்லை சிரித்தும் எழுதிக் காட்டவே முடியவில்லையா? இல்லை, எல்லா உலக மொழிகளிலும் ஹாஹா என்று மட்டுமே சிரிப்பை எழுதிக் காட்டுகிறார்களா? இல்லை, அவர்கள் எல்லாம் வேற மாதிரி சிரிக்கிறார்களா?

    ஹாஹா, ஜல்ஜல், புஸ் புஸ் என்று எழுதுவது எல்லாமே ஒரு வகை approximation தான்.

    பாம்பு படம் எடுப்பதை, நீர் சலசலத்து ஓடுவதை ஒலியுடன் படம் பிடித்துப் போட்டுக் காட்டினால் அதை எல்லா உலக மொழிக்காரனும் புஸ் புஸ், ஜல் ஜல் என்றே எழுதிக் காட்டப்போவதில்லை என்கையில் ஒலிப்புத் துல்லியம் எங்கே போகிறது?

    புசு புசுவெனப் பொரிவது புசுவானம் என்று சொல்லலாகாதா? புஸ்வானம் என்று எழுதினால் தான் வெடிக்குமா?

    ‘சதக் சதக்’ என்று குத்தினான்.
    வெடிகண்டு ‘டமார்’ என்று வெடித்தது என்று சொல்கையில் அவை குறியீடுகள் தாமே தவிர, ஒலிப்புத் துல்லியம் தருவன அல்ல.

    ஒரு மொழியின் சொற்களை எழுதத் தான் எழுத்துகள். மனிதனைச் சுற்றியுள்ள ஓசைகளை எழுதிக் காட்ட அல்ல.

    மொழிகளே தோன்றுவதற்கு முன் கண்டிப்பாக ஒவ்வொரு மொழிக்காரனும் செரிமானக் கோளாறு காரணமாக கு* விட்டிருப்பான். இதை எல்லா மொழிகளிலும் எப்படி எழுதிக் காட்டுகிறார்கள்?

  15. //சிறீராம் என்று அரபு மொழியில் எழுதவேண்டிய அவசியமென்ன? தமிழருக்கு தெரிந்த ஒலிகளை தமிழில் எழுத முடியவேண்டும் என்பதே விவாதம்.//

    ஸ்ரீநிவாஸ ராமானுஜன் என்று அவர்கள் எழுதவேண்டாமா? ஸ்ரீலங்க்கா என்று எழுதவேண்டாமா? ஸ்ரீரங்கம் என்று எழுத வேண்டாமா? நாம் சிறீலங்கா, சீனிவாசன், சிறீனிவாசன், சிரீதர் என்று எழுதினால் ஏன் எரிந்து விழுகிறார்கள் நம்மில் சிலர்?

    நீங்கள் கூறும் “கிரைஸ்டாப் கெஸ்லாவ்ஸ்கி” என்னும் பெயரை
    கிரைசுடாப் கெசுலாவ்சிக்கி என்றாலோ கிரைசுடாப் கெசிலாவ்சிக்கி என்றாலோ என்ன குறைவு? Gandhi என்று பெயரை ஆங்கிலத்திலே எழுதினாலும், அவன் இனிக்கட்டி, மிட்டாய் போல கேண்டி என்பதுபோலத்தான் ஒலிக்கின்றான். Buddha என்று எழுதினாலும், பூடா என்கிறான். அவன் மொழியில் ‘த இல்லை (அன்றாட வாழ்க்கையில் பொது ஒலிப்பாக). இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் மொழியில் the, this, that, then they, father, hither, என்பன அடிப்படைச்சொற்கள் என்றாலும், இந்த மெல்லொலி தகரம் ( ‘த) அவர்களால் எல்லா இடத்திலும், ஒலிப்பொழுக்கத்துடன் ஒலிக்க இயலவில்லை.

    எனவே அவர்களிடம் போய், அப்பா உங்கள் மொழியில் இந்த மெல்லொலி தகரம் உள்ளது ஆகவே ஒரு புது எழுத்தை வைத்துக்கொள்வோம் என்று கூறி முதல் வகுப்பில் இருந்து சொல்லிக்கொடுக்கச் செய்ய முடியுமா?
    அதுமட்டுமா, caṅkattamiḻ என்று எழுதி அங்கே ṅ என்பதை ங் என்று ஒலிக்க வேண்டும், ḻ என்றால் ழ் ஏன் என்றால் எல் என்னும் எழுத்துக்கு கீழே ஒரு கோடு இருக்கு பார்த்தாயா என்று கூறி, இதனையெல்லாம் நம்ம a, b, c, d வரிசையோடு கறுக்கொள்ளலாம் என்றால் ஒப்புக்கொள்வார்களா?

    செல்வா

  16. //ஜல் ஜல்//

    ‘டாய்ட்சு மக்கள் ” யல் யல் ” என்பார்கள் :)

    எசுப்பானியர் (Spanish) ” ஃஅல், ஃஅல் ” என்பார்கள் :)

    தமிழர்கள் சல் சல் என்பார்கள்,

    வேண்டுமென்றால் ‘சல் ‘சல் எனலாம்.
    இதற்காக எல்லாம் ஒரு எழுத்தை நுழைக்க முடியுமா? நல்ல வேடிக்கைங்க இது !

    செல்வா

  17. கொசுறு பதில்கள்:

    ரவி,

    ழ போன்ற retroflex கள் பல மொழிகளிலும் காணப்படுகின்றன. பார்க்கப்போனால் தமிழில்தான் குறைவு! தமிழர்கள் சமணரிடமிருந்து எழுத்தை பெற்றார்கள் என்று சொலவதால் தமிழுக்கு இழுக்கு என்று அர்த்தமில்லை. அதற்கு முன்பாக அவர்கள் பயன்படுத்திய குறிகளை விடவும் பிராமி அதிக sophesticated ஆக இருந்திருக்கலாம், அவ்வளவே. ழ வுக்கு குறி கண்டுபிடிப்பதா கடினம்? இருந்த hieroglyph களில் ஒன்று standardize ஆகியிருக்கும்.

    sri, thra உள்ளிட்ட வடமொழி மூவொலி எழுத்துகளை தமிழில் மெய்யாக சேர்க்கமுடியாது என்பது உண்மைதான். மேலும் அவற்றை சேர்க்கவேண்டிய அவசிமிருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை.

    சிறி எனக்கு உடன்பாடானதே. திரைநேத்ரா என்று த்ராவுக்கும் தமிழில் வேலையிருப்பதாய் தெரியவில்லை. கிரந்த எழுத்துகள் அனைத்தும் நமக்கு தேவையென்று நான் சொல்லவில்லை. நமக்குத் தேவையான ஒலிகளை எழுத எல்லோராலும் ஏற்றுக்கொல்லப்படும் குறிகள் வேண்டும் அவ்வளவே. சில கிரந்த எழுத்துகள் ஏற்றுக்கொள்ளப் பட்டது நல்லதே.

    மேலும் ஏற்கனவே தமிழ்படுத்தப்பட்ட சமசுகிரதம், விசயம் போன்றவற்றை அப்படியே பயன்படுத்துவதையும், சேமம், ஜலம் போன்ற தேவையற்ற வடமொழி சொற்களை தவிர்ப்பதையும் நானும் ஆதரிக்கிறேன்.

    இன்று துக்ளக் படித்துக்கொண்டிருந்தபோது CBI (Central Bureau of Investigation) க்கு ஸிபிஐ என்று எழுதியதைப் படித்து முகம்சுழித்தேன். சிபிஐ என்று எளிதாக எழுதமுடிகிறது. சிபிஐ என்று எழுதுவதும் ஊடகங்களில் வழக்கம்தானே. ஏன் ஸிபிஐக்கு மாறினார்கள் என்று தெரியவில்லை.

    திரு செல்வா,

    மடத்தனம் – non-sense என்று பதிவுளகில் நான் பதிலளிப்பது வழக்கமே. மற்றபடி நீங்கள் இந்த விவாதத்தை முழுமையாகப் படித்தால் நாங்கள் எந்த முடிச்சை அவிழ்க்க முயற்சிக்கிறோம் என்று புரியும்.

    diacritics கொண்டு எழுதலாம் என்று நீங்கள் பல மாதங்களுக்கு முன்னால் எழுதியதைக் கூட நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்!

    apostrophe கொண்டெழுதுவதை விடவும் ஆயுதம் கொண்டெழுதுவது மேலானது, கிரந்தம் கொண்டெழுதுவது சுலபமானது என்பது எனது கருத்து.

    pazhani, thamiz என்றெல்லாம் எழுதுவது ஆங்கில மொழி/எழுத்து/உச்சரிப்பு விதிகளுக்கு உட்பட்டே இருப்பதால் ஆங்கிலத்தில் அவற்றை எழுதமுடியவில்லை என்று சொல்லமுடியாது. அங்கு ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க வேண்டிய அவசியமில்லையே.

  18. ரவிசங்கர் says:

    balaji, கேலியும் சாடலுமாகத் தான் உரையாடல் நகரும் எனில், நானும் இத்தலைப்பிலான உங்களுடனான உரையாடலை முடித்துக் கொள்கிறேன். இந்த இடுகைக்கு வெளியேயும் பல இடங்களில் ஒன்றாக இயங்குகிறோம். இந்த உரையாடலின் சூடு அதற்கு கேடாக அமைந்து விடலாகாது.

    நிச்சயம் இந்த உரையாடலில் நேரம் வீணானதாக நினைக்கவில்லை. சமூகம், மொழி, பொருளாதாரம் என்று பலவற்றிலும் ஆயப்பட வேண்டிய, கேள்வி கேட்கப்படவேண்டியவை எத்தனையோ உள்ளன. “இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்”வோம் என இருக்கலாகாது.

    பாலாசி என்று எழுதினால் நீங்கள் மனம் வருந்துவீர்கள் என்றே நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது போல் balaji என்று எழுதுகிறேன். அதே வேளை என் கொள்கைக்கு முரணாக பாலாஜி என்று தான் எழுத வேண்டும் நீங்களும் கட்டாயப்படுத்த இயலாது அல்லவா? கிரந்தம் வேண்டுவோர் கலந்து எழுதட்டும். ஆனால், எல்லாரும் கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், அப்படி எழுதாதவர்கள் தங்களை அவமதிப்பதாக கருதுவதும் தான் பிரச்சினையின் ஊற்று.

  19. //அந்த ஒலிகளே எங்களுக்குத் தேவையில்லை என்னும் ‘தனித்தமிழ்’ முட்டாள்தனத்தையே நான் எதிர்க்கிறேன்.//

    ஆமாம் ஐயா, அருள்திரு ஆழ்வார்கள் எல்லாம் உங்கள் கணிப்பில் தனித்தமிழ் முட்டாள்கள், தேவாரம் திருவாசகம் பாடியவர்கள், திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் எல்லோரும் உங்கள் கணிப்பில் தனித்தமிழ் முட்டாள்கள்.
    நல்ல பண்பாளர் ஐயா நீங்கள் !

    செல்வா

  20. ரவிசங்கர் says:

    balaji, சிறீ ஏற்புடையதே என்றதற்கு நன்றி. எனினும் உங்களைத் தவிர்த்த பலர், கிரந்தத்துக்கான கண்மூடித்தனமான ஆதரவு நிலை எடுப்பதே பிரச்சினை.

    பார்க்க – பேச்சு:மஞ்சுஸ்ரீ

    //pazhani, thamiz என்றெல்லாம் எழுதுவது ஆங்கில மொழி/எழுத்து/உச்சரிப்பு விதிகளுக்கு உட்பட்டே இருப்பதால் ஆங்கிலத்தில் அவற்றை எழுதமுடியவில்லை என்று சொல்லமுடியாது. அங்கு ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க வேண்டிய அவசியமில்லையே.//

    இது சும்மா தமிழர்கள் நம்ம வசதிக்காக எழுதிக் கொள்வது. kuzhu என்று எழுதினால் வெளிநாட்டவன் குசு என்றே வாசிப்பான். ழ – zha தொடர்பு குறித்த அறிவு ஆங்கிலத்தை முதல் மொழியாக கொண்டவர்களிடம் புழக்கத்தில் இல்லை.

  21. கொசுறு பதில் 2:

    புஸ்வானம் என்பது காரணப்பெயர்தானே?

    ஸ் என்றே எழுத்தின் வடிவமே ஸ்ர்ப்பம் ஊர்ந்து (ஊவையும் கவனிக்க!) செல்லுவதிலிருந்துதானே வந்திருக்கிறது. ஸ்ர்ப்பமும் அது எழுப்பும் ஒலியிலிருந்துதானே பெயர் பெற்றிருக்கிறது.

    ஜல், ஜல் எல்லாம் எழுதாவிட்டால் தமிழ் குறைந்துவிடாது என்று எனக்கும் தெரியும். ஆனால் அந்த ஒலிகள் தமிழருக்கு பரிச்சயமான ஒலிகளே என்று நிறுவதற்காகத்தான் அவற்றைக் கொண்டுவந்தேன்.

    ஜல், ஜல் என்று ஒலிக்கத் தெரிந்தவர்களுக்கு ஜெயலலிதா என்றோ ஸ்டாலின் என்றோ ஒலிக்கத் தெரியாதா?

  22. ரவிசங்கர் says:

    //ஜெயலலிதா என்றோ ஸ்டாலின் என்றோ ஒலிக்கத் தெரியாதா//

    கிரந்தம் குறித்த உரையாடல் வந்தால் இந்த இரு தலைவர்கள் பெயரையும் இழுக்காமல் விடுகிறார்கள் இல்லை :)

    இப்ப என்ன பிரச்சினை? எங்கு வேண்டுமானாலும் செயலலிதா, சிடாலின் என்று எழுதுவதில் எனக்குத் தயக்கம் இல்லை.

    எல்லாரும் அழுத்தம் திருத்தமாக S, J என்று ஒலிப்பது இல்லை. J வரும் இடங்களில் ch (as in cherry) ஒலிப்பும், S வரும் இடங்களில் சு-வுக்கும் சி-க்கும் இடைப்பட ஒலியாகவே இருக்கும். வச்சிரவேலு, சினேகா, சுவிட்சர்லாந்து, சுவீடன் என்று எழுதும் வழக்கம் இருப்பதையும் காணலாம்.

  23. damn, கொசுறு 3:

    செல்வா,

    தயவுசெய்து எங்கள் விவாதத்தை முழுமையாகப் படியுங்கள். திருக்குறள், ஆழ்வார்கள் பாசுரங்கள், தேவாரப் பாடல்கள் என்ன பிறமொழிகளிலிருந்து தமிழில் பெறப்பட்ட சொற்களை, பெயர்களை பயன்படுத்த வேண்டியிருக்காவிட்டால், நான்கூட கிரந்தமில்லா தமிழில் எழுதமுடியும்.

    தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் எழுதிய 13ஆம் நூற்றாண்டு வரை விவாதித்து ஆகிவிட்டது.

  24. ரவி,

    எனக்கு கிரந்தமில்லாமல் செயலலிதா என்றோ சிடாலின் என்றோ எழுதத்தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது, தவறானது என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

    சரி, இதோடு நிச்சயமாய் எனது விவாதங்களை முடித்துக்கொள்கிறேன்.

  25. ரவிசங்கர் says:

    balaji,

    எனக்கு கிரந்தம் கலந்து ஜெயலலிதா, ஸ்டாலின் என்று சிலர் எழுதவும் சொல்லவும் செய்கிறார்கள் என்பது தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது, தவறானது என்று தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    சரி, நானும் இதோடு நிச்சயமாய் எனது விவாதங்களை முடித்துக்கொள்கிறேன்.

    :)

  26. //எனக்கு கிரந்தமில்லாமல் செயலலிதா என்றோ சிடாலின் என்றோ எழுதத்தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது, தவறானது என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.//

    அப்படி யென்றால் வள்ளி என்பதை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது தமிழ் கலந்துதான் vaள்ள்i என்று எழுதுகிறீர்கள்

  27. இந்த இடுகையில் கிடைத்த அரிய செய்திகள் ஒருபுறம் இருக்க, மறுமொழியில் ஏராளமான செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. நல்ல ஆக்கமான விவாத அரங்கமாக இது அமைந்துள்ளது.

    தாமதித்துதான் இதனைப் படிக்க நேர்ந்தது.

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>